Thursday, May 5, 2022

இயேசு யூதாசை ஏன் அப்போஸ்தலர் ஆக்கினார்?


இயேசு யூதாசை ஏன் அப்போஸ்தலர் ஆக்கினார்?


"தாத்தா!"

", என்னடா, பேரப்புள்ள, திரும்பவும் தேர்வா?"

"இல்லை, தாத்தா, ஒரு கேள்வி."

", ஒரே ஒரு கேள்வியா?"

"முதலில் கேட்கப் போவது ஒரு கேள்விதான்."

", அப்புறம் அது குட்டி போடுமாக்கும். சரி. கேள்."

"இயேசு கடவுள். சர்வ ஞானம் உள்ளவர். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

தெரிந்திருந்தும் அவனை ஏன் அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுத்தார்?"

", இதைப்பற்றி பேசுமுன் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் சர்வ சுதந்திரம் உள்ளவர். 

தன் விருப்பப்படி செயல்படக்கூடியவர். 

நித்திய காலம், (துவக்கமும், முடிவும் இன்றி) வாழ்பவர் அவர் ஒருவரே.

ஆகவே அவரது சுதந்திரத்தில் குறுக்கிட யாரும் இருந்ததில்லை.

அவரால் படைக்கப் பட்டவர்களாலும் அவரது சுதந்திரத்தில் குறுக்கிட முடியாது.

அவர் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்.

முழுமையான சுதந்திரத்துடன் படைத்தார்.

அவனுடைய சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.

அவன் அவருடைய விருப்பப்படி செயல்பட அவனுக்கு கட்டளைகளைக் கொடுத்தார்.

கட்டளைகளை மீறுவது பாவம்.

மனிதன் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவரது கட்டளைகளின்படி நடக்க வேண்டும்.

ஆனால் அவன் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவரது கட்டளைகளை மீறி பாவம் செய்தான்.

அவனுக்கு அவரே சுதந்திரத்தைக் கொடுத்திருந்ததால் அவன் கட்டளைகளை மீறும்போது தடுக்கவில்லை.

பாவம் ஒரு தீமை. அவர் தீமையைத் தடுக்கவில்லை.

அவரே மனிதனாக பிறந்து அவனது பாவங்களுக்கு பரிகாரம் செய்தாலும்,

பாவம் செய்வதைத் தடுப்பதில்லை.


மனிதன் பாவம் செய்யக்கூடாது என்பதுதான் அவரது விருப்பம்.

 ஆனாலும் மனிதனுக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டதால் அவனது விருப்பப்படி நடப்பதை அவர் தடுப்பதில்லை.

 மனிதன் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, பாவம் செய்யாமல், இறைவனுக்காக வாழ வேண்டும்.

"ஆண்டவரே, நீர் ஏன் தீமையை தடுப்பதில்லை?" என்று அவரைப்பார்த்து கேட்க மனிதர் யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஏனெனில் அவர் முழு சுதந்திரத்தோடு செயல்படுகிறார்.

மனிதன் பாவம் செய்வான் என்று தெரிந்தும் அவர் அவனைப் படைத்தார்.

ஏன் படைத்தார்?

அது அவரது விருப்பம். தன் விருப்பப்படி செயல்பட அவருக்கு முழு சுதந்திரம் உண்டு.

மனிதனாய்ப் பிறந்து,
 பாடுகள் பட்டு,
 சிலுவையில் தன்னைப் பலியாக்கி 
மனிதன் செய்த பாவத்திற்கு அவரே பரிகாரம் செய்தார்.

இதற்குக் காரணம் மனிதன் மேல் அவர் கொண்டுள்ள அன்பு.

இப்போது சொல்லு,

யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரிந்திருந்தும்

 அவனை ஏன் அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுத்தார்?"

"அது அவரது விருப்பம். தன் விருப்பப்படி செயல்பட அவருக்கு முழு சுதந்திரம் உண்டு."

",பாவம் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும் கடவுள் ஆதாம் ஏவாளைப் படைத்தார்.

அதேபோல் தான்,

 தன்னை காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்திருந்தும் யூதாசைத் தன் அப்போஸ்தலராகத் தேர்ந்தெடுத்தார்.

தீமை நடப்பதை 
தடுக்காதிருந்தாலும் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக் கூடியவர் கடவுள்.

யூதாஸ் செய்த தீமையை நமக்காகப் பாடுபடுவதற்கு உதவியாக இயேசு பயன்படுத்திக் கொண்டார்.

யூதர்கள் இயேசுவை கொன்றது பாவம். அதை நமது பாவங்களுக்காக பரிகாரமாகத் தன்னையே பலியாக்க அவர் பயன்படுத்திக் கொண்டார்.

யூதாசின் பாவத்திற்கும், அவரைக் கொன்றவர்களின் பாவத்திற்கும் சேர்த்து தான் தன்னை பாவப் பரிகாரப் பலியாக்கினார்.

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்தார்."

"இப்போது மனிதர்கள் பாவம் செய்து கொண்டிருக்கிறார்களே அதிலிருந்து இயேசு என்ன நன்மையை வரவழைப்பார்?"

", அது அவருக்கு மட்டும்தான் தெரியும். நாம் விண்ணகம் செல்லும்போது அது நமக்குத் தெரியும்.

நமது பாவத்திலிருந்து நன்மையை வரவழைப்பார் என்பதற்காக நாம் பாவம் செய்ய கூடாது."

"தாத்தா, கடவுள் நமக்குச் சுதந்திரத்தையும் தராமல்,

கட்டளைகளையும் தராமல் இருந்திருந்தால்

நாம் பாவம் செய்திருக்க மாட்டோம் அல்லவா?"

", உண்மைதான். ஆனால் நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்குமே.

மிருகங்களால் பாவம் செய்ய முடியாது.

புண்ணியமும் செய்ய முடியாது.

புண்ணியம் இல்லாவிட்டால் எப்படி மோட்சத்திற்குப் போக முடியும்?

மனிதன் கடவுளைப் போல மோட்சத்தில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்

கடவுள் அவனை தனது சாயலில் படைத்தார்.

தன்னைப்போல் சுதந்திரத்தோடு படைத்தார்.

சுதந்திரம் இல்லாமல் எப்படி கடவுளைத் தேட முடியும்?

சுதந்திரம் இல்லாமல் எப்படி அன்பு செய்ய முடியும்?

சுதந்திரம் இல்லாமல் எப்படி பிறர் பணி செய்ய முடியும்?

சுதந்திரம் இல்லாமல் எப்படி தியாகம் செய்ய முடியும்?

சுதந்திரம் இல்லாமல் எப்படி இயேசுவுக்காகச் சிலுவையை சுமக்க முடியும்?"

"உண்மைதான், தாத்தா. 

நம்மை படைத்தவர் சொன்னபடி வாழ்வதுதான் நமது கடமை.

ஏன் படைத்தீர் என்று கேள்வி கேட்பது அல்ல.

சுதந்திரமாக கடவுளுக்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment