Thursday, May 26, 2022

தங்களுக்காக வாழ்பவர்களும், பிறருக்காக வாழ்பவர்களும்.

தங்களுக்காக வாழ்பவர்களும், பிறருக்காக வாழ்பவர்களும்.

"தாத்தா, ஒரு கதை சொல்லட்டுமா?"

", என்ன விசேசம்?"

"கதை சொல்ல விசேசம் வேண்டுமா? கதைதான் வேண்டும்."

", சரி, சொல்லு."

"இரண்டு நண்பர்கள் ஒருநாள் ஒன்றாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டே போனார்கள்.

மத்தியானம் வந்ததும் இருவருக்குமே பசித்தது.

ஒருவன் சொன்னான்,

"சாப்பிட என்ன வைத்திருக்கிறாய்?"

"அரிசி இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது?"

"என்னிடம் உமி இருக்கிறது. ஒன்று செய்வோமா?"

"என்ன செய்வோம்?"

"உன்னிடம் உள்ள அரிசிக்குள் எனது உமியைப் போட்டு விடுவோம். பிறகு இருவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து அரிசியையும், உமியையும் ஊதி ஊதி சாப்பிடுவோம். ஊதும்போது உமி பறந்து விடும். அரிசி மட்டும் தான் இருக்கும். சாப்பிட நல்லாயிருக்கும்."

"எதற்காக உமியைப் போட்டு ஊத வேண்டும். உமியைப் போடாமலலேயே அரிசியை மட்டும் சாப்பிட வேண்டியதுதானே."

"உமியைப் போட்டால்தானே அளவு அதிகமாகும்."

"வியாபாரிகள்தான் கலப்படம் செய்வார்கள். நாம் செய்ய வேண்டாம். உமி உன்னிடமே இருக்கட்டும். என்னிடம் உள்ள அரிசியை உன்னிடம் தந்து விடுகிறேன். முழுவதையும் நீயே சாப்பிடு.

நான் வீட்டில் போய் சாப்பிடுகிறேன்."

அரிசியை அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு அவன் பட்டினி கிடந்தான்.

",கதையை எங்கே வாசித்தாய்?''

"எங்க பாட்டி சொன்னாங்க."

", சொல்லிவிட்டு என்ன சொன்னாங்க?"

"கதையில் வரும் இருவரில் ஒருவன் அடுத்தவனிடம் வாங்கியாவது தன் வயிறு நிறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஒருவன் தான் பட்டினியிருந்தாலும், மற்றவன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

சிலர் தங்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.

சிலர் மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்கள்."

",இக்கதையிலிருந்து நீ கற்கும் பாடம்?"

"மற்றவர்களுக்காக வாழ வேண்டும், இயேசுவைப் போல்

அவர் நமக்காகப் பிறந்து, 
நமக்காக வாழ்ந்து, நமக்காக மரித்தார்.

ஆனால் ஒரு வித்தியாசம்.

நாம் நமக்காகவும் வாழ்ந்து கொண்டே, பிறருக்காகவும் வாழ்கிறோம்.

இயேசு தனக்காக வாழாமல் நமக்காக மட்டுமே வாழ்ந்தார்.

அவர் கடவுள். அவர் மனிதனாய் பிறந்ததால் அவருக்கு ஒரு பயனும் இல்லை.

நாம் மட்டும்தான் பயன் பெறுகிறோம்."

",நாம் பிறருக்காக வாழவேண்டும் என்பதற்கான அடிப்படை விதி எது?"

"நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

நாம் நம்மை நேசிக்கும்போது நமக்கு நல்லதே நடக்க ஆசைப் படுவோம். அதேபோல மற்றவர்களுக்கும் நல்லதே நடக்க ஆசைப்பட வேண்டும்.

நம்மோடு மற்றவர்கள் அன்பாகப் பேச வேண்டும் என்று ஆசைப் படுவோம். அதேபோல நாமும் மற்றவர்களோடு அன்பாகப் பேச வேண்டும்.

நமக்கு மற்றவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை எல்லாம் நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

நாம் நம்மைப்போல மற்றவர்களையும் நேசித்தால் மற்றவர்களுக்காக வாழ ஆரம்பித்து விடுவோம்."

",தங்களை மட்டும் நேசிப்பவர்கள்?"

"தங்களுக்காக மட்டும் வாழ்வார்கள்.

தாங்கள் வாழ மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

உதாரணம், நமது அரசியல்வாதிகள்.

அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுவதின் காரணமே  தாங்கள் நன்றாக வாழ மக்களைப் பயன்படுத்தி கொள்வதற்காகத்தான்.

உண்மையிலேயே மக்களின் நலன்மீது அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வராமலேயே மக்களுக்கு சேவையை செய்யலாமே.

உண்மையிலேயே மக்களை நேசிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

தங்களை மட்டும் நேசிப்பவர்கள் தங்கள் நலனுக்காக மற்றவர்களது நலனை அழிக்கவும் துணிவார்கள்.

தங்களை மட்டும் நேசிக்கும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி, பதுக்கி வைத்து, பிறகு மிக அதிக விலைக்கு அவற்றை விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் இலாபம் கிடைக்கும்.

ஆனால் கோடிக்கணக்கான மக்களின் நலன் பாதிக்கப்படும்."

", ஆன்மீக வாழ்வில் இயேசுவைப் பின்பற்றி பிறருக்காக வாழ்பவர்கள்?''

"நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக தங்களையே அர்ப்பணித்து வாழ்வபவர்கள் அனைவருமே இயேசுவைப் பின்பற்றி பிறருக்காக வாழ்பவர்கள்தான்.

சொந்தங்களைத் துறந்து இயேசுவுக்காக மட்டும் வாழ்பவர்கள்

 மற்றவர்களது ஆன்மாக்களை இயேசுவிடம் கொண்டு வருவதற்காக 

தங்கள், உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள்.

இப்படிப் பட்டவர்களால் தான் திருச்சபை உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது."

", இப்பணியைத் துறவிகள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?"

"இயேசு துறவிகளுக்காக மட்டும் பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்க வில்லை.

மக்கள் அனைவருக்காகவும்தான் அவர் பலியானார்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள்தான்.

கிறிஸ்தவ வாழ்வில் நாம் பிறர் அன்பின் அடிப்படையில் வாழ்ந்தாலே நாம் பிறருக்காக வாழ்பவர்கள்தான்."

", ஒரு முக்கியமான உண்மை தெரியுமா, பேரப்புள்ள."

"சொல்லுங்க, தாத்தா."

", இயேசு வாழ்ந்ததுபோல் பிறருக்காக வாழ்பவர்கள் விண்ணகம் நோக்கி பயணிக்கிறார்கள்.

தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் உலகிற்காகவே வாழ்கிறார்கள்.

ஆனால், ஐயோ பாவம், அவர்களுக்கு உலகமும் கிடைக்காது. விண்ணகமும் கிடைக்காது.

ஆகவே ..."

"பிறருக்காக வாழ்வோம், விண்ணகம் நோக்கி பயணிப்போம்.

விண்ணகத்தில் நிரந்தரமாக வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment