நம்மையே மறுப்போம், ஒறுப்போம், தவம் புரிவோம்.
+++++++++++++++++++++++++
இயேசு தனது சீடர்கள் தன்னைப் பின் தொடர வேண்டிய முறை பற்றிக் குறிப்பிடும்போது சொல்கிறார்:
தன்னையே மறுத்துத்
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு
என்னைப் பின்தொடரட்டும்.
Underline தன், என்.
நாம் நமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு எங்காவது Tour போவதாக வைத்துக்கொள்வோம்.
வழியில் பயன்படுத்த வேண்டிய பொருட்களைப் பைகளில் போட்டு, ஆளுக்கொரு பையாக எடுத்துச் செல்வது வழக்கம்.
பெற்றோரும் பிள்ளைகளுமாக ஐந்து பேர் இருந்தால் ஐந்து பைகளில் போடுவோம்.
ஆனால் ஐந்திலும் ஒரே அளவு போடமாட்டோம்.
அவரவர் வயதுக்கும், சுமக்கும் திறனுக்கும் ஏற்ப பைகளின் அளவு மாறும்.
அப்பா பெரிய பையை எடுத்துக்கொள்வார்.
பத்து வயது பையன் அவன் திறனுக்கேற்ற பையை எடுத்துக் கொள்வான்.
இப்போது நமது ஆன்மீகப் பயணத்திற்கு வருவோம்.
நமது விண்ணகப் பாதை ஒரு மலர்ப் பாதை அல்ல.
அது சிலுவைப் பாதை.
விண்ணகம் செல்ல ஒரே ஒரு பாதைதான் உண்டு.
அது அளவில் குறுகலாக இருக்கும்.
அந்த பாதை வழியே இயேசு அவரது கனமான சிலுவையைச் சுமந்து முன் செல்வார்.
நாம் நமக்கென்று தரப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர வேண்டும்.
அதனால்தான் இயேசு,
" 'தன்' சிலுவையைச் சுமந்துகொண்டு
'என்'னைப் பின்தொடரட்டும், என்றார்.
அவரவர் திறனுக்கேற்ற, இறைவன் திட்டப்படி அவரவர்க்குத் தரப்பட்ட சிலுவையைச் சுமந்தால் போதும்.
கவனிக்க வேண்டியது:
சிலுவையை இயேசுவுக்காகச் சுமக்க வேண்டும்.
இயேசுவுக்காகச் சுமந்தால்தான் விண்ணகத்தில் பலன் உண்டு.
நமது சக்திக்கு மீறிய சிலுவை நமக்குத் தரப்படமாட்டாது.
சிலுவை என்றால் துன்பம் என்று நமக்குத் தெரியும்.
சிலுவை பல உருவங்களில் வரலாம்.
எதெல்லாம் செய்யக் கடினமாகத் தோன்றுகிறதோ அதெல்லாம் சிலுவைதான்.
நமது அந்தஸ்தின் கடமைகளைச் சரிவரச் செய்வதே நமக்குச் சிலுவைதான்.
நம் கடமைகளைச் சரியாக, இறைவனது மகிமைக்காகச் செய்வதே சிலுவையைச் சுமப்பதுதான்.
ஏனெனில் இயேசுவும் அதைத்தான் செய்தார்.
அதாவது தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற உலகிற்கு வந்தார்,
நிறைவேற்றினார்.
நமக்குத் தரப்படுவது பெரிய, சிலுவையாய் இருக்கலாம்,
ஆனால் நாம் தாங்கும் அளவிற்குத்தான் இருக்கும்.
மாணவர்கள் தங்கள் பாடங்களைச் சரியாக, பராக்குக்கு இடமின்றி படிப்பதே
அவர்கட்குச் சிலுவைதான்
சிலுவையைச் சுமக்க ஆரம்பிக்குமுன் நாம் நம்மையே மறுக்க வேண்டும் என ஆண்டவர் கூறியுள்ளார்
"தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு"
ஏன் நம்மையே மறுக்க வேண்டும்?
நமது சுபாவம் சுகத்தையும், இன்பத்தையும்தான் தேடும்.
இவை சிலுவைக்கு தடங்கல் போடுபவை.
காலை எட்டு மணிக்கு திருப்பலி.
காலையில் ஆறு மணிக்கு எழ வேண்டும்.
அம்மா அல்லது அலாரம் எழுப்புவாங்க.
நமது உடல் சுகம் சொல்லும்,
"இன்னும் பத்து நிமிடம்! "
பத்து நிமிடம் கழித்து எழுப்பினால்,
"இன்னும் பத்து நிமிடம்! "
உடல் சுகம் நம்மை எழ விடாது.
நாம் நம்மையே 'மறுத்து' (No more sleeping, get up.)
எழுந்தால்தான் திருப்பலிக்குப் போகமுடியும்.
நம்மையே மறுத்தால்தான் எழுந்து புறப்பட முடியும்.
எந்த நல்ல காரியம் செய்ய ஆரம்பித்தாலும் நமது சுபாவம் கொஞ்சம் முறண்டு பிடிக்கும்.
நம்மையே மறுத்து, ஒறுத்து செயலில் இறங்க வேண்டும்.
நம்மையே மறுப்பது ஒரு தவ முயற்சி.
இத்தகைய தவ முயற்சிகளை நாம் தவக்காலத்தில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டும்.
நமது ஒறுத்தல் முயற்சிகளும் ஆன்மீக வாழ்வில் வளர நமக்கு உதவும்.
நமது சக்திக்கு மீறிய ஒறுத்தல்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நம்மால் இயன்ற சில ஒறுத்தல் முயற்சிகள்:
பாடம் படித்துக் கொண்டிருக்கும்போது அக்கம்பக்கம் பார்க்காமல் புத்தகத்தில் கண்ணைப்பதித்திருப்பது.
சாப்பாடு, டிபன் நேரத்தைக் கொஞ்சம் தள்ளிப்போடுவது.
ரோட்டில் நடக்கும்போது வால்போஸ்டகளைப் பார்க்காமல்
நடப்பது.
திருப்பலியின்போது கண்களைப் பீடத்திலிருந்து எடாதிருப்பது.
ஒரு கடிதம் வருகிறது, உடனே பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. ஒரு ஐந்து நிமிடம் ஆண்டவருக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் பார்ப்பது.
இப்படி ஆயிரக்கணக்கான ஒறுத்தல் முயற்சிகள் ஒவ்வொருவர் வாழ்விலும் செய்யப்படுவதற்காகக் காத்துக்கிடக்கின்றன.
ஒறுத்தல் கடுகளவு இருக்கலாம். ஆனால் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப் படும்போது கடலளவு அருளைக் கொண்டுவரும்.
ஆண்டவர் செயலைவிட நோக்கத்திற்குஅதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
எவ்வளவு சிறிய ஒறுத்தல் முயற்சியாக இருந்தாலும் ஆண்டவருக்காகச் செய்வோம்.
கவனம் :
சிலுவைப்பாதையின் அருகே அகலமான, கவர்ச்சியான, இன்பமான, ஆடல்பாடல் நிறைந்த பாதை ஒன்று இருக்கும்.
நமது கண்களைச் சுண்டி இழுக்கும்.
மறந்தும்கூட அப்பக்கம் திரும்பிவிடக்கூடாது.
ஏனெனில் கவர்ச்சியான அப்பாதை நரகிற்கு இட்டுச் செல்லும்.
நமது பாதை ஒடுக்கமான சிலுவைப் பாதை.
சிலுவைவழிச் செல்ல
நம்மையே மறுப்போம், ஒறுப்போம், தவம் புரிவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment