Friday, August 23, 2019

எவ்வளவு பெரிய தியாகிகள்!

எவ்வளவு பெரிய தியாகிகள்!
****    ****    ****    ****   ****

மண்ணில் இரும்பு,  சுண்ணாம்பு,  தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன.

மனித உடலிலும் இதே வளங்கள் உடலின் அளவுக்கு ஏற்றபடி உள்ளன.

நமது உடல் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதற்கு இதுவே சான்று.

நமது உடல் பூமியின் ஒரு பகுதிதான்.

Our body  is part of the earth.

நாம் வாழும் இந்த பூமிக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு.

ஒருநாள் வரும், அப்போது இந்த உலகம் இருக்காது.

அப்படியானால் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடலும் இருக்காது.

ஆனால் நாம் இருப்போம்!

(உலக முடிவில் நமக்கு ஒரு உடல் தரப்படும்.

ஆனால் அது இப்போது உள்ள சடப்பொருள் உடலாக இருக்காது.

அது ஒரு ஆன்மீக உடலாய் இருக்கும்.

(We will get a spiritual body, not a material body)

அதெப்படி, உலகம் இருக்காது, அதைச் சேர்ந்த உடலும் இருக்காது?

நாம் எப்படி இருப்போம்?

முதலில் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

'நாம்' என்பது நமது ஆன்மா.

உடல் நமது உடல்.

நாம் ஆகிய ஆன்மாவுக்கு துவக்கம் உண்டு, முடிவு இல்லை.

அதாவது  ஆன்மா சாகாது.
Soul is immortal.

கடவுள் நமது ஆன்மாவை தன் சாயலில் படைத்து, நம் தாயின் வயிற்றில் உருவான நமது உடலோடு இணைத்தார்.

உடல் நம் தாயின் வயிற்றில் உருவாக வேண்டும் என்பதும்,

ஆன்மா நேரடியாகப் படைக்கப்பட வேண்டும் என்பதும் கடவுளின் திட்டம்.

அழியாத நம்மிடம் அழியக்கூடிய நம் உடலை நமது பயன்பாட்டிற்காக இறைவன் தந்துள்ளார்.

நாம் பெரிய தியாகிகள்!!!

நாட்டை ஆளும் ஒரு அரசரும், காட்டில் தவம் புரியும் சந்நியாசியும் சந்திக்க நேர்ந்தது.

அரசர் சொன்னார்,

"சுவாமி,
தங்கள்  தவ வாழ்வுக்காக இவ்வுலக இன்பத்தை எல்லாம் தியாகம் செய்து காட்டில் வாழும் தாங்கள் பெரிய தியாகி! "

சந்நியாசி சொன்னார்,

"மன்னா, நீங்கள்தான் என்னை விட பெரிய தியாகி."

"அது எப்படி? நீங்கள்  இவ்வுலக இன்பத்தை எல்லாம் தியாகம் செய்திருக்கிறீகள்.

நானோ இவ்வுலக இன்பத்தை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் அதை எல்லாம் துறந்து
துறவியாக வாழ்கிறீர்கள்.

நான் எப்படி உங்களைவிட பெரிய தியாகியாக முடியும்?"

"அரசே,  உங்களை மறுப்பதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.

ஆனால் உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

நான் முடிவில்லா பேரின்பத்தை அடைய, அழியக்கூடிய சிற்றின்பத்தைத் தியாகம் செய்திருக்கிறேன்.

ஆனால் நீங்களோ அழியக்கூடிய சிற்றின்பத்தை அனுபவிக்க, அழியாத பேரின்பத்தைத் தியாகம் செய்திருக்கிறீர்கள்.

1000ரூபாயைத் தியாகம் செய்பவனைவிட 1,00,000 ரூபாயைத் தியாகம் செய்பவன்தான் பெரிய தியாகி.

நான் சிற்றின்பத்தை தியாகம் செய்திருக்கிறேன்.

நீங்கள் பேரின்பதைத் தியாகம்
செய்திருக்கிறீர்கள்.

அப்போ யார் பெரிய தியாகி?"

சந்நியாசி தன்னைக் கிண்டல் செய்கிறார் என்று அரசருக்குத் தெரியும். 

ஆனாலும் வேறு வழி இன்றி சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

அந்த அரசரைக் கண்டு நம்மால் சிரிக்க முடியாது, ஏனெனில் நாமே அநேக சமயங்களில் பெரிய தியாகிகளாக மாறிவிடுகிறோம்.

ஞாயிற்றுக் கிழமை காலையில் நமது உடல் கால்ணி நேரம் தூங்க ஆசைப்படுகிறது.

உடலின் அற்ப ஆசையை நிறைவேற்றுவதற்காக  ஆண்டவரின் திருப்பலியையே தியாகம் செய்து விடுகிறோம்.

அன்றைக்கு நாம்தானே பெரிய தியாகி!

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நினைத்துப் பார்ப்போம்.

நாம் ஆகிய ஆன்மா

தனக்குத் தரப்பட்டுள்ள உடலைக் கருவியாகப் பயன்படுத்தி

நித்திய காலமும் இறைவனோடு இணைந்து வாழத்

தன்னைத் தயாரிக்க வேண்டும் என்பதே இறைவனின் திட்டம்.

ஆகவே அடிப்படையில் ஆன்மா இறைவனை ஏற்று அவருக்காக வாழ்வதும்,

தனக்காக, அதாவது, தன் நிலை வாழ்வுக்காக வாழ்வதும்

ஒன்றுதான்.

அநேக ஆன்மாக்கள் தங்கள் நிலைவாழ்வுக்குத் தயாரிப்பதற்கு உடல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக,

தங்கள் உடல்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக,

தங்களையும், தங்களைப் படைத்த கடவுளையும் தியாகம் செய்துவிடுகின்றன!

எவ்வளவு பெரிய தியாகிகள்!!!!

பூசையின்போது சாமியார் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்.

உடல் சொல்கிறது,

"ஹலோ! ஆன்மா,  எனக்கு ஒரு கப் காபி வேண்டும்."

ஆன்மா உடலை நோக்கி,

"இதோ உன் அடிமை.

சாமியார் பிரசங்கத்தில் இறை வார்த்தையை விளக்கப் போகிறார்.

எனக்கு  இறைவனை விட, அவரது வார்த்தையை விட நீதான் முக்கியம்.

வா, போவோம், காபியுடன் வடையும் வாங்கித் தருகிறேன்."

ஒரு கப் காபிக்காக இறை வார்த்தையையே தியாகம் செய்யும் ஆன்மா எவ்வளவு பெரிய தியாகி!!!

அப்பா இரவு சொல்வதற்காகக் குடும்பத்தினரை அழைக்கிறார்.

ஒரு பையனுடைய உடல்,

"Mr.ஆன்மா, எனக்குத் தூக்கம் வருகிறது. உனக்கு நான் முக்கியமா? செபம் முக்கியமா?"

"எனக்கு நீதான் முக்கியம்.ஆண்டவரோடு பேசுவதுதான் செபம் என்பார்கள்.

அதைவிட உன்னைத் திருப்திப்படுத்துவதுதான் எனக்கு முக்கியம்!"

ஒரு பத்து நிமிடம் முந்தி தூங்குவதற்காக நாம் இறைவனோடு பேசுவதையே தியாகம் செய்திருக்கிறோம்!

இதே போன்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இறைவனுக்காக ஒரு சிறிய புளியங்கொட்டையைத் தியாகம் செய்தால்கூட

விண்ணகத்தில் நித்திய பேரின்பம் காத்திருக்கும்.

ஆனால் அற்ப உடல் திருப்திகாக விண்ணகத் தந்தையையே தியாகம்  செய்தால்  நமக்கு என்ன கிடைக்கும்?

சிந்திப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment