Sunday, March 3, 2019

நம்புங்கள், கீழ்ப்படியுங்கள்.

நம்புங்கள், கீழ்ப்படியுங்கள்.
+++++++++++++++++++++++++

சில குடும்பங்களில சில பேரு "தனிக்குடித்தனம் போகிறேன்"னு சொல்லிட்டு

தாய், தந்தை, கூடப்பிறந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு வேற வீட்டுக்குப் போயிடுவாங்க.

போனபின்

தான் விட்டுப்போன தன்னவர்களைப்பற்றி

அவர்களிமும்,

மற்றவர்களிடமும் சதா குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

நம் தாய்த் திருச்சபையை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம் போயிருக்கும் நம்முடைய சகோதரர்களில் சிலருக்கும் இந்தக் குணம் உண்டு. 

அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் என்னை நடுரோட்டில் மறித்துக்கொண்டார்.

"கொஞ்சம் இப்படி வாங்க. உங்களோடு கொஞ்சம் பேசவேண்டும்."

"எனக்குக் கொஞ்சம் பேசிப் பழக்கமில்லை. நான் மணிக்கணக்கா பேசுவேன்."

"சரி, வாங்க. நாட்கணக்கா பேசுவோம். எனக்கு ஒரு சந்தேகம்.

நீங்களெல்லாம் கிறிஸ்தவர்கள்தானா? "

"ஏன் இந்தச் சந்தேகம்? "

"கிறிஸ்தவர்கள்னா கிறிஸ்துவ மட்டும்தானே  வழிபடணும்.

நீங்கள் கிறிஸ்துவோடு புனிதர்கள் என சொல்லிக்கொண்டு

ஆயிரக்கணக்கானவர்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! "

"புனிதர்கள்னா யார்னு தெரியுமா?"

"ஏன் தெரியாது,    நம்மைப் போல உலகில் வாழ்ந்தவர்கள், சாதாரண மனிதர்கள்."

"நம்மைப்போல்னா?"

"நம்மைப்போல்னா நாம் வாழ்கிரோமில்லையா அதே மாதிரி."

" ஒரு சின்ன விளக்கம்.

1. கிறிஸ்தவர்கள் எப்படி  வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்கள்.

அதாவது நமக்கு முன் மாதிரிகையாக வாழ்ந்தவர்கள்.

2.இறைவனில் நமது சகோதரர்கள்.

இறையன்பில் நம்மோடு இணைந்தவர்கள்.

நம்மால் அன்பு செய்யப்படவேண்டியவர்கள்.

நமக்காக இறைவனிடம் பரிந்து பேசக்கூடியவர்கள்.

3.நம்மைப்போலவே திருச்சபையின் உறுப்பினர்கள்.

4.புனிதர்களாகையால் வணங்கப்பட வேண்டியவர்கள்."

"ஏன் வணங்கப்பட வேண்டியவர்கள்?"

"உங்களைவிட பெரியவர்களுக்கு வணக்கம் போடுகிற பழக்கமே கிடையாதா?

புனிதர்கள் நம்மவர்கள்.

நமக்கு முன்னாலேயே நாம் செல்லவிருக்கும் மோட்சத்திற்குச் சென்றுவிட்டவர்கள்.

இயேசுவோடு இணைந்திருப்பவர்கள்.

தங்கள் பரிந்துரையால் நமக்கு உதவக்கூடியவர்கள்.

ஆனாலும்,

திருச்சபை புனிதர் பக்தியை ஊக்குவிப்பது

வெறுமனே நமக்காக இறைவனிடம் பரிந்துபேசக் கேட்பதற்காக மட்டுமல்ல.

வேரொரு முக்கிய காரணம் உண்டு.

பேசாமல் கேட்பதாயிருந்தால் சொல்லுகிறேன்."

"சரி, சொல்லுங்க."

"ஒரு புனிதர் மீது உண்மையான பக்தி உள்ளவங்க

எத்தகைய குணங்களினால் அவர் புனிதர் ஆனாரோ

அதே குணங்களைத் தாங்களும் பின்பற்றி வாழ்வாங்க.

அப்படி வாழ்வதற்காகத்தான் திருச்சபை புனிதர் பக்தியை ஊக்குவிக்கிறது.

மார்ச் மாதம் புனித சூசையப்பர் மீது பக்தி உள்ளவர்கட்குப் பிடித்தமான மாதம்.

இவர் திருக்குடும்பத்தின் தலைவர்.

மாதாவின் கன்னிமைக்குப் பங்கம் வராமல் அவரது கணவராக வாழ்ந்தவர்.

இயேசுவின் வளர்ப்புத் தந்தை.

இவர் ஒரு நீதிமான்.

இவரது முக்கியமான ஆன்மீகப்பண்புகள் இறைவன் சித்தத்தை மறு கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளுதல், உடனடியாகக் கீழ்ப்டிதல்.

மாதாகூட கபிரியேல் தூதரிடம் "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" 

என்று விளக்கம் கேட்டாள்.

ஆனால் சூசையப்பரோ வான தூதரிடம் ஒரு கேள்விகூட கேட்காமல் கீழ்ப்படிந்தார்.

மாதா கருத்தரித்திருப்பதின் காரணம் தெரியாமல் கலங்கினாலும்

வானதூதர் விளக்கம் அளித்ததும்

"சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."

அவ்வாறே வானதூதர்

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" 

என்று சொன்னபோது
மறு கேள்வி கேட்காமல்

"அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்."

எகிப்தில் இருக்கும்போது தேவதூதர்

"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டனர்" 

என்றவுடன்

"அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ராயேல் நாட்டுக்கு வந்தார்."

"ஆனால் யூதேயாவிலே, அர்கெலாவு தன் தந்தை ஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டுக்குச் சென்றார்."

தன் பொறுப்பில் இருப்பது எல்லாம் வல்ல இறைமகன் என்று அவருக்குத் தெரியும்.

அவர் எதிரிகளை ஒரு நொடிப்பொழுதில் அழிக்கமுடியும் என்றும் அவருக்குத் தெரியும்.

அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

"இது இறைவன் சித்தம், ஏற்கிறேன், நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான்."

இதுதான் அவர் மனநிலை.

தச்சுத் தொழில் செய்து சர்வத்தையும் படைத்த இறைவனைக் காப்பாற்றினார்.

இயேசு பொதுவாழ்வுக்கு வருமுன்னே, வாத நோயால் இறந்தார். 

இயேசுவின்  மடியில் தலை வைத்து இறந்தார்.

இயேசு நினைத்திருந்தால் அவரைக் குணமாக்கியிருக்க முடியும். 

ஆனால் சூசையப்பர் இப்படித்தான் சாகவேண்டுமென்பது இறைவன் சித்தம்.

இறைவன் மடியிலேயே தலை வைத்து சாகும் பாக்கியம்,

மாதாவுக்குக்கூட கிடையாத பாக்கியம்,

சூசையப்பருக்குக் கிடைத்தது.

ஆகவே அவர் நன்மரணத்தின் பாதுகாவலர்.

சூசையப்பர் மீது உண்மையான பக்தி உள்ளவர்கள் இறைத்திட்டத்தை ஏற்று, கீழ்ப்படிந்து நடக்கும் பண்பைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஹலோ! என்னது? நீங்க தூங்குவதற்கா இவ்வளவு நேரம் பேசினேன்."

"எங்க பேசினீங்க. நல்லா தாலாட்டுப் பாடினீங்க!  ரொம்ப நன்றி! "

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment