என்னை உம் அன்னையின் பிள்ளையாக மாற்றியருளும்!
*************************
இதயத்தாழ்ச்சி நிறைந்த சர்வ வல்லவ தேவனாகிய இயேசுவே!
என் இரட்சகரே!
எனக்கு எல்லாம் ஆனவரே!
உமது கருணை நிறை முகத்தை ஏறிட்டுக்கூட பார்க்கத் தைரியமின்றி கூனிக் குருகி நிற்கும் அடியேனை
உமது கருணைக் கண் கொண்டு பாரும்.
கோடானு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய இம்மாபெரும் பிரபஞ்சத்தை (universe)
'ஆகுக' என்ற ஒரே சொல்லால் ஒரு நொடிப் பொழுதில் படைத்தவர் நீர்!
சர்வலோக அதிபதியாகிய நீர் மனத்தாழ்ச்சி உள்ளவராக இருக்கிறீர்.
நானோ
உம்மிடமிருந்து இலவசமாகப் பெற்ற உடலையும், ஆன்மாவையும், ஒன்றிரண்டு திறமைகளையும் வைத்துக்கொண்டு
எல்லாவற்றையும் எனக்கே உரியனவாய் நினைத்துக்கொண்டு
தற்பெருமை பிடித்து அலைகிறேன்.
மனத்தாழ்ச்சி எவ்வாறு அனைத்துப் புண்ணியங்களுக்கும் ஊற்றாய் இருக்கிறதோ,
அதேபோன்று தற்பெருமை அனைத்துப் பாவங்களுக்கும் ஊற்று என்பதை உணர்கிறேன்.
என் இரட்சகரே, உமது சீடனாக இருக்க வேண்டுமானால் உம்மைப்போல் மனத்தாழ்ச்சி உள்ளவனாக இருக்கவேண்டும்.
நான் முழுவதும் உமக்கே சொந்தம் என்பதை உணர வேண்டும்.
நான் செய்ய விரும்பும் ஒவ்வொரு நற்செயலுக்கும் முழுக்கமுழுக்க உம்மையே சார்ந்திருக்கிறேன் என்பதை உணர வேண்டும்.
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய மனத்தாழ்ச்சியில் எனக்கு ஒரு பங்கு தாரும்.
நீரின்றி நான் ஒன்றுமில்லாதவன் என்பதை உணரச்செய்யும்.
நீர் பிதாவுடனும், பரிசுத்த ஆவியாருடனும் இணைந்து ஒரே கடவுள்.
பிதாவின் சித்தமும், உமது சித்தமும், பரிசுத்த ஆவியாரின் சித்தமும் ஒரே சித்தம்தான்.
ஏனெனில் நீங்கள் ஆள் வகையில்தான் மூவர், இறைசுபாவத்தில் மூவரும் ஒருவர்தான்.
ஒரே இறைசுபாவம், ஒரே அன்பு, ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே சித்தம், ஒரே கடவுள்.
ஆயினும் உமது மனத்தாழ்ச்சியின் காரணமாக
" என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று,
என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே
நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."(அரு.6:38)
என்று கூறினீர்.
அவ்வாறே இரத்த வியர்வை வியர்த்தபோது
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" (லூக்22:42)
என்றீர்.
செபெதேயுவின் மக்களுடைய தாய் தன் மக்களுக்காக பரிந்துபேசியபோது,
"என் வலப்பக்கமோ, என் இடப்பக்கமோ அமர அருளுவது என்னுடையதன்று.
யாருக்கு
என் தந்தை
ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்"
என்றீர்.
இங்கேயும் உம் தந்தையையே முன் நிறுத்திப் பேசுகின்றீர்.
இவ்வாறு பிதாவோடு ஒரே கடவுவான நீர்,
ஆள் வகையிலும் பிதாவுக்கு நிகரான நீர்
உம்மையே தாழ்த்தி தந்தையை மேன்மைப்படுத்தி பேசுவது
உம்முடைய மனத்தாழ்ச்சியையே சுட்டிக் காண்பிக்கிறது.
மனத்தாழ்ச்சி நிறைந்த இயேசுவே
எனக்கும் மனத்தாழ்ச்சியைத் தாரும், ஆண்டவரே.
சர்வ வல்லவர் பைசாவிற்குப் பெறாத யூத குருக்களால் ஆணிகளால் அறையப்பட்டு சிலுவையிலே தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.
சர்வ வல்லபராகிய உம்மைப் பார்த்து
"நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.
ஆயினும் நீர் அமைதி காத்தீர்!
அவர்களுக்கும் சேர்த்துதான் மன்னிப்பு வேண்டி உமது தந்தையிடம் மன்றாடினீர்!
இயேசுவே, என்னையும் யாராவது அவமானப்படுத்தினால்
நானும் மனத்தாழ்ச்சியுடன் அமைதி காக்க உமது அருள்வரம் தாரும்.
உமது பரம பிதாவின் அதிமிகு மகிமைக்காகவும்,
எனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,
உம்மைப் பின்பற்றுபவர்கட்கு முன்மாதிரியாகவுமே இதைச் செய்தீர்.
நானும் உமது மகிமைக்காகவும்,
எனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும்,
மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்
மனத்தாழ்ச்சியுடன் நடக்க அருள் புரியும்.
நான் வெறுமையானவன் என்பதை
நான் உணர்ந்துகொண்டாலே
உமது அருள் எனக்குள் வர ஆரம்பிக்கும்.
அருள் நிறைந்த உம் அன்னையே தன்னை ஆண்டவரின் அடிமை எனக் கருதினாள்!
என்னை உம் அன்னையின் பிள்ளையாக மாற்றியருளும்.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment