Saturday, May 7, 2022

அவனும், இவனும்.


       அவனும், இவனும்.



அவன் ஒரு உழைப்பாளிதான். மறுக்க முடியாது. சாதாரண எழுத்தராக ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். 

அவன் பெயர் 'அவன்'தான்!

 கடினமாக உழைத்தான். ஒரு ஆபீசராகப் பதவி உயர்வு பெற்றான்.

அடுத்து உதவி நிருவாகி (Asst. Manager) ஆகவும், தொடர்ந்து நிருவாகி ஆகவும் பதவி உயர்வு பெற வேண்டும் என்பது அவனது ஆசை.

ஆனால் அவனுக்குப் போட்டியாக இவன் இருந்தான்.

இவன் பெயர் 'இவன்' தான்.

இவனும் நல்ல உழைப்பாளிதான்.

இவனும் அவனைப் போலவே எழுத்தராகப் பணியில் சேர்ந்து ஆபீசராகப் பதவி உயர்வு பெற்றவன்தான்.

ஆனால் அவனைப் போல ஆசைகள் எதுவும் இவனுக்கு இல்லை.

மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நன்கு உழைக்க வேண்டும்.

பதவி உயர்வு இயல்பாக வர வேண்டும், ஆசைப்பட்டு, முயற்சி செய்து அல்ல. இது இவன் கொள்கை.

ஆனால் அவனுக்கு இவன் மேல் பொறாமை இருந்தது.

இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்ததால் எங்கே உதவி நிருவாகிக்கான பதவி உயர்வு இவனுக்குப் போய் விடுமோ என்ற பயம்.

ஏற்கனவே இருந்த உதவி நிருவாகி ஓய்வு பெறும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.

அந்தப் பதவி எப்படியாவது தனக்கு கிடைத்து விட வேண்டும் என்ற ஆசையில் அவன் அதற்காக குறுக்கு வழியில் செல்ல முடிவு செய்தான்.

உதவி நிருவாகியை நியமிக்க வேண்டியது நிருவாகி.

அவரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிப்பதில் தப்பு எதுவும் இல்லை.

ஆனால் அவன் தெரிவு செய்தது குறுக்கு வழி.

போட்டியாக இருந்த இவனின் பெயரைக் கெடுப்பது.

கெடுத்து, இவனுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் செய்வது.

அதன்மூலம் தன்னுடைய பதவி உயர்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவது.

அதாவது தான் உழைத்து முன்னேறுவதற்குப் பதிலாக,

அடுத்தவனைக் கெடுத்து முன்னேறுவது.

இவனின் வாய்ப்பைக் கெடுக்க வேண்டுமென்றால் நியமன அதிகாரம் உள்ள நிருவாகியிடம் இவன் பெயரைக் கெடுக்க வேண்டும்.

அதற்காக ஒரு நாள் காலையில் நிருவாகியுடன் Walking போனபோது,    

அவரைப் பற்றி இவன் கெடுத்துப் பேசியதாக ஒரு பொய்யை நம்பக்கூடிய விதமாகச் சொன்னான்.

தன்னைப் பற்றி கெடுத்துப்  பேசியவனுக்கு நிச்சயமாக அவர் பதவி உயர்வு கொடுக்க மாட்டார் என்பது அவனது நம்பிக்கை.

அதற்கு மறுநாள் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த உதவி நிர்வாகி ஓய்வு பெற்றார்.

மறுநாள் இருவரில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்.

தனக்குக் கிடைக்கும்  என்று அவன் உறுதியாக நம்பினான்.

ஆனால் அவனது எதிர்பார்ப்புக்கு மாறாக இவனுக்கு பதவி உயர்வு கிடைத்தது.

அவனால் நம்பவே முடியவில்லை.

மறுநாள் நல்லவன் போல் நடித்துக் கொண்டு,

நிருவாகியைச் சந்தித்து,
அவன் பேசினான்:

"உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது."

", ஏன் ?"

"உங்களைக் கெடுத்துப் பேசியவனுக்கு, பாரபட்சம் பார்க்காமல், பதவி உயர்வு கொடுத்திருக்கிறீர்களே."

", அதற்கு என்னை அல்ல, இயேசுவைத்தான் பாராட்ட வேண்டும்."

"ஏன்?"

",அன்று நான் வாசித்துக் கொண்டிருந்த பைபிள் வாசகத்தில்,

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். அவர்களுக்கு நன்மை புரியுங்கள். ( லூக். 6:35)
என்று ஆண்டவர் இயேசு கூறியதை வாசித்தேன்.

என்னைக் கெடுத்துப் பேசியவருக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் அடிப்படையிலேயே அவருக்குப் பதவி உயர்வு அளித்தேன்.

இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை போல் வேறு எதனாலும் எனக்கு ஏற்படவில்லை."

அவன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான்:

"நானும் எனது எதிரிக்கு நன்மை செய்திருக்கிறேன்.
கெடுத்து பேசியே நன்மை செய்து இருக்கிறேன்."

தீமையிலிருந்து நன்மையை வரவழைப்பதில் இறைவன்   வல்லவர்!

பிறரைக் கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நன்மை 
செய்கிறார்கள்!

நமக்கு மீட்பு கிடைக்க சாத்தான் கூட உதவி இருக்கிறான்.

 அவன் ஏவியதால் தானே  யூதர்கள் இயேசுவைக் கொன்றார்கள். 

கொன்றதால் தானே இயேசு நமக்காகப் பலியானார். 

அவர் பலியானதால்தானே நாம் மீட்பு பெற்றோம்.

பைபிளை வாசிப்போம்.
வாசித்தபடி நடப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment