Sunday, March 24, 2019

நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."

"நான் சாந்தமும்

மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."
+++++++++++++++++++++++++

இயேசு ''என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்,''

என்றுகூறிவிட்டு நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறார்.

சாந்தம்,

மனத்தாழ்ச்சி.

ஒளி இருக்கும் இடத்தில் இருள் இருக்கமுடியாது.

ஒளி (Light) இருக்கும் இடத்தில் பிரகாசம் (Brightness) இருக்கும்.

அவ்வாறே

மனத் தாழ்ச்சி இருக்கும் இடத்தில் சாந்தம் இருக்கும்.

சாந்தம் பலவீனத்தின் அடையாளம் அல்ல.

உண்மையில் பலவீனம் தன்னை மறைத்து தான் பலம் என்று என்று வெளியே காட்டிக்கொள்வதற்காகக வேண்டாத சேட்டைகள் செய்யும்.

மனத்தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இறைவன் இயேசு சர்வ வல்லபர்.

ஆனால் தன் வல்லமையை வெளிக் காட்டிக் கொள்வதற்காக
அவர் உகைப்படைக்கவில்லை.

ஆனால் தன் அளவற்ற அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காகவே

தன் வல்லமையைப் பயன்படுத்தி

மனித இனத்தையும்,

மனித இனம் வாழ உலகையும் படைத்தார்.

நமது முதல் பெற்றோர்

அவருக்கெதிராகப் பாவம் செய்தபோது தன்

தன் வல்லமையைப் பயன்படுத்தி அவர்களை

அழித்திருக்கலாம்.


ஆனால் தன் அளவற்ற அன்பைப் பயன்படுத்தி அவர்களை மன்னித்தார்.

தன் அன்பின் காரணமாகவே தான் படைத்த, நேசித்த மனித குலத்திலேயே மனிதனாய்ப் பிறந்தார்.

அவர் மனித உரு எடுத்த நாளிலிருந்தே

தனது தாழ்ச்சியையும், சாந்தகுணத்தையும்

நமக்கு முன்மாதிரிகையாக்கினார்.

அகில உலகிற்கும் அரசரான அவர் ஒரு ஏழைக் கன்னியைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்.

ஒரு ஏழைத் தச்சனைத் தன்னை வளர்க்கத் தேர்ந்தெடுத்தார்.

ஒரு மாட்டுக் கொட்டகையை தனது பிறப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார்.

தனது பிறப்பு பற்றிய முதல் நற் செய்தியை ஏழைகளான ஆடு மேய்ப்பவர்கட்கே அறிவித்தார்.

30 ஆண்டுகள்

தச்சுவேலை செய்த வளர்ப்புத் தந்தை சூசையப்பருக்கும்,

தன்னைப் பெற்ற தாய்க்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

தனது பொது வாழ்வின்போது

"ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்: ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்."(இசையா.53:12)

என்ற இசையாஸ் தீர்க்கத்தரிசியின் முன்னறிவிப்பின்படியே வாழ்ந்தார்.

நமது பாவங்களுக்ப் பரிகாரமாக
சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளிக்கவே வாழ்ந்தார்.

பாவிகளையே தேடிவந்த அவர்
பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்.

பாவிகளையே தேடிச்சென்றார்.

அவர்களிடமே சாப்பிட்டார்.

நமது பாவத்தைத் அவரே சுமந்து கொண்டு

பாவிகளாகிய நமக்காகப் பரிந்து பேசினார்.

"கடவுளோடு ஒப்புரவாகுங்கள். கடவுளுடைய அருள் தன்மையோடு நாமும் கிறிஸ்துவுக்குள் விளங்கும்படி, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்."(2கொரி.5:21)

என்ற புனித சின்னப்பரின் சொற்கள்

பாவமே அறியாத அவர்

நமக்காகத் தன்னையே பாவ உருவாக்கினதை  விளக்குகின்றன.

இயேசு பாடுகளின்போது தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம்
நமக்காகத் தாழ்ச்சியோடும், சாந்தத்துடனும் தாங்கிக்கொண்டார்.

தன்னைக் காட்டிக்கொடுத்தவனையே,  "நண்பனே" என்று அழைத்த சாந்தம் எவ்வளவு உயர்ந்தது!

இயேசு எதையும் நம்மைப் போல ஒப்புக்குச் சொல்பவரல்ல.

அவர் உண்மை.
Jesus is truth.

உண்மை நினைப்பதைத்தான் சொல்லும், செய்யும்.

இயேசு யூதாசை உண்மையிலேயே நண்பனாகத்தான் நினைத்தார்,

நினைத்ததைச் செய்தார்.

"பிதாவே இவர்களை மன்னியும்" என்று வேண்டும்போது இந்த நண்பனுக்கும் சேர்த்துதான்

நமது அரசு ஒரு பொதுக்காரியம் செய்யும்போது ஒவ்வொரு குடிமகனையும் நினைப்பதில்லை.

புதுசா ரோடு போடும்போது,

"இந்த வழியே லூர்து செல்வம் போவாரு. அவர் கல்கில் தட்டிக் கீழே விழுந்துவிடக்கூடாது.நல்ல ரோடாய்ப் போடுவோம்"

என்று தனித்தனியே ஒவ்வொருவரையும் நினைத்துப் போடுவதில்லை.

ஆனால் இயேசு செய்யும் ஒவ்வொரு செயலும்

அது சம்பந்தப்பட்ட

மனித இனத்தின்

ஒவ்வொரு நபரையும்

தனித்தனியே நினைத்துச் செய்யப்படுவது.

"தந்தையே, யூதாஸ் என்னைக் காட்டிக் கொடுத்தாலும் அவன் என் நண்பன்.

அவனுக்கும் சேர்த்துதான் பலியாகப் போகிறேன்.

அவன் செய்த பாவத்தை மன்னியும், அப்பா"

என்ற செபமும் 'மன்னியும்' செபத்தில் அடங்கி இருக்கிறது.

அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் அவரை அவமானமாகப் பேசியபோதும் அவர் சாந்தமாகதான் இருந்தார்.

அவரது அப்போஸ்தலர்கள் சிலர் பாடுகளின்போது அவரது அருகிலேயே வரவில்லை.

அருகே இருந்த இராயப்பர் அவர் யாருன்னே தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தார்.

அருளப்பர் மட்டும் சிலுவை அடியில் நின்றார்.

உயிர்த்தபின் அப்போஸ்தலர்களைச் சந்தித்தபோது

தன்னை விட்டுச்  சென்றமைக்காக அவர்கள்மீது கோபப்படவேயில்லை.

மாறாக,   "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக" என்று வாழ்த்தினார்!

சர்வ வல்லப கடவுளாகிய இயேசு

இருதயத்தில் தாழ்ச்சி உள்ளவராக இருந்தமையால்தான்

சாந்தமுள்ளவராக இருந்தார்.

எல்லாவித புண்ணியங்களுக்கும் பிறப்பிடம் பரிசுத்தமான இருதயம்தான்.

முதலில் நமது உட்புறமாகிய இதயம் தூய்மையாக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் வெளிப்புறம் தூய்மையாகும்.

நமது உட்புறம் தூய்மையாய் இருந்தால்தான்

நமது எண்ணங்கள் தூய்மையாய் இருக்கும்.

நமது எண்ணங்கள் தூய்மையாய் இருந்தால் நமது சொல்லும் செயலும் தூய்மையாய் இருக்கும்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவைப்போல் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் உள்ளவர்களாக இருந்தால்தான் நம்மை சீடர்கள் என்று அழைத்துக்கொள்வதில் பொருள் இருக்கும்.

எந்த நேரமும் முகத்தை சிடு சிடு என்று வைத்துக்கொண்டு,

கண்டோர் மீதெல்லாம் எரிந்துவிழும் சுபாவம் உள்ளவர்களாக இருந்தால்

நம்மை இயேசுவின் சீடர்கள் என்று அழைப்பதில் அருத்தம் இல்லை.

"வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்." (பழ.16:32)

"He who is slow to anger is better than the mighty, and he who rules his spirit, than he who captures a city" (Pro.16:32).

கோபப்படாதிருப்பவன் பலசாலியை விடச் சிறந்தவன்.

தன்னைத் தானே கட்டுப்படுத்துபவன் ஒரு நகரைக் கைப்பற்றுபவனைவிட சிறந்தவன் என்று பழமொழி ஆகமம் கூறுகிறது.

நாட்டை அடக்கி ஆள்வதைவிட தன்னைத் தானே அடக்கி ஆள்வது கடினம்.

தன்னைத் தானே அடக்கி ஆள்பவன்தான்

நாடுகளோடு போரிட்டு வெல்பனைவிட மேலான வெற்றிவீரன்.

நமது இருதயத்திற்குள் இருந்துகொண்டு

நம்மை ஆட்டிப்படைக்கும்

அகங்காரம், கோபம், மோகம், காய்மாகாரம், போசனப்பிரியம், சோம்பல்

போன்ற துற்குணங்களோடு போரிட்டு,

அவற்றை வெளியேற்றி,

இதயத்தைத் தூய்மைப்படுத்துவது

அவ்வளவு எளிதான காரியமல்ல.

இயேசுவைப் பொறுத்தமட்டில் அவர் கடவுள்.

பரிசுத்தர். தூய்மையானவர்.

அவர் நம் இருதயத்தில் குடியேறினால்தான்

நாம் அவரைப்போல் சாந்தமுள்ளவர்ளாக மாறமுடியும்.

பரிசுத்தர் நம் இதயத்தில் குடியேறவேண்டுமானால்

அங்கு ஆட்டம்போடும் அசுத்த குணங்களை வெளியேற்ற வேண்டும்.

இது இயேசுவின் அருள் உதவி இருந்தால்தான் முடியும்.

இடைவிடாத செப உதவியோடு

இயேசுவின் அருளின் துணைகொண்டு இதயத்தைச் சுத்தப்படுத்தியபின்பு

அதைப் பரிசுத்த ஆவியின் வரங்களால் நிரப்பவேண்டும்.

ஞானம்,

புத்தி,

விமரிசை,

அறிவு,

திடம்,

பக்தி,

தெய்வபயம்

ஆகியவற்றோடு

தேவ ஆவியின் பலன்களான,

அன்பு,

மகிழ்ச்சி,

அமைதி

பொறுமை,

பரிவு,

நன்னயம்,

விசுவாசம்,

சாந்தம்,

தன்னடக்கம்.(கலாத்.5:22)

ஆகியவற்றால் நம் இதயத்தை நிரப்பவேண்டும்.

நிரம்பும்போது சாந்தம் தானாகவே வந்துவிடும்.

நாம் வாழ் நாள் முழுவதும் சாந்தமாக இருக்கவேண்டுமென்றால்

நம் இதயத்தில் இயேசு எப்போதும் குடியிருக்கவேண்டும்.

அவரோடு அடிக்கடி பேசவேண்டும்.

சில சமயங்களில் நமது சாந்தகுணத்திற்குச் சோதனை வரும்.

நம்மைவிட வயதில் சிறியவர் நம்மை அவமரியாதகையாகப் பேசிக்கொண்டிருப்பார்.

நமக்கு மூக்குக்கு மேல கோபம் எட்டிப்பாக்கும்.

நாம் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

"என்னை நினைத்துப்பார்.

என்னால் படைக்கப்பட்டவர்கள் என் பாடுகளின்போது, என்னை  என்னென்ன கேள்விகள் கேட்டார்கள்? 

நினைத்துப் பார்."

இயேசுவின் சாந்தமான முகம் ஞாபகத்துக்குவரும்.

எட்டிப் பார்த்த கோபம் வந்தவழியே போய்விடும்.

இயேசுவிடமிருந்து இயேசுவின் சாந்தகுணத்தைக் கற்றுக்கொள்வோம்.

"சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்."

லூர்து செல்வம்.

 

No comments:

Post a Comment