Thursday, May 19, 2022

"நான் உங்களுக்கு அளிக்கும் சமாதானமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."(அரு. 14:27)

"நான் உங்களுக்கு அளிக்கும் சமாதானமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."
(அரு. 14:27)

"தாத்தா, இயேசு அவர் நமக்கு அளிக்கும் சமாதானம் உலகம் தரும் சமாதானம்போல் அன்று என்று கூறியிருக்கிறார். 

உலகம் தரும் சமாதானத்திற்கு ஒரு உதாரணம் கூறுங்கள்."

", ஐரோப்பிய வரலாறு படித்திருக்கிறாயா?"

"படித்திருக்கிறேன்."

"இரண்டாம் உலகப் போருக்கு முக்கியமான காரணம் என்ன?"

"முதல் உலகப்போரின் முடிவில் வென்ற நாடுகள் தோற்ற நாடுகளுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்தான்

 இரண்டாம் உலகப் போருக்கு முக்கியமான காரணம்."

", அதெப்படி சமாதான ஒப்பந்தம் போருக்கு காரணமாக இருக்கக முடியும்?''

"அதன் பெயர் தான் சமாதான ஒப்பந்தம். (Peace treaty)

உண்மையில்

 அது போரை ஆரம்பித்த ஜெர்மனியை பழிவாங்குவதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம்.

பழிவாங்கப்பட்ட ஜெர்மனி
 பழிக்குப் பழி வாங்க இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தது."

",இது  உலகம் தரும் சமாதானத்திற்கு ஒரு உதாரணம்.

சமாதானம் என்ற பெயர்  இருக்கும் சமாதானம் இருக்காது.

சமாதான ஒப்பந்தம் சம தானத்திலிருந்து செய்யப் பட வேண்டும்.

வென்ற நாடுகளும், தோற்ற நாடுகளும் ஒன்றாக இருந்து சமாதான ஒப்பந்தத்தின் சரத்துகளைத் தயாரித்திருக்க வேண்டும்.

ஆனால் வென்ற நாடுகள் தயாரித்த சரத்துகள் தோற்ற நாடுகள் மீது திணிக்கப் பட்டன.

தோற்ற நாடுகள் பயத்தின் அடிப்படையில் அவற்றை ஏற்றுக் கொண்டன."

"இயேசு அளிக்கிற சமாதானம் எப்படி வித்தியாசப் படுகிறது?"

", இறைவன் மனிதனைப் படைத்தபோது சமாதான உறவோடு படைத்தார்.

இந்த சமாதான உறவு அன்பை அடிப்படையாகக் கொண்டது.

கடவுள் மனிதனை அளவில்லாத விதமாய் நேசித்தார்.

 மனிதனும் கடவுளை நேசித்தான்.

ஆனால் மனிதன் தனது பாவத்தின் மூலம் சமாதான உறவை விட்டு வெளியேறிவிட்டான்.

ஆனாலும் கடவுள் மனிதனை தொடர்ந்து நேசிக்கிறார்.

மனிதனைத் திரும்பவும் சமாதான உறவுக்குள் கொண்டுவர விரும்பினார்.

 மனிதனைத் தனது சமாதான உறவுக்குள் கொண்டு வர அவரே விண்ணிலிருந்து இறங்கி வந்து மனிதனாகப் பிறந்தார்."

"அதாவது, சம தானத்திலிருந்து,

அதாவது, பாவம் தவிர மற்ற எல்லாவற்றிறும் மனிதனோடு மனிதனாக இருந்து

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதான உறவை ஏற்படுத்த,

அதாவது மனிதனுடைய பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்காக 

இறைமகன் மனுமகனாக இறங்கி வந்தார்."

", மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் மனிதன் அளவுள்ளவன்.
அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடவுளுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய முடியாது.

ஆகவே சமாதான உறவை ஏற்படுத்த பாவப் பரிகாரம் செய்பவர் 

கடவுளுக்குச் சமமானவராகவும்,
மனிதருக்குச் சமமானவராகவும் 
இருக்க வேண்டும்.

அதாவது, கடவுளாகவும், மனிதனாகவும் இருக்க வேண்டும்.

ஆகவேதான் கடவுளே மனிதனாகப் பிறந்தார். 

மனிதனாகப் பிறந்து மனித சுபாவத்தில் மனிதன் செய்ய பாவங்களுக்காக பாடுகள் பட்டு, மரித்து பரிகாரம் செய்தார்.

இயேசு  கடவுள். (Fully God)
இயேசு  மனிதன்.(Fully Man) 

மனிதனாகிய இயேசு மனித குலத்தின் சார்பாக பாவப் பரிகாரம் செய்து

 கடவுளாகிய இயேசுவிடம் ஒப்புவித்தார்.

சிலுவையில் தொங்கும் போது தனது 'பலியைத் தந்தையிடம் ஒப்புவித்தார்.

தமதிரித்துவத்தில் தந்தையும், மகனும் ஒரே கடவுளே.

கடவுளுக்கு விரோதமாக மனிதன் செய்த பாவத்திற்கு கடவுளே பரிகாரம் செய்தார்,

மகன் செய்த குற்றத்திற்கு தந்தையே பரிகாரம் செய்வது போல.

அவர் பாவப் பரிகாரம் செய்ததால்தான் மனிதனால் இறைவனோடு சமாதான உறவுக்குள் திரும்ப முடிந்தது.

சமாதானம் என்றால் பாவம் இன்றி இறைவனோடு உறவுக்குள் இருக்கும் நிலை.

இந்த சமாதானத்தை நமக்கு அருளியவர் இறைவனும், மனிதனுமாக இருக்கும் நம் ஆண்டவர் இயேசு."

"மனிதன் தரும் சமாதானம் மனிதருக்கும் மனிதருக்கும் இடையே நிலவக்கூடிய சமாதானம்.

இயேசு தரும் சமாதானம் மனிதருக்கும், இறைவனுக்கும் இடையே நிலவக்கூடிய சமாதானம்."

",மனிதர்களிடையே நிலவும் சமாதானம் பயத்தின் அடிப்படையில் இருக்கலாம், அல்லது சுய பாதுகாப்புக்காக இருக்கலாம்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நிலவக்கூடிய சமாதானம் அன்பை அடிப்படையாகக் கொண்டது.

பாவம் இறைவனோடு நமக்கு உள்ள அன்பை முறிக்கிறது. சமாதானமும் முறிகிறது.

பாவமன்னிப்பு பெறும்போது அன்பு திரும்புகிறது, சமாதானமும் திரும்புகிறது.

நமக்குள் சமாதானம் நிலவுகிறது என்றால் நாம் பாவம் இல்லாமல் இருக்கிறோம் என்பது பொருள்."


"திருப்பலியின்போது நாம் ஒருவருக்கொருவர் சமாதானம் தெரிவித்துக் கொள்கிறோமே, ஏன்?"


", இயேசுவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்கிறோம், அதாவது, ஒருவர் ஒருவருடைய குற்றங்களை மன்னித்து,

 ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்கிறோம். 

கிறிஸ்துவின் சமாதானம் பாவங்களை மன்னிப்பதில்தான் இருக்கிறது.

பாவங்களை மன்னிப்பது ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில் இருக்கிறது.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை நாம் நமது அயலானோடு பகிர்ந்து கொள்கிறோம்.

இறை அன்பும், பாவ மன்னிப்பும், சமாதானமும் தொடர்பு உடையவை.

நாம் அன்பு உள்ளவர்களாக இருந்தால் பிறர் குற்றங்களை மன்னிப்போம்.

யாருடைய குற்றங்களை மன்னிக்கிறோமோ அவர்களோடு சமாதானமாக இருப்போம்."

"கிறிஸ்து தரும் சமாதானம் நமக்கு, பிறர் உறவையும், இறை உறவையும், விண்ணுலக வாழ்வையும் தருகிறது.

உலகம் தரும் சமாதானம் இந்த உலகத்தோடு முடிந்துவிடுகிறது."

", ஆகவே, கிறிஸ்துவில் சமாதானமாக வாழ்வோம், இவ்வுலகில்.

கிறிஸ்துவோடு பேரின்பத்தில் வாழ்வோம், மறுவுலகில்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment