தந்தையோடு ஒரு உரையாடல்.
----------------------------------------------------
"இறைவா! என் இறைவா! நீர் எங்கே இருக்கிறீர்?
நான் கேளாத ஆளில்லை!
தேடாத இடமில்லை!
நீர்தான் என்னைப் படைத்தீர்.
நான் அறிவேன்.
நீரின்றி நான் இல்லை.
அதையும் நான் அறிவேன்.
நீர் எங்கும் இருக்கிறீர் .
அதையும் நான் அறிவேன்.
ஆனாலும், நீர் எங்கு இருக்கிறீர், என் கண்களுக்குப் புலப்படாமல்?
என் கண்ணில் பட்டால் குறைந்தா போய்விடுவீர்?
ஆண்டவரே! தந்தையே!
அடியேன்மீது பரிதாபப்பட்டாவது கொஞ்சம் போலாவது எனக்கு உம்மைக் காண்பியுமே!
உம்மிடம் கொஞ்சம் பேசணும்."
"ஹலோ!"
"ஹலோ! யாரு? "
"நீ இவ்வளவு நேரமும் யாரைக் கூப்பிட்டுக்கிட்டு இருந்த?"
"என்னோட விண்ணகத் தந்தையை."
"மகனே! நான்தாண்டா பேசறேன்."
"அப்பா! நீங்களா? எங்கேயிருந்து பேசறீங்க?"
"என்னை எங்கெல்லாமோ தேடினதா சொன்னிய, உன்னுடைய உள்ளத்தில தேடினியா?"
"மன்னிங்கப்பா! இடுப்புல பிள்ளைய வச்சிக்கிட்டு ஊரெல்லாம் தேடி அலைஞ்சாளாம்!
எனக்குத் தெரியும், உள்ளமெனும் கோவிலிலே உறைந்திடுவதே உமக்கு விருப்பம் என்று!
ஆண்டவரே! உம்மிடம் கேட்பதற்காக ஒரு ஆசையை ரொம்ப நாளா மனசுல வச்சிருக்கேன்."
"நான் இருக்கிற இடத்திலதான் உன் ஆசையையும் வச்சிருக்க.
அது என்ன என்று எனக்குத் தெரியாதா?"
"தந்தையே, நீர் சர்வ ஞானமுள்ளவர். உமக்குத் தெரியாதது எதுவுமில்லை.
ஆயினும் 'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்று உமது திருமகன் எங்களிடம் கூறியிருக்கிறாரே!
அக்கூற்றுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா?
என் ஆசை கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகக்கூட இருக்கலாம்.
இருந்தாலும் எங்களை எல்லாம் நீர் மக்களாக ஏற்றுக் கொண்ட தைரியத்தில்
பிள்ளைக்கு உரிய உரிமையோடு கேட்கத் துணிகிறேன்."
"இவ்வளவு முன்னுரை எதற்கு?
உன் ஆசை என்ன என்று எனக்குத் தெரியும்.
ஆனாலும் நீ மனம் திறந்து கேட்பதையே விரும்புகிறேன்."
"உமது திருமகன்
தனது விலை மதிப்பில்லா திரு இரத்தத்தை முழுதுமாகச் சிந்தி,
சிலுவை மரத்தில் மரித்து தன்னையே உமக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது,
எங்கள் முதல் பெற்றோரிடமிருந்து இவ்வுலகில் இறுதியில் பிறக்கவிருக்கும் கடைசிப் பிறைவி உட்பட,
வாழ்ந்த, வாழ்கின்ற, வாழவிருக்கும் அனைவருக்காகவும்,
அதாவது, மனுக்குலம் முழுவதற்காகவும்தான் என்று
எனக்குத் தெரியும்.
அதாவது, மனுக் குலத்தோரின் அனைத்துப் பாவங்களுக்கும் தன் பாடுகளால் பரிகாரம் செய்துவிட்டார்.
அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, உம்மை நோக்கி,
"பிதாவே, இவர்கள் அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்."
என்று வேண்டும்போது,
'இவர்கள்' என்ற வார்த்தையால்
மனுக்குலத்தொர் அனைவருடைய
மன்னிப்புக்காகவும்,
இரட்சிப்புக்காகவும்தான்
வேண்டினார் என உறுதியாக நம்புகிறேன்.
ஆண்டவரே, உமது திருமகன் சிந்திய இரத்தத்தில் ஒரு துளிகூட வீணாய்ப் போய்விடக்கூடாது.
இயேசு உம்மோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுள்.
ஆகவே மகனின் ஆசைதான் தந்தையின் ஆசை,பரிசுத்த ஆவியின் ஆசை.
அதாவது பிரிக்கமுடியாத ஒரே கடவுளின் ஆசை.
ஆகவே உமது ஆசையை நிறைவேற்றும்படி வேண்டுகிறேன்.
உமது திரு மகன் சொல்லித்தந்த செபமும் இதுவே.
'உமது சித்தம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல, பூலோகத்திலும் நிறைவேறுவதாக.'
ஆகவே அன்புத் தந்தையே,
மனுக்குலத்தோர் அனைவரையும்,
ஒரு ஆள்கூட பாக்கி இல்லாமல்,
நரக நிலையிலிருந்து காப்பாற்றும்.
"எல்லா மனிதரும் மீட்புப்பெறவும், உண்மையின் அறிவை அடைந்து கொள்ளவும் வேண்டும் என்பதே அவரது விருப்பம்."
"இவர் அனைவரின் மீட்புக்கு ஈடாகத் தம்மையே கையளித்தார்."
(1திமோத்.2:4,6)
இயேசுவின் ஆசையும்,
அதாவது கடவுளின் ஆசையும் இதுதான்
என்று புனித சின்னப்பரே கூறியிருக்கிறாரே!
ஆகவே தயவுகூர்ந்து மனுக்குலம் முழுவதையும் இரட்சியும் ஆண்டவரே!
நான் கேட்பதில் தப்பு எதுவும் இல்லையே?"
"மனுக்குலம் முழுவதையும் இரட்சிக்கவே என் மகன் தன்னையே பலியாக்கினார்.
நீ அது நிறைவேற வேண்டும் என வேண்டுகிறாய்.
உன் மன்றாட்டு கேட்ப்படும்.
மகிழ்ச்சியா?"
"நன்றி ஆண்டவரே.
இன்னும் ஒரு வேண்டுகோள்.
என் தாய் வயிற்றில் பிறந்த மூத்த சகோதரரும்,
சேசு சபைக் குருவானவருமான அருட்திரு G. மிக்கேல் பெர்க்மான்ஸ், S.J. அடிகளார்
உமது அடிசேர்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.
அவர் சர்வ சமய ஐக்கியப் பணிக்காக அயராது உழைத்தவர் என்று உமக்குத் தெரியும்.
வாழ்வின் இறுதிக்கட்டம் வரையிலும்
சர்வ சமயத்தவரும் இயேசுவை,
அறிந்து
அவர்பால் வந்தடைய அருந்தொண்டாற்றியவர்,
விளம்பரம் விரும்பா உண்மைத் துறவி,
உமது உறவன்றி வேறுறவை அறியாதவர்,
இயேசுவின் உடையன்றி (அங்கி)
வேறுடை அணியாதவர்,
எளிமையே உருவானவர்,
உமக்காகவே வாழ்ந்து,
உமதடி அடைந்தவர்.
அவரது ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருள,
இறைவா உமை வேண்டுகிறேன்."
"இம்மன்றாட்டும் கேட்கப்படுகிறது."
"நன்றி, தந்தையே."
மனுக்குலம் மழுவதும் இரட்சிக்கப்பட எல்லோரும் வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment