Monday, August 26, 2019

எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?"(மத்.23:17)

"எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?"(மத்.23:17)
......................................................

..."ஹலோ! வந்த இடத்துக்குப் போகாம இங்கேயே நின்னுட்டீங்க!"

"இங்க கொஞ்சம் வாங்க."

..."உங்களுக்குக் கம்பெனி கொடுக்கவா?

என்ன விசயம்?"

"இந்தச் சுவரைக் கொஞ்சம் பாருங்க."

..."கோவில் கட்ட நிதி கொடுத்து உதவிய நன்கொடையாளர்கள் பெயர்கள்.

அதைத்தான் தலைப்பில எழுதியிருக்கிறார்களே.

வாசிக்கத் தெரியலியா?"

"தெரிஞ்சதினாலதான் கேட்கிறேன்."

..."இன்னும் ஒண்ணும் கேட்கலிய."

"சாரி. கேள்வி மனசுக்குள்ள இருக்கு."

..."அங்கேயே இருக்கட்டும். கோவிலுக்குள்ளபோய் யாரைப் பார்க்க வந்தோமோ அவரைப் பார்த்துப் பேசிட்டு,

அப்புறம் வெளியே வந்து வேறு விசயம் இருந்தா பேசுவோம். வாங்க."
*             .*             *             *

..."வாங்க, உட்காருங்க.

ஆண்டவர்ட்ட ரொம்ப சீரியசா ஏதோ பேசிக் கொண்டிருந்தது மாதிரி தெரிந்தது."

"ரொம்ப சீரியசாதான் பேசிக்கொண்டிருந்தேன்.

என் மனதுக்குள்ளே இருந்த கேள்வியை ஆண்டவரிடம் கேட்டேன்.

அவரும் ரொம்ப சீரியசாதான் பதில் சொன்னார்."

..."நீ என்ன கேட்ட? ஆண்டவர் என்ன சொன்னார்? "

"நான் சுவரிலே பார்த்த காட்சியைக் குறித்து ஆண்டவரிடம் கேட்டேன்.

அவர் நான் சமீபத்தில் வாசித்த நற்செய்தி வாசகத்தை ஞாபகப்படுத்தினார்."

..."என்ன வசனம்?''

" 'மூடரே, குருடரே,

எது பெரிது?

பொன்னா?

பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?'

இதுதான் அந்த வசனம்.

அதைப்பற்றிக் கொஞ்சம் பேசலாமா? "

..."கொஞ்சம் என்ன, நிறையவே பேசலாம்.

இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

அதாவது

இவ்வுலக செல்வங்களுக்கும்,

கடவுளுக்கும்

ஊழியம் செய்ய முடியாது."

"இவ்வுலக செல்வங்களை நமக்கு அளித்தவர் கடவுள்தானே."

..."நிச்சயமாக! 

இவ்வுலக செல்வங்கள்

இறைவனுக்கு ஊழியம் செய்யப்

பயன்படுத்தப்படுவதற்காக

நம்மிடம் தரப்பட்டுள்ளன.

அவைகளுக்கு ஊழியம் செய்ய இறைவனைப் பயன்படுத்தக்கூடாது."

"இறை ஊழியத்தில் பணத்தை எப்படிப் பயன்படுத்துவது? "

..."கடவுள் தந்த இரண்டு கட்டளைகளிலே,

(அதாவது,இறைவனை நேசி,
உன் அயலானை நேசி,)

இறை ஊழியம் அடங்கி இருக்கிறது.

தனிப்பட்ட முறையில்

இறைவனை

முழு இருதயத்தோடு நேசிக்கவும்,

அவரை ஆராதிக்கவும்

பணம் தேவை இல்லை.

சமூகமாக வழிபடத்தான் ஆலயம் தேவைப்படுகிறது.

ஆலயம் கட்ட பணம் 'பயன்படுகிறது'.

அயலானை நேசிப்பதும், அவனுக்கு சேவை செய்வதும் இறை ஊழியம்தான்.

நேசிக்கப் பணம் தேவை இல்லை.

சேவை செய்யப் பணம் பயன்படுகிறது."

"பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக

பணத்தைச் சம்பாதித்து, சேமித்து, அதில் இன்பம் காபதற்காக

மற்றவர்களைப் பயன்படுத்தும்போது

பணத்திற்கு ஊழியம் செய்கிறோம்.

அதாவது வாழ்வதற்குப் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக,

பணத்திற்காக வாழும்போது நாம் பணத்திற்கு அடிமையாகிறோம்.

அவைகளுக்கு ஊழியம் செய்ய இறைவனைப் பயன்படுத்தக்கூடாது."

"இறைவனைப் பயன்படுத்துவது பற்றி உங்கள் கருத்து?"

..."இறைவனையும், பணத்தையும் பற்றிப் பேசும்போது வார்த்தைகளை மிகக் கவனமாகக் கையாளவேண்டும்.

ஏனெனில் இறைவனுக்கும் ஊழியம் பண்ணுவோரில் ,

நம்மைபோல சாதாரணமானவர்ளும்,

இறை  ஊழியத்திற்காகத் தம் வாழ்வையே முற்றிலும் அர்ப்பணித்தவர்களும்

அடங்குவர்

நான் கூறப்போவது நபர்களைப்பற்றி அல்ல, பயன்பாடு பற்றி.

நமக்குச் சுகமில்லை என்று வைத்துக்கொள்வோம்.

நற்சுகம் பெற இறைவனை வேண்டுகிறோம்.

நமக்கு நேர்ச்சைகள் செய்யும் பழக்கம் இருக்கிறது.

அதன்படி,

'இறைவா, எங்களுக்கு நற்சுகம் தாருங்கள்,

நற்சுகம் கிடைத்தவுடன் நமது ஆலயத் திருப்பணிக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துவிடுகிறோம்

என்று வேண்டுகிறோம்,

அதாவது ஆயிரம் ரூபாய் நேர்ச்சை.

இங்கு இறைவனுக்கு முக்கித்துவம் கொடுக்கிறோமா,

அல்லது

பணத்திற்கு  முக்கித்துவம் கொடுக்கிறோமா

என்பது நமது கண்ணோக்கில் அடங்கி இருக்கிறது.

இறைவன் செய்யும் உதவிக்கு நன்றியாகக் காணிக்கை என்று பணத்தை நோக்கினால் இறைவனுக்கு முக்கியத்துவம்.

அதாவது, இறைவன் நம் மன்றாட்டைக் கேட்பார் என்று விசுவசித்தால்

இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

''நாம் ஆயிரம் ரூபாய் நேர்ந்திருக்கிறோம் ஆகவே  நம் மன்றாட்டைக் கேட்பார்'

என்று நினைத்தால் நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

உதவிக்கு காணிக்கை.

காணிக்கைக்காக உதவி இல்லை.

நன்றி?  

என்ன நேர்ந்தாலும் நன்றி!

ஆலயம் எழுப்ப நன்கொடை?

'நன்கொடை' என்பதை விட 'காணிக்கை' என்பதே பொறுத்தமான வார்த்தை.

இறைவனுக்கு நன்கொடை கொடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

இல்லாத நிதியை உருவாக்க மனிதருக்குக் கொடுப்பது நன்கொடை.

பக்தர்கள் இறைப்பணிக்காக செலுத்துவது (கொடுப்பது அல்ல) காணிக்கை.

இறைப்பணிக்காக காணிக்கை செலுத்துவது சுய விளம்பரத்துக்காக அல்ல.

நாம் விளம்பத்தை விரும்பினால் அது காணிக்கை அல்ல.

வியாபாரம்!

காசு கொடுத்து விளம்பரதை வாங்குவது!"

"அப்போ கோவில் சுவரில் எழுதியிருக்கும் நன்கொடைப் பட்டியல்?"

"கொடுத்தவர்களின் நோக்கத்தை வைத்துதான் அவர்களின் நிலைமையைத் தீர்மானிக்கலாம்.

சுவரில் எழுதியவர்களின் நிலைமையை அவர்களின் நோக்கத்தை வைத்துதான் தீர்மானிக்கலாம்.

நம்மவர்களிடையே ஒரு வேண்டாத பழக்கம் இருக்கிறது.

ஒரு திருத்தலத்தின் பெருமையை அங்கு வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையை வைத்தும்

பிரியக்கூடிய காணிக்கையை
வைத்தும் தீர்மானிப்பது.

இது திருத்தல புனிதரைவிட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகிவிடாதா?

உண்மையில் பயன் பெருவது திருப்பயணிகள்.

அது அவர்களின் விசுவாசத்தின் அளவைப் பொறுத்தது.

அது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

நாம் அதிகக் காணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் 

கடவுளுக்கு முன்னால் பணத்தை வைக்கிறோம்.

'எது பெரிது?

பொன்னா?

பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?'

என்று இயேசு

மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும்

பார்த்து கேட்டபோது,

காணிக்கையை விட

ஆலயத்துக்குதான்

அதாவது

ஆலயத்தில் உறையும் கடவுளுக்குதான்

முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்
என்கிறார்.

மறைநூல் அறிஞரும், பரிசேயரும்
ஆலயத்தைவிட அங்கிருந்த பொன்னுக்கே (Gold)  அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இறைவன் காணிக்கையின் அளவைவிட பக்தனின் உள்ளத்தையே பார்க்கிறார்.

"இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, "காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.


44 ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்" என்றார்.'
(மாற்கு.12:43, 44)"

காணிக்கையின் அளவு சிறியது

(இரண்டு செப்புக் காசுகள்)

உள்ளம் பெரியது. ( பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்)"

"ஆகவே ஒருவன் தரும் காணிக்கையின் அளவை வைத்து அவனது பக்தியின் அளவை அளவிடக்கூடாது."

..."மொத்தத்தில் யாரையும் அளவிடக்கூடாது.

Who are we to judge others?"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment