பிள்ளைகள் மட்டில் அம்மாவின் கடமை.
"தாத்தா, என்ன வேலை நடக்கு?"
".வேலை நடக்கிறது இருக்கட்டும். உன்னை நேற்றுக் காணவேயில்லை."
"நேற்று வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.''
", அப்படி என்ன வேலை?,
" வேலையா? கொண்டாட்டம்."
''கொண்டாட்டமா? என்ன கொண்டாட்டம்?"
"பகல் முழுவதும் ஒரே வேலை."
'', என்னடா உளறுத?
என்ன வேலை?ன்னு கேட்டேன்.
வேலையா? கொண்டாட்டம்னு சொன்ன.
என்ன கொண்டாட்டம்? னு. கேட்டா ஒரே வேலைன்னு சொல்ற?
என்ன ஆச்சி உனக்கு?"
"தாத்தா, நேற்று அம்மா தினம் (Mother's day) உங்களுக்குத் தெரியாதா?
நேற்று முழுவதும் அம்மா தினத்தைக் கொண்டாடினோம்."
",ரொம்பசந்தோசம்.
எப்படி கொண்டாடினீங்க? அம்மாவுக்கு ஏதாவது Gift வாங்கி கொடுத்தீர்களா?"
"யாருமே இதுவரை வாங்கி கொடுக்காத Gift ஐ நாங்கள் வாங்காமலேயே கொடுத்தோம்."
", என்ன Gift?"
"அம்மாவுக்கு நாள் முழுவதும் ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டு வேலை எல்லாவற்றையும் நாங்களே செய்து அம்மாவுக்கு மூன்று வேளை சாப்பாட்டையும் நாங்களே ஊட்டினோம்."
",பரவாயில்லையே! அம்மா சும்மாவா இருந்தாங்க?"
"எங்கள் கூடவே இருந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தந்து கொண்டே இருந்தாங்க.''
", அப்போ நேற்று அம்மா டீச்சர் வேலை பார்த்தார்கள்!
உண்மையில் படிப்பதை விட சொல்லிக் கொடுப்பது தான் கஷ்டம்.
ஒன்றுமே தெரியாத சிறு குழந்தைகளுக்கு ஒண்ணாம் க்ளாஸ் டீச்சர் சொல்லிக் கொடுப்பதைப் போய் பாரு, தெரியும்."
"தெரியும் தாத்தா, நானும் ஒண்ணாம் க்ளாஸ் படித்திருக்கிறேனே!
இப்போது அம்மாவைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?"
", பேசுவோமே! ஆனால் அதற்கு முன் ஒரு வார்த்தை.
அம்மா தினத்தன்று மட்டும் அம்மாவுக்கு உதவியாய் இருந்து விட்டு,
வருட முழுவதும் உதவியே செய்யாவிட்டால் அந்த ஒரு நாள் கொண்டாட்டத்தால் பயன் ஏதுமில்லை."
"இதுதான் ஒரு வார்த்தையா?
பரவாயில்லை.
நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், இதே மாதிரி ஒரு வார்த்தையில்."
", சரி, கேள்."
"அம்மா என்றால் யார்?"
",கடவுள் நம்மை படைப்பதற்கு
அவருக்கு உதவிகரமாய் இருந்தவர்கள் நமது அப்பாவும், அம்மாவும்தான்."
" அதாவது, நம்மைப் பெற்றவர்கள்."
", அதாவது நம்மைக் கடவுளிடமிருந்து பெற்று, உலகிற்குத் தந்தவர்கள்."
"அது மட்டும்தானா அவர்களுடைய வேலை?"
", உன்னைப் பெற்றவர்கள் என்ன செய்தார்கள்?"
"வளர்த்தார்கள்."
", அதுதான் அவர்கள் பணி. அநேகர் இந்த பணியை ஒழுங்காகச் செய்வதில்லை."
"எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வளர்க்கத்தானே செய்கிறார்கள்.
குழந்தைகளை வளர்க்கா விட்டால் எப்படி அவர்கள் பெரியவர்கள் ஆகிறார்கள்?"
", பெரியவர்கள் ஆக்குவது மட்டும் வளர்ப்பு இல்லை.
சாப்பாடு கொடுத்தால் ஆட்டுக் குட்டி கூட வளர்ந்து விடும்."
''நீங்கள் எதை வளர்ப்பு என்கிறீர்கள்?"
", குழந்தைக்கு ஒரு உடலும், ஒரு ஆன்மாவும் இருக்கிறது என்பது உனக்குத் தெரியும்.
உனக்கு எத்தனை கைகள்?"
"இரண்டு."
", நீ நன்றாகத்தான் சாப்பிடுகிறாய்.
ஆனால் ஒரு கை மட்டும் தான் வளர்கிறது, மற்றது வளரவே இல்லை என்று வைத்துக்கொள்வோம். எப்படி இருக்கும்."
"Awkward ஆ இருக்கும். வலது கை மட்டும் வளர்ந்து கொண்டே போனால், சோற்றை அள்ளி வாயில் வைக்க முடியாது.
ஆனால், தாத்தா, இரண்டு கைகள் மட்டும் வளர்ந்து கொண்டே போனாலும் Awkward ஆகத்தான் இருக்கும்.
மொத்த உடலும் வளர வேண்டும்."
",குழந்தைக்கு உடலும், ஆன்மாவும் இருக்கிறது.
அம்மா போடுகின்ற சாப்பாட்டால் எது வளரும்?"
"உடல் வளரும்."
", ஒழுங்காக நல்ல சத்துள்ள உணவைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உடல் மட்டுமே வளரும்.
அம்மா கொடுக்கிற
துணிமணிகளால் உடல் அழகாக இருக்கும்.
ஆனால் ஆன்மா? அம்மா கொடுக்கிற உணவால் ஆன்மா வளராது."
"உடல் மட்டும்தானே, தாத்தா வளர முடியும். ஆன்மா ஆவி.
ஆவியால் அடிக்கணக்கில் வளர முடியுமா?"
",ஆன்மா அடிக்கணக்கில் வளர முடியாது. ஆனால் வளர முடியும். ஆன்மீகத்தில் வளர முடியும்.
கடவுள் நம்பிக்கையிலும், பக்தியிலும் வளர முடியும். நல்ல குணங்களில் வளர முடியும்."
"குழந்தைகளை ஆன்மீகத்தில் எப்படி வளர்ப்பது?"
",குழந்தையின் வளர்ச்சி எங்கே ஆரம்பிக்கிறது?"
"தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது."
",தாயின் வயிற்றில் இருக்கும்போதே உடலும், ஆன்மாவும் வளர வேண்டும்."
"உடல் வளரும். புரிகிறது. ஆன்மா எப்படி வளரும்?'
",அம்மா உணவு உண்ணும்போது அதன் ஒரு பகுதி குழந்தையின் வயிற்றுக்குள்ளும் தொப்புள் கொடி வழியாக செல்லும்.
அதன் உதவியால் உடல் வளரும்.
அம்மா தனது ஆன்மீக வளர்ச்சிக்காக செய்யும் தியானம், ஞான வாசகம், செபம், பக்தி முயற்சிகள் போன்றவற்றின் ஆன்மீகப் பயனிலும் குழந்தை பங்கு பெறும்.
தாய் ஆன்மீகத்தில் வளரும்போது குழந்தையும் வளரும்.
உடல் ரீதியாக குழந்தை வளர வேண்டுமென்றால் தாய் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.
ஆன்மீக ரீதியாக வளர வேண்டுமென்றால் தாய் ஆன்மீக வளர்ச்சி தரும் பக்தி முயற்சிகளை ஆர்வமுடன் செய்ய வேண்டும்.
தாய் எப்படியோ அப்படியேதான் குழந்தையும்."
"ஆனால் அனேக தாய்மார் குழந்தையின் உடல் வளர்ச்சியில் மட்டும்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அவர்களே ஆன்மீக வளர்ச்சி பற்றி கவலைப் படுவதில்லை."
",அதனால் தான் அனேக பிள்ளைகள் சாப்பாட்டைக் கண்டால் ஓடி வருவார்கள். செபம் சொல்வதைக் கேட்டால் ஓடி விடுவார்கள்.
தாய் பெற்ற தன் பிள்ளையிடம் கடவுளை பற்றி சொல்ல வேண்டும்.
செபம் சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்.
கடவுளின் கட்டளைகளை அவர்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டும்.
ஆன்மீக வாழ்வில் அவர்களுக்கு தானே முன்மாதிரிகையாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தாயின் வயிற்றில் உற்பவித்து, பிறந்து, வளரும் பிள்ளைகள் நல்ல கிறிஸ்தவர்களாக வளர்வார்கள், வாழ்வார்கள்.
பிள்ளைகள் நல்ல கிறிஸ்தவர்களாக வாழாவிட்டால் அதற்கு முக்கிய காரணம் தாய் தான்.
தன் மேல் பிழையை வைத்துக்கொண்டு பிள்ளைகளை குறை சொல்வதில் பயன் ஒன்றுமில்லை."
" குழந்தையின் வளர்ப்பிற்கு அம்மா மட்டுமா பொறுப்பு. சமூகம் என்று ஒன்று இருக்கிறதே.
பிள்ளை 24 மணி நேரமும் தாயுடனா இருக்கிறது?
அதிகப்படியான நேரம் சமூகத்தில்தான் இருக்கிறது.
அங்கேதான் கெட்டுப் போகிறது."
",ஹலோ, நீ கொண்டாடியது அன்னையர் தினமா? சமூக தினமா?"
" அன்னையர் தினம்."
",அதனால் தான் அம்மாவை பற்றி. மட்டும் பேசுகிறோம்.
தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத வேண்டும்.
மற்ற கேள்விகளை ஏன் கேட்கவில்லை என்று எழுதக்கூடாது.
பிள்ளைகள் தாங்கள் பழகும் சமூகத்தால் ஏன் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்தால்
அதற்கு முதல் காரணம் அம்மா அப்பா இருவருமாகத்தான் இருக்கும்.
ஏனெனில் எப்படிப் பட்டவர்களோடு பழக வேண்டும் என்று பிள்ளைகளுக்கு முதலில் பயிற்சி கொடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்தான்.
பெற்றோர் வீட்டில் மட்டும் இருக்க முடியாது.
அவர்கள் எப்படிப்பட்ட சமூகத்தில் பழகுகிறார்களோ அப்படிப்பட்ட சமூகத்தில்தான் பிள்ளைகளும் பழகுவார்கள்.
அதற்கு அப்பாற்பட்ட சமூகத்தில் அவர்கள் வாழ்ந்தாலும் பெற்றோர் ஏற்கனவே அளித்திருக்கும் பயிற்சி அவர்களைக் காப்பாற்றும்.
தங்கள் பிள்ளைகளின் ஆன்மாவின் மீட்புக்குப் பெற்றோரும் உதவிகரமாய் இருக்க வேண்டும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment