Thursday, March 7, 2019

என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.

என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
-------------+------------+-------------

நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள். ஆகவேதான் நம்மையே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறோம்.

பின்பற்றுதல் என்றால் என்ன பொருள் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.

அநேகர் நடைமுறையில் கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்படி?
.
ஞானஸ்நானம் பெறுவார்கள், கிறிஸ்தவப்பெயர்வைத்துக்கொள்வார்கள்,
கோவிலுக்குச் செல்வார்கள்,
காணிக்கை போடுவார்கள்.
நன்மை எடுப்பார்கள், 
கோவிலில் திருமணம் செய்துகொள்வார்கள்,
திருவிழா வரிகொடுப்பார்கள் ,  விழாக்களுக்கு புது ட்ரஸ் எடுத்து விழாக் கொண்டாடுவார்கள்,   ஒரு நாள் மரிப்பார்கள், கிறிஸ்தவக் கல்லரைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவாகள்,
அவர்களைப் பொறுத்தமட்டில் இவ்வளவுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.

உண்மையில் 'பின்பற்றுதல்' என்ற வார்த்தையைவிட

'உள்நுழைதல்' என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்.

அதாவது கிறிஸ்துவின் உள்ளே நூழைந்து

அவரது உள்ளம், அங்கிருக்கும் சிந்தனைகள்,

அவரது புத்தி, அங்கிருக்கும் அவரது திட்டங்கள்,

அவரது இதயம், அங்கிருந்து பொங்கி வடியும் அன்பு,

அவரது ஞாபகம், அங்கு வாழும் நாம்,

இங்கெல்லாம் நுழைந்து தியானித்தால் இயேசு யார், எப்படிப்பட்டவர் என்பது நன்கு விளங்கும்.

அவரைப்போல்மட்டுமன்றி, அவராகவே வாழ உதவியாயிருக்கும்.

அவரது உள்ளத்தில் நுழைந்தால் அங்கு நாம் இருப்பதைக் காண்போம்.

நாம் அவரை இப்போதுதான்
நினைக்கிறோம். 

ஆனால் அவர் நம்மை நித்தியகாலமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்.

நம்மை நித்தியகாலமாக நினைத்துக்கொண்டிருக்கும் இறைவனை நாம் இமைப்பொழுதேனும் மறக்கலாமா?

நாம் அவரைப் போலவே நினைத்தால் நமது நினைவு எப்படி இருக்கும்?

என்னை நண்பர் ஒருவர் அவமானப்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.

எனக்கு அவரைத் தண்டிக்க வேண்டும் போல் தோன்றும்.

ஆனால் நான் கிறிஸ்துவின் உள்ளத்திற்குள் நுழைந்திருந்தால் என்ன நினைப்பேன்?

கிறிஸ்துவின் சீடனாகிய யூதாஸ் அவரைக் காட்டிக் கொடுத்தது அவருக்கு எவ்வளவு பெரிய அவமானம்!

இயேசு தண்டிக்க நினைத்தாரா? நண்பனே என்றுதானே அழைத்தார்!

அவரைக் காட்டிக்கொடுப்பான் என்று அவருக்கு முன்பே தெரியும்.

அவன் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாரா?  இல்லையே!

நான் கிறிஸ்துவின் சீடனானால், நான் அவராகவே வாழவேண்டுமென்றால் நான் எப்படிஎன்னை அவமானப்படுத்தியவரைத்  தண்டிப்பேன்?

தண்டித்தால் நான்
கிறிஸ்தவன் அல்ல.

அதேபோல கிறிஸ்துவுக்குஉள்ளே சென்று தியானித்தால்

அவர் நித்திய காலமாகவே தீட்டிய திட்டங்களை மாற்றமில்லாமல் செயலாற்றுவது நமக்குத் தெரியவரும்.

"மேலும், "மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்."(லூக்.9:22)

இது இறைவனின் நித்திய திட்டம்.

இதுமட்டுமல்ல இயேசுவின் ஒவ்வொரு அசைவும் அவரது நித்திய திட்டத்திற்கு உட்பட்டதுதான்.

இதை உணர்ந்தால் நம் வாழ்வில் 'என்ன நடந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்'.

ஏனெனில் நடப்பதெல்லாம் நமது நன்மைக்காகவே இறைப் பராமரிப்பின்படியே நடக்கின்றன.

அவரது இதயத்திற்குள் நுழைந்து பார்த்தால் அவரது ஈடு இணையற்ற அன்பு புரியும்.

நாமும், 

நம்மை வெறுப்பவர்கள் உட்பட,

அனைவரையும் அன்பு செய்வோம்.

நமக்குத் தீங்கு இளைப்பவர்களை மன்னிப்போம்.

தன்னைக் கொலை செய்தவர்களையும் மன்னிக்கத் தன் தந்தையை வேண்டிய இயேசுவின் சீடர்களால் மன்னியாதிருக்க முடியுமா?

கிறிஸ்துவின் உள்ளத்தையும் இதயத்தையும் அறிய அவரது நற்செய்திக்குள் நுழைந்து பார்க்கவேண்டும்.

அவரது உள்ளத்தை நமது உள்ளமாக்கி,

அவரது இதயத்தை நமது இதயமாக்கி

அவராக வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."

இயேசுவின் இந்த ஆசையை உணர்ந்தவர்ட்கு சிலுவை ஒரு ஆசீர்வாதம்.

உண்மையான கிறிஸ்தவன்

அன்பு செய்வான்,

மன்னிப்பான்,

உதவி செய்வான்,

சிலுவையைச் சுமப்பான்.

கிறிஸ்துவாக வாழ்வான்.

அவனே கிறிஸ்துவைப் பின்பற்றுபவன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment