கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனாலும் இதை இராயப்பர் அறிக்கையிட்ட நேரத்தை மையமாக வைத்துதான் தியானிக்கவிருக்கிறோம்.
ஆண்டவர் இராயப்பரிடம் ஒரே கேள்வியை மூன்று முறை கேட்கிறார்.
"அருளப்பனின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா?"
முதல் இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக,
"ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார்.
மூன்றாவது முறையும் அதே கேள்வியை கேட்டவுடன்,
அவர், மனம்வருந்தி இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே: நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்" என்றார்.
" நீ பாறையாய் இருக்கிறாய் இந்த பாறையின் மேல் என் திருச்சபையை கட்டுவேன்."
என்று ஆண்டவர் சொல்லும்போதே இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்ற தனது நித்திய கால தீர்மானத்தை ஆண்டவர் வெளியிட்டுவிட்டார்.
அப்போது அவருக்கு தெரியும் இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலிப்பார் என்று.
மூன்று முறை மறுதலித்தவரை
மூன்று முறை "நேசிக்கிறேன்" என்று சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காகவே தான் ஆண்டவர் மூன்று முறை
"என்னை நீ நேசிக்கிறாயா?"
என்று கேட்டிருக்க வேண்டும்.
இராயப்பருக்குத் அது தெரியவில்லை.
அதனால்தான் மூன்றாவது முறை கேட்டதும்,
"ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே." என்று கூறினார்.
மூன்று முறையும் இயேசுவின் மீது இராப்பருக்கு இருந்த அன்பை அவர் உறுதிசெய்தவுடன்,
திருச்சபையின் தலைவர் என்ற முறையில் அவர் செய்யவேண்டிய பணியை இயேசு அறிவிக்கிறார்.
ஆண்டவர் சர்வ ஞானமுள்ளவர்.
நமக்குக் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்கள் இருக்கின்றன.
நிகழ்காலம் மட்டுமே நமது அனுபவத்தில் இருக்கிறது.
கடந்த கால அனுபவங்கள் ஞாபகத்தில் மட்டுமே இருக்கும்.
எதிர்காலம் நமக்குத் தெரியாது.
ஆனால் சர்வ ஞானம் உள்ள, காலங்களைக் கடந்த, நித்தியராகிய கடவுளுக்கு
முக்காலத்திலும் நடக்கவிருக்கும் அனைத்தும் நித்திய காலமாகத் தெரியும்.
நாம் இந்த உலகில் வாழவேண்டிய காலத்தையும், இடத்தையும் அவரே நித்திய காலமாக தீர்மானித்து விடுவார்.
நமக்கு பரிபூரண சுதந்தரத்தையும்,
சிந்தித்து செயல்படுவதற்கான புத்தியையும் தந்து விடுவார்.
சுதந்தரத்தோடு புத்தியைப் பயன் படுத்தி,
அவரது கட்டளைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும்படி விட்டுவிடுவார்.
நாம் எப்படி நமது சுதந்தரத்தைப் பயன்படுத்துவோம் என்றும்,
எப்படி அவரது கட்டளைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்றும் அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.
ஆனால் நமக்கு எல்லாம் புதிய அனுபவங்களாகவே இருக்கும்.
ஆசிரியர் பணி செய்ய ஆசைப்பட்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருகிறோம்.
நாம் சேர்ந்தவுடன் சான்றிதழ் கொடுத்து அனுப்ப மாட்டார்கள்.
நமக்குப் பயிற்சி கொடுப்பார்கள்.
பயிற்சி காலத்தில் நாம் அப்பணிக்குப் பொருத்தமானவர்களா என்பதைக் கண்டறியவும்,
பயிற்சியின் ஒரு பகுதியாகவும் பரிசோதனைகள் (Tests) பல வைப்பார்கள்.
அவற்றில் வெற்றி பெற்றால்தான் நமக்குப் பயிற்சிச் சான்றிதழ் அளிப்பார்கள்.
கடவுள் நம்மை விண்ணக வாழ்வுக்காகத்தான் படைத்திருக்கிறார்.
நாம் நமக்குத் தரப்பட்டிருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தி,
ஆன்மீக திறமைகளையும் பயன்படுத்தி,
கடவுளின் அருளின் உதவியோடு நம்மை நாமே விண்ணக வாழ்விற்கு பொருத்தமானவராக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதற்காகவே நமது விண்ணக பயிற்சிக் களமாகிய இவ்வுலகில் கடவுள் நமக்கு பயிற்சியோடு பரிசோதனைகள் பலவும் வைப்பார்.
பரிசோதனைகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.
வெற்றி பெறுவதற்கு கடவுளின் உதவியோடு நமது ஒத்துழைப்பும் மிக அவசியம்.
வெற்றி பெறுவோமா, பெறமாட்டோமா என்பது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
அவருக்குத் தெரிவதனால் நாம் வெற்றி பெறுவதில்லை.
அவரது உதவியோடும், நமது முயற்சியினாலும் நாம் வெற்றி பெறப் போவது அவருக்குத் தெரியும்.
இராயப்பர் அவரை நேசிக்கிறார் எனத் தெரிந்தும், அவரை மும்முறை பரிசோதித்ததுபோல,
நாம் வெற்றி பெறுவோம் எனத் தெரிந்தாலும் கடவுள் நம்மைப் பல முறை பரிசோதிப்பார்.
பரிசோதனைகளைப் பார்த்து பயப்படாமல், மனம் தளராமல் நமது ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.
இன்று உலகைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா போன்ற நோய் நொடிகளும்,
சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளும்
கடவுள் நமக்கு வைக்கும் பரிசோதனைகளே.
இப்படிப்பட்ட பரிசோதனைகள் வரும்போது நாம் ஆண்டவரோடு நம்மை அதிகமாக ஒன்றித்து செபிக்க வேண்டும்.
இந்த சந்திப்பும் செபமும் நம்மை விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாற்றுகின்றன.
நாம் சந்தித்த பரிசோதனைகள் நமக்கு அதிகமதிகமான அருள் வரங்களை ஆண்டவரிடமிருந்து பெற்றுத் தருகின்றன.
பரிசோதனைகளில் நோக்கமே அதுதான்.
கடவுளுக்கு எல்லாம் தெரியும்.
நமக்கு என்ன வேண்டும் என்பதும் கடவுளுக்கு தெரியும்.
ஆனாலும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்கிறார்.
நாம் கேட்கும்போது அவரை விசுவாசிக்கிறோம்,
நம்புகிறோம்,
நமது அன்பை அறிக்கையிடுகிறோம்,
நமது செபத்தினால் அவரோடு ஐக்கியமாகிறோம்.
இந்த ஐக்கியத்துக்காகவே
நம்மை கேட்கச் சொல்கிறார்.
நமக்கான ஆன்மீக உதவிகளையே அவரிடம் அதிகமாகக் கேட்க வேண்டும்.
நாம் கேட்பதில் நமது அன்பை அறிக்கையிடுவதுதான் மிகவும்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நேசிப்பது அவர்களுக்கு தெரியும்.
ஆனாலும் ஒருவர் மற்றவரை நோக்கி,
"I love you!"
என்று சொன்னால் இருவரது மகிழ்ச்சியும் அதிகமாகிறது என்பது நமது அனுபவ உண்மை.
இயேசு நமது மீட்பர்.
நாம் அவரை நேசிக்கிறோம்.
"இயேசுவே, உம்மை நேசிக்கிறேன்."
"I love you, Jesus."
என்று அடிக்கடி சொல்வோம்.
இயேசு மகிழ்ச்சி அடைவார்.
இயேசுவின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment