Sunday, August 11, 2019

"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது." (மத்.25:13)

"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது." (மத்.25:13)
----------   ------------   ---------- ------- ------

"அம்மா, எங்க இருக்கீங்க?"

"அப்படியே மெதுவா நடந்து சமயலறைக்கு வா."

"ஏம்மா மெதுவா நடந்து  வரச் சொன்னீங்க? "

"'வா'ன்னு சொன்னா எப்படி வந்திருப்ப?"

"ஓடி வந்திருப்பேன்."

"அதனாலதான் நடந்து  வரச் சொன்னேன்.இப்ப நடந்து வந்ததுல என்ன பிரச்சனை?"

"பிரச்சனையே அதுதான்.

இரண்டு மணி நேரத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலையை

மெதுவாக பத்து மணி நேரமாகச் செய் என்று சொன்னால் பிரச்சனை இல்லையா?"

..."20,000 ரூபாய் செலவில் மூன்று நாளில்  முடியக்கூடிய வேலையைச் செய்து முடிக்க

40,000 ரூபாய் கொடுத்து, 'வேலையை முடிக்க 6 நாள் எடுத்துக்கொள்' என்றால்

  'வேண்டாம், பிரச்சனை,' என்று சொல்வாயா? "

"சொல்ல மாட்டேன்.

வேலையை ஆற அமர நல்ல முறையில் செய்து முடிப்பேன்."

..."ஏண்டா, இரண்டு மணி நேர வேலையைப் பத்து மணி நேரம் செய்யமாட்ட.

ஆனால், மூன்று நாள் வேலையை ஆறு நாள்ல செய்வ.

எங்கோ இடிக்குத!"

"ஒரு பக்கமும் இடிக்கல.

பணம் அதிகம் கொடுத்தா யார் வேண்டாம்னு சொல்லுவா?"

"ஏண்டா, பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வியா?

அது ரொம்ப தப்புடா. "

"ஏம்மா, இது உங்களுக்கே நல்லா இருக்கா?

நான் கேட்டது ஒரே ஒரு கேள்வி,  'நான் ஏன் ஓடி வராம நடந்து வரணும்?'

இதுக்கு நேரடியா பதில் சொல்றத விட்டுட்டு ...."

"சரி, சொல்லிவிடுகிறேன்.
Tiles தரை, ஓடி வந்தா வழுக்கும்.

வழுக்கி கீழே விழுந்தால் என்ன ஆகும்?

அதனாலதான் 'மெதுவா நடந்து வா'ன்னு சொன்னேன்.

போதுமா?"

"ஏம்மா, எத்தனையோ தடவை வேகமா ஓடி வந்திருக்கேன், ஒரு தடவையாவது கீழே விழலிய!

இப்ப மட்டும் விழுந்திடுவனா?"

"நீ சொல்றது,

'நான் 70 வருசம் வாழ்ந்து விட்டேன், இதுவரை சாவே வரல, இனிம வரவா போகுது?'ன்னு
சொல்றது மாதிரி இருக்கு."

"ஏம்மா ஒரு நல்ல உதாரணமா சொல்லக் கூடாதா?"

"ஏண்டா,  சாவு மோசமான உதாரணமா?

பள்ளிக்கூடத்தில சேர்வதே படிச்சி முடிக்கத்தானடா?

படிச்சி முடிக்கது மோசமான காரியமா?

பிறக்கிறதே சாகிறதுக்காகத்தான், அத முதல புரிஞ்சிக்கோ.

சாவு நல்லதா? கெட்டதா?  பதில் சொல்லு."

"ஒரு நல்ல கேள்வியா கேட்கக்கூடாதா?

அது நல்லதா, கெட்டதான்னு எனக்குத் தெரியாது, யாரும் சாக விரும்ப மாட்டாங்க."

"பிறப்பும் இறப்பும் நாம் விருப்பப்பட்டு வருபவை அல்ல.

அதைத் தீர்மானிக்கிறவர் கடவுள் மட்டும்தான்.

ஏங்கிட்ட கேள்வி கேட்கிறதுபோல அவர்ட்ட கேள்வியெல்லாம் கேட்கமுடியாது.

எப்போ பிறப்போம், எப்போ இறப்போம்னு நமக்கே தெரியாது.

கடவுளுக்கு மட்டும்தான தெரியும்.

அவர் நம்மை பூமியில் கொண்டுவந்து விடும் நேரமும்

அழைக்கவரும் நாளும் நேரமும் நமக்குத்  தெரியாது.

கொண்டுவந்து விடும்போது பூமியைப் பார்க்கிறோம்,

அழைக்கும்போது மறுக்க முடியாமல் போய்விடுகிறோம்."

"ஏம்மா இப்படி பயங்காட்றீங்க?

வயிற்றுப் பசியோடு வந்தேன்.
'மெதுவா நடந்துவா'ன்னீங்க.

இப்போ என்னடான்னா 'சாவு எப்போ வேணும்னாலும் வரும்' என்கிறீங்க.

போங்கம்மா. வயிற்றுப் பசியெல்லாம் போயிடீச்சி.

போய் Home work ஐயாவது செய்கிறேன்."

"டேய்! உட்கார்டா.

நான் உன்ன பயங்காட்றேனா?

எவ்வளவு மகிழ்ச்சிகரமான விசயத்தச் சொல்றதுக்காக முன்னுரை போட்டுக்கிட்டிருக்கேன்!

இங்கே பாரு! உனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கு."

"ஒரு கோடி ரூபாயா? பரிசா?  எனக்கா?  உண்மையாகவா?"

."உண்மையாகவேதான்."

"எப்போ கிடைக்கும்?"

."எப்போ வேணும்னாலும் கிடைக்கலாம்.

உன் பெயர் Selected list ல இருக்கு.

அறிவுப்பு  எப்போ வேண்டுமானாலும் வரலாம்."

"எப்போ வேண்டுமானாலும்  வரட்டும்.

நான் எப்போதும் ரெடி.

இந்த வினாடிகூட ரெடி.

சரி! அவ்வளவு பெரிய தொகையை இந்த பொடியனுக்குப் பரிசாகத் தர இருக்கும் அந்த புண்ணியவான் யாரும்மா?"

."வேறு யாரு! உன் அப்பாதான்!"

"அப்பாவா?அவர்ட்ட ஏதும்மா அவ்வளவு பணம்?"

"அதென்ன அப்படிக் கேட்டுட்ட!
இந்த உலகத்துக்கே  முழு உரிமையாளர் அவர்தானே?

இந்த உலகத்தைப் படைத்தவர் அவர்தானே!"

"நீங்க நமது விண்ணகத் தந்தையைச் சொல்கிறீங்களா!

அவர் ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுப்பாராக்கும்!

அவர் மகன் 'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்றார்.

நான் வகுப்பு இறுதித் தேர்வில் ஐந்நூறுக்கு  ஐந்நூறு மதிப்பெண் கேட்டேன்.

எனக்கு450 தான் கிடைத்தது."

"மகனே, என்னுடைய மகனாகப் பிறப்பதற்கு முன்னாலேயே

நித்திய காலமாகவே இறைவனின் உள்ளத்தில் குடியிருந்தவன் நீ.

முழுக்க முழுக்க அவருக்கே உரியவன் நீ.

உன்னோடு எங்களுக்கு உள்ள உறவு தற்காலிகமானது,

நீ பிறந்தவுடன் எடுத்தோம்,

நாங்கள் இறைவனிடம் போகும்போது உன்னை விட்டுவிட்டு போய்விடுவோம்.

ஆனால் கடவுளோடு உனக்குள்ள உறவு நிரந்தரமானது.

பிறக்குமுன்னும் அவரிடம்தான் இருந்தாய்,

இப்போதும் அவரிடம்தான் இருக்கிறாய்,

இறந்தபின்னும் அவரிடம்தான் இருப்பாய்.

ஆகவே இறைவன் என்ன செய்தாலும் உன் நன்மைக்காகவே செய்வார்.

உனக்கு நன்மை பயக்குமென்றால் உன்னைத் தேர்வில் fail ஆக்கவும் தயங்க மாட்டார்.

உயிர்வாழத் தேவை என்றால்  நாம் நமது உடல் உறுப்புக்களைக்கூட operation செய்வதில்லை?  அதேபோல்தான்.

செவ்வாய்க் கிழமைதோறும் கோவிலில் ஒரு பாட்டுப் பாடுகிறோமே,

'நம்புங்கள்

செபியுங்கள்

நல்லது நடக்கும்'

என்று.

இதன் பொருள்,

முதலில்

நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்,

அதாவது

நாம் எதற்காக செபிக்கிறோமோ அது உறுதியாகக் கிடைக்கும் என்று நம்ப வேண்டும்.

அப்புறம்

நமது செபத்தின் மூலமாக என்ன நடந்தாலும் அது நல்லதுதான்,

அதாவது,

நமது நன்மைக்காகத்தான் என்பதையும் உறுதியாக நம்ப வேண்டும்.

கடவுள் நமக்குத் தீமையான எதையும் செய்யமாட்டார்.

உதாரணத்திற்கு,

நாம் நோயிலிருந்து சுகம் பெற நம்பிக்கையோடு வேண்டுகிறோம்.

நாம் சுகம் அடைந்தாலும் நமது நன்மைக்குதான்

சுகம் அடையாவிட்டாலும் நன்மைக்குதான்.

புரிகிறதா?"

"மூளைக்குப் புரிகிறது, மனதுக்குப் புரியவில்லை."

"நீ சொல்வது எனக்குப் புரிகிறது.

ஆப்பரேசன் செய்தால்தான் பிழைக்கமுடியும் என்பதை மூளை ஏற்றுக்கொள்கிறது,

அதனால் ஏற்படும் வலியை நினைத்து மனது பயப்படுகிறது.

இதே நிலை கடவுளுக்கே மனித சுபாவத்தில் ஏற்பட்டதே!

நம் ஆண்டவராகிய இயேசு

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப்

பாடுபட்டு மரிக்கவே

மனிதனாய்ப் பிறந்திருந்தது தெரிந்திருந்தாலும்,

பாடுகளின் வேதனையை நினைத்து பயந்து

இரத்த வியர்வை வியர்த்தாரே!

ஆயினும் பிதாவின் சித்தத்திற்குப் பணிந்தார்.

இயேசு மனித பலகீனத்தை அவரே ஏற்றுக்கொண்டு,

அதை வெல்வதற்கான வழியையும் நடைமுறை மூலம் காட்டினார்.

பலகீனத்தை வெல்ல ஒரே வழி

கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொள்வதுதான்!

அதாவது!, நமது வாழ்வில்,

(பாவம் தவிர,)

என்ன நேர்ந்தாலும், அது கடவுளின் சித்தம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்."

"சரி, ஒரு கோடி ரூபாய் பரிசு பற்றி சொன்னீங்களே!"

."கோடி என்பது மிகப் பெரிய எண்ணாகையால்

மிகப் பெரிய பரிசைத்தான் 'ஒரு கோடி ரூபாய் பரிசு'என்றேன்."

"இவ்வளவுதானா!  நான் உண்மையிலேயே ஒரு கோடி ரூபாய் பரிசு என்று நினைத்துவிட்டேன்."

"பரவாயில்லை.

இவ்வுலகில் நீ அனுபவிக்க ஆசிக்கும் பெரிய இன்பம் ஒன்றைக் கூறு."

"உங்களோடு பேசிக் கொண்டிருப்பதையே பெரிய இன்பமாக நினைக்கிறேன்."

"உண்மையாகவா?  நான் நம்பவில்லை.  அம்மாவை சந்தோசப் படுத்துவதற்காக ஒரு பொய்யைச் சொல்கிறாய்!"

"இல்லை!  நீங்கள்  என்னை நேசிப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உங்களை நேசிப்பது!"

"எல்லா பிள்ளைகளும் கல்யாணம் ஆகும்வரை இப்படித்தான் சொல்வார்கள்.

பரவாயில்லை.

இப்போது கடவுளைப் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்?"

"பேரானந்தமாக இருக்கும்."

" எப்போதும் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க வாய்ப்புக் கிடைத்தால்?"

"பேரின்பமாக இருக்கும்.''

."பேரின்பமாவது இறைவனை முகமுகமாய்த் தரிசித்து, அவரது அரவணைப்பில் நித்தியத்துக்கும் வாழ்வது.

இந்த நித்திய பேரின்ப வாழ்வுதான் நம் எல்லோருக்கும் இறைவன் தரவிருக்கும்  மிகப்பெரிய பரிசு.

இப்பரிசு உனக்காகக் காத்திருக்கிறது.

இப்பரிசை உனக்குத் தரவேண்டுமென்று கடவுள் தீர்மானித்துவிட்டார்.

அதற்காகத்தான் உன்னைப் படைத்திருக்கிறார்.

அதை நோக்கிதான் உன்னை வழிநடத்துகிறார்.

அதற்காக அவர் நிர்ணயித்திருக்கிற நேரம் வரும்போது அதை உனக்குத் தருவார்.

ஆனால் அவர் நிர்ணயித்திருக்கிற நேரம் அவருக்கு மட்டும்தான் தெரியும்."

"நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது இனிமையாகத்தான் இருக்கிறது.

சுவாமியார் தியானப் பிரசங்கம்
வைக்கும்போது மோட்சத்திற்கு உள்ளேயே நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படும்.

ஆனால் வீட்டிற்கு வரும்போது அந்த உணர்வு காணாமற் போய்விடும்.

திரும்பிப் பார்த்தால் அது சுவாமியார் பின்னாலே போய்க்கொண்டிருக்கும்.

அவர் கொடுத்துவச்சவர்.  நான் பாவி."

"எவனொருவன் தான் பாவி என்பதை உளமாற ஏற்றுக்கொள்கிறானோ அவன்தான் பரிசுத்தவான்.

சக்கேயு தன் பாவங்களை ஏற்றுக்கொண்ட உடனே இயேசு,

'இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று.'

என்று சொன்னார்.

ஞாபகம் இருக்கிறதா?"

"இருகிறது அம்மா.

இயேசு அன்று அவன் வீட்டிற்கு வருவார் என்றோ, அவ்வாறு கூறுவார் என்றோ அதுவரை சக்கேயுவுக்குத் தெரிந்திருக்காது.

இயெசுவுக்கு நித்திய காலமாகத் தெரிந்திருக்கும்.

நமக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் இயேசு வல்லவர் என்று நினைக்கிறேன்!"

"இப்போ உனக்குப் புரிந்திருக்கும்

மரணம் பயப்படக் கூடியதல்ல. ஆவலுடன் எதிர்பார்க்கப் படக்கூடியது என்று."

"ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம்.

ஒரு சுற்றுலாப் பயணத்திற்குப்  போகத் திட்டமிட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம்.

போகக்கூடிய நேரம் முன்கூட்டியே தெரிந்தால்தானே அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யமுடியும்.

திடீரென்று சொன்னால் எப்படித் திடீரென்று தயாராக முடியும்?

நமக்கும் சாகும் நாள் நாள் முன்கூட்டியே தெரிந்தால் ஆன்மீக ரீதியாக நாம் அன்று தயாராக இருக்கலாம் அல்லவா?"

."நாம் எப்போதும் தயாராக இருக்க. வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

ஒவ்வொரு நாளையும் வாழ்வின் இறுதி நாளாக எண்ணி நம்மையே அதற்காகத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் தேர்வு நாளை முன்கூட்டியே அறிவித்து விடுகிறோம்.

அநேக மாணவர்கள் தேர்வுக்காகப் படிப்பதை தேர்வுக்கு முந்திய நாள் வரை ஒத்தி போடுவார்கள்.

தேர்வு முடிந்தவுடன் வினாத்தாள் எப்படி இருந்தது என்று கேட்டால்,

'தாள் ரொம்ப இலேசாக இருந்தது. வினாக்கள்தான் ரொம்ப கடினம்' என்பார்கள்.

நமது விண்ணகப் பயண நாளை முன்கூட்டியே அறிவித்து விட்டால்,

சிலர்,
'நமக்குதான் நாள் இருக்கிறதே  அதற்கு முந்திய நாள் தயாரித்தால் போதாதா!'

என்று அதுவரை ஆன்மீகத்தை அடகு வைத்து விடுவார்கள்.

சிலர் வாழ்நாள் முழுவதும் சாவுப் பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்,

தங்களைச் சார்ந்தோரையும் சந்தோசமாக இருக்க விட மாட்டார்கள்.

நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அப்போதான் நமது ஆன்மா எப்போதும் சுத்தமாய் இருக்கும், புரிகிறதா?"

"புரிகிறது.

ஒரு பொடி சந்தேகம்.

நான் இன்று நித்திய பேரின்பத்தில் நுழைகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

நீங்கள் அழுவீர்களா? மாட்டீர்களா?"

"எனக்கு நம் ஆண்டவர் முன் உதாரணம் காட்டிவிட்டார்.

லாசர் மரணம் அடைந்தபின்  அவனது கல்லறைக்கு வந்த

"இயேசு கண்ணீர் விட்டார்."

அதற்காக நீ ஏண்டா அழுகிறாய்?"

"முதல்ல உங்க கண்ணிரத் துடைங்க.

நமது வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இயேசு  வழி காட்டியிருக்கிறார்!

ஆச்சரியமாய் இருக்கிறது!"

."இயேசுதானே நமது வழி!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment