Friday, May 27, 2022

"உலகில் உங்களுக்கு வேதனை உண்டு: ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்"(அரு. 16:33)

"உலகில் உங்களுக்கு வேதனை உண்டு: ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்"
(அரு. 16:33)

இவை இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய நாள், வியாழக்கிழமை இரவு உணவின்போது அவர் அப்போஸ்தலர்களிடம் கூறிய வார்த்தைகள்.

அன்று இரவுதான் பாடுகள் ஆரம்பிக்கின்றன.

அவர்களுக்கு ஆறுதலாகவும், தைரியம் ஊட்டும் விதமாகவும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் உலகில் வாழும்போது உலகம் அவர்களுக்கு வேதனை தரும் துன்பங்களைக் கொடுக்கும்.

ஆனால் அதற்காக அவர்கள் பயப்படத் தேவையில்லை.

தைரியமாக இருக்க வேண்டும்.

உலகத்தினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வார்த்தைகள் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல,

கிறிஸ்துவின் சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

இயேசு கடவுள். உலகம் தரும் துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்.

துன்பமே பட முடியாத கடவுள் மனிதனாய்ப் பிறந்தது துன்பப் படுவதற்காகத்தான்.

தனது பாடுகளின் மூலமும், மரணத்தின் மூலமும்

பாவத்தின் விளைவாகிய துன்பத்தை பாவத்தை வெல்லும் கருவியாக இயேசு மாற்றிக் காட்டினார்.

அவர் அனுபவித்த துன்பங்களும், மரணமும்தான் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத்தந்தன.

அவரது மரணத்தினால்தான் தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட சிலுமை மீட்புக் கருவியாக மாறியது.

உலகில் நமக்கு வேதனை உண்டு,

ஆனால் வேதனையால் நமக்கு நன்மையே ஏற்படும்.

வேதனை பாவப் பரிகாரத்துக்கும் , பாவ மன்னிப்புக்கும் பயன்படும்.

 ஆகவே வேதனை காலத்தில் தைரியமாக இருக்க வேண்டும்.

இயேசு தனது மரண வேதனை 
 மூலமே உலக வேதனையை வென்றுவிட்டார்.

இனி வேதனை வெறும் வேதனை அல்ல. மீட்பு தரும் சிலுவை.

உலகில் நாம் இயேசுவுக்காக அனுபவிக்கும் வேதனைதான்

 நித்திய பேரின்பத்தின் ஊற்று.

நாம் அனுபவிக்கும் வேதனையின் அளவுக்கு ஏற்பதான் நித்திய பேரின்பத்தின் அளவும் இருக்கும்.


ஒருவன் 10 நாள் சுகமில்லாமல் வேதனை அனுபவித்து இறந்து மோட்சத்திற்குச் செல்கிறான்.

ஒருவன் 1மாதம் சுகமில்லாமல் வேதனை அனுபவித்து இறந்து மோட்சத்திற்குச் செல்கிறான்.

ஒருவன் வாழ்நாளின் பெரும்பகுதி சுகமில்லாமல் வேதனை அனுபவித்து இறந்து மோட்சத்திற்குச் செல்கிறான்.

இவர்களில் யார் அதிகம் வேதனை அனுவவித்தானோ அவனுடைய பேரின்ப அளவு மற்றவர்களை விட அதிகமாக இருக்கும்.

 வேதனையை அனுபவித்தவர்கள் அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்திருக்க வேண்டும்.

நமது வேதனையை பேரின்பமாக மாற்றுவது இயேசு அனுபவித்த வேதனை.

ஆகவே துன்பங்கள் வரும் போது நாம் மகிழ வேண்டும்.

அவற்றை அனுமதித்த நமது சிலுவையின் நாயகர் ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.

சிலர் அடிக்கடி கேட்கும் கேள்வி:

அன்புள்ள இறைவன் உலகில் ஏன் துன்பங்களை அனுமதிக்கிறார்?

இறைவனைப் பற்றிய ஏன் என்ற கேள்விகளுக்கு உரிய பதிலை அவரே வெளிப்படுத்தினாலன்றி நம்மால் அவற்றுக்குப் பதில் கூற இயலாது.

இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதைவிட அவரது சொற்படி நடந்து அவரோடு இணைய விண்ணகம் செல்வது நல்லது.

விண்ணகத்தில் அவரோடு இணைந்து நித்தியமும் வாழ்வோம்.

 அவரை நேருக்கு நேர் பார்ப்போம்.

அவரோடு நேருக்கு நேர் உரையாடுவோம்.

அப்போது அவரோடு பேசி நமது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

அதுவரை பொறுமையாய் இருப்போம்.

இப்போது விண்ணகம் சென்று அவரோடு இணைவதிலேயே குறியாயிருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment