"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."(மத்.16:24)
*** *** *** *** *** *** .***
"ஏங்க, உடனே டீ வேண்டுமா? அல்லது கொஞ்சம் பொறுத்துக் குடிக்கலாமா?''
..."ஏன், உனக்கு ஏதாவது வேலை இருக்கா?"
"எனக்கில்ல, உங்களுக்குதான்."
..."எனக்கே தெரியாம என்ன வேலை வந்தது?"
"இது நான் தரப்போகிற வேலை."
...",என்ன வேலைன்னு கேட்கமாட்டேன். என் சிலுவையை நானே சுமக்கிறேன்."
''ஏங்க, அதென்ன உங்க சிலுவை?"
..."என்னையே மறுத்துச் செய்தால் அது என் சிலுவைதானே?
நான் டீக்காகத்தான் காத்திருந்தேன்.
டீ இப்போ இல்லை. அப்போ அது சிலுவைதானே!"
"அப்போ டீ கொண்டு வரட்டுமா?"
..."வேண்டாம். தானாக வந்த சிலுவை ஆண்டவரே தந்த சிலுவை.
அதை மறுக்கக் கூடாது. சரி, என்ன வேலை சொல்லு.
என்னடி உட்கார்ந்திட்ட? வேலையைச் சொல்லு."
"என் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுதான் இப்போதைய வேலை."
..."இவ்வளவுதானா? இதைத்தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேனே!
இப்போ என்ன Special ஆ? "
இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னீங்களே, 'சிலுவை', அதைப்பற்றிதான்.
இயேசு,
'என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.'
என்று சொன்னாரே, அதைப்பற்றி பேசணும்."
"இரண்டு வார்த்தைகளை விட்டுவிட்டாயே,
'தன்னையே மறுத்து'.
சிலுவையே அதில்தானே அடங்கியிருக்கிறது.
தனக்கு விருப்பம் இல்லாத ஒன்றை கடவுளின் சித்தம் என்பதற்காக ஏற்று,
அவருக்காகவே செய்கிறோமே, அதுதான் சிலுவை.
எல்லா விசயங்களிலும் இயேசுவே நமக்கு முன்மாதிரிகை காண்பித்திருக்கிறார்.
அவர் சர்வ வல்லப கடவுள்.
எல்லா நன்மைத்தனங்களிலும் அளவற்றவர்,
நிறைவானவர்,
நித்திய காலமாக பேரின்பமாக வாழ்பவர்.
அவர் ஏன்
அளவுள்ள,
குறைபாடுகள் நிறைந்த,
துன்பங்கள் நிறைந்த மனித சுபாவத்தை ஏற்று
மனிதனாகப் பிறக்கவேண்டும்?"
"ஏங்க கேள்வி கேட்கவேண்டியது நான். எங்கிட்ட கேட்கிறீங்க. நீங்களே சொல்லுங்க."
..."பாவிகளாகிய நமது பாவங்களுக்குப் பரிகாரமமாக சிலுவையிலே தன்னையே பலியாக்கி நம்மை இரட்சிப்பதற்காக."
"இயேசு நம்மை இரட்சிக்க வேண்டும் என்ற 'விருப்பத்தோடுதானே' மனிதனாய்ப் பிறந்தார்.
ஆனால் நம்மை ஏன் 'தன்னையே மறுத்து' சிலுவையைச் சுமக்கச் சொல்கிறார்?"
..."நான் முதலிலேயே சொல்லி விட்டேன்,
'நமக்கு முன்மாதிரிகையாக' என்று.
அவர் மனிதனாகப் பிறந்தது
சுயமாக,
அன்பினால் உந்தப்பட்டு,
விருப்பப்பட்டு எடுத்த முடிவு,
நித்தியகாலமாக எடுத்த முடிவு.
சிலுவையில் அறையப்பட்டு பலியாக வேண்டுமென்பதும்
அவரது சுய முடிவுதான்.
ஆனால் குறைபாடுகள் உள்ள மனிதன் சுயமாக துன்பப்பட விரும்ப மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.
ஆகவே மனிதன் தன்னை மறுத்து துன்பத்தை ஏற்பதற்கு அவனுக்கு முன்மாதிரிகை காட்டவேண்டும் என்பதற்காகவே
மனிதன் எந்த குறைபாட்டின் காரணமாக துன்பத்தை விரும்ப மாட்டானோ அந்தக் குறைபாட்டை தானே விரும்பி ஏற்றுக்கொண்டார்.
பயம்.
'இன்று பகல் 12 மணிக்கு உனக்கு சாவு வரும்'
என்று யாராவது சொன்னால் நமக்கு உடனே என்ன வரும்?
பயம் வரும்.
ஆகவே பயப்படும் தன்மையைத் தானே விரும்பி ஏற்றுக்கொண்டார்.
பயத்தை மட்டுமா?
பாவத்தைத் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் ஏற்றுக்கொண்டார்.
அவரே ஏற்றுக் கொண்ட பயத்தின் காரணமாகத்தான் வரவிருந்த சிலுவை மரணத்தை நினைத்து பயந்தார்.
பயத்தின் காரணத்தினால் உடல் எல்லாம் இரத்த வியர்வை கொட்டியது.
"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்"
என்று தந்தையை வேண்டுமளவிற்குப் பயந்தார்.
ஆனால் துணிச்சலோடு 'தன்னை மறுத்து'
''எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"
என்று கூறி தந்தையின் சித்தத்திற்குப் பணிந்தார்.
"ஆக இயேசு தன்னையே மறுத்ததுபோல் நாமும் நம்மையே மறுக்கணும்.
இயேசு சிலுவையைச் சுமந்ததுபோல நாமும் சிலுவையைச் சுமக்கணும்.
புரிகிறது.
அடுத்து
'தன்' சிலுவையைச் சுமந்துகொண்டு
என்று இயேசு சொல்கிறாரே
நமக்குச் சொந்தமான சிலுவை
என்று ஒன்று இருக்கிறதா?"
..."நாம் சிலுவையைத் தேடிப் போகவேண்டிய அவசியமில்லை.
ஒரு கப் டீயைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டா கண் விழித்தேன்?
அது நான் சுமக்க வேண்டிய சிலுவை,
தானே என்னைத் தேடிவந்த சிலுவை என் சிலுவைதானே?"
"ஏங்க, டீ குடியாதிருப்பது ஒரு ஒரு சிலுவையா?''
..."டீயை விரும்பாதவர்கட்கு குடியாதிருப்பது சிலுவை அல்ல.
விரும்புகிறவர்கட்கு குடியாதிருப்பது சிலுவைதானே?"
"அப்போ நானே உங்களுக்கு ஒரு சிலுவையைத் தந்து விட்டேனா?
Sorry ங்க."
..."அட மண்டு, நாம் கல்யாணம் பண்ணிக் கொண்டிருப்பதே ஒருவருக்கொருவர் சிலுவைகளைப் பரிமாறிக் கொள்ளத்தானே!
நீ எனக்காக எத்தனை தியாகங்கள் செய்திருப்பாய்!
அவை எல்லாம் நான் உனக்குத் தந்த,
உன்னைத் தேடிவந்த சிலுவைகள்தானே!
உன்னையே மறுத்துதானே அவற்றைச் சுமந்தாய்!"
"எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு உதாரணம் சொல்லுங்கள்."
..." நான் ஆறு மணிக்கே பள்ளிக்கூடம் போகவேண்டும் என்கிறேன்.
5.30 க்குச் சாப்பாடு தரவேண்டும். நீ 4 மணிக்கே எழ வேண்டும்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கணும் போலிருக்கு.
நீ உன்னையே ஒறுத்து
4 மணிக்கே எழுந்து எனக்கும் பிள்ளைகளுக்கும் உணவு தயாரித்து ,
எங்களைச் சாப்பிட வைத்துவிட்டு,
எங்களை முக மலர்ச்சியோடு பள்ளிக்கு அனுப்பி விட்டு....."
"இங்கே பாருங்க, நான் இதை எல்லாம் சிலுவையாக நினைக்க வில்லைங்க."
..."நினைக்காது இருந்திருக்கலாம்.
ஆனால் இதெற்கெல்லாம் நீ செய்த தியாகங்களெல்லாம் சிலுவைதான்.
ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்திற்காகச் சுமக்கும் ஒவ்வொரு சிலுவையையும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தாலே
அவள் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குப் போகாமலேயே இறைவனோடு ஐக்கியமாகிவிடலாம்!"
"நீங்க சொல்றதப் பார்த்தா
மனைவி கணவனுக்காகச் செய்யும் தியாகங்களும்,
கணவன் மனைவிக்காகச் செய்யும் தியாகங்களும்,
இருவரும் பிள்ளைகளுக்காகச்
செய்யும் தியாகங்களும்,
பிள்ளைகள் பெற்றோருக்காகச்
செய்யும் தியாகங்களும்
ஆண்டவருக்காகச் சுமக்கப்படும் சிலுவைகள்தான் என்கிறீர்கள்!"
..."சுருக்கமா சொல்லப்போனா நமது வாழ்க்கையே ஒரு சிலுவைதான்.
அதைத் தியாக உணர்வோடு இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தால்
அது ஆண்டவர் நமக்காகத் தந்த சிலுவையை அவர் சித்தப்படி சுமக்கிறோம் என்றுதான் பொருள்."
"மொத்தமாகச் சொல்லிவிட்டீர்கள்.
சில சிலுவைகளைக் குறிப்பாகப் பார்ப்போமே"
..."பெண்களின் பேறுகால வேதனை.
பாவத்திற்குத் தண்டனையாகக் கிடைத்த பேறுகால வேதனையை
இயேசு தனது சிலுவை மரணத்தால் ஆன்மீகப் பயன் தரும் சிலுவையாக மாற்றிவிட்டார்.
அந்த வேதனையை ஆண்டருக்காக அனுபவித்து அவருக்கே ஒப்புக்கொடுத்தால்
அது ஆன்மீக பாக்கியமாக(Blessing) மாறிவிடுகிறது!
இது ஆண்களுக்குக் கிடைக்காத பாக்கியம்!
ஏன், நமது அன்னை மரியாளுக்கே கிடைக்காத பாக்கியம்!"
"அதை நான் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்ததாக ஞாபகம்
இல்லையே."
..."நீ பேறுகால வேதனை அனுபவிக்கும்போது நீ கத்திய குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொடிருக்கிறது.
'இயேசுவே......ஆண்டவரே....
இயேசுவே.......இயேசுவே.....
கடவுளே .....இயேசுவே......ஆண்டவரே....இயேசுவே......இயேசுவே.....கடவுளே'
என்று வேதனை ஆரம்பித்த நேரத்திலிருந்து 'குவாகுவா' சப்தம் கேட்கும் வரை ஆயிரக்கணக்கான முறை ஆண்டவரை மட்டுமே கூப்பிட்டுக் கொண்டிருந்தாய்!
அதாவது உன் வேதனையை ஆண்டவருக்கு மட்டும்தானே ஒப்புக்கொடுத்தாய்!"
"அது உண்மைதாங்க. இறைவா நன்றி."
..."நீ மட்டுமல்ல உன் வேதனையை நானும் சேர்ந்துதான் சுமந்தேன்.
சலேத் பிறக்கும்போது அம்மாவும், பிரகாசமும், அல்போன்சாளும் முழங்காலில் இருந்துகொண்டு
கண்களில் நீர் மல்க
உன்னைவிட சப்தமாக இயேசுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் காட்சியை ஒவ்வொரு குடும்பத்திலும் காணலாம்.
நாம் கடவுளை மறக்காதிருக்க அவரே அமைத்துத் தந்த வழிகள்.
நமக்கு என்ன ரூபத்தில் துன்பங்கள் வந்தாலும் அவை கடவுளாலேயே அனுப்பப்படும் சிலுவைகள்தான்.
இயேசு நமக்காகச் சுமந்த சிலுவையை நினைத்துக்கொண்டு அவற்றை நன்றியுடன் சுமக்க வேண்டும்."
"நன்றியுடன்?"
..."ஆமா.
ஒரு அரசர் நம்மை அழைத்து, நம்மை அவரோடு பந்தியில் அமர்த்தி, அவர் உண்ணும் உணவு வகைகளை நமக்கும் பரிமாறினால் எப்படி இருக்கும்?
இயேசுவைப்போல் சிலுவையைச் சுமக்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்தால்
நன்றி சொல்ல வேண்டாமா?
கஸ்டப்பட்டு படித்த மாணவனுக்கு அவன் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால் அது அவனுக்கு ஆண்டவர் கொடுத்த சிலுவை.
நன்றி கூற வேண்டும்.
மற்றவர்களால் நமக்கு மன வருத்தம் ஏற்பட்டால் அதுவும் நாம் சுமக்க வேண்டிய சிலுவைதான்.
நன்றி கூற வேண்டும்."
"ஒன்று புரிகிறது.
சிலுவைதான் மகிழ்ச்சியின் பிறப்பிடம்.
சிலுவைதான் மகிமையின் பிறப்பிடம்.
சிலுவைதான் நமது விண்ணக வாழ்வின் பிறப்பிடம்."
சுமப்போம் சிலுவையை!
அடைவோம் மகிமையை!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment