Tuesday, March 12, 2019

இல்லத்துள் வாழும் இல்லங்கள்.

இல்லத்துள் வாழும் இல்லங்கள்.
***************************

"உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? "
(1கொரி.6:19)

"கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்."
(1கொரி.3:17)

"நீங்களும் உயிருள்ள கற்களென, ஞான இல்லமாக அமைக்கப்படுவீர்களாக. "
(1இராய.2:5)

மேலே குறிப்பிடப்பட்ட பைபிள் வசனங்கள் நாம் இறைவன் வாழும்  பரிசுத்த ஆலயங்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

நாம் இறைவனின் ஆலயங்கள்    என்ற உண்மையின் அடிப்படையில்   இயேசு சொல்கிறார்,

" உள்ளம் கலங்கவேண்டாம். கடவுள்மீது விசுவாசம்வையுங்கள், என்மீதும் விசுவாசம் வையுங்கள்.

"என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன: இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்"
(அரு.14:2)

இயேசுவின் மேற்படி கூற்றில்

அவர்  'உறைவிடங்கள்' என்று குறிப்பிடுவது நாம் வழக்கமாகக் குறிப்பிடும் வீடுகள் அல்ல.

இயேசு அடிக்கடி குறிப்பிடும் அவர் வாழ ஆசைப்படும் இல்லமாகிய நாம்.

"ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்: என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்: நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்."
அரு.14:23)

இறைவன் தங்கும் இல்லம் நாம்தான்.

"என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன:"

இங்கு இயேசு 'உறைவிடங்கள்' எனக் குறிப்பிடுவது மோட்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் புனிதர்களை.

அவர்கள் உலகில் கடவுளின் இல்லங்களாக வாழ்ந்து அப்படியே மோட்சத்திற்கும் சென்றுள்ளார்கள்.

"உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்"

என்ன பொருள்?

"உங்களையும் நான் வாழும் இல்லங்களாக மாற்றப்போகிறேன்.

அதாவது

உங்களையும் என்னோடு வாழப்போகும் புனிதர்களாக மாற்றப்போகிறேன்."

அதாவது

"என்னைப் பின்பற்றும் அனைவரையும் என்னோடு நித்தியகாலமும் வாழத்தகுந்தவர்களாக மாற்றப்போகிறேன்."என்கிறார் நமது இரட்சகர்.

இறைவன்தானே மோட்சம்.

அவருள் வாழ்வதே மோட்சவாழ்வு.

மோட்சத்தில் இறைவனோடு எந்த அளவு இணைந்நதிருப்போம் என்றால்

நாம் அவரில் வாழ்வோம், அவர் நம்மில் வாழ்வார்.

"நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான். " 

மறுவுலகில் நாம் அனுபவிக்கயிருக்கும் இறைவன் நம்மில் வாழ்வின் முன்ருசியை இவ்வுலகிலேயே அனுபவிக்கலாம்.

நாம் திவ்யநற்கருணை வாங்கும்போது இறை இயேசுவைத்தானே வாங்குகிறோம்.

அப்போது இறைவன் உண்மையிலேயே நம்மில் உறையும்
இன்பத்தை அனுபவிக்கலாமே.

அன்னை மரியாள் குழந்தை இயேசுவை வயிற்றில் சுமந்தபோது பெற்றிருந்த நிறைவை நாமும் பெறலாமே!

இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் அவரது பொதுவாழ்வில் அவரால் சுகம் பெறவும், அவரது அருள் மொழியைக் கேட்கவும் எப்போதும் அவரைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருப்பார்களே.

இப்போதும் அதே இயேசு நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் திவ்யநற்கருணையில்.

உண்மையில் திவ்யநற்கருணையின் முன் அமர்ந்திருக்கும்போதும்,

திருவிருந்தை அருந்தும்போதும் நாம் மோட்சத்தைத்தான் சுவைத்துக்
கொண்டிருக்கிறோம்.

இங்கு சுவைப்பது முன்சுவைதான்.

நித்திய காலமும் அவரை மறு உலகில் சுவைப்போம்.

இறைவன் நம்மில்,

நாம் இறைவனில்.

இதுதான் மோட்சம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment