Wednesday, May 18, 2022

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."(அரு.15:13)

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

", செல்வம், காபி ரெடியா?"

"காபி போட நான் ரெடி."

", அப்போ காபி ரெடியில்லை. வா, உட்கார். கொஞ்சம் பேசிக் கொண்டிருப்போம். காபி குடிச்சது மாதிரியிருக்கும்."

"சொல்லுங்க."

", இந்த வசனத்தை வாசி."

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை." இந்த வசனத்தை இன்று அதிகாலையிலேயே வாசித்துவிட்டேன். இதைப்பற்றி தான் பேச வேண்டுமா?"

",தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதுதான் மேலான அன்பு என்று இயேசு சொல்கிறார்.

நீ என்ன சொல்கிறாய்?"

"ஏங்க, இது பட்டிமன்றமா, நான் ஒரு பக்கமும் இயேசு ஒரு பக்கமும் பேசுவதற்கு? 

இயேசுவின் வார்த்தை ஏற்றுக் கொள்வதற்கும் வாழ்வதற்கும் மட்டும்தான். 

பட்டிமன்றம் பேசுவதற்கு அல்ல."

",அது எனக்கும் தெரியும். அந்த வசனத்தை நீ எப்படி புரிந்து கொண்டிருக்கிறாய் என்பதை அறியவே அவ்வாறு கேட்டேன்."

''இயேசு நமக்காக, நமது மீட்புக்காக, தன் உயிரையே கொடுத்தார்.

அதன் மூலம் தனது அளவில்லாத அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

நாம் இயேசுவுக்காக நமது உயிரைக் கொடுத்து நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்."

",இயேசு நமக்காக சிலுவையில் மரித்தார்.

 நீ சிலுவையில் மரிக்க ரெடியா?"

",சிலுவை என்ற வார்த்தைக்கு இயேசு கொடுத்திருக்கிற பொருளின் படி நான் சிலுவையில் மரிக்க எப்போதும் ரெடி."


",அது என்ன இயேசு கொடுத்திருக்கும் பொருள்?"

 "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23) என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

மனிதன் சுகமாகவும், துன்பங்கள் இன்றியும், இவ்வுலக இன்பங்களை அனுபவித்தும் வாழ ஆசைப்படுகிறான்.

இத்தகைய ஆசைகளை அடக்கி,
 நோய்கள் வந்தாலும்,
 துன்பங்கள் வந்தாலும் 
அவற்றை மனதார ஏற்றுக்கொண்டு 

உலக இன்பங்களை துறந்து வாழ்வதே நாம் சுமக்க வேண்டிய சிலுவை.

இந்த சிலுவையை சுமக்க நான் எப்போதும் தயார்."

",நோய் வந்தால் டாக்டரிடம் போக மாட்டாயா?"

''நோய் வந்தால் டாக்டரிடம் போவது பசி வந்தால் சாப்பிடுவது போல்

டாக்டரிடம் போவேன்.

ஆனால் நோய் குணமானாலும், குணமாகா விட்டாலும் இயேசுவுக்காக முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

நோயினால் மரணம் ஏற்பட்டால் சந்தோஷமாக இறைவனிடம் செல்வேன்."

',என்னை விட்டு விட்டா?"

"இறைவன்தாங்க நமது வீடு. 
நீங்களும் அங்கேதானே வருவீர்கள்."

"உண்மையிலேயே இயேசுவைப் போல் சிலுவையில் மரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்?"

"அதுக்கும் தயார்."

",உன்னால் முடியுமா? இயேசுவை சிலுவையில் அறையப் போகும்போது அப்போஸ்தலர்கள் கூட அவரை விட்டு விட்டு ஓடி விட்டார்களே!"

" அதே அப்போஸ்தலர்கள்தானே ஆண்டவருக்காக உயிரைக் கொடுத்து வேதசாட்சிகள் ஆனார்கள்.

அது அவர்களுடைய சொந்த பலத்தினாலா?

இல்லை, பரிசுத்த ஆவியின் வல்லமையால்.

நமது பலவீனத்தினால் முடியாதது இறைவனது அருளின் உதவியால் முடியும்.

நமக்கு தைரியம் தரும்படி பரிசுத்த ஆவியை நோக்கி செபிக்க வேண்டும்."

",சிலுவையைச் சுமக்க தேவை இல்லாதவர்கள் யாரும் இருக்கிறார்களா?"

"இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பாதவர்கள் சிலுவையைச் சுமக்கத் தேவை இல்லை.

இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பவில்லை என்றால், சாத்தானின் சீடர்களாக வாழ ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம்."

", சிலருக்கு கடவுள் மீதும் நம்பிக்கை இருக்காது, சாத்தான்மீதும் நம்பிக்கை இருக்காது. அவர்கள்?"

"இறைவனுக்கு யாரும் சேவை செய்யக் கூடாது என்பதுதான் சாத்தான் ஆசை.

இறைவனின் ஆசையை நிறைவேற்றாதவர்கள் சாத்தானின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள்.

இறைவனின் ஆசையை நிறைவேற்றுபவர்கள் அவரின் சீடர்கள்.

நிறைவேற்றாதவர்கள் சாத்தானின் சீடர்கள்."

",அவர்களுக்கும் கஷ்டங்களும் நோய்களும் வருகின்றனவே.

 அவை சிலுவை என்றால் அவற்றை அவர்களும் சுமக்கிறார்களே."

"உழைத்து சம்பாதித்தால் அதற்குப் பெயர் சம்பளம்.

இலஞ்சம் வாங்கி சம்பாதித்தால் அதற்குப் பெயர் கொள்ளை.

கடவுளுக்காக துன்பங்களை ஏற்றுக் கொண்டால் அவை சிலுவை.

வேறு வழி இல்லாமல் துன்பப் பட்டால் அவை வெறும் துன்பங்களே."

", நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன். நீ என்மேல் உயிரையே வைத்திருக்கிறாய். இதன் பொருள் என்ன?"

"ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்பதுதான் பொருள்.

நாம் இயேசுவின் மேல் உயிரையே வைக்க வேண்டும். 

இயேசுவின் மேல் உயிரையே வைத்திருந்தால் நாம் அவர் மீது அதிகமாக அன்பு வைத்திருக்கிறோம், அவரது சேவைக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கிறோம் என்பது பொருள்.

அர்ப்பண வாழ்வு வாழ்ந்தால் இயேசுவுக்காக உயிரை விடவும் தயாராக இருப்போம்.

"சரி, அப்போவே காபி கேட்டீங்க."

",பரவாயில்லை.
 இப்போது காபி சாப்பிட்டு விட்டது போல்தான் இருக்கிறது.

 இன்னும் ஒரு கேள்வி, அதற்கு நீ பதில் சொல்லிவிட்டால் சிற்றுண்டி சாப்பிட்டது போல் ஆகி விடும்."

"கேளுங்கள்."

",சிறுவர்களும் இயேசுவின் சீடர்களே.

நமக்கு வருவது போல் பெரிய துன்பங்கள், கஷ்டங்கள் அவர்களுக்கு வராது.

அவர்களுக்கு விளையாட்டு பருவம்.

இயேசுவின் சீடர்கள் என்ற முறையில் அவர்கள் எப்படிப்பட்ட சிலுவையை சுமப்பார்கள்."

",ஏங்க, இது ஒரு பெரிய காரியமா?
நீங்க ஐந்து இட்லி சாப்பிட்டால் சிறுவன் இரண்டு இட்லி சாப்பிடுவான். 

அவனது வயசுக்கு தகுந்தபடியான சிலுவையைச் சுமந்தால் போதும்.

காலையில் 5 மணிக்கு எழ வேண்டும். அம்மா எழுப்புகிறார்கள். அவனுக்கு தூக்கத்தை விட மனதில் இல்லை.

 ஆனாலும் 'ஆண்டவரே உமக்காக' என்று சொல்லிக்கொண்டு எழுந்தால் அவனுக்கு அது ஒரு சிலுவைதான்.

 உடனே காபி குடிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அவன் 'ஆண்டவரே உமக்காக செபம் சொல்லிவிட்டுதான் காபி குடிப்பேன் என்று சொல்லி செபித்தால் அவனுக்கு அது ஒரு சிலுவை.

உணவு ருசியாக இல்லா விட்டாலும் ஆண்டவருக்காக சாப்பிடுவது ஒரு சிலுவைதான்.

இப்படியாக நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான சிலுவைகளை சுமக்கலாமே. 

தங்கள் மனதை ஒறுத்து ஆண்டவருக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் அது, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒரு பெரிய சிலுவைதான். 

ஆண்டவருக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமக்கு மீட்பைக் கொண்டுவரும் சிலுவையே.''

",வாழ்க்கை என்னும் சிலுவை மூலம் நமது உயிரையே ஆண்டவருக்குக் கொடுத்து நமது அன்பை அவருக்கு வெளிப்படுத்துவோம்.

ஆண்டவருக்காக வாழ்ந்தால் நமது வாழ்க்கையே ஒரு சிலுவை தான்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment