Wednesday, May 4, 2022

"நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவசிப்பதாயில்லை."(அரு.6:36)

"நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவசிப்பதாயில்லை."
(அரு.6:36)

"தாத்தா, உங்களுக்கு நான் ஒரு சிறிய test வைக்கப் போகிறேன்."

"நீ! பொடியன்!"

"ஆமா, பொடியன். அதனால்தான் 
சிறிய test வைக்கப் போகிறேன்."

", தாத்தாவுக்கு test என்றாலே கொஞ்சம் பயம்தான்."

"ஏன் தாத்தா?"

",test ன்னா கேள்விகள் இருக்கும். எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியும் என்று சொல்ல முடியாதே."

"தெரியாததை Choiceல விட்ருங்க!"

", சரி. கேள்."

"நமது மீட்பர் யார்?"

", ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து."

"அவர்தான் மீட்பர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"

",அவரே கூறியதால் தான் தெரியும். தன்னுடைய கூற்றை தன்னுடைய செயல்களால் நிரூபித்தார்.

அவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் மூலம் அவரைப் பற்றி எனக்குத் தெரியும்."

"அவரை பார்த்திருக்கிறீர்களா?"

",பார்த்திருக்கிறேன்."

"கண்களால்?"

",இதோ எனது முகத்தில் உள்ள இரண்டு கண்களாலும் பார்த்திருக்கிறேன்."

"2000 ஆண்டுகளுக்கு முன்னால்
 வாழ்ந்தவரை எப்படி இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களது கண்களால் பார்க்க முடியும்?"

",2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அதே இயேசு இப்பொழுதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்."

" யார் சொன்னது?"

 ",அவரே சொன்னது. 

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." என்று அவரே சொல்லியிருக்கிறார்."

"இப்பொழுது எங்கே பார்த்தீர்கள்?"

",திருப்பலி காணச் செல்லும் போதெல்லாம் அவரே என்னிடம் வருகின்றாரே.

அப்போது அவரை பார்க்காமல் இருக்க முடியுமா?"

"அப்ப, ரச குணங்களில்தானே அவரை பார்க்கிறீர்கள்!"

", அதனால் என்ன? பார்ப்பது அவரைத் தானே! 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அதே இயேசுவைத்தான், அதே உடலோடும், ஆத்மாவோடும் பார்க்கிறேன்."

"இரத்தத்தோடும்?"

", இயேசு பாடுகள் படும்போது  தனது உடலில் இருந்த இரத்தத்தை எல்லாம் சிந்தி விட்டார்.

ஆனாலும் உயிர்க்கும்போது தனது முழு உடலோடு தான் உயிர்த்தார்.

ஆகவே இப்போது என்னிடம் வரும்போது தனது உடலோடும், இரத்தத்தோடும், ஆத்மாவோடும்தான் வருகிறார்.

ஆகவே அவரை நான்  முழுமையாகவே பார்க்கிறேன்."

"அவரோடு பேசியிருக்கிறீர்களா?"

",ஆண்டவரே என்னிடம் வரும்போது அவரிடம் பேசாமல் இருப்பேனா?

பேசியிருக்கிறேன். அவரும் பேசியிருக்கிறார்."

"எப்படிப் பேசினீர்கள்?"

", இரண்டு ஆன்மாக்கள் எப்படிப் பேசுமோ, அப்படி. ஆன்மாக்கள் பேசும்போது நாவினால் பேசும் சப்தம் போல் வெளியே கேட்காது.

உள்ளங்களுக்குள்தான் கருத்துக்கள் பரிமாறப்படும்."

"இயேசுவைக் கண்டிருந்தும் விசுவசிக்காதவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?".

",அன்றே இயேசு தானே வாழ்வு அளிக்கும் உணவு என்று கூறியபோது,

அவருடைய சீடருள் பலர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

இயேசுவை திவ்ய நற்கருணையில் கண்டும் விசுவசிக்காதவர்கள் 

அவருடைய சீடர்களாக இருக்க முடியாது."

"திவ்ய நற்கருணை மூலமாக இயேசு நம்மிடம் வருவதால் நமக்கு என்ன லாபம்?"

", நாம் அவரில் நிலைத்திருப்போம், அவர் நம்மில் நிலைத்திருப்பார்.

அவரை உணவாக உட்கொண்டால் அவரால் என்றென்றும் வாழ்வோம்."

"நீங்கள் இயேசு சொன்ன வார்த்தைகளையே சொல்கிறீர்கள்?"

",அவரையே உணவாக உண்ணும் நாம்
 அவருடைய வார்த்தைகளை நம்முடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் தானே.

அவரும் நாமும் ஒன்றிக்கும் போது,

அவரது வார்த்தைகளும் நமது வார்த்தைகளும் ஒன்றித்துவிடும்."

''ஆண்டவரை நமது உள்ளத்தில் வரவேற்க நாம் எப்படி நம்மை தயாரிக்கவேண்டும்?"

",அவர் வந்து தங்கும் நமது உள்ளம் பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

பாவ நிலையில் இருந்தால் பாவசங்கீர்த்தனம் செய்து பாவத்தை போக்கிவிட வேண்டும்.

பாவத்தோடு அவரை வரவேற்பது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம்.

ஒரு பெரியவரை நம் வீட்டிற்கு வரவேற்கும் போது அவர் அமர வேண்டிய நாற்காலியில் சாணத்தை அள்ளிப்போட்டு அமரச் சொன்னால் அவர் என்ன சொல்லுவார்?

பாவம் சாணத்தை விட நாற்றம் உள்ளது.

அதை நமது உள்ளத்தில் வைத்துக்கொண்டு ஆண்டவரை அழைக்கக்கூடாது.

நன்கு சுத்தம் செய்துவிட்டு அழைக்க வேண்டும்."

"நாட்டில் பாவசங்கீர்த்தனம் செய்யும் வழக்கம் குறைந்துவிட்டது என்கிறார்கள்.

ஆகவே நாட்டில் பாவங்களும் குறைந்துவிட்டன என்று சொல்லலாமா?"

", பாவங்கள் குறைந்தால் நல்லதுதான்.

ஆனால் உண்மை நிலை எப்படி இருக்கிறது என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

இயேசு தன்னுடைய 12 சீடர்களுக்கும் திவ்ய நற்கருணை கொடுத்தார்.

 "என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ! என்னோடு பந்தியில் அமர்ந்து உண்ணுகிறான்." என்று அவரே சொன்னார்.

"யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றபின், அவனுக்குள் சாத்தான் நுழைந்தான்."

பாவத்துடன் நற்கருணை 
உண்பவர்கள் யூதாசை நினைத்துப் பார்க்க வேண்டும். "

"நினைத்துப் பார்த்து?"

",திருந்த வேண்டும். ஆண்டவர் இயேசு அமர வேண்டிய இடமாகிய நமது உள்ளத்தை பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தூசி பட்டால்கூட அப்பப்போ துடைத்து விட வேண்டும்."

"அப்படின்னா?"

", சாவான பாவம் இருந்தால்
கட்டாயம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

தூசி, அதாவது அற்பப் பாவங்கள் இருந்தாலும் அப்பப்போ பாவசங்கீர்த்தனம் செய்து துடைத்து விட்டால் ஆன்மா எப்போதும் மிகவும் பரிசுத்தமாக இருக்கும்."

"அற்பப் பாவம் மட்டும் இருந்தாலும் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமா?"

", கட்டாயமில்லை. பேரப்புள்ள, சகதி பட்டால் கட்டாயம் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

ஆனாலும் சிறு தூசிகள் இருந்தாலும் சாப்பிடுமுன் கை கழுவுகிறோம் அல்லவா.

அதேபோல் தான் அற்பப் பாவங்களையும் கழுவி விட்டால் ஆன்மா மிகவும் பரிசுத்தமாக இருக்கும்.

குருமடங்களில ஒவ்வொரு வாரமும் பாவசங்கீர்த்தனம் செய்வார்கள். (Weekly Confession)"

"இது விஷயத்தில் திருச்சபையின் கட்டளை என்ன?

",வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது. "

குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒரு முறையாவது.

ஒரு முறை மட்டும் என்று கூறப்படவில்லை."

"அதிகபட்சம்?"

","ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்." ( மத். 18:22) என்ற இயேசுவின் வார்த்தைகளே பதில்."

" சரி தாத்தா, இன்றைய Test முடிந்து விட்டது."

", அப்போ நாளையும் தொடருமா?"

"அது எனக்குள் எழும் கேள்விகளைப் பொருத்தது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment