"நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்." (மத்.18:3)
--------- ----------- ---------
"தம்பி!"
"தாத்தா, வணக்கம்."
"வணக்கம். உனக்கு வயசு என்ன ஆகுது?"
"ஆறு வயசு நடக்கு."
"நீ ஓடும்போது அது என்ன செய்யும்? "
"நான் நடந்தாலும், ஓடினாலும், இருந்தாலும், எழுந்தாலும், படுத்தாலும் அது நடந்துக்கிட்டுதான் இருக்கும்."
..."நல்லா பேசிறிய! நல்ல பையன்.
உன்ன கோயிலில பூசை நேரத்தில பார்த்தேன்."
"அப்போ பூசை பார்க்கலியா?
பூசை நேரத்தில கண்ணு பீடத்தில இருக்கணும்னு அம்மா சொல்வாங்க."
"அப்போ நீ அம்மா சொல்ல கேட்கல."
"யார் சொன்னா? நான் அம்மா, அப்பா சொல் தட்டாத பிள்ள. பூசை நேரத்தில பீடத்தில வச்ச கண்ண எடுக்கவே இல்லையே!"
"நீ பொய் சொல்ற. பூசை நேரத்தில உன்னைப் பார்தேனே.
உனது இரண்டு கண்களும் உன் முகத்திலதான் இருந்தன!"
"நல்லா பேசறீங்க. இன்றைய நற்செய்தி வாசகத்தைக் கவனீச்சீங்களா?"
"அதாவது 'பூசையைக் கவனீச்சிங்களா,
அல்லது பராக்குப் பார்த்துக்கிட்டிருந்தீங்களா'ன்னு மறைமுகமா கேட்கிற, அப்படித்தானே? "
"தாத்தா, அப்படி இல்ல. உண்மையிலேயே இன்றைய வாகசம் பற்றி பேசணும் போலிருந்தது. அதனாலதான் கேட்டேன். தப்பா நினைச்சிக்கிடாதீங்க."
..."தப்பா நினைக்க மாட்டேன். நானும் அது பற்றி பேசணும்னுதான்
உன்ன நிறுத்தினேன். நீ முந்திக்கிட்ட."
"அப்போ நீங்களே இன்றைய வாசகம் பற்றி என்னிடம் கேளுங்க."
"நாம யாரைப்போல இருந்தால்மட்டும் விண்ணகம் போகமுடியும்னு இயேசு சொன்னாரு?"
"குழந்தைகளாக மாறினால் மட்டும், விண்ணரசில் நுழைய முடியும்."
..."எனக்கு 82 வயசாகிறது, நான் எப்படி குழந்தையா மாறுவது?
அப்போ நான் விண்ணகம் போகமுடியாதா?"
"தாத்தா, உங்க உடலை மாற்ற முடியாது.
ஆனால் உள்ளத்தில குழந்தையாக மாறமுடியும்.
குழந்தைகள் உள்ளம் கள்ளம் கபடு இல்லாதது.
சூதுவாது இல்லாதது.
பாவமே இல்லாதது.
பரிசுத்தமானது.
நீங்களும் பாவமாசு, சூதுவாது, கள்ளங்கபடு இல்லாதிருந்தால்மட்டுமே விண்ணக போகமுடியும்.
அதுமட்டுமல்ல, குழந்தை தன் சகல தேவைகளுக்கும் தன் பெற்றோரையே சார்ந்திருக்கிறது.
தன் பெற்றோரை முழுவதும் நம்புகிறது.
வேண்டியதைக் கேட்டுப் பெறுகிறது.
அவ்வாறே நீங்களும் முழுவதும் இறைவனை நம்பிக்கையுடன் சார்ந்திருங்ங்கள்.
வேண்டிய வரங்களை அவரிடமே கேட்டுப் பெறுங்கள்.
நாம் எப்போதும் அவரோடு பேசவேண்டும், வேண்டியதை எல்லாம் கேட்கவேண்டும் என்பதைக் கடவுள் விரும்புகிறார்.
அதுமட்டுமல்ல,
சில சமயங்களில் நமது வேண்டுதலை அவர் கேளாததுபோல இருப்பது
நாம் எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
குழந்தை தன் அம்மாவை எதாவது கேட்டுத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும்.
நாமும் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தால் அவர் மகிழ்ச்சி அடைவார்.
சதா அவரையே நினைத்துக் கொண்டே இருந்தால் உறுதியாக விண்ணகம் செல்வீர்கள்."
..."Very good.
'அவர்களுடைய விண்ணுலகத் தூதர்
வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.'
என்று ஆண்டவர் சொன்னார்.
'அவர்களுடைய விண்ணுலகத் தூதர்'னா யாரு?"
"குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோருக்கும் ஆளுக்கொரு காவல் சம்மனசை இறைவன் துணையாகத் தந்திருக்கிறார்.
அவரைத்தான் ஆண்டவர் அப்படிக் கூறுகிறார்."
"காவல் சம்மனசு எங்கே இருப்பார்?"
..." தாத்தா, காவல் சம்மனசு காவல் காக்கப்படக்கூடிய ஆளுடன்தான் இருப்பார்!
ஒவ்வொரு குழந்தையுடனும் ஒரு சம்மனசு இருக்கிறார்."
...."ஆண்டவர் அப்படிச் சொல்லவில்லையே.
'வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'
என்றல்லவா சொன்னார்
ஏன் அவர்கள் குழந்தைகளுடன் இல்லாமல்
எப்பொழுதும்
வானகத்திலுள்ள தந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?
"தாத்தா, எனக்குப் பதில் தெரியும்.
ஆனால் அதை உங்கள் வாயிலிருந்தே வரவழைக்கிறேன்."
..."தெரிந்தால் சொல்ல வேண்டியதுதானே!
ஏன் என் வாயிலிருந்து வரவழைக்க வேண்டும்?"
"சில மாணவர்கள் பாடம் படியாமல் வகுப்புக்கு வந்தால், அடிக்குப் பயந்து, தாங்களே முந்திக்கொண்டு,
'சார் ஒரு சந்தேகம்' என்பார்கள்."
..."ஆக உனக்கும் சந்தேகம்.
பிழைக்கத் தெரிஞ்ச பையன்.
சரி. கேளு."
"வானகம் எங்கே இருக்கிறது?"
..."இதற்குச் சரியான பதிலை மனித மொழியில் கூறமுடியாது.
ஏனைனில், இது இவ்வுலகில் வாழும் மனிதர்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்டது.
ஆயினும் சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கடவுள் இடத்தில் இல்லை.
God does not occupy space.
ஆகவே வானகம் இடம் அல்ல.
வானகம், (விண்ணுலகம், மோட்சம்)
ஒரு வாழ்க்கை நிலை.
State of life.
கடவுள் இடத்திற்கும், அதனுள் உள்ள அனைத்திற்கும் ஆதிகாரணராய் எங்கும் இருக்கிறார்.
எங்கும் இருக்கும் கடவுளோடு
அவருடைய தூதர்களும் இருக்கிறார்கள்."
"அப்படியானால் தூதர்களும் எங்கும் இருக்கிறாகளோ?"
..."இல்லை. தூதர்கள் எங்கும் இல்லை.
குழப்பமாக இருக்கிறதோ? "
."இல்லை, ஆம்."
..."அதென்ன இல்லை, ஆம்?"
"நீங்கள் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் இல்லை.
புரிந்துகொள்வதில்தான் குழப்பம்."
..."கவனி.
கடவுள் படைக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் ஆதிகாரணராய் எங்கும் இருக்கிறார்."
" புரிந்துவிட்டது.
கடவுள் எல்லாவற்றுக்கும் ஆதிகாரணர். ஆகவே ஆதிகாரணராய் எங்கும் இருக்கிறார்.
ஆனால், அவருடைய தூதர்கள் படைக்கப்பட்டவர்கள், ஆகவே ஆதிகாரணர் அல்லர். ஆகவே எங்கும் இருக்கமுடியாது.
ஆனாலும், எங்கும் உள்ள கடவுளோடு அவர்களால் இருக்கமுடியும், நம்மைப் போல."
..."Very good. இப்போ பதில்....."
"உங்கள் வாயிலிருந்துதான் வரவேண்டும்!"
..."சரி. எங்கும் இருக்கும் கடவுள் குழந்தையோடும் இருக்கிறார்.
கடவுளோடு இருக்கும் சம்மனசு
அவரொடு இருக்கும் குழந்தையோடும்தானே இருக்கும்!"
"கரெக்ட் தாத்தா.காவல் சம்மனசின் ஒரே வேலை
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் ஆன்மாவுக்கு உதவுவதும்,
அதற்காகக் கடவுளிடம் வேண்டிக்கொள்வதும்தான்."
..."Correct,
நாம் இயேசு ஆசிப்பதுபோல்
குழந்தைகளாய் மாறுவோம்
குற்றமற்ற வாழ்க்கை வாழ்வோம்.
விண்ணரசில் இடம் பெறுவோம்!"
"தாத்தா, விண்ணரசு இடமல்ல, வாழ்க்கை நிலை.
நாம் மோட்ச நிலை அடைவோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment