Bசாத்தானின் தந்திரம்.
----------------------------------
லூசிபெர் சம்மனசுக்களிலேயே மிகவும் அழகு வாய்ந்தவனாகவும், ஒளிவீசுபவனாகவும் இறைவனால் படைக்கப்பட்டதோடு,
விண்ணுலக சேனைகளின் தலைவனாகவும் நியமிக்கப்பட்டிருந்தான்.
ஆனால் எந்த அழகும், ஒளியும் இறைவனால் அவனுக்குப் பரிசாகத் தரப்பட்டிருந்தனவோ
அவற்றைத் தன் அகங்காரத்தால் கேடுகளாக மாற்றிவிட்டான்.
அவற்றைத் தந்த இறைவனை வாழ்த்திப் போற்றுவதற்குப் பதிலாக,
தன்னை இறைவனுக்கு நிகரானவன் என எண்ணி அவரையே எதிர்க்கத் துணிந்தான்.
விளைவு?
"இறைவனுக்கு நிகரானவன் யார்?" என்ற மிக்கேல் அதிதூதரின் வீர முழக்கத்தால்
லூசிபெர் , தன் சகாக்களுடன் சுருண்டு எரிநரகில் விழுந்தான்.
அவனது வியக்கத்தக்க அழகு வெறுக்கத்தக்க அசிங்கமாக மாறியது.
விண்ணுலக தளபதி நரலோக தளபதியாக மாறினான்.
அந்நாள் முதல் இந்நாள் வரை அவனது ஒரே வேலை அவனது நரலோக நாட்டிற்கு ஆள் சேர்ப்பதுதான்.
அதற்கு அவன் கையாளும் 'டெக்னிக்'
இறைவன் படைத்த நல்லவற்றைக் கொண்டு மனிதர்களை
மோசமானவர்களாக ஆக்குவது.
அவன் வேலையை சிங்காரவனத்தில் நமது முதல் பெற்றோரிடமே ஆரம்பித்து விட்டான்.
கடவுள் ஆதாமுக்கு ஒரு கட்டளை கொடுத்திருந்தார்.
"நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ணாதே:"
கடவுள் ஆதாமை படைக்கும் போது முழுச்சுதந்திரம் உள்ள மனிதனாகப் படைத்தார்.
அவன் தன் சுதந்திரத்தை ஒழுங்காகப் பயன்படுதுகிறானா என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தும் உறைகல்லே கட்டளை.
சாத்தான் நம் முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்து,
தான் இழந்த மோட்சம் அவர்களுக்கும் கிடைக்காதபடி செய்யத் தீர்மானித்தான்.
அதாவது அவர்களை இறைவனது கட்டளைகளை மீறும்படிச் செய்யத் தீர்மானித்தான்.
அவர்களிடம் போய்,
"கடவுள் கொடுத்த கட்டளையை மீறுங்கள், என்னைப் பின்பற்றுங்கள்" என்று கூறமுடியாது.
ஆகவே கனியைக் காரணங்காட்டி அவர்களைக் கட்டளையை மீற வைக்கத் தீர்மானித்தான்.
கனியில் தப்பு ஒன்றுமில்லை
"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."
பாவம் கனியைத் தின்றதில் இல்லை, கட்டளையை மீறியதுதான் பாவம்.
கடவுளுடைய படைப்பையே அவருக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டான்.
இன்றைக்கும் கடவுள் நமது நன்மைக்காக தந்தவற்றையே சாத்தான் பயன்டுத்தி நம்மைப் பாவத்தில் விழவைக்கிறான்.
கடவுள் மனித பயன்பாட்டிற்காகப் படைத்தவை:
1.காலம் (time) .
2.இடம், (Space)
3.பிரபஞ்சம் (Universe)
.
பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள உலகத்தை மனிதகுலம் வாழ்தற்கென்றே தயார்செய்து,
கடைசியாக மனிதனைப் படைத்து,
அதை அதை அவன் பொறுப்பில் ஒப்படைத்தார்.
"அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கட.வன்"
(ஆதி.1:26)
ஆனால் மனிதன் பயன்படுத்துவதற்காக படைக்கப்பட்டவற்றை
எப்படிப்பயன் படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
காலம்
-----------
இறைவன் காலங்களைக் கடந்தவர். அவருக்குத் துவக்கமும், முடிவும் கிடையாது.
ஆனால் உலகில் படைக்கப் பட்டுள்ள நாம் கால வறையரைக்கு உட்பட்டவர்கள்.
நமக்கு அருளப்பட்ட காலத்தை இறைவனுக்காகச் செவ்வனே பயன்படுத்தினால்
காலங்களுக்கு அப்பாற்பட்ட அவரோடு நிலை வாழ்வு வாழும் பாக்கியம் பெறுவோம்.
சாத்தானின் வேலை நாம் நேரத்தைச் இறைவனுக்காகப் பயன்படுத்தாமல் தடுப்பதுதான்.
அதி காலையில் காலைசெபம் சொல்ல எழ ஆரம்பித்தால், சாத்தான் கண் இமைகளில் உட்கார்ந்து கொண்டு,
"படுத்துக் கொண்டே செபம்சொன்னால் படுத்திருப்பதும் செபமாக மாறும்"
என்று ஆலோசனை கூறும்.
சொல்வது சாத்தான் என்று நமக்குத் தெரியாது.
நாம் அது நல்ல எண்ணம்தான் என்று படுத்துக் கொண்டே செபம்சொன்னால்
தூக்கம்தான் மிஞ்சும்.
ஒரு இளைஞன் கூறுகிறான்,
"கடவுள் எங்கும் இருக்கிறார்.
நானே பரிசுத்த ஆவியின் ஆலயம்தான்.
எங்கும் இருக்கும் கடவுளோடு எங்கிருந்து பேசினால் என்ன?
நான் கோவிலுக்கெல்லாம் செல்வதில்லை!
நான் வீட்டிலிருந்து பேசுகிறேன்."
இந்த அற்புதமான ஆலோசனையை சாத்தானைத் தவிர வேறு யார் கொடுத்திருக்கமுடியும்!
சாத்தானின் இன்னொரு ஆலோசனை,
"எனக்கு என்னென்ன வேண்டுமென்று கடவுளுக்குத் தெரியும்.
செடியை நட்டவர் செடிக்கு தண்ணீர் ஊற்றமாட்டாரா?
என்னைக் கேளாமலே என்னைப் படைத்தவர் நான் கேளாமலே எல்லாம் தருவார்.
அவரைப் பார்த்து செபம் சொல்வது Waste of time!"
"ஏன் ஞாயிற்றுக் கிழமை பூசைக்குப் போகவில்லை?"
ஒரு சாத்தானின் பதில்,
"கடவுள் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார்.
நானும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்."
"ஏன் பாவசங்கீத்தனம் செய்வதில்லை?"
என்றால் ஒரு சாத்தான் பதில் சொல்கிறது,
"யாரும் இயேசுவிடம் போய் பாவசங்கீத்தனம் செய்யவில்லையே!
அவராகத்தான் பாவிளை மன்னித்தார்.
என்னையும் மன்னிபார்."
பேசவிட்டால் சாத்தான் யோக்கியன் மாதிரி பேசுவான்,
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன்,
"இன்று கடவுள் 24 மணி நேரத்தைத் தந்தார்.
அதில் எவ்வளவு நேரத்தை அவருக்காகச் செலவிட்டேன்?"
என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடம்
-----------
கடவுளுக்கு இடம் தேவை இல்லை, ஏனெனில் அவர் ஆவி.
ஆனால் உலகம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது.
கடவுளுக்கு இடம் தேவை இல்லை என்றாலும், அவரது சக்தி இன்றி இடம் இல்லை.
நாம் கடவுளுக்காக இடத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?
1. ஆலயங்கள் எழுப்புகிறோம்.
ஆலயங்களின் நோக்கம்?
இறைவனை வழிபட, திருப்பலிகள் மூலம், செபக்கூட்டங்கள் மூலம்,
தியானங்கள் மூலம்.
நற்கருணை ஸ்தாபகம் உள்ள ஆலயங்களில்
இயேசு உண்மையாகவே
தனது உடல், இரத்தம், ஆன்மாவோடு
அப்ப, ரசக் குணங்களில்
வீற்றிருக்கிறார்.
நற்கருணையைச் சந்திக்கும்போது உண்மையாகவே இயேசுவைச் சந்திக்கிறோம்.
திருப்பலியின்போது உண்மையாகவே இயேசுவை ஆன்மீக உணவாகப் பெறுகிறோம்.
இதுவரை சரி.
ஆனால் நல்லவன் போல நடித்து ஏமாற்ற சாத்தான் உள்ளே நுழைந்து விடுகிறானே!
சாத்தானுக்கு இயேசுவைப் பின்தொடர்ந்து போவது பிடிக்கும்போல!
யூதாசுக்குப் பண ஆசையை ஊட்டியவன் சாத்தான்.
இயேசு சென்ற இடமெல்லாம்,
அவருடைய பாடுகளின் தொடக்கம்வரை,
யூதாசும் அவரைப் பின்தொடர்ந்தான்.
ஆலயங்கள் இயேசுவை வழிபட கட்டப்படுகின்றன.
வழிபடச்செல்லும் நம்மை திசை திருப்ப ஆலயங்ளைச் சுற்றிவந்து கொண்டிருக்கிறான்.
ஆலயங்கள் கட்டப்படும்போதே கட்டுபவர்களைத் திசைதிருப்புகிறான்
இயேசு ஏழ்மையை விரும்புகிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.
மாடு அடையும் குடிலில் பிறந்து,
தச்சன் வீட்டில் வளர்ந்து,
பொதுவாழ்வில் தலை சாய்க்கக் கூட இடமின்றி வாழ்ந்து,
மரச்சிலுவையில் அறையப்பட்டு,
அடுத்தவர் கல்லறையில் அடக்கம் அடக்கம் செய்யப் பட்டவர்
நசரேத் ஊர் ஏழை!
இயேசுவின் வாழ்க்கையை அப்படியே பின்பற்றியவர் அசிசி ஏழை! (Poverello of Assisi)
இயேசுவுக்காகக் கட்டப்படும் ஆலயங்கள் நசரேத் ஊர் ஏழையைப் பிரதிபலிப்பனவாகவா இருக்கின்றன?
"நான் ஆடையின்றி இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள்''
என்று தன்னைக் குறித்து பேசிய இயேசுவுக்கு
கோடிக்கணக்கில் செலவழித்து, கலையழகோடு ஆலயங்கள் கட்டுகிறோம்.
ஆலயங்களுக்குள் நுழையும்போது நமது கண்களை முதலில் இழுப்பது ஆலயத்தின் கம்பீரமும், கலையழகும்தான்.
அப்புறம்தான் இயேசு வாழும் பேழை.
இயேசுவிடமிருந்து நம்மை எது கவர்ந்தாலும் அது எதிரியின் வேலைதான்!
நான் கிராமங்களிலுள்ள எளிமையான ஆலயங்களைக் குறிப்பிடவில்லை.
திருத்தலங்களிலுள்ள ஆலயங்களின் பெருமையை மதிப்பிடுவது
அங்கு வரும் கூட்டத்தையும், பிரியும் காணிக்கையையும் வைத்தா,
அல்லது,
அங்கு கேட்கப்படும் பாவசங்கீத்தனங்களின் எண்ணிக்கையை வைத்தா?
இதன் விடையை வைத்து இயேசு எதிர்பார்க்கும் ஆன்மீகம் நமது ஆலயங்களில்ம வளர்கிறதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கோவில்கள் எளிமையாய் இருக்க வேண்டும்.
அங்கு ஆன்மீகம் செழித்து வளர வேண்டும்
2.அடுத்து நாம் இடத்தைப் பள்ளிக்கூடங்கள் கட்டப் பயன்படுத்துகிறோம்.
இந்தியாவுக்கு நற்செய்திப் பணிக்காக வந்த வெளிநாட்டவர்
நற்செய்தியைப் பரப்புவதற்காகத்தான் பள்ளிக்கூடங்களைக் கட்டினர்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்
குருக்களின் மேற்பார்வையில் நடைபெறும் பள்ளிகள்
அவர்களின் நற்செய்தி பணி நேரத்தை விழுங்கிவிடுகின்றன.
அவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள விசுவாசிகளின் ஆன்மீகத்தைக் கவனிக்க வேண்டிய நேரத்தையும்
பள்ளிக்கூடங்ள் அபகரித்துக்கொள்வதால்
பாதிக்கப்படுவது ஆன்மாக்கள்தான்.
சாத்தான் பள்ளிக்கூடங்கள் மூலமாக குருக்களின் குருத்துவப் பணிக்கு இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறான்.
பள்ளிக்கூடங்கள் நல்லவைதான்.
ஆனால் சாத்தான் நல்லவற்றைத்தான் தன் கருவியாகப் பயன்டுத்துகிறான்.
அப்போதுதானே அவன்மேல் சந்தேகம் வராது!
பொருள்,பணம்
--------------
மக்கள் பயன்டுத்தும் பொருளும், பணமும் மக்களின் வாழ்க்கைக்கு அவசியமானவைதான்.
ஆனால் நாம் அவற்றுக்கு மித மிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கும்போது
நமது ஆன்மாவைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
நமது ஆன்மாவைக் கெடுக்க சாத்தான் கையிலெடுக்கும் பயங்கரமான ஆயுதம் பணம்.
ஏனெனில் பணத்தின் உதவி இன்றி இவ்வுலகில் வாழ்வது கடினம்.
ஆனால் பணத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்தால்
நிலைவாழ்வு கையைவிட்டுப் போய்விடும்.
நம்மைத் தன் வசப்படுத்ததான்
சாத்தான்
நமக்கு பணத்தின் மீதும், உலகப்பொருட்கள் மீதும்
மிதமிஞ்சிய பற்றை ஏற்படுத்த முயற்சி செய்கிறான்.
நம்மால் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.
இறைவன் மட்டுமே நமது எஜமான்.
உலகப் பொருட்கள் மீது பற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இறைவனை நன்கு பற்றிக்கொண்டால் சாத்தானின் பாச்சா நம்மிடம் பலிக்காது.
ஆகவே
இயேசுவை நன்கு பற்றிக்கொள்வோம்.
உலகில் வாழ்ந்தாலும்
உலகிற்காக வாழாமல்
உலகைப் படைத்தவருக்காக வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment