Tuesday, May 17, 2022

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."(அரு.15:4)

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."
(அரு.15:4)

"தாத்தா, 'கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது'

என்று இயேசு சொல்வது புரிகிறது.

"என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார்."

என்று சொல்வதும் புரிகிறது.

ஆனால்

 ''கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."

என்பது தான் புரிய மறுக்கிறது.

கனிதரும் கிளையைக் கழித்து விட்டால் அது எப்படி மிகுந்த கனி தரும்?"


", உனக்கு மொழிப் பிரச்சனை.

'தறித்துவிடுவார்' என்றால் வெட்டி எறிந்து விடுவார். வெட்டி எறியப்பட்ட கிளை வாடி வதங்கி விடும்.

'கழித்துவிடுவார்' என்றால் trim பண்ணி விடுவார்."

",தாத்தா, தமிழே புரியாமல்தான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் ஆங்கில வார்த்தையைப் பொருளாக கொடுக்கிறீர்கள்.

எப்படிப் புரியும்?"

", நானே சரியான தமிழ்ச் சொல் தெரியாமல்தான் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

விளக்குகிறேன்.

எப்போதாவது முடி வெட்டியிருக்கிறாயா?"

''வெட்டியிருக்கிறேன்."

",வெட்டியபின் தலையில் முடி இருக்குமா?"

"இருக்கும். தேவை இல்லாததை மட்டும்தான் வெட்டுவோம்.

இருக்கிற முடி வளரும்"

",வெட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகின்ற இடத்திற்கு ஏற்ப பொருள் தரும்.

மரத்தை வெட்டிவிடு என்றால் முழுவதும் வெட்டி விடுகிறோம்.

முடியை வெட்டு என்றால் தேவை இல்லாத முடியை வெட்டி 
விடுகிறோம்.

'கழி' என்ற வார்த்தையும் இப்படித்தான்.

8லிருந்து 4 ஐ கழி என்றால் 4 ஐ முழுவதும் எடுத்து விடுகிறோம்.


"கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."

இவ்வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள கழி, தேவையற்றதை, பயனற்றதை நீக்கு என்ற பொருள்படும்.

இந்த வசனத்திற்கு ஆண்டவர் அவர் பேசிய மொழியில்  எந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று நமக்கு தெரியாது.

மொழிபெயர்க்கும்போது நூற்றுக்கு நூறு பொருத்தமான வார்த்தை கிடைக்காவிட்டால் வரும் பிரச்சினை இது.

நமது மொழி  வார்த்தையை மட்டும் பார்த்து குழப்பம் அடையாமல் சரியான பொருளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ரோஜா செடி நன்கு பூப்பதற்காக அதன் கிளைகளை கத்தரித்து விடுவார்கள்.

 புதிதாக களிர்க்கும்போது பூக்கள் நிறைய போக்கும்.

ஆண்டவரும் தன்னோடு இணைந்து வாழ்பவர்கள் ஆன்மீக ரீதியில் நன்கு பலன் தரும் படி அவர்களிடம் உள்ள வேண்டாத பண்புகளை கத்தரித்து விடுவார்."

" உதாரணம் நான் சொல்லட்டுமா?''

", சொல்லு."

"ஞானஸ்நானம் பெற்ற ஒருவனிடம் தற்பெருமை சிறிது உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

தற்பெருமை உள்ளவர்கள் ஆன்மீகத்தில் வளர முடியாது.

ஆகவே ஆண்டவர் அவனிடம்  தற்பெருமைக்கு காரணமாக அவனிடம்  உள்ளவற்றை அவனிடமிருந்து 'கழித்து' விடுவார். 

அவனிடமுள்ள பண வருமானம் அவனது தற்பெருமைக்கு காரணமாக இருந்தால்

அவனுக்கு ஒரு நோயை அனுப்பி இருக்கிற பணத்தை எல்லாம் காலி பண்ணி விடுவார்.

ஒன்றும் இல்லாதபோதுதான் தன் உண்மையான நிலைமை அவனுக்கு புரியும்.

தற்பெருமையும் அகன்றுவிடும்.   

அவனிடம் உள்ள எந்த திறமை அவனது தற்பெருமைக்கு காரணமாக உள்ளதோ அதை அவனை விட்டு 'கழித்து' விடுவார்.

அவனது பணத்தையும், திறமையையும்  நினைத்து அவன் தற்பெருமை கொள்ளாமல் 

 அவற்றை இறைப் பணிக்குப் பயன்படுத்தினால் அவற்றைக் கழிக்க மாட்டார்."

", அப்படியே  கழித்தாலும் அது நமது ஆன்மீக நன்மைக்காகவே இருக்கும்.

ரோஜா செடியை கத்தரித்து  விடும்போது அது நன்கு பூப்பது போல,

நமது ஆன்மாவிலுள்ள வேண்டாத பண்புகளைக் கத்தரித்து  விடும்போது அது நற்பண்புகளில் வளரும்.

நமக்கு வரும் நோய்கள் போன்ற துன்பங்கள் நம்முள் உள்ள வேண்டாத பண்புகளைக் கத்தரித்து விடுவதற்காகத்தான்."

"துன்பங்கள் வரும்போது கடவுளுக்கு எதிராக முணு முணுக்காமல், 

அவருக்கு நன்றி கூற வேண்டும்.

எந்த வேண்டாத பண்பை நீக்க துன்பம் வந்திருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து தெரிந்து கொண்டு, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்.

கடவுளோடு எப்போதும் செபத் தொடர்பில் இருக்க வேண்டும்.

 அப்போதுதான் ஆன்மீக வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும்.

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."

கிளை நாம். திராட்சைக் கொடி நம் ஆண்டவர்."

",ஆண்டவரில் நிலைத்திருப்போம்.

 ஆன்மீகக் கனி தந்து  
அகமகிழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment