Friday, May 13, 2022

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்."(அரு. 15:18)

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்."
(அரு. 15:18) 

"தாத்தா, ஒரு பொடி test."

",பொடி test ஆ! என்ன பொடி? எள்ளுப்பொடியா? கடலைப் பொடியா?"

"அதை வச்ச பிறகு நீங்களே கண்டு பிடிங்க.

இடம் சுட்டி பொருள் விளக்குக:

'உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது '"

", பொடியா, test வைக்கிறதுக்காக நற்செய்தி நூல்கள் எழுதப்படவில்லை.

வாசித்து, வாழ்வதற்காகத்தான் எழுதப் பட்டிருக்கின்றன."

"சரி. test வேண்டாம். எனக்கு விளக்குங்கள், வாழ்வதற்காக."

",முதலில் முழு வசனத்தையும் கூறிவிடுகிறேன்.

இறுதி இரவு உணவின்போது 
இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்." என்று கூறினார்.

அப்போஸ்தலர்கள் நற்செய்தி அறிவிக்கும் காலத்தில் அவர்களை ஏற்றுக் கொள்பவர்களைப் போலவே வெறுப்பவர்களும் இருப்பார்கள்.

வெறுப்பவர்களைப் பார்த்து தைரியத்தை இழந்து விடக்கூடாது.

தங்கள் குருவுக்கும் இதேதான் நடந்தது என்பதை எண்ணி ஆறுதல் அடைய வேண்டும்.

குருவுக்கு நடந்ததே சீடர்களுக்கும் நடக்கும்.

இயேசு நற்செய்தி அறிவித்த போது அதை ஏற்று வாழ்வதற்காக அவரைப் பின்தொடர்ந்தவர்களும் இருந்தார்கள். 

அவரை வெறுப்பதற்காகவே பின்தொடர்ந்தவர்களும் இருந்தார்கள்.

 வெறுத்தவர்கள்தான் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

அவருக்கு நடந்ததுதான் அப்போஸ்தலர்களுக்கும் நடந்தது."

"இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்தானே."

",யாரெல்லாம் நற்செய்தி பணியை மேற்கொள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இயேசுவின் வார்த்தைகள் பொருந்தும்.

அரசியல்வாதிகள் தேர்தலின் போது மக்களின் வாக்கைப் பெறுவதற்காக அவர்களுக்கு ஏற்றபடி அவர்களிடம் பேசுவார்கள்.

அவர்கள் பேச்சில் முழு உண்மை இருக்காது.

ஆனால் நற்செய்தி அறிவிப்பவர்கள் மக்களைக் கவர்வதற்காக பேச மாட்டார்கள்.

உண்மையை மட்டும் அறிவிப்பதற்காக பேசுவார்கள்.

அவர்கள் அறிவிக்கும் உண்மையை விரும்புகிறவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையை விரும்பாதவர்கள் நற்செய்தியையும் அதை அறிவிப்பவர்களையும் வெறுப்பார்கள்.

நற்செய்தி அறிவிப்பவர்களுக்கு தொல்லையும் கொடுப்பார்கள்.

தங்களுக்கு நடப்பது எல்லாம் இயேசுவுக்கும் நடந்தது என்பதை எண்ணி 

தங்கள் பணியை உற்சாகத்தோடு தொடர வேண்டும்.

தொல்லைகளுக்குப் பயந்து நற்செய்தி அறிவிப்பதை நிறுத்தி விடக்கூடாது."

"தாத்தா, இது வாய்மொழியால் நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு மட்டுமல்ல,

அதன்படி வாழ்பவர்களுக்கும் பொருந்தும்.

நற்செய்திப்படி வாழ்பவர்கள் மற்றவர்களால் தொல்லைக்கு உள்ளாவது உலகம் அறிந்த விசயம்.

 உலகத்தைச் சார்ந்தவர்களுக்கு , உலகம் தொல்லை கொடுக்காது.

 தன்னைப் போன்றவர்களை அது நேசிக்கும்.

  உலகத்தைச் சாராத, விண்ணுலகை சார்ந்து வாழ்பவர்களை உலகம் வெறுக்கும்.

 இயேசு நம்மை உலகிலிருந்துதான் தேர்ந்தெடுத்தார்.

இயேசுவை வெறுக்கும் உலகம் அவரை ஏற்பவர்களையும் வெறுக்கும்.

இயேசுவுக்காக நமக்கு என்ன நேர்ந்தாலும் நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்." 

", இயேசுவுக்கு நேர்ந்தது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்குக் நேரும்.

 இபேசுவை வெறுத்தவர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

 அவர்கள் இயேசுவின் வழி நடப்பவர்களையும் துன்புறுத்துவார்கள்.

 இயேசுவின் வார்த்தையை விரும்புவர்கள் தான் அவரைப் பற்றிய வார்த்தைகளையும் விரும்புவார்கள்."

"இயேசுவை விரும்பாதவர்களுக்கு அவரது வார்த்தையைப் போதிக்க வேண்டுமா?"

",நாம் போதிக்கும் போது தான் நமது போதனையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள், யார் ஏற்றுக்கொள்வதில்லை என்று தெரியும். 

நோய்க்கு வைத்தியம் பார்த்தால் தான் அது சுகமாகுமா, ஆகாதா என்பது தெரியும்.

யாராவது தெரிந்த பின்புதான் வைத்தியம் பார்ப்போம் என்று சொல்வார்களா?

நாம் எல்லோருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் பயனடைவார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் பயன் அடைய மாட்டார்கள். நமக்கு துன்பம் தந்து  கொண்டிருப்பார்கள்.

நாம் ஆண்டவருக்காக அதை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குரிய பலன் நமக்கு விண்ணகத்தில் கிடைக்கும்."

"தாத்தா, எனக்கு விளக்குங்கள், வாழ்வதற்காக என்றுதானே சொன்னேன்.

நான் சின்ன பையன். நான் வாழ இந்த வசனம் எப்படி உதவும்?

என்னையும் யாரும் வெறுப்பார்களோ?"

", நீ எப்போதும் பொடியனாகவே இருக்கமாட்ட.

வளருவ.

விசுவாசத்திலும், நற்செய்தியிலும் வளர வேண்டும்.

வளர்ந்து விசுவாசத்தையும், நற்செய்தியையும் மற்றவர்களுக்கு அறிக்கையிட வேண்டும்.

 உனது விசுவாச வாழ்வு இருட்டில் ஏற்றப்பட்ட விளக்கு போல மற்றவர்களது அறியாமையைப் போக்க வேண்டும்.

உனது நற்செய்தி அறிக்கையை விரும்பாதவர்கள் உனக்குத் தொல்லைகள் தரும் போது,

ஆண்டவர் நமக்காகப் பட்ட பாடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவர் தனக்கு துன்பங்கள் தந்தவர்களை நேசித்து அவர்களை மன்னித்தது போல,

நீயும் உனக்கு தொல்லைகள் தருபவர்களை  நேசித்து அவர்களை மன்னிக்க வேண்டும்.

இது தான் நீ விளக்கம் கேட்ட வசனம் உனக்குத் தரும் வாழ்க்கை பாடம்.

இந்த பாடம் நீ test எழுதுவதற்கு அல்ல, வாழ்வதற்கு."

"அப்படியே வாழ்கிறேன், தாத்தா."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment