Thursday, March 21, 2019

தாத்தா, நில்லுங்க!

தாத்தா, நில்லுங்க.
****************************

"தாத்தா, நில்லுங்க.

நான் சின்னப் பையன், நீங்க வயசான ஆளு."

"ஏண்டா, இதச்சொல்லத்தான் வெளிய புறப்பட்ட என்னை நிறுத்தினியா?

நீ பிறக்கும்போதே எனக்குத் தெரியும், நீ சின்னப் பையன், நான் வயசான ஆளுன்னு.

இதச் சொல்லத்தான் பிறந்து பத்து வருசம் காத்திருந்தியாக்கும்? "

"தாத்தா, வயசுதான்
ஆயிட்டுதேயொழிய இன்னும் சின்னப் பையனாகவே இருக்கீங்களே!

நான் சொல்றத கேட்டுவிட்டு அப்புறமா பதில் சொல்லுங்க.

பெரிய ஆட்களெல்லாம் தபசு காலத்தில தானம், தர்மம், ஒருசந்தின்னு என்னவெல்லாமோ செய்றீங்க.

நான் சின்னப் பையன்தான்,  ஆனால் உங்களைப் போலவே பெரிய பெரிய ஆசைகளெல்லாம் இருக்கு.

நான் எப்படி தபசு செய்ரது?"

"தபசுன்னா பெரிய விசயம் ஒண்ணுமில்ல.

நமக்குப் பிரியமான ஒரு பொருளைக் கடவுளுக்காகத் தியாகம் செய்றதுதான் தபசு.

உனக்குப் பிடித்தமான ஒரு பண்டம் சொல்லு."

"சாக்லட் "

"அப்போ தபசு காலம் முழுவதும் ஆண்டவருக்காக சாக்லட் சாப்பிடாதே.''

"ஆனால் அதில ஒரு பிரச்சனை இருக்கே."

"என்ன பிரச்சனை? "

"என்னால சாக்லட் விற்கிற கடைக்காரனுக்கு நஷ்டம் வருமே!  மற்றவங்க நஷ்டப்பட நாம காரணம் ஆயிடக்கூடாதே!"

"அப்போ காச மட்டும் கடைக்காரங்கிட்ட கொடுத்திடு!"

"அவர் காச சும்மால்லாம் வாங்கமாட்டார். ஒண்ணு செய்கிறேன்.

அந்தக்காச சேர்த்து வச்சி ஒரு ஏழைப் பையனுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருள வாங்கிக் கொடுக்கிறேன்."

"நல்ல idea. அப்படியே செய்.

இது மட்டுமல்ல. தபசு காலம் முழுவதும் ஆண்டவருக்காக

அப்பாவோடசெல் போன தொடமாட்டேன்,

சீரியல் பார்க்கமாட்டேன்,

பாடத்தை ஒழுங்காக படிப்பேன்,

அம்மா, அப்பா சொன்னத கேட்பேன்,

இரவு செபம் சொன்ன பிறகுதான் தூங்கப்போவேன்,

திருப்பலியின்போது பக்கத்தில் இருக்கவங்ககூட பேசமாட்டேன்னு தீர்மானம் எடுத்துக்கோ.

இதமாதிரி சின்னச் சின்னச் செயல்களே பெரிய ஒறுத்தல் முயற்சிகள்தான்."

"சுருக்கமா சொன்னா சின்னச் சின்ன ஆசைகளைத் தியாகம் செய்யவேண்டும்.

சிறிய துளிகள் சேர்ந்தால் பெரிய வெள்ளம் வரும்.

சரியா?"

"சின்னப் பையன் பெரிய தத்துவம் பேசற! "

"தாத்தா,  ஆண்டவர்  'உன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னாலே வா'ன்னு    சொல்லியிருக்காரு.

நான் சின்னப் பையன். எப்படிச் சிலுவையைச் சுமப்பேன்?"

"சிலுவைங்கிறது நம் வாழ்நாள்ல ஏற்படும் துன்பங்களைக் குறிக்கும்.

அவரவர் வயசுக்கு ஏற்றபடி சிலுவை வரும்.

சில பிள்ளைகட்கு அவர்கள் பாடப்புத்தகமே சிலுவையாய்த் தோன்றும்."

"தாத்தா,  நான்தான் அதைத் தினமும் சுமக்கிறேனே! "

"அது போதாது.

புத்தகத்தைத் திறந்து படிக்க வேண்டும்.

அதுவும் ஆண்டவருக்காக படிக்க வேண்டும்.

அப்போதுதான் அது சிலுவை.

ஆண்டவருக்காக செய்யாவிட்டால் அது வெறும் துன்பம்தான்.

ஆண்டவர் சிலுவையைச் சுமக்கும்போது

நம் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொண்டுதான் சுமந்தார்.

நம் ஒவ்வொருவருடைய பாவங்களுக்கும் பரிகாரமாகச் சுமந்தார்."

"என்னையும் நினைத்திருப்பாரோ?"

"ஆமா, அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நினைத்துதான் சிலுவையைச் சுமந்தார்."

"மனித இனத்தில் கோடிக்கணக்கான மனிதர் இருப்பார்களே! ஒவ்வொருவரையுமா? "

"கடவுள் நம் ஒவ்வொருரரையும்
(Each and everyone of us individually)

நினைவில் வைத்திருக்கிறார்.

அவருடைய ஞானம் அளவிடமுடியாதது.

நம்மால் ஒரே நேரத்தில் ஒரு  பொருளைப்பற்றி மட்டுமே நினைக்கமுடியும்.

ஆனால்

இறைவனால்

உலகம் உண்டானது முதல்

   இருந்த

இருக்கின்ற,

இருக்கப்போகின்ற

அனைத்து மக்களில்

ஒவ்வொருவரையும்

ஒரே நேரத்தில் நினைத்துக்கொண்டிருக்க,

அன்பு செய்ய,

கவனிக்க  முடியும்."

"கடவுள் எவ்வளவு வல்லமை உள்ளவர்!

அவ்வளவு வல்லமை உள்ள கடவுள்

நமக்காக பெரிய சிலுவையைச் சுமதிருக்கும்போது

நம்மால் அவருக்காக சின்னச் சிலுவையைச் சுமக்க முடியாதா?

முடியும் தாத்தா.

என் வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியையும்

சிலுவையாகக் கருதி

அதைப் பொறுமையோடு

ஆண்டவருக்காகச் சுமப்பேன்.

தபசு காலத்தில் மட்டுமல்ல,

என் வாழ் நாளெல்லாம் சுமப்பேன்."

"Very good. இப்போதான் நீ சரியாகச் சிந்தித்திருக்கிறாய்.

நம் வாழ்வு இறைவனால் நமக்குத் தரப்பட்டிருக்கும் சிலுவை.

அதைச் சுமக்கவேண்டியது நமது கடமை.

சிலுவையின் முடிவில் வெற்றி!

சிலுவையின்றி வெற்றி இல்லை.

கல்வாரி மலை ஏறுவோம்,

கடவுள் பதம் சேருவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment