"தாத்தா, எஜமானன் ஊழியனுக்குக் கொடுக்கும் உத்தரவைத்தானே கட்டளை என்கின்றோம்."
",ஆமா. அதனால் என்ன?"
"இயேசு "நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்."
என்று கூறியிருக்கிறார்.
"இயேசுவின் கட்டளைகளைக் கூறு."
"எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நீ நேசிக்க வேண்டும்.
உன்னை நீ நேசிப்பது போல, உன் அயலானையும் நேசிக்க வேண்டும்."
",முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே உள்ள உறவு அதிகாரத்துக்குப் கீழ்ப்படிதல்.
நண்பர்களுக்கு இடையே உள்ள உறவு அன்பு.
இயேசுவின் கட்டளை அதிகாரத்தில் இருந்து பிறந்தது அல்ல, அன்பிலிருந்து பிறந்தது.
அவர் கொடுக்கும் கட்டளை
" நீ எனது நண்பனாக இரு."
ஆகவேதான் அவர் சொல்கிறார்,
"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்."
அதாவது,
"நான் உங்களை எனது நண்பர்களாக இருங்கள் என்று தான் கேட்டுக்கொண்டேன்,
அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் எனது நண்பர்கள்.
நீங்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட நான் உங்களது நண்பன்தான்.
யூதாஸ் அன்புக்கு எதிராக என்னைக் காட்டிக் கொடுத்த போதும் அவனை நான் "நண்பனே " என்றுதான் அழைத்தேன்.
நீங்கள் எனது நண்பர்கள் ஆகும்வரை உங்களுக்காக காத்திருக்கிறேன்."
"தாத்தா, இயேசு சர்வத்தையும் படைத்தவர்.
சர்வ வல்லவர்.
யாருடைய உதவியுமின்றி சுயமாக இருப்பவர்.
அவருக்கு ஏன் நம் மேல் இவ்வளவு ஆசை?"
", கடவுள் சர்வ வல்லமையால் நம்மைப் படைத்ததே நாம் அவரது நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
எழ முடியாமல் படுத்துக் கிடக்கும் குழந்தையை தாய் குனிந்து, எடுத்து, மார்போடு அணைத்துக் கொள்வது போல,
உலகத்தில் பாவத்தின் பாரத்தினால் எழ முடியாமல் படுத்திருக்கும் நம்மை தூக்கி விட,
வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.
நன்கு கவனி,
நம்மை ஏற்றிவிட அவர் இறங்கி வந்தார்.
பலகீனர்களாகிய நமது நட்பை சம்பாதிக்க சர்வ வல்லவராகிய அவர் நம்மை போல பலகீனர் ஆகினார்.
நம்மேல் அவருக்கு ஏன் இவ்வளவு ஆசை என்று கேட்கிறாய்.
நம்மேல் அவருக்கு உள்ள அன்பு,
அன்பு மட்டுமே.
நம்மைப் படைத்தவர் என்பதால் நம் மீது அவருக்கு சர்வ அதிகாரம் உண்டு.
ஆனாலும் அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறார்.
"நான் உன்னை நேசிக்கிறேன், நீயும் என்னை நேசி."
என்று அவர் நம்மிடம் சொல்வது ,
காதலன் காதலியிடம்,
"I love you, please love me"
கெஞ்சுவது போலிருக்கிறது."
"தாத்தா, எனக்கு இயேசுவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
மனிதரை தன்னை நேசிக்க வைப்பதற்காக தன் உயிரையே கொடுத்தார் இயேசு.
ஆனால் அனேக மனிதர்கள் அவரை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறார்களே.
நன்றி கெட்ட ஜென்மங்கள்!"
",சிலுவையில் இரண்டு கரங்களையும் விரித்து அவரது அரவணைப்பிற்காக நம்மை அழைக்கிறார்.
சிலுவையில் தொங்கும் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்த்தால்
இளகாத மனமும் இளகும்.
கரையாத மனதும் கரையும்.
நாம் பார்த்து மனம் மாறுவதற்காகத்தான் கோயில்களிலும், வீடுகளிலும், செப மாலையிலும் பாடுபட்ட சுரூபம் வைத்திருக்கிறோம்.
எத்தனை பேர் அவரது முகத்தை பார்த்து தியானிக்கிறோம்?
அவரவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."
"திருமண வீட்டிற்கு வரும் பெண்கள் மணப்பெண் பெண்ணினுடைய முகத்தைப் பார்ப்பதற்குப் பதில்,
அவள் அணிந்திருக்கும் நகைகளையும், பட்டு சேலையையும் பார்த்து விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.
நாமும் அநேக சமயங்களில் கோயிலுக்குச் செல்லும்போது பாடுபட்ட இயேசுவைப் பார்ப்பதற்குப் பதில்
பீட அலங்காரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.
திருப்பலி நேரத்தில் நமது கண்கள்,
திவ்ய நற்கருணைப் பேழை,
பீடம்,
இயேசுவின் சரீரம், இரத்தம்,
குருவானவர்,
பாடுபட்ட சு௹பம்
ஆகியவற்றில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
காதுகள் வாசகங்கள், செபங்கள், பிரசங்கம் ஆகியவற்றில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டும்.
மனம் தியானத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
கோயில் அலங்காரத்தை மட்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தால், ஆன்மீக பயன் எதுவும் நமக்குக் கிடைக்காது."
",நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரைக் தியானிப்போம். அவருடைய அன்பில் வளர்வோம்.
அன்புதான் நமது வாழ்க்கையின் உயிர்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment