Thursday, August 29, 2019

நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்.

நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்.
--------       -------      ----------       ------

என்னடா இவன் ஒண்ணும் சொல்லாமலே 'சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்'னு சொல்றானே'ன்னு  நினைக்கிறீங்களா?

நினையுங்க, தப்பே இல்லை.

உங்களுக்குப் பிடிக்காததைத்தான் சொல்லப்போறேன்.

ஒருவன் வாய் கிழிய 'கத்தி',

'கத்தி' வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தான்.

அதன் பயன்பாடு  கருதி நானும் ஒன்று வாங்கினேன்.

வீட்டுக்குக் கொண்டுவந்து மனைவியிடம் கொடுத்தேன்.

புதிய கத்தி.

வாங்கி சமையல் அறையில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாள்.

என் மகன்,  பொடியன், ஓடிவந்தான்.

"என்னடா, விளையாடி முடிச்சாச்சா?"

"இல்லப்பா. நீங்க எதையோ அம்மாட்ட கொடுத்தீங்க, அவங்க உள்ளே கொண்டுபோய் வச்சாங்களே, என்னப்பா அது? "

"அது உனக்குச் சம்பந்தம் இல்லாதது. சமையல் வேலைக்கு உரியது. நீ போய் விளையாடு."

"அது எப்படி எனக்குச் சம்பந்தம் இல்லாமல் போகும்?

எனக்குச் சாப்பாடு இரும்புக் கடையிலிருந்தா வருகிறது?

புதுக் கத்தி, நல்லா தெல்லாங்குச்சி சீவும்."

சொல்லிக் கொண்டே ஓடிவிட்டான்.

மறுநாள் லீவு நாள். நான் ஒரு வேலையா தென்காசிக்குப் போய்விட்டு வந்தால், வீடு பூட்டியிருக்கு.

பக்கத்து வீட்டில் விசாரித்தேன்.

அம்மாவும் பையனும் மருத்துவ மனைக்குப் போயிருக்காங்க.

மருத்துவ மனைக்குப் போனேன்.

பையன் கட்டிலில் கையில் கட்டுடன் படுத்திருந்தான்.

"என்னடி ஆச்சி?"

"நீங்க எதுக்காகப் புதுக்கத்தி வாங்கிட்டு வந்தீங்க? நான் கேட்டேனா? "

"பையனுக்கு என்னாச்சின்னு கேட்டா கத்தியைப்பற்றி பேசற?"

"எனக்குத் தெரியாம சமையலறைக்குள்ள போய் கத்தியை எடுத்திட்டுப்போய் தெல்லாங்குச்சி சீவியிருக்கான்.

கையில் கத்திபட்டு பயங்கர ரத்தம்.

கடவுள் அருளால விரல் போகல. உடனே இங்கே கூட்டிவந்து விட்டேன்."

"இனிமே கத்தியத் தொடமாட்டேம்பா.   மன்னிச்சிடுங்கப்பா."

இப்ப எதுக்கு இந்தச் சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம்?

அனுபவத்திலிருந்து பாடம் கற்கணுங்க.

கத்தி நல்லதுதான். ரொம்ப நல்லது. அது இல்லாம காய்கறி வெட்டமுடியாது.

காய்கறி வெட்டாம சாம்பார் வைக்கமுடியாது.

ஆனால் நல்லது என்கிறதுக்காகப் பயன்படுத்தத் தெரியாதவங்க கையிலெல்லாம் கத்தியைக் கொடுத்தால் என்னாகும்?

டாக்டர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

பைபிள் இறைவனின் வார்த்தை.

எல்லோரும் அறிந்து,

பின்பற்றி,

வாழ்ந்து,

மீட்புப் பெறுவதற்காக

இறைவன் தந்த வார்த்தை.

வார்த்தையை அறியவேண்டும்.

அறிந்ததை நமது வாழ்வாக்க வேண்டும்.

அதன் மூலமாக மீட்புப் பெறவேண்டும்.

ஆனால் பைபிளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்களெல்லாம்

அதைக் கையில்   எடுத்ததன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சிலர்

பைபிளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,

தாய்த்திருச்சபையை விட்டு பிரிந்து சென்று,
,
பைபிள் வசனங்களுக்கு அவரவர் இஸ்டப்படி அர்த்தம் கொடுத்துக்கொண்டு,

சமாதானத்தின் தேவனையே சண்டைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோமே!

தங்கள் எதிர் எதிரான கருத்துக்களுக்கு ஆதரவாக

ஒரே பைபிளைப் பயன்டுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக
இல்லை!

நாம் =  கத்தோலிக்க திருச்சபை.

அவர்கள் =  பிரிந்து சென்றோரில் சிலர்.

பைபிளை ஆதாரமாக வைத்துக்கொண்டு

1.நாம் இறை மகன் நித்தியர்னு சொல்லுகிறோம்.

அவர்கள் மகனுக்குத் துவக்கம் உண்டு என்கிறார்கள்.

2. நாம் கன்னி மரியாளை இறைவனின் தாய் என்கிறோம்.

அவர்கள் இல்லை என்கிறார்கள்

3.நாம் மாதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அவர்கள் மாதா பெயரைச் சொன்னாலே  மூஞ்சைத் தூக்குககிறாகள்.

4. நாம் திவ்ய நற்கருணையில் உண்மையிலேயே இயேசு இருக்கிறார் என்கிறோம்.

அவர்கள் அது  வெறும் அடையாளம என்கிறார்கள்.

5.நாம் பாவசங்கீர்த்தனம் வேண்டும் என்கிறோம்.

அவர்கள் கடவுளோடு நேரடியாகவே பேசிக்கொள்வோம் என்கிறார்கள்.

6.நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

அவர்கள் இல்லை என்கிறார்கள்.

பட்டியலை நீட்டினால் உலகத்தின் சுற்றளவைத்தாண்டும்.

பிரிவினை   சபையினரே

ஒரே பைபிளை அவர்கள் விருப்பத்திற்கு மொழி பெயர்த்து  வைத்துக் கொண்டு,

சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.

காணிக்கை வசூலிப்பதில்!

அவர்கள் பைபிளும் கையுமாக அலைவதைப் பார்த்து,

நம்மவர்களும் பைபிளும் கையுமாக திவ்யபலி பூசைக்கு வருபவர்கள்தான் நல்ல கிறிஸ்தவர்கள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதைச் சொல்லும்போது அநேகருக்கு என் மேல் கோபம் வரும்.

அதனால்தான் முதலிலேயே
"நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்."
என்று சொல்லி ஆரம்பிச்சேன்.

'கோவிலுக்கு பைபிள் கொண்டுவரக்கூடாது' என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஆனால் திவ்ய பலி பூசையில் நமது பங்கு என்ன என்று யார் வேண்டுமானாலும் கூறலாம்.

திவ்ய பலி பூசையை நாம் 'குருவோடு சேர்ந்து ' கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

அதாவது திருப்பலி நிகழ்ச்சிகளில் நாம் குருவோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

குரு செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமது கண்ணும் கருத்தும் ஒன்றிக்க வேண்டும்.

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் நமது காதும்,
கருத்தும் ஒன்றிக்க வேண்டும்.

அவர் பைபிளிலிருந்து வாசிக்கும்போது நாம் கூர்ந்து கேட்கவேண்டும்.

அவர் நற்செய்தியை பிரசங்கத்தில் விளக்கும்போது காது கொடுத்து கேட்கவேண்டும்.

திருப்பலியின்போது குருவானவர்தான் கிறிஸ்து.

கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்திருக்க வேண்டும்

பைபிள் என்ற புத்தகத்தில் இருப்பது இறைவார்த்தையின் அடையாளங்கள்.

ஆனால் கிறிஸ்துவின் வாயிலிருந்து வருவது உண்மையான இறை வார்த்தை.

குருவானவரில் கிறிஸ்துவைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

'இது என் சரீரம்.'

'இது என் இரத்தம்.'

இவ்வசீகர வார்த்தைகளில் 'என்' எனப்படுவது யார்?

குருவானவரா?

இல்லை.

அவருக்குள் இருந்து செயல்படும் கிறிஸ்து!

கிறிஸ்து பேசும் இடத்தில் புத்தகத்துக்கு என்ன வேலை?

சிலர் பூசை நேரத்தில் பீடத்தில் கண்வைக்காமல்,

அதாவது குருவோடு ஒன்றிக்காமல்

கையிலுள்ள பைபிளை புரட்டிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் பலியோடு எப்படி ஒன்றிக்க முடியும்?

பூசைக்கு வெளியே எங்கு வேண்டுமென்றாலும் பைபிளைக் கையில் வைத்திருக்கலாம், வாசிக்கலாம்.

ஆளுக்கொரு பைபிள் வைத்திருக்கலாம், நல்லது.

ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தினால்

பொடியன் கையில் கிடைத்த கத்தி மாதிரிதான்.

நமது குருக்கள் வருடக்கணக்காய்க் குருமடத்தில் பைபிளை வாசிக்கவும், பொருள் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள்.

நாம் எழுத வாசிக்கத் தெரியும் ஒரே தைரியத்தில்

பைபிளை வாசித்து,

அதற்கு நமக்குத் தோன்றுகிற பொருளைக் கொடுத்து

அதன்படி வாழ்ந்தால்

விளைவு எப்படி  இருக்கும்?

பொடியன் கத்தியால் பட்ட பாடுபோல் இருக்கும்!

நண்பர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் பிந்தி வந்தார்.

கடைசி ஆசீர்வாதத்திற்கு உள்ளே வந்து,

'சென்று வாருங்கள்' என்று சொன்னவுடனே வெளியே வந்துவிட்டார்.

"ஏன் பூசைக்கு லேட்? அப்படி என்ன அவசர வேலை? "ன்னு கேட்டேன்.

"இன்று காலையில் வாசித்த பைபிள் பகுதியிலிருந்து ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்.

ஒரு திராட்சைத் தோட்ட

முதலாளி  வேலைக்கு வந்தவர்களுக்கு

கடைசியானோர் முதல்
முதலானோர் வரை ஒரே சம்பளம் கொடுத்த உவமையை நீ வாசித்திருக்கிறாயா?

நான் காலையில் வாசித்தேன்.

அதன்டி நம் இருவருக்கும் ஒரே பலன்தான்.

அது மட்டுமல்ல நான்தான் முதலானவன்!

"கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"

என்று ஆண்டவரே கூறியிருக்கிறாரே! "

இவனைப் பொறுத்தமட்டில் பைபிள் பொடியன் கையில் கிடைத்த கத்தி!

ஒரு பையனிடம்,

"தியான முடிவில் பாவசங்கீத்தனம் செய்தாயா?" என்று கேட்டேன்.

அவன்,

"இயேசு பாவசங்கீத்தனம் கேட்டதா பைபிளில் இருக்கா சார்?

இராயப்பர் இயேசுவை மறுதலித்து எவ்வளவு பெரிய பாவம் செய்தார்!

அழுததோடு சரி. பாவசங்கீத்தனம் செய்ததா பைபிளில் இருக்கா சார்?

நானும் அழுதேன். அது போதும்.

பைபிள்தான் இறைவார்த்தை, அதில இல்லாதத ஏன் சார் செய்யச் சொல்றாங்க? "

இவனைப் பொறுத்தமட்டிலும் பைபிள் பொடியன் கையில் கிடைத்த கத்தி!

என்னுடைய அம்மாவுக்கு ஆனா ஆவன்னா தெரியாது.

பைபிளத் தொட்டுப்பார்த்ததுகூட கிடையாது.

வாரத்திற்கு ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை பாவசங்கீத்தனம் செய்வாங்க.

இப்போதுள்ள பைபிள் கிறிஸ்தவர்களை விட

அந்தக்காலத்து படிப்பறிவில்லா கிறிஸ்தவர்கள்

எவ்வளவோ மேல்!

பைபிள்  வைத்திருப்பவர்களுக்கு அதைச் சரியாக வாசிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.

மக்கள் ஒழுங்காகப் பூசைக்கு வந்து

பூசையில் வாசிக்கப்படுன்ற வாசகங்களையும், 

அவற்றுக்குச் சாமியார் பிரசங்கத்தில் கொடுக்கிற விளக்கங்களையும்

ஒழுங்காகக் கவனித்துக் கேட்டாலே நல்ல பயிற்சி கிடைக்கும்.

மேலும் பைபிளைக் கொடுக்கும்போது

அதற்கான விளக்க நூல்களையும் சேர்த்துக் கொடுத்தால்

வாசிப்பவர்கள் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும்.

பொடியன் கையில் அகப்பட்ட கத்தியைப்போல்

பைபிள் ஆகாமல் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்டவர்களின் கடமை.

திரும்பவும் சொல்கிறேன்,

நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment