அருள் பொங்கி வரும் கால்வாய்.
*************************
"ஏண்ணே, வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன வித்தியாசம்? "
"இப்ப ஏன் இந்த சந்தேகம்?"
"இப்ப தபசு காலம்தானே. "
"அதிலேயும் சந்தேகமா? "
"நீங்க ஏண்ணே சந்தேகத்திலேயே நிற்கிறீங்க.கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க."
"உன் கேள்வியே புரியல"
"சரி, புரியும்படி கேட்கிறேன்.
நீங்க ஒரு பொருள் மேல ஆசைவைத்து அதை அடைய போராடுரீங்க.
ஆனா நீங்க போராடிக் கொண்டிருக்கும்போதே உங்க எதிரி உங்கள கொன்றுபோடுகிறான்.
ஆசைவைத்த பொருள் கிடைக்கு முன்பே நீங்க செத்துப் போறீங்க.
நீங்க வெற்றி பெற்றீங்களா? தோல்வி அடைந்தீர்களா?"
"தோல்விதான்."
"அப்படீன்னா இயேசு கிறிஸ்துவுக்குக் கிடைத்ததும் தோல்விதான.
இறையரசை நிறுவவேண்டும் என்று போதித்தார், உழைத்தார்.
ஆனால் இறையரசை இவ்வுலகில் நிறுவுமுன்,
தன்னை அதன் அரசராகப் பிரகடனப்படுத்துமுன் .
அவரது எதிரிகள் அவரைக் கொன்றுபோட்டார்கள்.
அப்போ அவருக்குக் கிடைத்தது தோல்விதானே? "
"இங்க பாரு. ஆசைப்பட்டது நிறைவேறாவிட்டால்தான் தோல்வி.
அவரது ஆசை நிறைவேறிவிட்டதே.
அவர் பெற்றது முழுமையான வெற்றி.
கடவுளாகிய அவர் மனிதனாய்ப் பிறந்ததே
பாடுகள்பட்டு,
சிலுவையில் அறையப்பட்டு,
மரித்து
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
நமக்கு இரட்சண்யத்தைத் தரத்தான்.
அதுதான் நிறைவேறியதே!
உலகத்தின் கண்களுக்கு தோல்வியாய்த் தெரிவது இறைவன் முன் மிகப்பெரிய வெற்றியாய் இருக்கும்.
உலகின் கண்களுக்கு அவரது சிலுவை மரணம் ஒரு அவமானம்.
நமக்கு அது இரட்சண்யம்.
ஆமா, அவர் இறந்ததைப்பற்றி பேசும் நீ அவர் உயிர்த்ததை ஏன் மறந்தாய்?"
"மறக்கவில்லை. ஆனாலும், இறையரசு?
இயேசு உலகில் எந்த அரசையும் நிறுவவேயில்லையே!"
"இறையரசு ஆன்மீக அரசு.
நமது ஆன்மா இவ்வுலக மண்ணைச் சேர்ந்த உடலோடுகூடி வாழ்ந்தாலும் அது மறு உலகிற்காகப் படைக்கப்பட்து.
அதாவது, இவ்வுலகைச் சாராத, மறுவுலகிற்காகப் படைக்கப்பட்டது.
இவ்வுலகில் வாழ்ந்தாலும்,
இவ்வுலகைச் சாராமல் வாழ்பவர்கள்தான்
இறையரசைச் சார்ந்தவர்கள்.
"கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது." (மத்.12:28)
"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது"
(லூக்.17:21)
இயேசுவின் இந்த வார்தைகளை எப்படி மறந்தாய்?
இறையரசு ஆன்மீக அரசாகையால் இறைவனுக்காக வாழும் ஆன்மாக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இறையரசும் இருக்கும்.
இவ்வுலகில் இறையரசை ஊனக்கண்ணால் பார்க்க இயலாது.
ஆன்மாவால் உணரலாம்.
மறுவுலகில் நமது ஆன்மா இறையரசை நேரடியாகவே அனுபவிக்கும்.
ஆமா, இயேசு திருச்சபையை நிறுவியதையும், அதன் தலைவராக புனித இராயப்பரை நியமித்தையும் உன்னால் எப்படி மறக்க முடிந்தது?
இயேசுவின் சீடர்களாகிய நாம் எல்லோரும் இயேசு நிறுவிய இறையரசில்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
விண்ணுலகிலும், மண்ணுலகிலும்
இறைவனுக்காக, இறைவனில் வாழும் எல்லா ஆன்மாக்களும் இறையரசைச் சேர்ந்தவர்கள்தான்.
இயேசுதானே நம் அரசர்.
இவ்வுலகில் வாழும் இறையரசினர் இவ்வுலகில் இருந்தாலும்,
இவ்வுலகைச் சார்ந்தவர்களல்ல.
In the world, not of the world.
நாம் விண்ணுலகின் உரிமையாளர்கள்.
தினமும் பலமுறை விண்ணகத் தந்தையுடன் பேசுகிறாய்.
அப்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வராதா?"
"விளக்கம்தானே கேட்டேன்.
தெரிந்ததுக்குத்தானே விளக்கம் கேட்கமுடியும்.
இன்னொன்றுக்கும் விளக்கம் தேவை.
இயேசு துன்பப்பட்டார். சரி. நம்மையும் துன்பப்படச் சொல்கிறாரே, ஏன்? "
"உன் கையில் ஒரு மோதிரத்தைக் கழற்றாமல் போட்டிருக்கிறாயே, ஏன்?"
"அதை என் மனைவி தன் கையால் எனக்கு அணிவித்தாள்.
மோதிரம் சாதாரணமானதாக இருக்கலாம்.
ஆனால் அதில் என் மனைவியின் கைப்பட்டதால் என்னைப் பொறுத்தமட்டில் அது முக்கியத்துவம் பெறுகிறது.
நான் என் மனைவியை நேசிப்பதுபோலவே அவள் அணிவித்த மோதிரத்தையும் நேசிக்கிறேன்."
"பாவத்தின் விளைவாக உலகிற்குள் நுழைந்த துன்பம் மனுக்குலம் முழுமைக்கும் பொதுவானதுதான்.
ஆனாலும் நமக்கு இரட்சண்யம் தர இயேசுவே துன்பப்பட்டதால்,
அவரோடு சம்ந்தப்பட்ட துன்பம்
அவரோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முக்கியமானதாகிவிட்டது.
இயேசுவின் சிலுவை, துன்பம் வழியே நமக்கு இரட்சண்யம் வந்ததால்
இயேசுவிடமிருந்து நமக்கு வரும் அருள் வரங்கள் சிலுவையாகிய துன்பங்கள் மூலமே வருகின்றன.
நாம் அவற்றை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொள்ளவேண்டும்,
அவர் நமக்காக ஏற்றுக்கொண்டதுபோல.
அவற்றை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவை வெறும் துன்பங்கள்தான்."
"அதாவது நமக்கு சிலுவை வழியேதான் இரட்சண்யம் வருகிறது."
"ஆமா
'என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.'
(மத்.16:24)
ஆக, இயேசுவின் சீடனாய் இருக்க சிலுவை என்ற சான்றிதழ் கட்டாயம் வேண்டும்."
"இயேசுவுக்காக சிலுவையைச் சுமப்பது எப்படி?"
"நமது துன்பங்களை முதலிலேயே நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்.
நமக்கு வரும் ஒவ்வொரு துன்மும் நம்மை இறையரசுக்கு இட்டுச்செல்லும் இறையருள் பொங்கி வரும் கால்வாயாக மாறிவிடும்."
"மோட்சத்தில்?"
"பயப்படவேண்டாம், மோட்சத்தில் பேரின்பம் மட்டும்தான்.
இயேசுவின் மரணத்தோடு அவரது துன்பங்கள் முடிவுக்கு வந்தது போல
நமது துன்பங்களும் நமது மரணத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.
மோட்சத்தின் பேரின்பமே
உலகில் நாம் இயேசுவுக்காகப்பட்ட துன்பங்களுக்கான சன்மானம்தான்."
சிலுவையே நீ வாழ்க.
இயேசுவைப்போல எங்களையும் சுமப்பாய்.
அவரிடமே கொண்டு சேர்ப்பாய்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment