Monday, August 19, 2019

தத்துவங்கள் மூன்று.

தத்துவங்கள் மூன்று.
***   ***   ***    ***   ***   ***   ***

"தாத்தா, உங்க வகுப்பில பையங்களுக்கு Psychological test வச்சதா சொன்னீங்கள்லா, எனக்கு ஒரு test வையுங்களேன்."

" 'ம்' கடைசிஎழுத்து,   ஒருவார்த்தையைச் சட்டுன்னு சோல்லு."

"முடியும்."

"Very good. நீ தன்னம்பிக்கை உள்ளவன்."

"அதெப்படி, தாத்தா, கண்டுபிடிக்க முடியும்?

'முடியும்'ங்கிற வார்த்தைக்கே இரண்டு அர்த்தம் இருக்கே!

Can,  will come to an end.

நான் எந்த அர்த்தத்தில சொன்னேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அதனால்தான்  Very good ன்னு சொன்னேன்.

எந்த காரியத்தையும் செய்து 'முடிக்க' உன்னால் 'முடியும்! "

"தாத்தா, நீங்க கதை விடுறீங்க.

நான் யோசிக்காமல் வாயில வந்த வார்த்தையை அப்படியே சொன்னேன்.

அது எப்படி நான் எப்படிப் பட்டவன் என்பதை வெளிப்படுத்தும்?"

"உண்மை உடனே வெளிவரும்.

பொய் தயங்கித் தயங்கிதான் வெளிவரும்.

மனதில் உள்ளதுதான் வாய் வழியே வெளியே வரும்.

ஒருவன் பேசுகின்ற வார்த்தைகளை வைத்தே அவன் எப்படிப் பட்டவன் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

சட்டியில் இருப்பதுதானே கரண்டியில் வரும்!"

"தாத்தா, அகப்பையை கரண்டியாக மாற்றிவிட்டீர்கள்!"

"சமயலறையில் இருப்பதுதான் பழமொழியிலும் வரும்!"

"உங்கள் கூற்றுப்படி மனதில் உள்ளதுதான் வார்த்தையாக வெளிவரும்.

அது உண்மையானால் நமது அரசியல்வாதிகளுக்கு உயிரோடு இருக்கும்போதே புனிதர்பட்டம் கொடுத்து விடலாமே!"

..."நான் இயல்பாகவாழ்பவர்களைப் பற்றி பேசுகிறேன்,

நடிகர்களைப் பற்றி பேசவில்லை.

சாத்தான் ஏவாளை ஏமாற்ற எப்படி நடித்தான்!

அவனையும் மிஞ்சிவிட்டார்கள் நமது அரசியல்வாதிகள்!

போகட்டும். அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் நமது வாயைச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டியிருக்கும்! "

"பிறகு அந்த சோப்பையும் டெட்டால் போட்டுக் கழுவ
வேண்டியிருக்கும்.

நமக்கு அதுவா வேலை.

தாத்தா, இந்த வார்த்தை 'டெக்னிக்' போக வேற எதாவது
டெக்னிக்  இருக்கா நம்மைப் பற்றி அறிய?"

..."மனோத்துவப்படி (Psychology)
நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இயக்குவது நமது  மனதுதான்.

சரியாக வேலையை முடிக்காதவனிடம் போய்,

'ஏண்டா வேலை சரி இல்லை?"

என்று கேட்டால்,

'மனசு சரி இல்லை' என்பான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

அகம் என்றால் மனசு.

நமது மனதில் நாம் நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகிறோமோ அவைதான் நாம்.

நமது  மனதை, அதாவது நம்மை,
நமது முகம் பிரதிபலிக்கும்.

உதாரணத்திற்கு,

நீ வெளியே சென்று விட்டு வீட்டிற்குத் திரும்புகிறாய்.

உனது அறைக்குள் நுழையும்போது உன் மேசை மேல் ஒரு இலட்சம் ரூபாய்க் கட்டு ஒன்று கிடக்கிறது.

அக்கட்டின்மீது உனது பார்வை படும்போது உனது முகத்தில் தோன்றும் மாற்றங்களை வைத்து

நீ பணத்திற்கு அடிமையானவனா,

பணத்தைப் பற்றிக் கவலைப்படாதவனா

என்பதைக் கண்டுகொள்ளலாம்."

"அது உண்மைதான், தாத்தா.

"நல்லவன் தன் உள்ளமாகிய நற்கருவூலத்தினின்று நல்லவற்றை எடுத்துக்கொடுக்கிறான்.

தீயவனோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக்கொடுக்கிறான்.

ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்."(லூக்.6:45)

என்று நம் ஆண்டவரே சொல்லியிருக்கிறாரே!"

..."Very good.  நீ உடனே ஆண்டவருடைய வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது உன் உள்ளத்திலிருந்து ஆண்டவர் செயலாற்றுகிறார் என்பதற்கு அறிகுறி.

மனிதன் பாவம் செய்தபோது இறைவனோடு அவன் கொண்டிருந்த சமாதானத்தை முறித்துக் கொண்டான்.

ஆனால் கடவுள் மனிதனோடு கொண்டிருந்த உறவை முறித்துக் கொள்ளவில்லை.

ஆகவே மனிதன் முறித்த சமாதான உறவை மீண்டும் ஏற்படுத்த கடவுளே மனிதனைத் தேடிவருகிறார்.

'பாவிகளையே அழைக்க வந்தேன்' (மத்.9:13)

'பாவிகளை மீட்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார்.' (1.திமோத்.1:15)

கடவுள் மனிதனாகப் பிறந்த அன்று,

வானதூதர்கள் மூலம் அவர் நமக்கு அறிவித்த நற்செய்தி,

'நல்ல மனது உள்ளவர்களுக்குச்
சமாதானம் உண்டாகுக.'

அதாவது, நல்ல மனது உள்ளவர்களுக்கு மட்டுமே இறைவனுடைய சமாதானம்,

அதாவது இரட்சண்யம் கிடைக்கும்."

"ஏன் தாத்தா, நல்ல மனது மட்டும் இருந்தால் போதுமா?

நற்செயல் வேண்டாமா?"

..."முக்கிமான அறிவிப்புகள் எல்லோருக்கும் பொருந்துவனவாக இருக்க வேண்டும்.

உடல் நலமின்றி, படுத்த படுக்கையாய், செயல்புரிய இயலாதவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கட்கு நற்செயல் புரிய நல்ல மனது இருந்தால் போதுமே!

நீ படித்துக் கொண்டிருக்கிறாய்.
உனது சக மாணவனுக்கு பணக்கஸ்டம்.

அவனுக்கு உதவி செய்ய உன்னால் இயலாது.

குறைந்தபட்சம் உதவி செய்ய மனம் இருக்கவேண்டும் அல்லவா?

சுகமில்லாதவனுக்கு மருத்துவம் பார்க்க நீ டாக்டர் இல்லை.

நல்ல மனதிருந்தால் குறைந்தபட்சம் அவனுக்கு ஆறுதலாவது கூறலாம் அல்லவா?

ஆண்டவர் நாம் பின் பற்ற வேண்டிய முக்கிய கட்டளைகளைக் கூறும்போது,

'இறைவனை நேசி, உன்னைப்போல் உன் அயலானையும் நேசி' என்றுதான் சொன்னார்.

நேசம் இருந்தால் செயல் தானாக வந்துவிடும்.

உடல் நிலை காரணமாக செயலாற்ற முடியாவிட்டால்,

குறைந்தபட்சம் மனதில் செபமாவது செய்யலாமே!

உனக்கு ஒன்று தெரியுமா?

புனித சவேரியார் உலகம்பூராவும் சுற்றி வந்து ஆற்றிய மறைபரப்புப் பணியை

புனித சிறுமலர்த் தெரெசா தன் மடத்தில் இருந்தவாறே தன் செபத்தினால் சாதித்துவிட்டாள்!

சவேரியாரைப் போலவே தெரெசாவையும்

மறை பரப்பு நாடுகளுக்கும், மறை பரப்புவோருக்கும் (Mission countries and missionaries)

காவலியாக திருச்சபை நியமித்துள்து!"

"ஆண்டவரே

'தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்,

ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.'

என்று கூறியுள்ளாரே!

இரட்சண்யம் அடைபவர்தான் கடவுளைக் காணமுடியும்.

ஆகவே இரட்சண்ய பாதையில் ஆரம்பமுதல் முழுவதும் நம்முடன் வரவேண்டியது தூய உள்ளம்தானே!"

..."ஒருவன் எத்தகைய மனத்துடன் ஒரு பொருளைப் பார்க்கிறானோ

அதற்கேற்றபடிதான் அப்பொருளைக் காண்பான்."

"தாத்தா, விளங்கும்படியா சொல்லுங்க."

..."இந்த பொம்மையைப் பார். இதைப் பார்த்தவுடன் யாராவது ஞாபகத்திற்கு வருகின்றார்களா?"

"அதெப்படி ஞாபகத்திற்கு வராமல் இருக்க முடியும்?

நான் சின்னப் பையனாக இருக்கும்போது பாட்டி வாங்கித் தந்த பொம்மையாச்சே! 

பாட்டியை மறக்க முடியுமா? "

..."புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு எந்தப் பொருளைப் பார்த்தாலும் கடவுள் ஞாபகத்துக்கு வருவார்.

எந்தப் பொருளிலும் அவர் கடவுளைத்தான் பார்ப்பார்.

ஏன்?"

"ஏனெனில் அவர் உள்ளத்தில் கடவுள் மட்டும்தான் இருந்தார்.

மற்ற யாவரும் கடவுளுக்குள் இருந்தார்கள்.

ஆகவே படைக்கப்பட்ட எல்லாவற்றையும்  கடவுள் வழியேதான்(Through the medium of God.) பார்த்தார்.

ஆகவே படைப்புகள் அனைத்தையும் கடவுளில், கடவுளோடு, கடவுளுக்காக நேசித்தார்.

அதாவது நீங்கள் கூறிய வார்த்தைகளின்படி

'அவர் கடவுள் நிறைந்த மன நிலையோடு  எல்லா பொருட்களையும் பார்த்ததால்

எல்லா பொருட்களும் கடவுளையே பிரதிபலித்தன."

..."Super! ஆகவே கடவுளுக்கு உகந்த பிள்ளையாய் வாழ என்ன செய்ய வேண்டும்?

"மனதை கடவுளால் நிரப்ப வேண்டும்."

..."நமது உள்ளம் இறைவனால்
நிறைந்திருந்தால்

அது அன்பினால் நிறைந்திருக்கும்..

"அன்பு பொறுமையுள்ளது,

பரிவுள்ளது.

அன்பு அழுக்காறு கொள்ளாது.

பெருமை பேசாது,

இறுமாப்பு அடையாது,

இழிவானதைச் செய்யாது,

தன்னலத்தைத் தேடாது,

சீற்றத்திற்கு இடந்தராது,

வர்மம் வைக்காது.


அநீதியைக் கண்டு மகிழ்வுறாது:

உண்மையைக் கண்டு உளம் மகிழும்.


அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்:

பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை:

நம்பிக்கையில் தளர்வதில்லை:

அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்,


அன்புக்கு என்றும் முடிவு இராது: "
(1கொரிந். 13:4-8)

அன்பால் நிறைந்தவன் உலகத்திலுள்ள அத்தனை மக்களையும் நேசிப்பான்."

"தாத்தா, நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.

ஆனால் நாம் இப்போது மனதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அன்பு இதயத்தின் வேலை!"

..."ஏண்டா, வயிறு பசித்தால் சோற்றை எங்கே போடுவ?"

"வாயில."

..."வயிறு பசித்தால் சோற்றை வயிற்றிலதான போடணும்?

எதற்காக வாயில போடுத?"

"தாத்தாவுக்கு இது கூட தெரியல.

வாயில போட்டால்தான், தாத்தா, சோறு வயிற்றுக்குள் போகும்.

வயிற்றின்மேல் போட்டால் அது மண்ணுலதான் விழும்! "

..."அதேபோல் மனதில் இருந்துதான் நேசிக்கப்பட வேண்டிய பொருள் இருதயத்துக்குப் போகும்.

இங்கே பார்.

மனிதனை மனிதனாகச் செயல்பட வைப்பது இறைவனால் அவனுக்கு அருளப்பட்ட மூன்று தத்துவங்கள்.

1.புத்தி.(Intellect.)

2.மனது, (Mind)

3.இருதயம்.(Heart. )

புத்தி அறிகிறது.

அறிவு மனதில் சேமிக்கப் படுகிறது.

மனதில் உள்ளதை இருதயம் நேசிக்கிறது.

இந்த மூன்று தத்துவங்களும் சௌக்கியமாக இருந்தால்தான் மனிதன் சௌக்கியமாக இருப்பான்."

"இப்போ புரிகிறது.

நான் Test வைக்கச் சொன்னேன்.

நீங்க பாடமே நடத்திட்டீங்க."

..."இப்போ நடத்தின பாடத்தில ஒரு Test வைக்கட்டுமா?"

"You are my தாத்தா, not my teacher,  understand?"

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment