Saturday, May 28, 2022

"உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது: ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்." (அரு. 17:14)

"உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது: ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."
(அரு. 17:14) 

"தாத்தா, இந்த வசனத்தை வாசியுங்கள்."

", உனக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, தாத்தா.

உனக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்."

",உனக்கு என்ன வேண்டும்?"

"இயேசு அவருடைய சீடர்களுக்கு தன் தந்தையின் வார்த்தையை அளித்தபோது உலகம் ஏன் அவர்களை வெறுக்க வேண்டும்?"

", நமது வாழ்க்கையில் இரண்டு சக்திகளைச் சந்திக் வேண்டியிருக்கும், ஆன்மீக சக்தி, லௌகீக சக்தி. 

ஆன்மீக சக்தி ஆன்மாவைச் சார்ந்தது. நம்மை கடவுளை நோக்கி வழிநடத்தக் கூடியது.

இதன் துணை கொண்டு வாழ்வோர் ஆன்மீகவாதிகள்.

லௌகீக சக்தி உடலைச் சார்ந்தது. மண்ணிலிருந்து எடுக்கப் பட்ட உடலின் நலனை மட்டும் நோக்கமாகக் கொண்டது.

இதன் துணை கொண்டு வாழ்வோர் லௌகீக வாதிகள்.

இவர்களைத்தான் ஆண்டவர் உலகம் என்று அழைக்கிறார்.

ஆன்மீக வாதிகள் தங்கள் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு உடலைப் பயன் படுத்திக் கொள்வர்.

ஆனால் லௌகீக வாதிகள் உடல் இன்பம் பெறுவதற்கு தங்கள் ஆன்மாவை பாவத்தால் கொன்று விடுவர்,

நமது முதல் பெற்றோர் கேவலம் ஒரு பழத்திற்காக தங்கள் ஆன்மாவைப் பாவத்தால் கொன்றது போல.

இயேசு அனைவரையும் ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி, விண்ணகம் அழைத்துச் செல்லவே மனிதனாய்ப் பிறந்தார்.

விண்ணகம் செல்ல விரும்புவோர் அவரது வருகையையும், போதனையையும் ஏற்றுக் கொண்டனர்.

லௌகீக வாதிகள் அவரது வருகையையும், போதனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவேதான் இயேசு அவருடைய சீடர்களுக்கு தன் தந்தையின் வார்த்தையை அளித்தபோது உலகம் இயேசுவையும், அவர்களையும் வெறுத்தது. 

லௌகீக வாதிகளைத்தான் இயேசு உலகம் என்கிறார்.

ஏனெனில் அவர்கள் விண்ணக வாழ்வை வேண்டாம் என்று கூறிவிட்டு அதற்குப் பதிலாக உலகத்தைத் தேர்ந்து கொண்டார்கள்."

"தாத்தா, ஒரு பொடி சந்தேகம்

  உலகத்தையும், அதில் வாழும் அனைத்து மக்களையும் படைத்து பராமரித்து வருபவர் கடவுளே.

அவர் பாவிகளைத் தேடித்தானே உலகிற்கு வந்தார்.

லௌகீகவாதிகள் பாவிகள்தானே.  

அவர்களைத் தேடி வந்தவர் ஏன் அவர்களைச் சார்ந்தவர் அல்ல என்கிறார்?"

", உலகை கடவுள் எதற்காகப் படைத்தார்?"

"மக்கள் பயன்படுத்த."

", எதற்காகப் பயன்படுத்த?"

"ஆன்மீக வாழ்வுக்குப் பயன் படுத்த."

", உதாரணம் கொடு."

"இறைவழிபாட்டுக்கு ஆலயம் கட்ட உலகப் பொருட்களைத்தான் பயன் படுத்துகிறோம்.

கோயிலில் காணிக்கை போடவும், அயலானுக்கு உதவி செய்யவும பணத்தைப் பயன் படுத்துகிறோம்."

", கடவுள் எல்லோரும் இறைப் பணியில் பயன்படுத்தவே எல்லோருக்கும் உலகப் பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.

அதற்காகத்தான் முதலில் உலகத்தைப் படைத்து விட்டு, பிறகு மனிதனைப் படைத்தார்.

 மனிதர்களுள் ஒரு பிரிவினர் இறைப் பணிக்கு உலகத்தைப் பயன்படுத்தினர்.

ஒரு பிரிவினர் உலகத்தில் இன்பமாக வாழ்வதற்காக மட்டும் 
உலகத்தைப் பயன்படுத்தினர்.

உலகைப் படைத்த கடவுள் யார் பக்கம் இருப்பார்?"

"உலகப் பொருட்களை எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ அதற்காகப் பயன் படுத்துவோர் பக்கமே கடவுள் இருப்பார்."

", அதாவது, அவர்களையே சார்ந்திருப்பார்.

லௌகீக வாதிகளைச் சார்ந்திருக்க மாட்டார்.

அதனால்தான் ஆண்டவர்,

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல்"

என்கிறார்.

இப்போது புரிகிறதா?"


"புரிகிறது.

அதாவது இயேசு பாவிகளை வெறுக்கவில்லை. பரிசுத்தர்களை நேசிப்பது போலவே பாவிகளையும் நேசிக்கிறார்.

ஆனால் பாவத்தை அவரால் நேசிக்க முடியாது. 

அவர் மனிதனாய்ப் பிறந்ததே பாவத்தை அழிக்கவே.

அதனால்தால்

"உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே" என்று இயேசுவை அழைக்கிறோம்."


", இயேசு பாவிகளை நேசிக்கிறார்.

பாவிகளோ அவரை வெறுக்கிறார்கள்.

இயேசுவின் மேல் உண்மையான அன்பு உள்ளவர்கள் அவருக்கு எதிராக பாவம் செய்ய மாட்டார்கள்.

பாவம் செய்பவர்கள் அன்பு செய்யவில்லை."

"தாத்தா, ஒரு சின்ன சந்தேகம்.

லௌகீக வாதிகள் ஞானஸ்நானம் பெற்றவர்களிலும் இருக்கிறார்களா?"

", கிறிஸ்தவர்களில் பாவிகள் இல்லையா?

இருப்பதினால்தானே அவர்களுக்காக,

 அவர்கள் பாவ மன்னிப்பு பெறுவதற்காக,

இயேசு பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார்.

இயேசு பாவிகளைத் தேடி வந்தது அவர்களைப் பரிசுத்தவான்கள் ஆக்குவதற்காகத்தான்.

விண்ணக வீடு பரிசுத்தவான்களுக்கு மட்டுமே உரியது."

"உலகம் நம்மை வெறுக்கிறதே."

", கவலைப்பட வேண்டாம். நம்மை வெறுப்பதற்கு முன்பே அது இயேசுவை வெறுத்துவிட்டது.

அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான் இயேசு அப்போஸ்தலர்களை அனுப்பினார்.

நம்மையும் அதற்காகத்தான் அனுப்புகிறார்."

"அது அப்போஸ்தலர்களைக் கொன்றுவிட்டது. நம்மையும் கொல்லும்."

", இயேசுவுக்காக துன்புறுவோரும், உயிரைக் கொடுப்பவர்களும் பாக்கியவான்கள்.

"என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்."
(மத்.5.11:12)

இயேசுவுக்காக உயிரையும் கொடுப்போம்."

லூர்து செல்வம்.

Friday, May 27, 2022

"உலகில் உங்களுக்கு வேதனை உண்டு: ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்"(அரு. 16:33)

"உலகில் உங்களுக்கு வேதனை உண்டு: ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்"
(அரு. 16:33)

இவை இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முந்திய நாள், வியாழக்கிழமை இரவு உணவின்போது அவர் அப்போஸ்தலர்களிடம் கூறிய வார்த்தைகள்.

அன்று இரவுதான் பாடுகள் ஆரம்பிக்கின்றன.

அவர்களுக்கு ஆறுதலாகவும், தைரியம் ஊட்டும் விதமாகவும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் உலகில் வாழும்போது உலகம் அவர்களுக்கு வேதனை தரும் துன்பங்களைக் கொடுக்கும்.

ஆனால் அதற்காக அவர்கள் பயப்படத் தேவையில்லை.

தைரியமாக இருக்க வேண்டும்.

உலகத்தினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வார்த்தைகள் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல,

கிறிஸ்துவின் சீடர்களாகிய நமக்கும் பொருந்தும்.

இயேசு கடவுள். உலகம் தரும் துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்.

துன்பமே பட முடியாத கடவுள் மனிதனாய்ப் பிறந்தது துன்பப் படுவதற்காகத்தான்.

தனது பாடுகளின் மூலமும், மரணத்தின் மூலமும்

பாவத்தின் விளைவாகிய துன்பத்தை பாவத்தை வெல்லும் கருவியாக இயேசு மாற்றிக் காட்டினார்.

அவர் அனுபவித்த துன்பங்களும், மரணமும்தான் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத்தந்தன.

அவரது மரணத்தினால்தான் தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட சிலுமை மீட்புக் கருவியாக மாறியது.

உலகில் நமக்கு வேதனை உண்டு,

ஆனால் வேதனையால் நமக்கு நன்மையே ஏற்படும்.

வேதனை பாவப் பரிகாரத்துக்கும் , பாவ மன்னிப்புக்கும் பயன்படும்.

 ஆகவே வேதனை காலத்தில் தைரியமாக இருக்க வேண்டும்.

இயேசு தனது மரண வேதனை 
 மூலமே உலக வேதனையை வென்றுவிட்டார்.

இனி வேதனை வெறும் வேதனை அல்ல. மீட்பு தரும் சிலுவை.

உலகில் நாம் இயேசுவுக்காக அனுபவிக்கும் வேதனைதான்

 நித்திய பேரின்பத்தின் ஊற்று.

நாம் அனுபவிக்கும் வேதனையின் அளவுக்கு ஏற்பதான் நித்திய பேரின்பத்தின் அளவும் இருக்கும்.


ஒருவன் 10 நாள் சுகமில்லாமல் வேதனை அனுபவித்து இறந்து மோட்சத்திற்குச் செல்கிறான்.

ஒருவன் 1மாதம் சுகமில்லாமல் வேதனை அனுபவித்து இறந்து மோட்சத்திற்குச் செல்கிறான்.

ஒருவன் வாழ்நாளின் பெரும்பகுதி சுகமில்லாமல் வேதனை அனுபவித்து இறந்து மோட்சத்திற்குச் செல்கிறான்.

இவர்களில் யார் அதிகம் வேதனை அனுவவித்தானோ அவனுடைய பேரின்ப அளவு மற்றவர்களை விட அதிகமாக இருக்கும்.

 வேதனையை அனுபவித்தவர்கள் அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுத்திருக்க வேண்டும்.

நமது வேதனையை பேரின்பமாக மாற்றுவது இயேசு அனுபவித்த வேதனை.

ஆகவே துன்பங்கள் வரும் போது நாம் மகிழ வேண்டும்.

அவற்றை அனுமதித்த நமது சிலுவையின் நாயகர் ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி கூற வேண்டும்.

சிலர் அடிக்கடி கேட்கும் கேள்வி:

அன்புள்ள இறைவன் உலகில் ஏன் துன்பங்களை அனுமதிக்கிறார்?

இறைவனைப் பற்றிய ஏன் என்ற கேள்விகளுக்கு உரிய பதிலை அவரே வெளிப்படுத்தினாலன்றி நம்மால் அவற்றுக்குப் பதில் கூற இயலாது.

இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதைவிட அவரது சொற்படி நடந்து அவரோடு இணைய விண்ணகம் செல்வது நல்லது.

விண்ணகத்தில் அவரோடு இணைந்து நித்தியமும் வாழ்வோம்.

 அவரை நேருக்கு நேர் பார்ப்போம்.

அவரோடு நேருக்கு நேர் உரையாடுவோம்.

அப்போது அவரோடு பேசி நமது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

அதுவரை பொறுமையாய் இருப்போம்.

இப்போது விண்ணகம் சென்று அவரோடு இணைவதிலேயே குறியாயிருப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, May 26, 2022

தங்களுக்காக வாழ்பவர்களும், பிறருக்காக வாழ்பவர்களும்.

தங்களுக்காக வாழ்பவர்களும், பிறருக்காக வாழ்பவர்களும்.

"தாத்தா, ஒரு கதை சொல்லட்டுமா?"

", என்ன விசேசம்?"

"கதை சொல்ல விசேசம் வேண்டுமா? கதைதான் வேண்டும்."

", சரி, சொல்லு."

"இரண்டு நண்பர்கள் ஒருநாள் ஒன்றாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டே போனார்கள்.

மத்தியானம் வந்ததும் இருவருக்குமே பசித்தது.

ஒருவன் சொன்னான்,

"சாப்பிட என்ன வைத்திருக்கிறாய்?"

"அரிசி இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது?"

"என்னிடம் உமி இருக்கிறது. ஒன்று செய்வோமா?"

"என்ன செய்வோம்?"

"உன்னிடம் உள்ள அரிசிக்குள் எனது உமியைப் போட்டு விடுவோம். பிறகு இருவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து அரிசியையும், உமியையும் ஊதி ஊதி சாப்பிடுவோம். ஊதும்போது உமி பறந்து விடும். அரிசி மட்டும் தான் இருக்கும். சாப்பிட நல்லாயிருக்கும்."

"எதற்காக உமியைப் போட்டு ஊத வேண்டும். உமியைப் போடாமலலேயே அரிசியை மட்டும் சாப்பிட வேண்டியதுதானே."

"உமியைப் போட்டால்தானே அளவு அதிகமாகும்."

"வியாபாரிகள்தான் கலப்படம் செய்வார்கள். நாம் செய்ய வேண்டாம். உமி உன்னிடமே இருக்கட்டும். என்னிடம் உள்ள அரிசியை உன்னிடம் தந்து விடுகிறேன். முழுவதையும் நீயே சாப்பிடு.

நான் வீட்டில் போய் சாப்பிடுகிறேன்."

அரிசியை அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு அவன் பட்டினி கிடந்தான்.

",கதையை எங்கே வாசித்தாய்?''

"எங்க பாட்டி சொன்னாங்க."

", சொல்லிவிட்டு என்ன சொன்னாங்க?"

"கதையில் வரும் இருவரில் ஒருவன் அடுத்தவனிடம் வாங்கியாவது தன் வயிறு நிறைய வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஒருவன் தான் பட்டினியிருந்தாலும், மற்றவன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

சிலர் தங்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.

சிலர் மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்கள்."

",இக்கதையிலிருந்து நீ கற்கும் பாடம்?"

"மற்றவர்களுக்காக வாழ வேண்டும், இயேசுவைப் போல்

அவர் நமக்காகப் பிறந்து, 
நமக்காக வாழ்ந்து, நமக்காக மரித்தார்.

ஆனால் ஒரு வித்தியாசம்.

நாம் நமக்காகவும் வாழ்ந்து கொண்டே, பிறருக்காகவும் வாழ்கிறோம்.

இயேசு தனக்காக வாழாமல் நமக்காக மட்டுமே வாழ்ந்தார்.

அவர் கடவுள். அவர் மனிதனாய் பிறந்ததால் அவருக்கு ஒரு பயனும் இல்லை.

நாம் மட்டும்தான் பயன் பெறுகிறோம்."

",நாம் பிறருக்காக வாழவேண்டும் என்பதற்கான அடிப்படை விதி எது?"

"நாம் நம்மை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

நாம் நம்மை நேசிக்கும்போது நமக்கு நல்லதே நடக்க ஆசைப் படுவோம். அதேபோல மற்றவர்களுக்கும் நல்லதே நடக்க ஆசைப்பட வேண்டும்.

நம்மோடு மற்றவர்கள் அன்பாகப் பேச வேண்டும் என்று ஆசைப் படுவோம். அதேபோல நாமும் மற்றவர்களோடு அன்பாகப் பேச வேண்டும்.

நமக்கு மற்றவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை எல்லாம் நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

நாம் நம்மைப்போல மற்றவர்களையும் நேசித்தால் மற்றவர்களுக்காக வாழ ஆரம்பித்து விடுவோம்."

",தங்களை மட்டும் நேசிப்பவர்கள்?"

"தங்களுக்காக மட்டும் வாழ்வார்கள்.

தாங்கள் வாழ மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

உதாரணம், நமது அரசியல்வாதிகள்.

அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுவதின் காரணமே  தாங்கள் நன்றாக வாழ மக்களைப் பயன்படுத்தி கொள்வதற்காகத்தான்.

உண்மையிலேயே மக்களின் நலன்மீது அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வராமலேயே மக்களுக்கு சேவையை செய்யலாமே.

உண்மையிலேயே மக்களை நேசிக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

தங்களை மட்டும் நேசிப்பவர்கள் தங்கள் நலனுக்காக மற்றவர்களது நலனை அழிக்கவும் துணிவார்கள்.

தங்களை மட்டும் நேசிக்கும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி, பதுக்கி வைத்து, பிறகு மிக அதிக விலைக்கு அவற்றை விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் இலாபம் கிடைக்கும்.

ஆனால் கோடிக்கணக்கான மக்களின் நலன் பாதிக்கப்படும்."

", ஆன்மீக வாழ்வில் இயேசுவைப் பின்பற்றி பிறருக்காக வாழ்பவர்கள்?''

"நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக தங்களையே அர்ப்பணித்து வாழ்வபவர்கள் அனைவருமே இயேசுவைப் பின்பற்றி பிறருக்காக வாழ்பவர்கள்தான்.

சொந்தங்களைத் துறந்து இயேசுவுக்காக மட்டும் வாழ்பவர்கள்

 மற்றவர்களது ஆன்மாக்களை இயேசுவிடம் கொண்டு வருவதற்காக 

தங்கள், உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள்.

இப்படிப் பட்டவர்களால் தான் திருச்சபை உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது."

", இப்பணியைத் துறவிகள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?"

"இயேசு துறவிகளுக்காக மட்டும் பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்க வில்லை.

மக்கள் அனைவருக்காகவும்தான் அவர் பலியானார்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள்தான்.

கிறிஸ்தவ வாழ்வில் நாம் பிறர் அன்பின் அடிப்படையில் வாழ்ந்தாலே நாம் பிறருக்காக வாழ்பவர்கள்தான்."

", ஒரு முக்கியமான உண்மை தெரியுமா, பேரப்புள்ள."

"சொல்லுங்க, தாத்தா."

", இயேசு வாழ்ந்ததுபோல் பிறருக்காக வாழ்பவர்கள் விண்ணகம் நோக்கி பயணிக்கிறார்கள்.

தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் உலகிற்காகவே வாழ்கிறார்கள்.

ஆனால், ஐயோ பாவம், அவர்களுக்கு உலகமும் கிடைக்காது. விண்ணகமும் கிடைக்காது.

ஆகவே ..."

"பிறருக்காக வாழ்வோம், விண்ணகம் நோக்கி பயணிப்போம்.

விண்ணகத்தில் நிரந்தரமாக வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Monday, May 23, 2022

திருப்பலியில் ஏன் பங்கேற்க வேண்டும்?

திருப்பலியில் ஏன் பங்கேற்க வேண்டும்?

"தாத்தா, ..."

", என்னடா, பொடியா, ஏதாவது கேள்வியை வைத்துக்கொண்டு விடையைத் தேடி அலைகின்றாயா?"

"அலையவில்லை, தேடி வந்திருக்கிறேன்."

", கேள்வியைச் சொல்லு."

"ஒரு நல்ல கிறிஸ்தவன் கடவுளையும், பிறனையும் அன்பு செய்ய வேண்டும். சரியா?"

", சரி.". 

அவன் கடவுளை அன்பு செய்தால் அவரது கட்டளைககளை அனுசரிப்பான். 

சரியா?".

'', சரி.''

 அவன் பிறரை அன்பு செய்தால் அவர்களுக்கு உதவி செய்வான்,

சரியா?"

'', சரி.''


"ஒருவன் கடவுளின் கட்டளைகளை 
அனுசரித்து, பிறருக்கு உதவி செய்து வாழ்ந்தால் மோட்சத்திற்கு போவான். சரியா?"

'', சரி.''

"ஆகவே ஒருவன் மோட்சத்திற்கு போக வேண்டுமென்றால் அவன் கடவுளது இரண்டு கட்டளைகளையும் அனுசரிக்க வேண்டும். 

சரியா?"

"சரி.''

மோட்சம் செல்ல அன்பு செய்வது மட்டுமே போதுமானதாக இருக்கும்போது திருச்சபை ஏன் திருப்பலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.?

ஞாயிற்றுக் கிழமை திருப்பலி காணாவிட்டால் பாவம் என்று வேற சொல்கிறது?"

",உனக்கு இப்போது என்ன பிரச்சனை?"

"இயேசுவின் நற்செய்தியை விசுவசித்து, ஞானஸ்நானம் பெற்று, அவரது கட்டளைகளை அனுசரித்து வாழ்ந்தால் மீட்பு அடையலாம். 

திருப்பலி காண்பது மீட்புக்கு அத்தியாவசியமா?

 அதாவது திருப்பலி காணாவிட்டால் மீட்புப் பெற முடியாதா?"

",முதலில் காணாவிட்டால் என்ற வார்த்தைக்குப் பதில் பங்கெடுக்காவிட்டால் என்று கூறு.''

"திருப்பலியில் பங்கெடுக்காவிட்டால் மீட்புப் பெற முடியாதா?"

",இப்போது நான் கேக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறு."

"எனது கேள்விக்கு நான் தான் பதில் கூற வேண்டுமா?"

", ஆமா. உனது கேள்விக்கு உனக்கு பதில் தெரியும். பதில் தெரியும் என்பதை உனக்கு புரிய வைப்பதற்காக தான் எனது கேள்விகள்.

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்"

என்று யார் யாரைப் பார்த்து சொன்னார்?"

"நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சொன்னார்."

",அப்படியானால் கிறிஸ்தவனாகிய நீ யார்?"

"இயேசுவின் சீடன்."

", இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்.?"

"நம்மை பாவத்திலிருந்து மீட்க."

", மீட்பு அடைவதால் நமக்கு என்ன பயன்?" 

"மீட்பு என்றாலே பாவத்திலிருந்து விடுதலை பெற்று மோட்சத்திற்கு செல்வதுதான். மீட்பு அடைந்தவர்கள் நித்திய காலம் இறைவனோடு பேரின்ப வாழ்க்கை வாழ்வார்கள்."

",நாம் மீட்பு பெறுவதற்காக இயேசு என்ன செய்தார்?"

"பாடுகள் பட்டு, சிலுவை மரணத்தின் மூலம் தன்னையே பலியாக்கினர்."

",அப்படியானால் நமக்கு மீட்பு தருவது எது?"

"இயேசுவின் சிலுவை மரணம், அதாவது, பலி."

", அப்படியானால் இயேசு உலகிற்கு எதற்காக வந்தார்?"

"நம்மை மீட்பதற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்க."

", அப்படியானால் இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு எது?"

"அவரது சிலுவைப் பலி."

",நாம் யார்?".

" இயேசுவின் சீடர்கள்."

", சீடர்கள் யாரைப் போல வாழ வேண்டும்."

" குருவை போல வாழ வேண்டும்.
 அதாவது நாம் இயேசுவைப் போல வாழ வேண்டும்."

",இயேசுவைப் போல வாழ வேண்டும் என்றால்?"

"நாமும் இயேசுவைப் போல சிலுவையைச் சுமந்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக நம்மையே பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்."

",இதுவரை எனது கேள்விகளுக்கு நீ கொடுத்த பதில்களிலிருந்து ஏதாவது புரிகிறதா?"

"இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே பலியாக்கினார். 

அவரது சீடர்களாகிய நாமும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக  நம்மையே பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்."

",அப்படியானால் நமது ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு எது?"

"பலி.''

'',குருவானவர் நிறைவேற்றும் திருப்பலியை பற்றி உனக்கு தெரிந்தது என்ன?"

"இயேசு ரத்தம் சிந்திய விதமாய் கல்வாரி மலையில் ஒப்புக்கொடுத்த அதே பலியைத்தான் .

குருவானவர் இயேசுவின் இடத்திலிருந்து ரத்தம் சிந்தாத விதமாய் ஒப்புக் கொடுக்கிறார்.

கல்வாரி மலையிலும் இயேசு தான் பலியானார்.

 திருப்பலியிலும் இயேசுதான் பலியாகிறார்."

", இயேசுவின் வாழ்வின் மையம் எது?"

"கல்வாரிப் பலி."

", கிறிஸ்தவ வாழ்வின் மையம் எது?"

"திருப்பலி."

"இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?"

",குருத்துவமும், திருப்பலியும் இல்லாவிட்டால் கிறிஸ்தவம் இல்லை."

", இப்போ சொல்லு, கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது தவறா?"

"தவறு இல்லை. நான் உங்களிடம் கேட்டதுதான் தவறு."

", கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்தால் கிறிஸ்துவின் வாழ்க்கையே திருப்பலியில் அடங்கியிருக்கும்.

நீ கவனித்திருக்கிறாயா?"

"கிறிஸ்து உலகிற்கு வந்து 30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு வாழ்ந்துவிட்டு, 

அதன் பின் நற்செய்தியை அறிவித்து விட்டு,

அதன் பின் பலியானார்.

திருப்பலியில் இயேசுவின் நற்செய்தி வாழ்க்கையும், பலியும் இடம்பெறுகின்றன. 

நற்செய்தி வாசகங்களும், குருவானவரின் விளக்கவுரைப் பிரசங்கமும் இயேசுவின் நற்செய்தி வாழ்க்கையைச் சார்ந்தவை.

குருவானவர் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற்றும் நடுப் பூசையும், திருவிருந்தும் பலி வாழ்க்கையைச் சார்ந்தவை.

திருப்பலி துவங்குவதற்கு முன்பே நாம் நம்மையே திருப்பலியில் பங்கேற்க தயாரிக்க வேண்டும்.

பாவ மாசற்ற உள்ளத்தோடு திருப்பலியில் பங்கேற்பது தான் நமக்கு அதன் முழு பலனையும் கொடுக்கும்.

அதற்காக தேவைப்பட்டால் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்."

",சரியான தயாரிப்போடு நாம் திருப்பலியில் பங்கேற்றால்  

அதன் பயனாக மீட்படைவது உறுதி.

ஏனெனில்.....பூர்த்தி செய்."

" மீட்பரோடு பயணித்தால் அவரோடே விண்ணகம் அடைவோம்."

லூர்து செல்வம்.

Saturday, May 21, 2022

நாம் ஏன் பிறந்தோம்?

நாம் ஏன் பிறந்தோம்?

"தாத்தா, ரெடியா?"

", வாடா, பொடியா, எதுக்கு ரெடியான்னு கேட்கிற?"

"விடிய விடிய யோசிச்சி சில கேள்விகளைத் தயாரித்து வைத்திருக்கிறேன். பதில் சொல்ல ரெடியா?"

", நீ விடிய விடிய யோசிச்சி சில கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்தால் பதில யோசிக்க பகல் முழுவதும் வேண்டுமே."

"தேவையில்லை. பொடிப் பொடி கேள்விகள்தான்."

",சரி, கேளு."

"எதற்காக இரயிலில் ஏறுகிறோம்?"

",பயணம் செய்வதற்கு."

"தவறு."

"இறங்குவதற்கு."

"கரெக்ட்."

", பயணம் செய்யாமல் எப்படிடா இறங்க முடியும்?"

"எதற்காக என்றால் என்ன நோக்கத்திற்காக என்று அர்த்தம்.

ஏறுவதின் நோக்கமும், பயணிப்பதின் நோக்கமும் இறங்குவதுதான்.

பயணிப்பதற்காகவே ஏறினால் இறங்க வேண்டிய இடம் வரும்போது அழுகை வரும்.

சரி. அடுத்த கேள்வி.

எதற்காகப் பிறக்கிறோம்?"

", சாவதற்கு."

"கரெக்ட். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?"

", உனது முதல் கேள்விக்குரிய பதிலிலிருந்துதான்."

"இப்படித்தான் அனுபவம் மூலம் ." பாடம் கற்க வேண்டும். அநேகருக்கு இது புரிவதில்லை.

அடுத்த கேள்வி.

பயணம் செய்வோர் எத்தகைய Luggage ஐ எடுத்துச் செல்ல வேண்டும்?"

", குறைந்த. Less luggage, more comfort என்று இரயிலில் எழுதிப் போட்டிருப்பாங்களே."

"தாத்தா, நான் எவ்வளவு என்று கேட்கவில்லை. எத்தகைய என்று கேட்டேன்."

", இறங்கும்போது கொண்டு போக முடிந்த."

"Super correct தாத்தா. 

வாழும்போது எத்தகைய 
சொத்துக்களைச் சம்பாதிக்க வேண்டும்?"

", சாகும்போது கொண்டு போகக் கூடிய சொத்துக்களை."

"கரெக்ட். சாகும்போது கொண்டு போக முடியாத சொத்துக்களுக்கு
இரண்டு உதாரணங்கள்...''

", பணம், நிலபுலன்கள், வீடுகள்."

"கரெக்ட். சாகும்போது கொண்டு போகக் கூடிய சொத்துக்களுக்கு உதாரணம் கொடுங்கள்."

", புண்ணியங்கள், கடவுளுடைய அருள்."

"புண்ணியங்களைச் சம்பாதிப்பது எப்படி?''

", தேவைப்படுவோருக்குக் கொடுப்பதன் மூலம்."

"எதைக் கொடுப்பதன் மூலம்?"'.

",தேவைப் படுவதை."

"இறையருளை எப்படிச் சம்பாதிப்பது?"

", செபிப்பதன் மூலம்."

"எப்படிச் செபிப்பது ?"

", கடவுளோடு ஒன்றித்து வாழ்வதன் மூலம்." 

"கடவுளோடு ஒன்றித்து வாழ்ந்தால் எப்படி  அருள் கிடைக்கும்?'"


", கடவுள் தான் அருளின் ஊற்று.
அருளின் ஊற்றோடு ஒன்றிக்கும் போது நாம் அருளோடுதானே இருப்போம்."

"கடவுளோடு எப்படி ஒன்றிப்பது?"

". நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கடவுள் இருக்க வேண்டும்."

"இறப்பதற்காக பிறக்கிறோம்.

இறப்போடு எல்லாம் முடிந்து விடுகிறதா?"

", இல்லை. இறப்பில்தான் நமது வாழ்க்கையேஆரம்பிக்கிறது."

"இறந்தவுடன் நம்மை அடக்கம் செய்து விடுவார்கள். மண்ணுக்குள் எப்படி வாழ்வது?"

".நம்மை அடக்கம் செய்ய முடியாது . நமது உடலை மட்டும் அடக்கம் செய்வார்கள்.

 நாம், அதாவது, நமது ஆன்மா விண்ணகம் சென்று விடும்."


"விண்ணகம் எங்கே இருக்கிறது?"

", எங்கேயும் இல்லை."

"இல்லாத இடத்திற்கு எப்படி போவது? எப்படி வாழ்வது?"

",விண்ணகம் ஒரு இடமே இல்லை. எங்கே என்ற வினாச் சொல் நாம் இப்போது வாழும் இடமாகிய உலகத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இடமே இல்லாத விண்ணகத்திற்கு பொருந்தாது.

விண்ணகம் ஒரு வாழ்க்கை நிலை. 

அதைப்பற்றி நாம் பேசும்போது பயன்படுத்தும் உலக வார்த்தைகள் எதுவும் அதற்கு பொருந்தாது.

 வேறு வழி இல்லாமல் நமக்கு தெரிந்த இவ்வுலக மொழியை பயன்படுத்துகிறோம்.

உலக மொழியின் அர்த்தத்தில் நாம் அங்கு போகவும் முடியாது, வரவும் முடியாது.

 போக்குவரத்து இடத்திற்கு மட்டுமே பொருந்தும்.

சடப் பொருளாகிய இவ்வுலகம் மட்டுமே இடம்.

இங்கு மட்டுமே நேற்று, இன்று, நாளை என்று காலமும், நேரமும் உண்டு.

விண்ணக வாழ்வில காலம், நேரம் கிடையாது.

நாம் வாழ்வோம். அன்பு செய்வோம். நினைப்போம். எண்ணங்களை பகிர்ந்துகொள்ள மொழி தேவை இல்லை."

"மொழி இல்லாமல் எப்படி எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியும்?"

", உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மொழி எதற்கு?

இவ்வுலகில் மொழியைப் பயன்படுத்தாமல் பார்வையின் மூலம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோமா இல்லையா?

அங்கு பார்வையும் இல்லை. ஆகவே மனதிற்கு மனம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம்."

"யாரோடு பகிர்ந்து கொள்வோம்?"

", இறைவனோடு, விண்ணகத்தில் வாழும் மற்றவர்களோடு, உலகில் வாழ்பவர்களோடு.

இப்போது கூட செபம் என்பது நமது மனதில் உள்ள எண்ணங்களால் கடவுளோடும், புனிதர்களோடும் இணைந்திருப்பதுதானே.

விண்ணுலக வாழ்வு இறைவனையும் மற்றவர்களையும் நேசிப்பதில் தான் அடங்கி இருக்கிறது. நேசிக்க மனம் போதுமே. வார்த்தைகள் எதற்கு?"

"விண்ணக வாழ்விற்கும் இவ்வுலக வாழ்விற்கும் எந்த வித்தியாசம்?"

",இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வரக்கூடியது . விண்ணக வாழ்வு நிரந்தரமானது.

இவ்வுலக வாழ்வு துன்பங்களும், சோதனைகளும் நிறைந்தது.
விண்ணக வாழ்வு பேரின்பகரமானது.

இவ்வுலக வாழ்வில் இறைவனை நோக்கி செபிக்கிறோம்.
மறுவுலக வாழ்வில் இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்.

இவ்வுலக வாழ்வில் பாவம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
விண்ணக வாழ்வில் நம்மால் பாவம் செய்ய முடியாது."

" சரி, தாத்தா, இன்றைக்கு இவ்வளவு போதும்."

", இன்னும் ஒரு கேள்வி கேளுடா."

"ஒரு கேள்வி போதுமா?"

",இந்த கேள்வியே போதும்."

லூர்து செல்வம்.

Friday, May 20, 2022

"உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.(அரு.14:28)

"உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.(அரு.14:28)

"தாத்தா, பரிசுத்த தம 
திரித்துவத்தில், மூன்று ஆட்களும் ஒருவரை விட ஒருவர் பெரியவரோ, சிறிவரோ அல்ல,

'மூவரும் சமமானவர்கள் என்பதுதானே திருச்சபையின் போதனை.

இயேசு தந்தை என்னிலும் மேலானவர் என்று கூறியிருக்கிறாரே."

",என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."
(அரு. 6:38)

"மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.".
(லூக்.9: 22)

இந்த இரண்டு வசனங்களிலும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"

"முதல் வசனம் 'என்னை'யில் ஆரம்பிக்கிறது.

இயேசுவை அனுப்பினவர் அவருடைய தந்தை."

",அப்படியானால் இயேசு யார்?"

"தந்தையின் மகன், அதாவது இறைமகன். அதாவது கடவுள்"


", இரண்டாவது வசனம்?"

''மனுமகனில் ஆரம்பிக்கிறது.
மனுமகனும் இயேசு தான்."

",இறைமகனும் இயேசு தான். மனுமகனும் இயேசு தான்.

இறைமகனுக்கும், மனுமகனுக்கும் என்ன வித்தியாசம்?''

"பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆள் மகன்.

முதல் ஆளோடும், மூன்றாவது ஆளோடும் இறைமகன் ஒரே கடவுள்.

இறைமகன் முழுக்க முழுக்க கடவுள். (fully God)

மனுமகன் மனித குலத்தில் மனிதனாகப் பிறந்த இறைமகன்.

இறைமகன் மனிதனாகப் பிறந்த போது மனுமகன் ஆனார்.

மனுமகன் மனிதன். (Fully Man)

இறைமகனும், மனு மகனும் ஒரே ஆள்தான், இறைத் தந்தையின் மகனாகிய தேவ ஆள்.

இறைமகன் மனித உரு எடுக்கு முன் அவருக்கு இருந்தது தேவ சுபாவம் மட்டுமே.

மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த வினாடியிலிருந்து அவருக்கு இரண்டு சுபாவங்கள்.

ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு
.
தேவசுபாவத்திலும் அவர் கடவுள் தான்.
மனித சுபாவத்திலும் அவர் கடவுள் தான்.

இயேசு மெய்யாகவே கடவுள்.
இயேசு மெய்யாகவே மனிதன்.''

'',இறைமகன் எப்போது மனுமகன் ஆனார்?"

"மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த வினாடியில்."

".அவரை ஏன் மனுமகன் என்கிறோம்?"

"மரியாள் முதல் மனிதனாகிய ஆதாமின் வம்சத்தில் பிறந்தவள்.

மனித சுபாவத்தில் அவருக்கு தந்தை இல்லை.

தாய் மனித வம்சத்தினள். ஆகவே
அவரை மனுமகன் என்கிறோம்."

", இயேசுவுக்கு தேவ சுபாவத்தில் தாய் இல்லை, மனித சுபாவத்தில்
தந்தை இல்லை.

தன்னுடைய பாடுகளைப் பற்றி பேசும்போதெல்லாம்

'மனுமகன் பாடுகள் பல படவும்.' என்றுதான் ஆரம்பிப்பார்.

ஏனெனில் பாடுகள் பட்டது, மரித்தது, உயிர்த்தது எல்லாம் மனித சுபாவத்தில்தான்.

தேவ சுபாவத்தில் பாடுகள் பட முடியாது.

தேவன் மனித சுபாவத்தில் பாடுகள் பட்டார்.

பாடுகள் பட்டது கடவுள்தான், ஆனால் மனித சுபாவத்தில்.

சிலுவையில் அறையப்பட்டது கடவுள்தான், ஆனால் மனித சுபாவத்தில்.

மரணம் அடைந்தது கடவுள்தான், ஆனால் மனித சுபாவத்தில்."

"எல்லாம் புரிகிறது, தாத்தா. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.

 "தந்தை என்னிலும் மேலானவர்"
என்று என்ன அர்த்தத்தில் சொன்னார்?"

"ஏன் சொன்னார் என்று கேள்.''

"சரி. தந்தை என்னிலும் மேலானவர்" என்று ஏன் சொன்னார்?"

", தேவ சுபாவத்தில் இயேசுவுக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை,

அவர் நித்திய கடவுள்.

ஆனால் மனித சுபாவத்தில் துவக்கமும் இருந்தது, முடிவும் இருந்தது.

கி.பி. 0 ல் பிறந்து, 
33 ஆண்டுகள் வாழ்ந்து,
கி.பி.33 ல் இறந்தார்.

தந்தைக்கு ஒரு சுபாவம்தான், தேவசுபாவம்.

மகனுக்கு இரண்டு சுபாவங்கள்.

"உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்."

என்று இயேசு சொன்னது

 தான் மனித சுபாவத்தில் பாடுகள் பட்டு மரிப்பதற்கு முந்திய நாள், வியாழக்கிழமை.

இயேசு மெய்யாகவே முழுமையான மனிதன்,

அதாவது பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவர் மனிதன்.

மனிதன் மரித்த பின்புதான் இறைவனிடம் செல்ல முடியும்.

மனிதனாகிய இயேசு சிலுவையில் மரித்தவுடன் தந்தை இறைவனிடம் சென்று விடுவார்.

 உயிர்த்த பின் ஆன்ம, சரீரத்தோடு தந்தையிடம் சென்று விடுவார்.

தந்தை நித்தியர்.
மனிதனாகிய இயேசு 33 ஆண்டுகளே வாழ்ந்தவர்.

கடவுளாகிய இயேசு நித்தியர்.
மனிதனாகிய இயேசு மனிதரைப் போலவே துவக்கமும் முடிவும் உள்ளவர்.

இப்போ யோசி, "தந்தை என்னிலும் மேலானவர்." என்று அவர் சொன்னதன் பொருள் புரியும்.

 தான் மெய்யாகவே கடவுளாக இருப்பது போலவே 

மெய்யாகவே மனிதனாகவும் இருப்பதை  நமக்கு முழுமையாக புரிய வைக்கவே இவ்வாறு சொன்னார்."

"இதைக் கேட்ட அப்போஸ்தலர்களும் ஓருண்மையை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இயேசு மரித்து தந்தையிடம் செல்வது போலவே தாங்களும் போவோம் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இந்த புரிதல் நற்செய்தியை அறிவித்த காலத்தில் இயேசுவுக்காக மரிக்க உந்துதல் கொடுத்திருக்கும்."

"நாமும் மரணத்தை கண்டு பயப்படக்கூடாது, ஏனெனில் அதுதான் நம்மைத் தந்தையுடன் சேர்க்கும்."

லூர்து செல்வம்.

Thursday, May 19, 2022

"நான் உங்களுக்கு அளிக்கும் சமாதானமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."(அரு. 14:27)

"நான் உங்களுக்கு அளிக்கும் சமாதானமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று."
(அரு. 14:27)

"தாத்தா, இயேசு அவர் நமக்கு அளிக்கும் சமாதானம் உலகம் தரும் சமாதானம்போல் அன்று என்று கூறியிருக்கிறார். 

உலகம் தரும் சமாதானத்திற்கு ஒரு உதாரணம் கூறுங்கள்."

", ஐரோப்பிய வரலாறு படித்திருக்கிறாயா?"

"படித்திருக்கிறேன்."

"இரண்டாம் உலகப் போருக்கு முக்கியமான காரணம் என்ன?"

"முதல் உலகப்போரின் முடிவில் வென்ற நாடுகள் தோற்ற நாடுகளுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்தான்

 இரண்டாம் உலகப் போருக்கு முக்கியமான காரணம்."

", அதெப்படி சமாதான ஒப்பந்தம் போருக்கு காரணமாக இருக்கக முடியும்?''

"அதன் பெயர் தான் சமாதான ஒப்பந்தம். (Peace treaty)

உண்மையில்

 அது போரை ஆரம்பித்த ஜெர்மனியை பழிவாங்குவதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம்.

பழிவாங்கப்பட்ட ஜெர்மனி
 பழிக்குப் பழி வாங்க இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தது."

",இது  உலகம் தரும் சமாதானத்திற்கு ஒரு உதாரணம்.

சமாதானம் என்ற பெயர்  இருக்கும் சமாதானம் இருக்காது.

சமாதான ஒப்பந்தம் சம தானத்திலிருந்து செய்யப் பட வேண்டும்.

வென்ற நாடுகளும், தோற்ற நாடுகளும் ஒன்றாக இருந்து சமாதான ஒப்பந்தத்தின் சரத்துகளைத் தயாரித்திருக்க வேண்டும்.

ஆனால் வென்ற நாடுகள் தயாரித்த சரத்துகள் தோற்ற நாடுகள் மீது திணிக்கப் பட்டன.

தோற்ற நாடுகள் பயத்தின் அடிப்படையில் அவற்றை ஏற்றுக் கொண்டன."

"இயேசு அளிக்கிற சமாதானம் எப்படி வித்தியாசப் படுகிறது?"

", இறைவன் மனிதனைப் படைத்தபோது சமாதான உறவோடு படைத்தார்.

இந்த சமாதான உறவு அன்பை அடிப்படையாகக் கொண்டது.

கடவுள் மனிதனை அளவில்லாத விதமாய் நேசித்தார்.

 மனிதனும் கடவுளை நேசித்தான்.

ஆனால் மனிதன் தனது பாவத்தின் மூலம் சமாதான உறவை விட்டு வெளியேறிவிட்டான்.

ஆனாலும் கடவுள் மனிதனை தொடர்ந்து நேசிக்கிறார்.

மனிதனைத் திரும்பவும் சமாதான உறவுக்குள் கொண்டுவர விரும்பினார்.

 மனிதனைத் தனது சமாதான உறவுக்குள் கொண்டு வர அவரே விண்ணிலிருந்து இறங்கி வந்து மனிதனாகப் பிறந்தார்."

"அதாவது, சம தானத்திலிருந்து,

அதாவது, பாவம் தவிர மற்ற எல்லாவற்றிறும் மனிதனோடு மனிதனாக இருந்து

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதான உறவை ஏற்படுத்த,

அதாவது மனிதனுடைய பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்காக 

இறைமகன் மனுமகனாக இறங்கி வந்தார்."

", மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் மனிதன் அளவுள்ளவன்.
அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடவுளுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய முடியாது.

ஆகவே சமாதான உறவை ஏற்படுத்த பாவப் பரிகாரம் செய்பவர் 

கடவுளுக்குச் சமமானவராகவும்,
மனிதருக்குச் சமமானவராகவும் 
இருக்க வேண்டும்.

அதாவது, கடவுளாகவும், மனிதனாகவும் இருக்க வேண்டும்.

ஆகவேதான் கடவுளே மனிதனாகப் பிறந்தார். 

மனிதனாகப் பிறந்து மனித சுபாவத்தில் மனிதன் செய்ய பாவங்களுக்காக பாடுகள் பட்டு, மரித்து பரிகாரம் செய்தார்.

இயேசு  கடவுள். (Fully God)
இயேசு  மனிதன்.(Fully Man) 

மனிதனாகிய இயேசு மனித குலத்தின் சார்பாக பாவப் பரிகாரம் செய்து

 கடவுளாகிய இயேசுவிடம் ஒப்புவித்தார்.

சிலுவையில் தொங்கும் போது தனது 'பலியைத் தந்தையிடம் ஒப்புவித்தார்.

தமதிரித்துவத்தில் தந்தையும், மகனும் ஒரே கடவுளே.

கடவுளுக்கு விரோதமாக மனிதன் செய்த பாவத்திற்கு கடவுளே பரிகாரம் செய்தார்,

மகன் செய்த குற்றத்திற்கு தந்தையே பரிகாரம் செய்வது போல.

அவர் பாவப் பரிகாரம் செய்ததால்தான் மனிதனால் இறைவனோடு சமாதான உறவுக்குள் திரும்ப முடிந்தது.

சமாதானம் என்றால் பாவம் இன்றி இறைவனோடு உறவுக்குள் இருக்கும் நிலை.

இந்த சமாதானத்தை நமக்கு அருளியவர் இறைவனும், மனிதனுமாக இருக்கும் நம் ஆண்டவர் இயேசு."

"மனிதன் தரும் சமாதானம் மனிதருக்கும் மனிதருக்கும் இடையே நிலவக்கூடிய சமாதானம்.

இயேசு தரும் சமாதானம் மனிதருக்கும், இறைவனுக்கும் இடையே நிலவக்கூடிய சமாதானம்."

",மனிதர்களிடையே நிலவும் சமாதானம் பயத்தின் அடிப்படையில் இருக்கலாம், அல்லது சுய பாதுகாப்புக்காக இருக்கலாம்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நிலவக்கூடிய சமாதானம் அன்பை அடிப்படையாகக் கொண்டது.

பாவம் இறைவனோடு நமக்கு உள்ள அன்பை முறிக்கிறது. சமாதானமும் முறிகிறது.

பாவமன்னிப்பு பெறும்போது அன்பு திரும்புகிறது, சமாதானமும் திரும்புகிறது.

நமக்குள் சமாதானம் நிலவுகிறது என்றால் நாம் பாவம் இல்லாமல் இருக்கிறோம் என்பது பொருள்."


"திருப்பலியின்போது நாம் ஒருவருக்கொருவர் சமாதானம் தெரிவித்துக் கொள்கிறோமே, ஏன்?"


", இயேசுவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்கிறோம், அதாவது, ஒருவர் ஒருவருடைய குற்றங்களை மன்னித்து,

 ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்கிறோம். 

கிறிஸ்துவின் சமாதானம் பாவங்களை மன்னிப்பதில்தான் இருக்கிறது.

பாவங்களை மன்னிப்பது ஒருவரை ஒருவர் அன்பு செய்வதில் இருக்கிறது.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை நாம் நமது அயலானோடு பகிர்ந்து கொள்கிறோம்.

இறை அன்பும், பாவ மன்னிப்பும், சமாதானமும் தொடர்பு உடையவை.

நாம் அன்பு உள்ளவர்களாக இருந்தால் பிறர் குற்றங்களை மன்னிப்போம்.

யாருடைய குற்றங்களை மன்னிக்கிறோமோ அவர்களோடு சமாதானமாக இருப்போம்."

"கிறிஸ்து தரும் சமாதானம் நமக்கு, பிறர் உறவையும், இறை உறவையும், விண்ணுலக வாழ்வையும் தருகிறது.

உலகம் தரும் சமாதானம் இந்த உலகத்தோடு முடிந்துவிடுகிறது."

", ஆகவே, கிறிஸ்துவில் சமாதானமாக வாழ்வோம், இவ்வுலகில்.

கிறிஸ்துவோடு பேரின்பத்தில் வாழ்வோம், மறுவுலகில்."

லூர்து செல்வம்.

Wednesday, May 18, 2022

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."(அரு.15:13)

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

", செல்வம், காபி ரெடியா?"

"காபி போட நான் ரெடி."

", அப்போ காபி ரெடியில்லை. வா, உட்கார். கொஞ்சம் பேசிக் கொண்டிருப்போம். காபி குடிச்சது மாதிரியிருக்கும்."

"சொல்லுங்க."

", இந்த வசனத்தை வாசி."

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை." இந்த வசனத்தை இன்று அதிகாலையிலேயே வாசித்துவிட்டேன். இதைப்பற்றி தான் பேச வேண்டுமா?"

",தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதுதான் மேலான அன்பு என்று இயேசு சொல்கிறார்.

நீ என்ன சொல்கிறாய்?"

"ஏங்க, இது பட்டிமன்றமா, நான் ஒரு பக்கமும் இயேசு ஒரு பக்கமும் பேசுவதற்கு? 

இயேசுவின் வார்த்தை ஏற்றுக் கொள்வதற்கும் வாழ்வதற்கும் மட்டும்தான். 

பட்டிமன்றம் பேசுவதற்கு அல்ல."

",அது எனக்கும் தெரியும். அந்த வசனத்தை நீ எப்படி புரிந்து கொண்டிருக்கிறாய் என்பதை அறியவே அவ்வாறு கேட்டேன்."

''இயேசு நமக்காக, நமது மீட்புக்காக, தன் உயிரையே கொடுத்தார்.

அதன் மூலம் தனது அளவில்லாத அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

நாம் இயேசுவுக்காக நமது உயிரைக் கொடுத்து நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்."

",இயேசு நமக்காக சிலுவையில் மரித்தார்.

 நீ சிலுவையில் மரிக்க ரெடியா?"

",சிலுவை என்ற வார்த்தைக்கு இயேசு கொடுத்திருக்கிற பொருளின் படி நான் சிலுவையில் மரிக்க எப்போதும் ரெடி."


",அது என்ன இயேசு கொடுத்திருக்கும் பொருள்?"

 "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23) என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

மனிதன் சுகமாகவும், துன்பங்கள் இன்றியும், இவ்வுலக இன்பங்களை அனுபவித்தும் வாழ ஆசைப்படுகிறான்.

இத்தகைய ஆசைகளை அடக்கி,
 நோய்கள் வந்தாலும்,
 துன்பங்கள் வந்தாலும் 
அவற்றை மனதார ஏற்றுக்கொண்டு 

உலக இன்பங்களை துறந்து வாழ்வதே நாம் சுமக்க வேண்டிய சிலுவை.

இந்த சிலுவையை சுமக்க நான் எப்போதும் தயார்."

",நோய் வந்தால் டாக்டரிடம் போக மாட்டாயா?"

''நோய் வந்தால் டாக்டரிடம் போவது பசி வந்தால் சாப்பிடுவது போல்

டாக்டரிடம் போவேன்.

ஆனால் நோய் குணமானாலும், குணமாகா விட்டாலும் இயேசுவுக்காக முழு மனதுடன் ஏற்றுக்கொள்வேன்.

நோயினால் மரணம் ஏற்பட்டால் சந்தோஷமாக இறைவனிடம் செல்வேன்."

',என்னை விட்டு விட்டா?"

"இறைவன்தாங்க நமது வீடு. 
நீங்களும் அங்கேதானே வருவீர்கள்."

"உண்மையிலேயே இயேசுவைப் போல் சிலுவையில் மரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்?"

"அதுக்கும் தயார்."

",உன்னால் முடியுமா? இயேசுவை சிலுவையில் அறையப் போகும்போது அப்போஸ்தலர்கள் கூட அவரை விட்டு விட்டு ஓடி விட்டார்களே!"

" அதே அப்போஸ்தலர்கள்தானே ஆண்டவருக்காக உயிரைக் கொடுத்து வேதசாட்சிகள் ஆனார்கள்.

அது அவர்களுடைய சொந்த பலத்தினாலா?

இல்லை, பரிசுத்த ஆவியின் வல்லமையால்.

நமது பலவீனத்தினால் முடியாதது இறைவனது அருளின் உதவியால் முடியும்.

நமக்கு தைரியம் தரும்படி பரிசுத்த ஆவியை நோக்கி செபிக்க வேண்டும்."

",சிலுவையைச் சுமக்க தேவை இல்லாதவர்கள் யாரும் இருக்கிறார்களா?"

"இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பாதவர்கள் சிலுவையைச் சுமக்கத் தேவை இல்லை.

இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பவில்லை என்றால், சாத்தானின் சீடர்களாக வாழ ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம்."

", சிலருக்கு கடவுள் மீதும் நம்பிக்கை இருக்காது, சாத்தான்மீதும் நம்பிக்கை இருக்காது. அவர்கள்?"

"இறைவனுக்கு யாரும் சேவை செய்யக் கூடாது என்பதுதான் சாத்தான் ஆசை.

இறைவனின் ஆசையை நிறைவேற்றாதவர்கள் சாத்தானின் ஆசையை நிறைவேற்றுகிறார்கள்.

இறைவனின் ஆசையை நிறைவேற்றுபவர்கள் அவரின் சீடர்கள்.

நிறைவேற்றாதவர்கள் சாத்தானின் சீடர்கள்."

",அவர்களுக்கும் கஷ்டங்களும் நோய்களும் வருகின்றனவே.

 அவை சிலுவை என்றால் அவற்றை அவர்களும் சுமக்கிறார்களே."

"உழைத்து சம்பாதித்தால் அதற்குப் பெயர் சம்பளம்.

இலஞ்சம் வாங்கி சம்பாதித்தால் அதற்குப் பெயர் கொள்ளை.

கடவுளுக்காக துன்பங்களை ஏற்றுக் கொண்டால் அவை சிலுவை.

வேறு வழி இல்லாமல் துன்பப் பட்டால் அவை வெறும் துன்பங்களே."

", நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன். நீ என்மேல் உயிரையே வைத்திருக்கிறாய். இதன் பொருள் என்ன?"

"ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்பதுதான் பொருள்.

நாம் இயேசுவின் மேல் உயிரையே வைக்க வேண்டும். 

இயேசுவின் மேல் உயிரையே வைத்திருந்தால் நாம் அவர் மீது அதிகமாக அன்பு வைத்திருக்கிறோம், அவரது சேவைக்கு நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்திருக்கிறோம் என்பது பொருள்.

அர்ப்பண வாழ்வு வாழ்ந்தால் இயேசுவுக்காக உயிரை விடவும் தயாராக இருப்போம்.

"சரி, அப்போவே காபி கேட்டீங்க."

",பரவாயில்லை.
 இப்போது காபி சாப்பிட்டு விட்டது போல்தான் இருக்கிறது.

 இன்னும் ஒரு கேள்வி, அதற்கு நீ பதில் சொல்லிவிட்டால் சிற்றுண்டி சாப்பிட்டது போல் ஆகி விடும்."

"கேளுங்கள்."

",சிறுவர்களும் இயேசுவின் சீடர்களே.

நமக்கு வருவது போல் பெரிய துன்பங்கள், கஷ்டங்கள் அவர்களுக்கு வராது.

அவர்களுக்கு விளையாட்டு பருவம்.

இயேசுவின் சீடர்கள் என்ற முறையில் அவர்கள் எப்படிப்பட்ட சிலுவையை சுமப்பார்கள்."

",ஏங்க, இது ஒரு பெரிய காரியமா?
நீங்க ஐந்து இட்லி சாப்பிட்டால் சிறுவன் இரண்டு இட்லி சாப்பிடுவான். 

அவனது வயசுக்கு தகுந்தபடியான சிலுவையைச் சுமந்தால் போதும்.

காலையில் 5 மணிக்கு எழ வேண்டும். அம்மா எழுப்புகிறார்கள். அவனுக்கு தூக்கத்தை விட மனதில் இல்லை.

 ஆனாலும் 'ஆண்டவரே உமக்காக' என்று சொல்லிக்கொண்டு எழுந்தால் அவனுக்கு அது ஒரு சிலுவைதான்.

 உடனே காபி குடிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அவன் 'ஆண்டவரே உமக்காக செபம் சொல்லிவிட்டுதான் காபி குடிப்பேன் என்று சொல்லி செபித்தால் அவனுக்கு அது ஒரு சிலுவை.

உணவு ருசியாக இல்லா விட்டாலும் ஆண்டவருக்காக சாப்பிடுவது ஒரு சிலுவைதான்.

இப்படியாக நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான சிலுவைகளை சுமக்கலாமே. 

தங்கள் மனதை ஒறுத்து ஆண்டவருக்காக செய்யும் ஒவ்வொரு செயலும் அது, எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒரு பெரிய சிலுவைதான். 

ஆண்டவருக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமக்கு மீட்பைக் கொண்டுவரும் சிலுவையே.''

",வாழ்க்கை என்னும் சிலுவை மூலம் நமது உயிரையே ஆண்டவருக்குக் கொடுத்து நமது அன்பை அவருக்கு வெளிப்படுத்துவோம்.

ஆண்டவருக்காக வாழ்ந்தால் நமது வாழ்க்கையே ஒரு சிலுவை தான்."

லூர்து செல்வம்.

Tuesday, May 17, 2022

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."(அரு.15:4)

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."
(அரு.15:4)

"தாத்தா, 'கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது'

என்று இயேசு சொல்வது புரிகிறது.

"என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார்."

என்று சொல்வதும் புரிகிறது.

ஆனால்

 ''கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."

என்பது தான் புரிய மறுக்கிறது.

கனிதரும் கிளையைக் கழித்து விட்டால் அது எப்படி மிகுந்த கனி தரும்?"


", உனக்கு மொழிப் பிரச்சனை.

'தறித்துவிடுவார்' என்றால் வெட்டி எறிந்து விடுவார். வெட்டி எறியப்பட்ட கிளை வாடி வதங்கி விடும்.

'கழித்துவிடுவார்' என்றால் trim பண்ணி விடுவார்."

",தாத்தா, தமிழே புரியாமல்தான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் ஆங்கில வார்த்தையைப் பொருளாக கொடுக்கிறீர்கள்.

எப்படிப் புரியும்?"

", நானே சரியான தமிழ்ச் சொல் தெரியாமல்தான் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

விளக்குகிறேன்.

எப்போதாவது முடி வெட்டியிருக்கிறாயா?"

''வெட்டியிருக்கிறேன்."

",வெட்டியபின் தலையில் முடி இருக்குமா?"

"இருக்கும். தேவை இல்லாததை மட்டும்தான் வெட்டுவோம்.

இருக்கிற முடி வளரும்"

",வெட்டு என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகின்ற இடத்திற்கு ஏற்ப பொருள் தரும்.

மரத்தை வெட்டிவிடு என்றால் முழுவதும் வெட்டி விடுகிறோம்.

முடியை வெட்டு என்றால் தேவை இல்லாத முடியை வெட்டி 
விடுகிறோம்.

'கழி' என்ற வார்த்தையும் இப்படித்தான்.

8லிருந்து 4 ஐ கழி என்றால் 4 ஐ முழுவதும் எடுத்து விடுகிறோம்.


"கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."

இவ்வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள கழி, தேவையற்றதை, பயனற்றதை நீக்கு என்ற பொருள்படும்.

இந்த வசனத்திற்கு ஆண்டவர் அவர் பேசிய மொழியில்  எந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று நமக்கு தெரியாது.

மொழிபெயர்க்கும்போது நூற்றுக்கு நூறு பொருத்தமான வார்த்தை கிடைக்காவிட்டால் வரும் பிரச்சினை இது.

நமது மொழி  வார்த்தையை மட்டும் பார்த்து குழப்பம் அடையாமல் சரியான பொருளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ரோஜா செடி நன்கு பூப்பதற்காக அதன் கிளைகளை கத்தரித்து விடுவார்கள்.

 புதிதாக களிர்க்கும்போது பூக்கள் நிறைய போக்கும்.

ஆண்டவரும் தன்னோடு இணைந்து வாழ்பவர்கள் ஆன்மீக ரீதியில் நன்கு பலன் தரும் படி அவர்களிடம் உள்ள வேண்டாத பண்புகளை கத்தரித்து விடுவார்."

" உதாரணம் நான் சொல்லட்டுமா?''

", சொல்லு."

"ஞானஸ்நானம் பெற்ற ஒருவனிடம் தற்பெருமை சிறிது உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

தற்பெருமை உள்ளவர்கள் ஆன்மீகத்தில் வளர முடியாது.

ஆகவே ஆண்டவர் அவனிடம்  தற்பெருமைக்கு காரணமாக அவனிடம்  உள்ளவற்றை அவனிடமிருந்து 'கழித்து' விடுவார். 

அவனிடமுள்ள பண வருமானம் அவனது தற்பெருமைக்கு காரணமாக இருந்தால்

அவனுக்கு ஒரு நோயை அனுப்பி இருக்கிற பணத்தை எல்லாம் காலி பண்ணி விடுவார்.

ஒன்றும் இல்லாதபோதுதான் தன் உண்மையான நிலைமை அவனுக்கு புரியும்.

தற்பெருமையும் அகன்றுவிடும்.   

அவனிடம் உள்ள எந்த திறமை அவனது தற்பெருமைக்கு காரணமாக உள்ளதோ அதை அவனை விட்டு 'கழித்து' விடுவார்.

அவனது பணத்தையும், திறமையையும்  நினைத்து அவன் தற்பெருமை கொள்ளாமல் 

 அவற்றை இறைப் பணிக்குப் பயன்படுத்தினால் அவற்றைக் கழிக்க மாட்டார்."

", அப்படியே  கழித்தாலும் அது நமது ஆன்மீக நன்மைக்காகவே இருக்கும்.

ரோஜா செடியை கத்தரித்து  விடும்போது அது நன்கு பூப்பது போல,

நமது ஆன்மாவிலுள்ள வேண்டாத பண்புகளைக் கத்தரித்து  விடும்போது அது நற்பண்புகளில் வளரும்.

நமக்கு வரும் நோய்கள் போன்ற துன்பங்கள் நம்முள் உள்ள வேண்டாத பண்புகளைக் கத்தரித்து விடுவதற்காகத்தான்."

"துன்பங்கள் வரும்போது கடவுளுக்கு எதிராக முணு முணுக்காமல், 

அவருக்கு நன்றி கூற வேண்டும்.

எந்த வேண்டாத பண்பை நீக்க துன்பம் வந்திருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து தெரிந்து கொண்டு, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்.

கடவுளோடு எப்போதும் செபத் தொடர்பில் இருக்க வேண்டும்.

 அப்போதுதான் ஆன்மீக வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும்.

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."

கிளை நாம். திராட்சைக் கொடி நம் ஆண்டவர்."

",ஆண்டவரில் நிலைத்திருப்போம்.

 ஆன்மீகக் கனி தந்து  
அகமகிழ்வோம்."

லூர்து செல்வம்.

Friday, May 13, 2022

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்."(அரு. 15:18)

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்."
(அரு. 15:18) 

"தாத்தா, ஒரு பொடி test."

",பொடி test ஆ! என்ன பொடி? எள்ளுப்பொடியா? கடலைப் பொடியா?"

"அதை வச்ச பிறகு நீங்களே கண்டு பிடிங்க.

இடம் சுட்டி பொருள் விளக்குக:

'உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது '"

", பொடியா, test வைக்கிறதுக்காக நற்செய்தி நூல்கள் எழுதப்படவில்லை.

வாசித்து, வாழ்வதற்காகத்தான் எழுதப் பட்டிருக்கின்றன."

"சரி. test வேண்டாம். எனக்கு விளக்குங்கள், வாழ்வதற்காக."

",முதலில் முழு வசனத்தையும் கூறிவிடுகிறேன்.

இறுதி இரவு உணவின்போது 
இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து

"உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்." என்று கூறினார்.

அப்போஸ்தலர்கள் நற்செய்தி அறிவிக்கும் காலத்தில் அவர்களை ஏற்றுக் கொள்பவர்களைப் போலவே வெறுப்பவர்களும் இருப்பார்கள்.

வெறுப்பவர்களைப் பார்த்து தைரியத்தை இழந்து விடக்கூடாது.

தங்கள் குருவுக்கும் இதேதான் நடந்தது என்பதை எண்ணி ஆறுதல் அடைய வேண்டும்.

குருவுக்கு நடந்ததே சீடர்களுக்கும் நடக்கும்.

இயேசு நற்செய்தி அறிவித்த போது அதை ஏற்று வாழ்வதற்காக அவரைப் பின்தொடர்ந்தவர்களும் இருந்தார்கள். 

அவரை வெறுப்பதற்காகவே பின்தொடர்ந்தவர்களும் இருந்தார்கள்.

 வெறுத்தவர்கள்தான் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

அவருக்கு நடந்ததுதான் அப்போஸ்தலர்களுக்கும் நடந்தது."

"இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்தானே."

",யாரெல்லாம் நற்செய்தி பணியை மேற்கொள்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இயேசுவின் வார்த்தைகள் பொருந்தும்.

அரசியல்வாதிகள் தேர்தலின் போது மக்களின் வாக்கைப் பெறுவதற்காக அவர்களுக்கு ஏற்றபடி அவர்களிடம் பேசுவார்கள்.

அவர்கள் பேச்சில் முழு உண்மை இருக்காது.

ஆனால் நற்செய்தி அறிவிப்பவர்கள் மக்களைக் கவர்வதற்காக பேச மாட்டார்கள்.

உண்மையை மட்டும் அறிவிப்பதற்காக பேசுவார்கள்.

அவர்கள் அறிவிக்கும் உண்மையை விரும்புகிறவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் உண்மையை விரும்பாதவர்கள் நற்செய்தியையும் அதை அறிவிப்பவர்களையும் வெறுப்பார்கள்.

நற்செய்தி அறிவிப்பவர்களுக்கு தொல்லையும் கொடுப்பார்கள்.

தங்களுக்கு நடப்பது எல்லாம் இயேசுவுக்கும் நடந்தது என்பதை எண்ணி 

தங்கள் பணியை உற்சாகத்தோடு தொடர வேண்டும்.

தொல்லைகளுக்குப் பயந்து நற்செய்தி அறிவிப்பதை நிறுத்தி விடக்கூடாது."

"தாத்தா, இது வாய்மொழியால் நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு மட்டுமல்ல,

அதன்படி வாழ்பவர்களுக்கும் பொருந்தும்.

நற்செய்திப்படி வாழ்பவர்கள் மற்றவர்களால் தொல்லைக்கு உள்ளாவது உலகம் அறிந்த விசயம்.

 உலகத்தைச் சார்ந்தவர்களுக்கு , உலகம் தொல்லை கொடுக்காது.

 தன்னைப் போன்றவர்களை அது நேசிக்கும்.

  உலகத்தைச் சாராத, விண்ணுலகை சார்ந்து வாழ்பவர்களை உலகம் வெறுக்கும்.

 இயேசு நம்மை உலகிலிருந்துதான் தேர்ந்தெடுத்தார்.

இயேசுவை வெறுக்கும் உலகம் அவரை ஏற்பவர்களையும் வெறுக்கும்.

இயேசுவுக்காக நமக்கு என்ன நேர்ந்தாலும் நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்." 

", இயேசுவுக்கு நேர்ந்தது அவரைப் பின்பற்றுகிறவர்களுக்குக் நேரும்.

 இபேசுவை வெறுத்தவர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.

 அவர்கள் இயேசுவின் வழி நடப்பவர்களையும் துன்புறுத்துவார்கள்.

 இயேசுவின் வார்த்தையை விரும்புவர்கள் தான் அவரைப் பற்றிய வார்த்தைகளையும் விரும்புவார்கள்."

"இயேசுவை விரும்பாதவர்களுக்கு அவரது வார்த்தையைப் போதிக்க வேண்டுமா?"

",நாம் போதிக்கும் போது தான் நமது போதனையை யார் ஏற்றுக் கொள்கிறார்கள், யார் ஏற்றுக்கொள்வதில்லை என்று தெரியும். 

நோய்க்கு வைத்தியம் பார்த்தால் தான் அது சுகமாகுமா, ஆகாதா என்பது தெரியும்.

யாராவது தெரிந்த பின்புதான் வைத்தியம் பார்ப்போம் என்று சொல்வார்களா?

நாம் எல்லோருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் பயனடைவார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் பயன் அடைய மாட்டார்கள். நமக்கு துன்பம் தந்து  கொண்டிருப்பார்கள்.

நாம் ஆண்டவருக்காக அதை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குரிய பலன் நமக்கு விண்ணகத்தில் கிடைக்கும்."

"தாத்தா, எனக்கு விளக்குங்கள், வாழ்வதற்காக என்றுதானே சொன்னேன்.

நான் சின்ன பையன். நான் வாழ இந்த வசனம் எப்படி உதவும்?

என்னையும் யாரும் வெறுப்பார்களோ?"

", நீ எப்போதும் பொடியனாகவே இருக்கமாட்ட.

வளருவ.

விசுவாசத்திலும், நற்செய்தியிலும் வளர வேண்டும்.

வளர்ந்து விசுவாசத்தையும், நற்செய்தியையும் மற்றவர்களுக்கு அறிக்கையிட வேண்டும்.

 உனது விசுவாச வாழ்வு இருட்டில் ஏற்றப்பட்ட விளக்கு போல மற்றவர்களது அறியாமையைப் போக்க வேண்டும்.

உனது நற்செய்தி அறிக்கையை விரும்பாதவர்கள் உனக்குத் தொல்லைகள் தரும் போது,

ஆண்டவர் நமக்காகப் பட்ட பாடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவர் தனக்கு துன்பங்கள் தந்தவர்களை நேசித்து அவர்களை மன்னித்தது போல,

நீயும் உனக்கு தொல்லைகள் தருபவர்களை  நேசித்து அவர்களை மன்னிக்க வேண்டும்.

இது தான் நீ விளக்கம் கேட்ட வசனம் உனக்குத் தரும் வாழ்க்கை பாடம்.

இந்த பாடம் நீ test எழுதுவதற்கு அல்ல, வாழ்வதற்கு."

"அப்படியே வாழ்கிறேன், தாத்தா."

லூர்து செல்வம்.

Thursday, May 12, 2022

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்." (அரு. 15:14)

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்." (அரு. 15:14)

"தாத்தா, எஜமானன் ஊழியனுக்குக் கொடுக்கும் உத்தரவைத்தானே கட்டளை என்கின்றோம்."

",ஆமா. அதனால் என்ன?"

"இயேசு "நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்."
 என்று கூறியிருக்கிறார்.

"இயேசுவின் கட்டளைகளைக் கூறு."

"எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நீ நேசிக்க வேண்டும்.

உன்னை நீ நேசிப்பது போல, உன் அயலானையும் நேசிக்க வேண்டும்."

",முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே உள்ள உறவு அதிகாரத்துக்குப் கீழ்ப்படிதல்.

நண்பர்களுக்கு இடையே உள்ள உறவு அன்பு.

இயேசுவின் கட்டளை அதிகாரத்தில் இருந்து பிறந்தது அல்ல, அன்பிலிருந்து பிறந்தது.

 அவர் கொடுக்கும் கட்டளை

" நீ எனது நண்பனாக இரு."

ஆகவேதான் அவர் சொல்கிறார்,

"நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்."

அதாவது,

"நான் உங்களை எனது நண்பர்களாக இருங்கள் என்று தான் கேட்டுக்கொண்டேன்,

 அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் எனது நண்பர்கள்.

நீங்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட நான் உங்களது நண்பன்தான்.

யூதாஸ் அன்புக்கு எதிராக என்னைக் காட்டிக் கொடுத்த போதும் அவனை நான் "நண்பனே " என்றுதான்  அழைத்தேன்.

நீங்கள் எனது நண்பர்கள் ஆகும்வரை உங்களுக்காக காத்திருக்கிறேன்."

"தாத்தா, இயேசு சர்வத்தையும் படைத்தவர்.
 சர்வ வல்லவர்.
 யாருடைய உதவியுமின்றி சுயமாக இருப்பவர். 
அவருக்கு ஏன் நம் மேல் இவ்வளவு ஆசை?"

", கடவுள் சர்வ வல்லமையால் நம்மைப் படைத்ததே நாம் அவரது நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

எழ முடியாமல் படுத்துக் கிடக்கும் குழந்தையை தாய் குனிந்து, எடுத்து, மார்போடு அணைத்துக் கொள்வது போல,

உலகத்தில் பாவத்தின் பாரத்தினால் எழ முடியாமல் படுத்திருக்கும் நம்மை தூக்கி விட,

வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.

நன்கு கவனி,

நம்மை ஏற்றிவிட அவர் இறங்கி வந்தார்.

பலகீனர்களாகிய நமது நட்பை சம்பாதிக்க சர்வ வல்லவராகிய அவர் நம்மை போல பலகீனர் ஆகினார்.

 நம்மேல் அவருக்கு ஏன் இவ்வளவு ஆசை என்று கேட்கிறாய்.

நம்மேல் அவருக்கு உள்ள அன்பு, 
அன்பு மட்டுமே.

நம்மைப் படைத்தவர் என்பதால் நம் மீது அவருக்கு சர்வ அதிகாரம் உண்டு.

ஆனாலும் அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறார்.

"நான் உன்னை நேசிக்கிறேன், நீயும் என்னை நேசி."

என்று அவர் நம்மிடம் சொல்வது , 

காதலன் காதலியிடம்,
"I love you, please love me" 

கெஞ்சுவது போலிருக்கிறது."

"தாத்தா, எனக்கு இயேசுவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

மனிதரை தன்னை நேசிக்க வைப்பதற்காக தன் உயிரையே கொடுத்தார் இயேசு.

ஆனால் அனேக மனிதர்கள் அவரை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறார்களே.

நன்றி கெட்ட ஜென்மங்கள்!"

",சிலுவையில் இரண்டு கரங்களையும் விரித்து அவரது அரவணைப்பிற்காக நம்மை அழைக்கிறார்.

சிலுவையில் தொங்கும் அவரது முகத்தை ஏறிட்டுப் பார்த்தால் 
இளகாத மனமும் இளகும்.

கரையாத மனதும் கரையும்.

நாம் பார்த்து மனம் மாறுவதற்காகத்தான் கோயில்களிலும், வீடுகளிலும், செப மாலையிலும் பாடுபட்ட சுரூபம் வைத்திருக்கிறோம்.

எத்தனை பேர் அவரது முகத்தை பார்த்து தியானிக்கிறோம்?

அவரவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."

"திருமண வீட்டிற்கு வரும் பெண்கள் மணப்பெண் பெண்ணினுடைய முகத்தைப் பார்ப்பதற்குப் பதில்,

அவள் அணிந்திருக்கும் நகைகளையும், பட்டு சேலையையும் பார்த்து விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.

நாமும் அநேக சமயங்களில் கோயிலுக்குச் செல்லும்போது பாடுபட்ட இயேசுவைப் பார்ப்பதற்குப் பதில்

 பீட அலங்காரத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

திருப்பலி நேரத்தில் நமது கண்கள்,
திவ்ய நற்கருணைப் பேழை, 
பீடம், 
இயேசுவின் சரீரம், இரத்தம்,
குருவானவர், 
பாடுபட்ட சு௹பம்

ஆகியவற்றில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டும்.

காதுகள் வாசகங்கள், செபங்கள், பிரசங்கம் ஆகியவற்றில் மட்டும் ஈடுபட்டிருக்க வேண்டும்.

மனம் தியானத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

கோயில் அலங்காரத்தை மட்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தால், ஆன்மீக பயன் எதுவும் நமக்குக் கிடைக்காது."

",நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரைக் தியானிப்போம். அவருடைய அன்பில் வளர்வோம். 

அன்புதான் நமது வாழ்க்கையின் உயிர்.

லூர்து செல்வம்.

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."(அரு.15: 9)

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."
(அரு.15: 9)


"தாத்தா, நாம் நம்மை அன்பு செய்வது போல, நமது பிறனை 
அன்பு செய்ய வேண்டும் என்று நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.

அவர் நம்மை எப்படி அன்பு செய்கிறார்?"

",அதை அவரே கூறியிருக்கிறாரே.

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்.

என் அன்பில் நிலைத்திருங்கள்." 

"தாத்தா, நம்மால்  அவர் அன்பு செய்யும்  அளவுக்கு அன்பு செய்ய முடியுமா?

தந்தையின் அன்பும்,  மகனின் அன்பும்,  தூய ஆவியின்  அன்பும் ஒரே அன்பு.

அளவு இல்லாத அன்பு.

அவர் நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

அளவுள்ள நம்மால் அவரை அளவில்லாத விதமாய் அன்பு செய்ய முடியுமா?"

",.கடவுளின் அளவில்லாத அன்பையும் நமது அளவுள்ள அன்பையும் ஒப்பிட முடியாது.

ஆனால் அவருடைய அன்பில் வாழ்ந்து அதை அனுபவிக்கலாம்.

அவருடைய அன்பிற்குள் நாம் இருந்தால் அதை நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்கலாம்.

அவருடைய கட்டளைகளை அனுசரிப்பதன் மூலம் அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

நமது அன்பை அளப்பதற்கு அளவு கோல் ஒன்றும் இல்லை.

 எந்த அளவிற்கு நாம் அவரை நேசிக்கிறோமோ

அந்த அளவுக்கு அவரது கட்டளைகளை  அனுசரிப்போம். .

அவரது கட்டளைகளையும், அவரது திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரிப்பதன் மூலம்

அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறோம்.

அவரது கட்டளைகளை ஒழுங்காக அனுசரிக்காமல் அவரை அன்பு செய்கிறேன் என்று கூறுவதில் உண்மை இருக்க முடியாது.

நமது பகைவர்களை நேசிக்க வேண்டும், அவர்கள் நமக்கு தீமை செய்தால் அவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்  என்பது அவரது கட்டளை.

நமக்கு தீமை செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக நாம் நீதிமன்றம் சென்றால்,

 நாம் கடவுளை நேசிக்கவில்லை. 

இறையன்பில் நிலைத்திருப்பவன் பிறரன்பிலும் நிலைத்திருப்பான்.


"கடவுள் நம்மிடம் அன்புகூர்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை."

கடவுள் நம்மிடம் அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

நாம் நமது அன்புக்கு அளவு வைக்காமல் நம்மால் எவ்வளவு அதிகமாக அன்பு கூற முடியுமோ அவ்வளவு அதிகமாக அன்பு கூற வேண்டும்.

கடவுளால் இயல்வது அளவில்லாத அன்பு.

நாம் நம்மால் இயன்றவரை அன்பு செய்ய வேண்டும்.

நமது அன்பு பிறரன்பு செயல்களில் வெளிப்பட வேண்டும்.

நூற்றுக் கணக்கில் வருமானம்  உள்ளோர் நூற்றுக் கணக்கில் பிறர் உதவி செய்ய வேண்டும்.

ஆயிரக் கணக்கில் வருமானம்  உள்ளோர் ஆயிரக் கணக்கில்
பிறர் உதவி செய்ய வேண்டும்.

இலட்சக் கணக்கில் வருமானம்  உள்ளோர் இலட்சக் கணக்கில்
பிறர் உதவி செய்ய வேண்டும்.

கோடிக் கணக்கில் வருமானம்  உள்ளோர் கோடிக் கணக்கில்
பிறர் உதவி செய்ய வேண்டும்.

கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

நாம் கடவுளை பாவ நிலையில்   அன்பு செய்யாதிருக்கும் போதும், கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் நம்மைப் பகைத்து அன்பு செய்யாவிட்டாலும், நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.


"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை." 

இயேசு நமக்காக தனது உயிரைக் கொடுத்தார்.

நாமும் மற்றவர்களுக்காக நமது உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்."

"தாத்தா, நாம் கடவுளின் கட்டளைகளை அனுசரிப்பதால் அவரை நேசிக்கிறோமா?

அல்லது,

கடவுளை நேசிப்பதால் அவரது கட்டளைகளை அனுசரிக்கிறோமா?"


",கடவுளை நேசிப்பதால்தான் அவரது கட்டளைகளை அனுசரிக்கிறோம்.

கடவுளை நேசிக்காதவர்கள் கட்டளைகளை அனுசரிக்க மாட்டார்கள்.

ஒருவன்  கடவுளது கட்டளைகளை  அனுசரிக்கிறானா, இல்லையா என்பதை வைத்து 

அவன் கடவுளை நேசிக்கிறானா, இல்லையா என்பதைக் கண்டுகொள்ளலாம். 

அவருடைய கட்டளைகளை அனுசரிப்பதன் மூலம் அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்கிறோம்."

"உள்ளத்தில் அன்பு இருந்தால் அது கட்டளைகளை அனுசரிப்பதில் செயல்வடிவம் பெறும். சரியா?"

", சரி. இறைவனை அன்பு செய்வோம்.

அவரது கட்டளைகளை அனுசரிப்போம்."

லூர்து செல்வம்.

Tuesday, May 10, 2022

கத்தோலிக்க குருவானவர் யார்?(தொடர்ச்சி.)

கத்தோலிக்க குருவானவர் யார்?
(தொடர்ச்சி.)



''தாத்தா, உங்கள் very good ஒருபக்கம் இருக்கட்டும்.

'உலகம் முடியுமட்டும் உங்களுடனே இருக்கிறேன்' என்று இயேசு கூறியபோதே அப்போஸ்தலர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் இயேசு அவர்களோடு இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் நான் ஒவ்வொரு முறை அவர்களது பணியைக் கூறிய போதெல்லாம் 

'நமக்கும் அது பொருந்தும்' என்று கூறினீர்களே, அது ஏன்?"

", நான் 'அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளை ஒவ்வொன்றாக கூறு' என்று சொன்னேன்.

திருப்பலி நிறைவேற்றுவதும், பாவங்களை மன்னிப்பதும் மட்டும்தான் அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகள்.

குருவானவர் இல்லாவிட்டால்

 திருப்பலி நிறைவேற்ற முடியாது, பாவசங்கீர்த்தனமும் கேட்க முடியாது.

ஆன்மீக உணவும் கிடைக்காது. பாவமன்னிப்பும் கிடைக்காது. 

'உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்' என்று இயேசு அவர்களிடம் தான் சொன்னார்.

ஆனாலும்,

"ஆகையால், இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான்.

 அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்."
(மத். 5:19) 

இவ்வார்த்தைகளை இயேசு யாரிடம் கூறினார்?"

"இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர்.
2 அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:"
(மத். 5:1,2)

"இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்ததும் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு மலைத்துப்போயினர்."
(மத். 7:28)

மலைப் பிரசங்கத்தில் மக்களைப் பார்த்து கூறினார்."

", அதாவது, மக்களும் கட்டளைகளைக் கடைப்பிடித்துப் போதிக்க வேண்டும்.

ஆகவே, குருக்கள் நமக்குப் போதிக்கும் நற்செய்தியை,

நாம் அனுசரிவிப்பதோடு,
 மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்.

நற்செய்தி அறிவிக்கும் பணி குருக்களுக்கும், நமக்கும் பொதுவானது.

பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஞானோபதேசம் போதிக்கிறார். இது நற்செய்திப் பணிதானே.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோமே, இதுவும் நற்செய்திப் பணிதானே."

"துறவற  சபைக் குருக்கள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப் பாடு கொடுக்கின்றார்கள்.

நாம் கொடுப்பதில்லையே."

", துறவற சபைக் குருக்கள் கற்பு வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள்.

அதாவது திருமணம் முடிக்காமல், இயேசுவைப் போலவே வாழ வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள்.

ஆனாலும் கற்பு என்ற வார்த்தை பொதுவானது.

கற்பு நம் எல்லோரின் பொக்கிஷம்.

நாம் அனைவரும்,

திருமணம் ஆனவர்களும், ஆகாதவர்களும் கற்பு நெறி காக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

துறவறசபையை சேர்ந்த குருக்கள் ஏழ்மை வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள்.

சபையைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமாக எதுவும் கிடையாது.

அவர்கள் உபயோகிப்பவை அனைத்தும் சபைக்குச் சொந்தமான பொருட்கள்.

Superior க்குத் தெரியாமல் 
சொந்தமாக எதையும் வாங்கி உபயோகிக்க முடியாது.

நாம் யாராவது ஒருவருக்கு ஒரு பரிசு கொடுத்தால் அதை அவர்கள்
Superiorடம் கொடுக்க வேண்டும்.

அதை அவர் கொடுத்தால் வாங்கி உபயோகிக்கலாம்.

ஆண்டவரின் போதனைப் படி,
நாமும் ஏழ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் பொருட்களைச் சம்பாதிக்கலாம். உபயோகிக்கலாம். ஆனால் அவற்றின் மேல் பற்று வைக்கக் கூடாது.

ஒரு பொருள் மீது பற்று வைத்திருந்தால் நம்மால் அதை மற்றவர்கட்கு உதவியாகக் கொடுக்க முடியாது, ஆண்டவருக்காக தியாகம் செய்யவும் முடியாது.

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

என்ற வார்த்தைகளும் மலைப் பிரசங்கத்தின் போது இயேசு மக்களைப் பார்த்து கூறியவைதான்.

எந்த உலகப் பொருட்கள் மீதும் மனத்தளவில் பற்று அற்றவர்களே எளிய மனத்தோர். (Poor in spirit)"

"தாத்தா நமக்கு உலகப் பொருட்களின் மீது பற்று இல்லை என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்கலாம்?"

",உன்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

நீ பள்ளிக்கூடத்திற்கு போய்க்கொண்டிருக்கும் போது அது எங்கேயோ விழுந்து தொலைந்து விட்டது.

பள்ளிக்கூடத்திற்குப் போன பின்புதான் அதை நீ கண்டுபிடிக்கிறாய்.

இப்போது நீ என்ன செய்வாய்?"

"அழுவேன்."

"ஏன் அழுவாய்?"

"காணாமல் போனது என்னுடைய ரூபாய்."

",உன் வகுப்பைச் சேர்ந்த இன்னொரு பையன் அவனது ரூபாயை தொலைத்துவிட்டான். நீ அழுவாயா?"

"'ஐயோ பாவம் ' என்று சொல்வேன். அழமாட்டேன்."

",உன்னுடைய ரூபாய் காணாமல் போனபோது மட்டும் ஏன் அழுகிறாய்?".

"ஏனென்றால் அது என்னுடைய ரூபாய்."

",அதுமட்டுமல்ல, அதன்மேல் உனக்கு பற்று இருக்கிறது.

சீப்பினால் தலை சீவும்போது தலைமுடி ஒன்று சீப்பில் வந்துவிட்டால் அழுவாயா?"

"ஒரு முடிக்காக யாரும் அழுவார்களா?

இப்போது புரிந்து விட்டது. பற்றுள்ள பொருளை இழக்க விரும்ப மாட்டோம்.

பற்றில்லாத பொருளை
இழந்தாலும் கவலைப்பட மாட்டோம்.

உலகப்பற்று உள்ளவன் சாக விரும்பமாட்டான்.

உலகப்பற்று இல்லாதவன் சாவைப் பற்றி கவலைப்பட மாட்டான்.

எப்போது சாவோம் என்பது முக்கியமல்ல, 

எப்படிச் சாவோம் என்பதுதான் முக்கியம்.

விண்ணகத்தின் மேல் பற்று உள்ளவர் ஒவ்வொரு வினாடியும் நல்ல மரணத்திற்குத் தயாராக இருப்பான்.

நமக்கு இறைவன் மீது பற்று இருந்தால் இவ்வுலகப் பற்று காணாமல் போய்விடும்.

இறைவனோடு எப்போது இணைவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்போம்."

", You are correct.
நாம் இறைவனைப் பற்றிக் கொண்டால் உலகப்பற்று நம்மை பற்றாது.

அடுத்து,

துறவற சபையினர் கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடு கொடுக்கின்றனர்.

தங்கள் சபைத் தலைவருக்கு எல்லா வகையிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

நாமும் தாய்த் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து நடக்க கடமைப் பட்டிருக்கிறோம்."

"அப்படியானால், தாத்தா, அவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்?"

", திருமணம் முடித்தவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்?"

"திருமணம் முடிக்கும்போது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்
பிரமாணிக்கமாக இருப்பதாக வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் துரோகம் செய்யக்கூடாது.

திருமணம் முடிக்காதவர்கள் யாருக்கும் வார்த்தைப்பாடு கொடுப்பதில்லை.

ஆனாலும் யாருக்கும் துரோகம் செய்யக்கூடாது."

", அதாவது?"

"திருமணம் முடித்தோர் திருமண ஒப்பந்தத்தால் கட்டுப் பட்டிருக்கிறார்கள்,

முடிக்காதோர் எந்த ஒப்பந்தத்தாலும் கட்டுப் படவில்லை.

ஆனால் அனைவரும் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள்.

நீ ஒரு துறவற சபையில் சேர்ந்து விட்டால் திருச்சபையின் ஒழுங்குமுறைகளோடு, சபையின் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்டிருப்பாய்.

சேராவிட்டால் திருச்சபையின் ஒழுங்குகளுக்கு மட்டும் கட்டுப்பட்டிருப்பாய்.

இப்போது நீ இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
பாவம் மட்டும் செய்யக்கூடாது.

நீ துறவற சபையில் சேர்ந்து விட்டால் உன் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. சபையின் இஷ்டப்படிதான் எதுவும் செய்யமுடியும்.   

பாவம் செய்யக்கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான விதி. 

ஏதாவது புரிந்திருக்கிறதா?"

"எல்லோரும் திருச்சபையில் இருக்கிறோம்.

வார்த்தைப்பாடு கொடுத்தவர்கள்
திருச்சபைக்குள் உள்ள துறவற சபையில் இருக்கிறார்கள்.

எல்லோரும் இயேசுவுக்குள் தான் இருக்கிறோம்."

", மேற்றிராசனக் குருக்கள்?"

"அவர்கள் அப்போஸ்தலர்களின் நேரடி வாரிசுகள்.

அவர்களும் கற்பு வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள்.

ஆயருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும்
 வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள். 

நாமும் ஆயருக்குக் கட்டுப் பட்டவர்கள்தான்."

", அனைவரும் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களே." 

"நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?"

", தாராளமாகச் சொல்லலாம்.

பங்கு குரு நமது தந்தை.

நாம் அவரது பிள்ளைகள்.

நமது ஆன்மாவை பாவசங்கீர்த்தனம் என்னும் தண்ணீரால் குளிப்பாட்டி,

நமக்கு இயேசுவை உணவாக அளிப்பது நமது பங்குத் தந்தை தான்.

வீட்டில் உடல் ரீதியாக அம்மா செய்கின்ற வேலையை,

திருச்சபையில் ஆன்ம ரீதியாக
பங்குத் தந்தை செய்கிறார்."

"கத்தோலிக்க குருவானவர் யார்? என்ற கேள்விக்குப் பதில்,

கத்தோலிக்க குருவானவர் நமது ஆன்மீகத் தந்தை.

நமது ஆன்மா பரிசுத்தம் அடையவும்,

நமக்கு ஆன்மீக உணவு கிடைக்கவும் 

குருவானவர் உருவில் நம்மோடு வாழ்ந்த இயேசுவை அணுகுவோம்.

இயேசுவின் சொற்படி நடப்போம்.

மீட்பு அடைவோம்.

லூர்து செல்வம்.



.

கத்தோலிக்க குருவானவர் யார்?

கத்தோலிக்க குருவானவர் யார்?

"தாத்தா, உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை."

", உன்னுடைய வாய் உங்கிட்டதானே இருக்கிறது."

"தாத்தா, அது எனக்குத் தெரியும். தாத்தா, ஒரு அறைக்குள்ளே போக வேண்டும் என்றால் அதற்கு உரிய வாசல் வழியே போக வேண்டும்.

உங்களிடமிருந்து ஒரு விசயத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமான கேள்வியை கேட்க வேண்டும்.

அந்தக் கேள்வி எது என்று தெரியவில்லை."

", என்ன விசயத்தை?"

"நமது குருக்களைப் பற்றி."

", கேள்வி வேண்டாம். அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளை ஒவ்வொன்றாகக் கூறு."

" குருக்கள் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்."

",நமக்கும் அந்த கடமை இருக்கிறது."

"நம்மை ஆன்மீகத்தில் வழிநடத்த வேண்டும்."

",நமது பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை ஆன்மீகத்தில் வழிநடத்த வேண்டிய கடமை இருக்கிறது."

"குருக்கள் திருமணம் செய்யாமல், கற்பு நெறியில் வாழ வேண்டும்."

", நாமும் திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் கற்பு நெறியில் தான் வாழ வேண்டும்."

"குருக்கள் பணத்தின் மீது பற்றில்லாமல் ஏழ்மையில் வாழ வேண்டும்."

",ஏழைகள் பாக்கியவான்கள் என்று இயேசு சொன்ன வசனம் நமக்கும் பொருந்தும்."

"மேற்றிராசனக் குருக்கள் தங்கள் ஆயருக்கும், துறவற சபைக் குருக்கள் தங்கள் சபைத் தலைவருக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்."

",நாமும் நமது தாய் திருச்சபைக்கு கீழ்ப்படிந்து தான் நடக்க வேண்டும்."

"என்ன தாத்தா நான் எதைச் சொன்னாலும் நாமும் அப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?" 

",அவர்கள் செய்து நாம் செய்ய முடியாத காரியங்களை சொல்லு." 

"நீங்களே சொல்லுங்கள்."

". குருக்கள் அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றி நமக்கு ஆன்மீக உணவாக தருகிறார்கள்.

நடுத் திருப்பலியின்போது குருவானவர் அப்பத்தை எடுத்து

 "இது என் சரீரம்" என்கிறார்.

உடனே அது இயேசுவின் சரீரமாக மாறிவிடுகிறது.

ரசத்தை எடுத்து 

"இது என் ரத்தம்" என்கிறார்.

உடனே அது இயேசுவின் ரத்தமாக மாறிவிடுகிறது.

",என் சரீரம்"

என்று சொல்லும்போது அது இயேசுவின் சரீரமாக மாறினால் என் என்ற வார்த்தை யாரை குறிக்கும்?"

"இயேசுவைக் குறிக்கும்."

", இங்கே "என்" என்று சொல்வது யார்?"

"குருவானவர்."

",அப்படியானால் குருவானவர் யார்?''

"இயேசு."

",பீடத்தில் குருவானவரின் உருவத்தில் நின்று பலியை ஒப்புக் கொடுப்பவர்  

அன்று சிலுவையில் பலியான அதே இயேசு தான்.

நாம் குருவானவரை பார்க்கும் போது அவர் உருவத்தில் இயேசுவை பார்க்கிறோம்.

குருவானவர் அல்லாத ஒருவர் அப்பத்தை எடுத்து,

" இது என் சரீரம்" என்று சொன்னால் அது இயேசுவின் சரீரமாக மாறுமா?"

"மாறாது."

", குருவானவர் செய்து நாம் செய்ய முடியாத ஒரு செயல் 

அப்பத்தை இயேசுவின் சரீரமாகவும், ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றும் செயல்."

"தாத்தா, இன்னொரு செயலை நான் சொல்லட்டுமா?"

", சொல்லு."

" நாம் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது நமது பாவங்களை குருவானவர் மன்னிக்கிறார்.

 பாவங்களை பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உண்டு.

அப்படியானால் நமது பாவங்களை மன்னிப்பவர் குருவானவர் உருவத்தில் பாவ சங்கீர்த்தன தொட்டியில் அமர்ந்திருக்கும் இயேசுவே தான்."

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:22, 23)

இவை இயேசு சீடர்களை நோக்கி கூறிய வார்த்தைகள்.

முக்கியமான ஒரு இறை இயல் உண்மையை மனதில் வைத்துக்கொண்டு இந்த வசனத்திற்குப் பொருள் காண வேண்டும்.

பரிசுத்த தம திரித்துவத்தில் மகன்
தந்தையினுள் இருக்கிறார்.

தந்தை மகனுள் இருக்கிறார்.

அதே போல்,

மகன் பரிசுத்த ஆவிக்குள் இருககிறார்.

பரிசுத்த ஆவி மகனுள் இருக்கிறார்.

மகன் இருக்கும் இடத்தில் தந்தையும் இருக்கிறார்.

தூய ஆவி இருக்கும் இடத்தில் மகனும் இருக்கிறார்.

அப்படியானால்

 இயேசு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

என்பது 

என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் பொருள்படும்.

இயேசு சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுக்கும் பொழுது அவரே சீடர்களுக்குள் வந்துவிடுகிறார்.

சீடர்கள் மூலமாக மன்னிப்பவர் இயேசுவே.


சீடர்களின் வாரிசுகள் தான் குருக்கள்.

குருக்கள் மூலமாக பாவங்களை மன்னிப்பவர் இயேசுவே.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் குருவின் உருவத்தில் இருப்பவர் இயேசுவே.

நாம் குருவானவரைப் 
பார்க்கும்போது இயேசுவைத்தான் பார்க்க வேண்டும்."

", very good."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, May 9, 2022

பிள்ளைகள் மட்டில் அம்மாவின் கடமை.

பிள்ளைகள் மட்டில் அம்மாவின் கடமை.


"தாத்தா, என்ன வேலை நடக்கு?"

".வேலை நடக்கிறது இருக்கட்டும்.  உன்னை நேற்றுக் காணவேயில்லை."

"நேற்று வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.''

", அப்படி என்ன வேலை?,

" வேலையா? கொண்டாட்டம்."

''கொண்டாட்டமா? என்ன கொண்டாட்டம்?"

"பகல் முழுவதும் ஒரே வேலை."

'', என்னடா உளறுத? 

என்ன வேலை?ன்னு கேட்டேன்.

வேலையா? கொண்டாட்டம்னு சொன்ன.

என்ன கொண்டாட்டம்? னு. கேட்டா ஒரே வேலைன்னு சொல்ற?

என்ன ஆச்சி உனக்கு?"

"தாத்தா, நேற்று அம்மா தினம் (Mother's day) உங்களுக்குத் தெரியாதா?

நேற்று முழுவதும் அம்மா தினத்தைக் கொண்டாடினோம்."

",ரொம்பசந்தோசம்.
எப்படி கொண்டாடினீங்க? அம்மாவுக்கு ஏதாவது Gift வாங்கி கொடுத்தீர்களா?"

"யாருமே இதுவரை வாங்கி கொடுக்காத Gift ஐ நாங்கள்  வாங்காமலேயே  கொடுத்தோம்."

", என்ன Gift?"

"அம்மாவுக்கு நாள் முழுவதும் ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டு வேலை எல்லாவற்றையும் நாங்களே செய்து அம்மாவுக்கு மூன்று வேளை சாப்பாட்டையும் நாங்களே  ஊட்டினோம்."

",பரவாயில்லையே! அம்மா சும்மாவா இருந்தாங்க?"

"எங்கள் கூடவே இருந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தந்து கொண்டே இருந்தாங்க.''

", அப்போ நேற்று அம்மா டீச்சர் வேலை பார்த்தார்கள்!

உண்மையில் படிப்பதை விட சொல்லிக் கொடுப்பது தான் கஷ்டம்.

ஒன்றுமே தெரியாத சிறு குழந்தைகளுக்கு ஒண்ணாம் க்ளாஸ் டீச்சர் சொல்லிக் கொடுப்பதைப் போய் பாரு, தெரியும்."

"தெரியும் தாத்தா, நானும் ஒண்ணாம் க்ளாஸ்  படித்திருக்கிறேனே!

இப்போது அம்மாவைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?"

", பேசுவோமே! ஆனால் அதற்கு முன் ஒரு வார்த்தை.

அம்மா தினத்தன்று மட்டும் அம்மாவுக்கு உதவியாய் இருந்து விட்டு,

வருட முழுவதும் உதவியே செய்யாவிட்டால் அந்த ஒரு நாள் கொண்டாட்டத்தால் பயன் ஏதுமில்லை."

"இதுதான் ஒரு வார்த்தையா?

பரவாயில்லை.

நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், இதே மாதிரி ஒரு வார்த்தையில்."

", சரி, கேள்."

"அம்மா என்றால் யார்?"

",கடவுள் நம்மை படைப்பதற்கு 
அவருக்கு உதவிகரமாய் இருந்தவர்கள் நமது அப்பாவும், அம்மாவும்தான்."

" அதாவது, நம்மைப் பெற்றவர்கள்."

", அதாவது நம்மைக் கடவுளிடமிருந்து பெற்று, உலகிற்குத் தந்தவர்கள்."

"அது மட்டும்தானா அவர்களுடைய வேலை?"

", உன்னைப் பெற்றவர்கள் என்ன செய்தார்கள்?"

"வளர்த்தார்கள்."

", அதுதான் அவர்கள் பணி. அநேகர் இந்த பணியை ஒழுங்காகச் செய்வதில்லை."

"எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வளர்க்கத்தானே செய்கிறார்கள். 

குழந்தைகளை வளர்க்கா விட்டால் எப்படி அவர்கள் பெரியவர்கள் ஆகிறார்கள்?"

", பெரியவர்கள் ஆக்குவது மட்டும் வளர்ப்பு இல்லை.

சாப்பாடு கொடுத்தால் ஆட்டுக் குட்டி கூட வளர்ந்து விடும்."

''நீங்கள் எதை வளர்ப்பு என்கிறீர்கள்?"

", குழந்தைக்கு ஒரு உடலும், ஒரு ஆன்மாவும் இருக்கிறது என்பது உனக்குத் தெரியும்.

உனக்கு எத்தனை கைகள்?"

"இரண்டு."

", நீ நன்றாகத்தான் சாப்பிடுகிறாய்.

 ஆனால் ஒரு கை மட்டும் தான் வளர்கிறது, மற்றது வளரவே இல்லை என்று வைத்துக்கொள்வோம். எப்படி இருக்கும்."

"Awkward ஆ இருக்கும். வலது கை மட்டும் வளர்ந்து கொண்டே போனால், சோற்றை அள்ளி வாயில் வைக்க முடியாது.

ஆனால், தாத்தா, இரண்டு கைகள் மட்டும் வளர்ந்து கொண்டே போனாலும் Awkward ஆகத்தான் இருக்கும்.

மொத்த உடலும் வளர வேண்டும்."

",குழந்தைக்கு  உடலும்,  ஆன்மாவும் இருக்கிறது.

அம்மா போடுகின்ற சாப்பாட்டால் எது வளரும்?"

"உடல் வளரும்."

", ஒழுங்காக நல்ல சத்துள்ள  உணவைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உடல் மட்டுமே வளரும்.

அம்மா கொடுக்கிற 
துணிமணிகளால் உடல் அழகாக இருக்கும்.

ஆனால் ஆன்மா? அம்மா கொடுக்கிற உணவால் ஆன்மா வளராது."

"உடல் மட்டும்தானே, தாத்தா வளர முடியும். ஆன்மா ஆவி.
ஆவியால் அடிக்கணக்கில் வளர முடியுமா?"

",ஆன்மா அடிக்கணக்கில் வளர முடியாது. ஆனால் வளர முடியும். ஆன்மீகத்தில் வளர முடியும்.

கடவுள் நம்பிக்கையிலும், பக்தியிலும் வளர முடியும். நல்ல குணங்களில் வளர முடியும்."

"குழந்தைகளை ஆன்மீகத்தில் எப்படி வளர்ப்பது?"

",குழந்தையின் வளர்ச்சி எங்கே ஆரம்பிக்கிறது?"

"தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது."

",தாயின் வயிற்றில் இருக்கும்போதே உடலும், ஆன்மாவும் வளர வேண்டும்."

"உடல் வளரும். புரிகிறது. ஆன்மா எப்படி வளரும்?'

",அம்மா உணவு உண்ணும்போது அதன் ஒரு பகுதி குழந்தையின் வயிற்றுக்குள்ளும் தொப்புள் கொடி வழியாக செல்லும்.

அதன் உதவியால் உடல் வளரும்.

அம்மா தனது ஆன்மீக வளர்ச்சிக்காக செய்யும்  தியானம், ஞான வாசகம், செபம், பக்தி முயற்சிகள் போன்றவற்றின் ஆன்மீகப் பயனிலும் குழந்தை பங்கு பெறும்.

தாய் ஆன்மீகத்தில் வளரும்போது குழந்தையும் வளரும்.

உடல் ரீதியாக குழந்தை வளர வேண்டுமென்றால் தாய் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.

ஆன்மீக ரீதியாக வளர வேண்டுமென்றால் தாய் ஆன்மீக வளர்ச்சி தரும் பக்தி முயற்சிகளை ஆர்வமுடன் செய்ய வேண்டும்.

 தாய் எப்படியோ அப்படியேதான் குழந்தையும்."

"ஆனால் அனேக தாய்மார் குழந்தையின் உடல் வளர்ச்சியில் மட்டும்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவர்களே ஆன்மீக வளர்ச்சி பற்றி  கவலைப் படுவதில்லை."

",அதனால் தான் அனேக  பிள்ளைகள் சாப்பாட்டைக் கண்டால் ஓடி வருவார்கள். செபம் சொல்வதைக் கேட்டால்  ஓடி விடுவார்கள்.

 தாய் பெற்ற தன் பிள்ளையிடம் கடவுளை பற்றி சொல்ல வேண்டும்.

 செபம் சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்.

 கடவுளின்  கட்டளைகளை அவர்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டும்.

 ஆன்மீக வாழ்வில் அவர்களுக்கு தானே முன்மாதிரிகையாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட தாயின் வயிற்றில் உற்பவித்து, பிறந்து, வளரும் பிள்ளைகள் நல்ல கிறிஸ்தவர்களாக வளர்வார்கள், வாழ்வார்கள்.
 
 பிள்ளைகள் நல்ல கிறிஸ்தவர்களாக  வாழாவிட்டால் அதற்கு முக்கிய காரணம் தாய் தான்.

தன் மேல் பிழையை வைத்துக்கொண்டு பிள்ளைகளை குறை சொல்வதில் பயன் ஒன்றுமில்லை."


" குழந்தையின்  வளர்ப்பிற்கு அம்மா மட்டுமா பொறுப்பு. சமூகம் என்று ஒன்று இருக்கிறதே.

பிள்ளை 24 மணி நேரமும் தாயுடனா  இருக்கிறது?

அதிகப்படியான நேரம் சமூகத்தில்தான் இருக்கிறது.

அங்கேதான் கெட்டுப் போகிறது."

",ஹலோ, நீ கொண்டாடியது அன்னையர் தினமா? சமூக தினமா?"

" அன்னையர் தினம்."

",அதனால் தான் அம்மாவை பற்றி. மட்டும் பேசுகிறோம்.

தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத வேண்டும்.

 மற்ற கேள்விகளை ஏன் கேட்கவில்லை என்று எழுதக்கூடாது.

பிள்ளைகள் தாங்கள் பழகும் சமூகத்தால் ஏன் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்தால்

 அதற்கு முதல் காரணம் அம்மா அப்பா இருவருமாகத்தான் இருக்கும்.

 ஏனெனில்  எப்படிப் பட்டவர்களோடு பழக வேண்டும் என்று பிள்ளைகளுக்கு  முதலில் பயிற்சி கொடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்தான்.

 பெற்றோர் வீட்டில் மட்டும் இருக்க முடியாது.

அவர்கள் எப்படிப்பட்ட சமூகத்தில் பழகுகிறார்களோ அப்படிப்பட்ட சமூகத்தில்தான் பிள்ளைகளும் பழகுவார்கள்.

அதற்கு அப்பாற்பட்ட  சமூகத்தில்  அவர்கள் வாழ்ந்தாலும் பெற்றோர் ஏற்கனவே அளித்திருக்கும் பயிற்சி அவர்களைக் காப்பாற்றும்.

தங்கள் பிள்ளைகளின் ஆன்மாவின் மீட்புக்குப் பெற்றோரும் உதவிகரமாய் இருக்க வேண்டும்."


லூர்து செல்வம்.

Saturday, May 7, 2022

அவனும், இவனும்.


       அவனும், இவனும்.



அவன் ஒரு உழைப்பாளிதான். மறுக்க முடியாது. சாதாரண எழுத்தராக ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். 

அவன் பெயர் 'அவன்'தான்!

 கடினமாக உழைத்தான். ஒரு ஆபீசராகப் பதவி உயர்வு பெற்றான்.

அடுத்து உதவி நிருவாகி (Asst. Manager) ஆகவும், தொடர்ந்து நிருவாகி ஆகவும் பதவி உயர்வு பெற வேண்டும் என்பது அவனது ஆசை.

ஆனால் அவனுக்குப் போட்டியாக இவன் இருந்தான்.

இவன் பெயர் 'இவன்' தான்.

இவனும் நல்ல உழைப்பாளிதான்.

இவனும் அவனைப் போலவே எழுத்தராகப் பணியில் சேர்ந்து ஆபீசராகப் பதவி உயர்வு பெற்றவன்தான்.

ஆனால் அவனைப் போல ஆசைகள் எதுவும் இவனுக்கு இல்லை.

மன சாட்சிக்கு விரோதமில்லாமல் நன்கு உழைக்க வேண்டும்.

பதவி உயர்வு இயல்பாக வர வேண்டும், ஆசைப்பட்டு, முயற்சி செய்து அல்ல. இது இவன் கொள்கை.

ஆனால் அவனுக்கு இவன் மேல் பொறாமை இருந்தது.

இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்ததால் எங்கே உதவி நிருவாகிக்கான பதவி உயர்வு இவனுக்குப் போய் விடுமோ என்ற பயம்.

ஏற்கனவே இருந்த உதவி நிருவாகி ஓய்வு பெறும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.

அந்தப் பதவி எப்படியாவது தனக்கு கிடைத்து விட வேண்டும் என்ற ஆசையில் அவன் அதற்காக குறுக்கு வழியில் செல்ல முடிவு செய்தான்.

உதவி நிருவாகியை நியமிக்க வேண்டியது நிருவாகி.

அவரிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிப்பதில் தப்பு எதுவும் இல்லை.

ஆனால் அவன் தெரிவு செய்தது குறுக்கு வழி.

போட்டியாக இருந்த இவனின் பெயரைக் கெடுப்பது.

கெடுத்து, இவனுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் செய்வது.

அதன்மூலம் தன்னுடைய பதவி உயர்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவது.

அதாவது தான் உழைத்து முன்னேறுவதற்குப் பதிலாக,

அடுத்தவனைக் கெடுத்து முன்னேறுவது.

இவனின் வாய்ப்பைக் கெடுக்க வேண்டுமென்றால் நியமன அதிகாரம் உள்ள நிருவாகியிடம் இவன் பெயரைக் கெடுக்க வேண்டும்.

அதற்காக ஒரு நாள் காலையில் நிருவாகியுடன் Walking போனபோது,    

அவரைப் பற்றி இவன் கெடுத்துப் பேசியதாக ஒரு பொய்யை நம்பக்கூடிய விதமாகச் சொன்னான்.

தன்னைப் பற்றி கெடுத்துப்  பேசியவனுக்கு நிச்சயமாக அவர் பதவி உயர்வு கொடுக்க மாட்டார் என்பது அவனது நம்பிக்கை.

அதற்கு மறுநாள் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்த உதவி நிர்வாகி ஓய்வு பெற்றார்.

மறுநாள் இருவரில் ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்.

தனக்குக் கிடைக்கும்  என்று அவன் உறுதியாக நம்பினான்.

ஆனால் அவனது எதிர்பார்ப்புக்கு மாறாக இவனுக்கு பதவி உயர்வு கிடைத்தது.

அவனால் நம்பவே முடியவில்லை.

மறுநாள் நல்லவன் போல் நடித்துக் கொண்டு,

நிருவாகியைச் சந்தித்து,
அவன் பேசினான்:

"உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது."

", ஏன் ?"

"உங்களைக் கெடுத்துப் பேசியவனுக்கு, பாரபட்சம் பார்க்காமல், பதவி உயர்வு கொடுத்திருக்கிறீர்களே."

", அதற்கு என்னை அல்ல, இயேசுவைத்தான் பாராட்ட வேண்டும்."

"ஏன்?"

",அன்று நான் வாசித்துக் கொண்டிருந்த பைபிள் வாசகத்தில்,

"உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். அவர்களுக்கு நன்மை புரியுங்கள். ( லூக். 6:35)
என்று ஆண்டவர் இயேசு கூறியதை வாசித்தேன்.

என்னைக் கெடுத்துப் பேசியவருக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் அடிப்படையிலேயே அவருக்குப் பதவி உயர்வு அளித்தேன்.

இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை போல் வேறு எதனாலும் எனக்கு ஏற்படவில்லை."

அவன் மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டான்:

"நானும் எனது எதிரிக்கு நன்மை செய்திருக்கிறேன்.
கெடுத்து பேசியே நன்மை செய்து இருக்கிறேன்."

தீமையிலிருந்து நன்மையை வரவழைப்பதில் இறைவன்   வல்லவர்!

பிறரைக் கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு நன்மை 
செய்கிறார்கள்!

நமக்கு மீட்பு கிடைக்க சாத்தான் கூட உதவி இருக்கிறான்.

 அவன் ஏவியதால் தானே  யூதர்கள் இயேசுவைக் கொன்றார்கள். 

கொன்றதால் தானே இயேசு நமக்காகப் பலியானார். 

அவர் பலியானதால்தானே நாம் மீட்பு பெற்றோம்.

பைபிளை வாசிப்போம்.
வாசித்தபடி நடப்போம்.

லூர்து செல்வம்.

Friday, May 6, 2022

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன."(அரு.10:27)

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன."
(அரு.10:27)

"தாத்தா, நாம் இயேசுவின் சீடர்கள். சீடர்களைக் குரு வழி நடத்த வேண்டும்.

நம்மை இயேசு எப்படி வழிநடத்துகிறார்?"

", அவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை மூலம் நம்மை வழிநடத்துகிறார்."

"தாத்தா, இது எல்லோருக்கும் தெரிந்த பதில். எனக்கும் தெரியும். நானும் கத்தோலிக்க திருச்சபையில் தான் இருக்கிறேன்."

",அப்போ, ஒருவருக்கும் தெரியாத பதிலைக் கூற வேண்டுமா?"

"ஒருவருக்கும் தெரியாத பதிலை என்று நான் கூறவில்லை.

எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதிலைக் கூறுங்கள்.

தாத்தா தாய்த் திருச்சபை குருக்கள் மூலமாகவும், பைபிள் மூலமாகவும் நம்மை வழி நடத்துகிறது.

குருக்களது பிரசங்கங்களைக் கேட்கிறோம். ஒழுங்காகப் பைபிள் வாசிக்கிறோம்.

குருக்களின் சொற்படியும், பைபிளின் இறை வாக்கின்படியும் நடக்கிறோம். 

ஆனால் 24 மணி நேரமும் நாம் குருக்களோடு இருப்பதில்லை.

செல்லும் இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துச் செல்வதுமில்லை. பள்ளிக்கூடம் போகாத அநேகருக்கு பைபிள் வாசிக்கவே தெரியாது.

ஆனாலும் 24 மணி நேரமும் இயேசு நம்மோடு தான் இருக்கிறார்.

அப்போது அவர் நம்மை எப்படி வழி நடத்துகிறார்?
.
இதுதான் என் கேள்வி."

", அடேயப்பா, எவ்வளவு நீளக் கேள்வி!"

"கேள்வி நீளமில்லை. அதற்கான முன்னுரை தான் நீளம்."

", அதே போல் பதில் சுருக்கமாக இருக்கும். அதற்கான முன்னுரை நீளமாயிருக்கும்.

இப்போது நீ யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாய்?"

"உங்களோடு."

", அது எனக்கும் தெரியும்....."

"புரிந்துவிட்டது. தாத்தாவோடு."

", அதாவது, சாமியாரோடு அல்ல."

"அது எனக்கும் தெரியும். நீங்கள் சொல்லப் போவதை நானே சொல்லிவிடுகிறேன்.

இயேசு சாமியாn மூலம் மட்டுமல்ல, தாத்தா மூலமும் பேசலாம், பேசி வழி நடத்தலாம். சரியா?"

", தாத்தா மட்டுமல்ல, யார் மூலமாகவும் வழி நடத்தலாம்.

உனது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்..

யார் மூலமாகவும் வழி நடத்தலாம்"

"எதிரிகள் மூலமாகக் கூட வழி நடத்தலாம்"

", Correct. யாரை நாம் நேசித்தாலும் இயேசுவைத்தான் நேசிக்கிறோம். 

யாரைப் பார்த்தாலும் இயேசுவைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டால், அவர்களை நேசிப்போம்.

அப்படி நேசித்தால் அவர்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளிலும் இயேசுவின் வார்த்தைகளை அடையாளம் கண்டு கொள்வோம்."

"ஆனால், தாத்தா, அவர்கள் ஆன்மீக விஷயங்களைப் பேசினால் தான் இயேசுவின் வார்த்தைகள் வர வாய்ப்பு உண்டு.

ஆனால் நம்மோடு பேசுபவர்கள் கடவுளைப் பற்றியா பேசுவார்கள்?

 கண்டதை எல்லாம் பேசுவார்கள்.

நாத்திகன் ஒருவன் கடவுள் இல்லை என்று நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறான். அதில் இயேசு எப்படி நம்மோடு பேசுவார்?"

", அவன் கடவுள் இல்லை என்று பேசும் போது உனது உள்ளத்திற்குள் என்ன தோன்றும்?"

"அதற்கு எதிர் மாறான கருத்துக்கள், அதாவது, கடவுளைப் பற்றிய கருத்துக்கள் தோன்றும். நான் அவற்றை அவனிடம் சொல்வேன்."

". இப்போது இயேசு உன் மூலம் அவனிடம் பேசுகிறார். கடவுளைப் பற்றி உன் மூலம் இயேசுவைப் பேசவைப்பது யார்?"

"நாத்திகன்."

",கடவுளைப் பற்றியே பேச வைப்பதும் ஒரு இறைப்பணி தானே. ஒரு நாத்திகனையே இறைபணி செய்யவைக்க இயேசுவால் முடியும்."

"அம்மா என்னைப் பார்த்து,

"கடைக்குப் போய்ட்டு வா, பாடத்தைப்படி, பேசாம தூங்கப் போ" என்றெல்லாம் சொல்வாங்க.

இதிலே இயேசுவின் குரல் எங்கே இருக்கிறது?"

", பேரப்புள்ள, பெற்றோரோ, ஆசிரியரோ உனக்கு வேலை கொடுக்கும் போது

பெரியவர்களுக்கு கீழ்ப்படிந்து நட என்ற இயேசுவின் குரல் உள் உள்ளத்தில் கேட்கும், அதாவது, எப்போதும் இயேசுவின் பிரசன்னத்தில் இருந்தால்.

நீ ஆண்டவரைப் பார்த்து மனதிற்குள்,

'இயேசுவே, உமக்காக இந்த வேலையைச் செய்கிறேன்' என்று சொல்லி விட்டு வேலையைச் செய்தால் அது ஆண்டவரது அருள் வரங்களை கொண்டுவரும் செபமாக மாறிவிடும்."

"அதாவது யார் பேசினாலும் ஆண்டவரும் பேசுவார். 

நமது எதிரி நம்மோடு சண்டைக்கு வரும்போது

 ஆண்டவர் நமது உள்ளத்திலிருந்து 

"எதிரியை நேசி. அவனோடு சண்டை போடாதே. அவனுக்காக வேண்டிக்கொள்." என்று நம்மிடம் சொல்வார்,

 அதாவது இயேசுவின் பிரசன்னத்தில் நாம் இருந்தால். சரியா?" 

", இப்போது புரிந்து கொண்டாய். இயேசுவின் பிரசன்னத்தில் நாம் வாழ்ந்தால்

எல்லோர் மூலமாகவும் இயேசு பேசுவார்."

"நாம் சாத்தானின் பிரசன்னத்தில் வாழ்ந்தால் எல்லோர் மூலமாகவும் சாத்தான் தான் பேசுவான்."

", ஒருவன் சாத்தானை மனதில் வைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனால்,

எல்லோரிடமும் சாமியார் பேசும்போது,

அவனுடைய உள்ளத்தில் இருந்து மட்டும் சாத்தான் பேசுவான்."

"கோவிலுக்கும் போய்விட்டு வந்து சாமியாரைத் திட்டுபவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான்."


", நாம் எப்போதும் இறைவன் பிரசன்னத்தில் வாழவேண்டும்.

வயலுக்கு அறுவடைக்குப் போனாலும் இயேசுவோடுதான் போக வேண்டும். வயல் வேலை எல்லாம் செபமாக மாறிவிடும்.

அலுவலகம் செல்லும்போதும்
இயேசுவோடு செல்ல வேண்டும். இயேசு நம்மோடு இருக்கும்போது வேலையை ஒழுங்காகச் செய்வோம்.

லஞ்சம் வாங்க மாட்டோம்

தவறு எதுவும் இல்லாமல் வேலையைச் செய்வோம்.

இயேசுவின் வழி நடத்துதலின்படி வேலையைச் செய்தால், வேலையும் செபமாக மாறிவிடும்."

" ஆனால் அரசியல்வாதி இயேசுவோடு வாழ முடியுமா?"

", நல்ல அரசியல்வாதிகளும் இருக்கிறார்களே!

அரசர்களே புனிதர்களாக இருக்கிறார்களே!

இயேசு நம்முள் இருப்பதுவும், நாம் அவரது சன்னிதானத்தில் வாழ்வதுதான் முக்கியம்.

இயேசுவோடு நாம் நமது எதிரியை பார்த்தால்,

அவன் நம்மைப் பார்த்து

"நீ என்னை நேசித்தால் இயேசுவையே நேசிக்கிறாய்,

எனக்கு நன்மை செய்தால் இயேசுவிற்கு சேவை செய்கிறாய்,

என்னை நீ மன்னித்தால் கடவுள் உன்னையும் மன்னிப்பார்"

 என்று சொல்லாமல் சொல்லுவான்.

இயேசு அவன் மூலமாகவும் நம்மோடு பேசுவார்."

"தாத்தா, இப்போது ஒன்று புரிகிறது."

", என்ன புரிகிறது?"

"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன."  

என்று இயேசு சொன்னதன் பொருள் புரிகிறது.

"என்னைப் பின்பற்றுபவர்களுக்கு நான் சொல்வது கேட்கும்."

இயேசு யார் மூலமாக பேசினாலும் அவரது சீடர்களுக்குக் கேட்கும்.

அவர் நமது மனதில் இருந்தால்
எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் அவரே வழி நடத்துவார்."

", எப்போதும் இயேசுவுடனே வாழ்வோம்."

லூர்து செல்வம்.