"ஆனால் உள்ளே நுழையவில்லை." (அரு.20:5)
* * * * * * * * * * * *
"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்"
என்ற செய்தியைக் கேட்டவுடன் இராயப்பரும், அருளப்பரும் ஓடினார்கள், கல்லரையை நோக்கி.
இருவரும் ஏன் ஓட வேண்டும்?
ஆண்டவரை யாரோ எப்படி எடுத்து விட்டுப் போயிருக்க முடியும்?
ஏற்கனவே ஆண்டவர் 'மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன்'னு சொல்லியிருக்கிறார்.
ஞாபகமில்லையா?
அல்லது
விசுவாசம் இல்லையா?"
விசுவாசம் இருந்தது, ஆனால் போதிய அளவு இல்லை.
இருந்திருந்தால் செய்தி வந்தவுடன்
"உடலைக் காணவில்லையா?
மகிழ்ச்சி. ஆண்டவர் சொன்னபடி உயிர்த்து விட்டார்.
நம்மைத் தேடி வருவார். அருளப்பா, உட்காருங்கள்.
உடனே வருவார். அவர் வரும்போது நாம் இங்கே இருக்க வேண்டும்."
என்று மகிழ்ச்சியோடு இருந்திருக்க வேண்டுமே!
"அற்ப விசுவாசிகளே" என்று ஆண்டவர் சொன்னது சரிதான்!
அருளப்பர் இராயப்பரை விட வயதில் குறைந்தவர். ஆகவே அவரைவிட வேகமாக ஓடி முதலிலேயே கல்லரையை அடைந்து விட்டார்.
குனிந்து உள்ளே பார்த்தார்.
தரையில் துணிகள் கிடக்கக் கண்டார்.
ஆனால் உள்ளே நுழையவில்லை.
ஓடிவந்த வேகம் நுழைவதில் இல்லை.
ஏன் நுழையவில்லை? அவரிடம்தான் கேட்க வேண்டும்.
இராயப்பர் வந்தவுடன் கல்லறைக்குள் நுழைந்து விட்டார்.
அப்புறமாக அருளப்பர் நுழைந்தார்.
ஒரு வேளை தலைவருக்கு முன்னால் நுழையக்கூடாது என்று காத்திருந்தாரோ?
அப்படித்தான் இருக்கும்.
நாமும்கூட அவரிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாமே,
மூத்தோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று!
உள்ளே நுழைந்து பார்த்தபிறகுதான் இயேசு உயிர்த்ததை விசுவசித்தார்கள்.
இயேசு மதலேன் மரியாளுக்குதான் முதலில் காட்சியளித்தார்.
"பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தேன்" என்று சொன்னவர் இறை மகன் இயேசு.
மதலேன் மரியாள் பாவியாய் இருந்து,
பாவங்களுக்காக மனம் வருந்தி அழுது
பாவ மன்னிப்புப் பெற்றவள்.
ஆகவேதான் இயேசு அவளுக்கு முதலில் காட்சி கொடுத்தார்.
மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன்" என்றாள்.
உலகிற்கு முதன்முதல் இயேசு உயிர்த்த நற்செய்தியை அறிவித்தவள் மனம் திரும்பிய பாவிதான்!
இதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. நாமும் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு வந்தார்.
மதலேன் மரியாள் அப்போஸ்தலர்களை விட பாக்கியசாலியாய் இருந்ததுபோல,
நாமும் குருக்களை விடவும், ஆயர்களை விடவும், பாப்பரசரை விடவும்
நாம் தான் பாக்கியசாலிகள்.
ஏனெனில் பாவிகளாகிய நம்மைத்தான் இயேசு அதிகம் நேசிக்கிறார்.
நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.
நாம் மனம் வருந்தி சிந்தும் கண்ணீர் உலகத்திலுள்ள அத்தனை செல்வங்களையும் விட மதிப்பு கூடியது, கடவுள் முன்னால்.
அருளப்பர் இயேசுவுக்குப் பிரியமான சீடர்தான்.
ஆனால் விசுவசிப்பதில் தாமதம் செய்தாரே!
அருளப்பர் எப்போது விசுவசித்தார்?
"உள்ளே நுழைந்து பார்த்தார்: பார்த்து விசுவசித்தார்."
நமக்கும் அப்படித்தான்.
உள்ளே நுழைந்து பார்க்காவிட்டால் விசுவாசம் வராது.
"நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு வந்தார்.
நாம் சிந்தும் கண்ணீருக்கு விண்ணகத்தில் மதிப்பு அதிகம்."
என்ற உண்மையை நாம் அறியும்போது நமது விசுவாசம் வலுப்பெறுகிறது.
இந்த உண்மை எங்கு இருக்கிறது?
பைபிளுக்கு உள்ளே இருக்கிறது.
பைபிளை எப்போதும் கையில் வைத்திருப்பதாலோ,
அப்பப்போ திறந்து பார்ப்பதாலோ,
திறந்து வாசிப்பதாலோ
நமது விசுவாசம் வலுப்பெறாது.
ஆற்றுக்குப் போகிறோம். தெளிவான நீர்.
நீருக்குள்ளே ஆயிரக்கணக்கான மீன்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.
மீன்களைப் பார்ப்பதனால் அவை நம் கைக்கு வந்து விடுமா?
தண்ணீருக்குள் இறங்காமல் மீன் பிடிக்க முடியாது.
அதே போல்தான் பைபிள் வசனங்களைப் பார்ப்பதாலோ,வாசிப்பதாலோ விசுவாசம் வந்து விடாது.
வசனத்திற்குள் நுழைந்து, அதற்குள் இருக்கிற செய்தியைத் (Message) தேட வேண்டும்.
அதற்கு முதற்படியாக அந்த வசனத்தைத் தியானிக்க வேண்டும்.
நமக்கு ஏற்றவாறு வசனத்திற்குப் பொருள் கொடுப்பதற்காக பொருளை வளைக்க முயலக்கூடாது.
பரிசுத்த ஆவியின் துணையோடு நாம் தியானித்தால்
அதன் செய்தியும்,
அந்தச் செய்தியை எப்படி நமது வாழ்வாக்குவது என்பதும் புரியும்.
கண்டுபிடிப்பது கடினமாக இருந்தால், அதற்கென்றே இருக்கின்ற பங்குச் சாமியாரைத் தேடிப்போய் விளக்கம் கேட்க வேண்டும்.
விளக்கத்தை அறிந்து செய்தியை வாழ்வாக்க வேண்டும்.
அநேகர் பைபிளை வாசிப்பார்கள்.
வசனங்களை மேலெழுந்த வாரியாகப் பார்த்து அவர்கள் மனதில் தோன்றுகிற விளக்கத்தை அவர்களாகவே கொடுத்துக் கொள்வார்கள்.
இங்கே வேறொரு விசயத்தைக் குறிப்பிபிடாமல் இருக்க முடியவில்லை.
ஒரு Analogy.
"எல்லோரிடமும் கணக்குப் புத்தகம் இருக்கா?"
"இருக்கு சார்."
"Very good. Class work நோட்டை எடு.
எடுத்தாச்சா? புத்தகத்திலுள்ள முதல் பயிற்சியிலுள்ள முதல் கணக்க எடு.
நல்லா வாசி. சரி இப்ப கணக்கைச் செய்."
மாணவர்கள் கணக்கை வாசித்துக் கொண்டே இருந்தார்கள்.
செய்யவில்லை.
ஒரு பையன் சொன்னான்,
"எப்படி சார் செய்யணும்?"
இப்படித்தான் பைபிள் வாசிப்பும்.
வாசித்ததைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் வாசித்து என்ன பயன்.
பைபிளைக் கொடுக்கிறோம். அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு பயிற்சி கொடுக்கிறோமா?
பைபிள் விளக்கப் (commentary) புத்தகங்களாவது கொடுக்கிறோமா?
உபயோகிக்கத் தெரியாதவன் கையில் கத்தியைக் கொடுப்பது ஆபத்து.
சம்பந்தப் பட்டவர்கள்
சிந்திக்கவும்
ஒரு வசனத்திற்குள் நுழைந்து பார்ப்போமா?
"அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்."
இயேசு தன் தாயோடும், சீடரோடும் கானாவூர் திருமணத்திற்குச் சென்றிருக்கிறார்.
பந்தி முடியும் முன் இரசம் தீர்ந்து விட்டது.
மரியாள் இரக்க சுபாவம் உள்ளவள்.
எப்படியாவது திருமண வீட்டாருக்கு உதவ வேண்டும்.
தன் மகன் கடவுள் என்று அவளுக்குத் தெரியும்.
அவர் எல்லாம் வல்லவர் என்றும் தெரியும்.
அவர் இரக்கம் உள்ளவர் என்றும் அவளுக்குத் தெரியும்.
அவர் கட்டாயம் உதவுவார் என்றும் அவளுக்குத் தெரியும்.
ஆகவே அவரிடம் சென்று,
அவரை நோக்கி,
"இரசம் தீர்ந்துவிட்டது" என்று மட்டும் சொல்கிறாள்.
"உதவி செய்யும்" என்று சொல்லவில்லை.
ஏனெனில் பிரச்சனையைச் சொன்னால் போதும், தீர்வு அவர் காண்பார் என்று
அவளுக்குத் தெரியும்.
ஆனால் இயேசு ,
"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை"
என்கிறார்.
இயேசுவின் பதில் நமது பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிகிறது.
ஆனால் மாதாவுக்குத் தன் மகனைப்பற்றி நன்கு தெரியும்.
ஆகவே மகனிடம் வேறு ஒன்றும் சொல்லாமல்,
பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.
இயேசு ஏன்,
"எனது நேரம் இன்னும் வரவில்லை"
என்று சொன்னார்?
இயேசு கடவுள். அளவற்ற ஞானம் உள்ளவர்.
"கானாவூரில் திருமணம் நடக்கும்,
அம்மாவும் நாமும் அங்கு போவோம்,
இரசம் தீர்ந்துபோகும்,
அம்மா விசயத்தைச் சொல்லுவாங்க,
-நாம தண்ணீரை இரசமாக்குவோம்"
என்று நித்தியகாலமாகவே அவருக்குத் தெரியும்.
அதுமட்டுமல்ல இயேசு அளவற்ற இரக்கம் உள்ளவர்.
பின் ஏன்,
"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.
இயேசு தன் தாயின் மேல் அளவற்ற அன்புள்ள்ளவர் மட்டுமல்ல 30 ஆண்டுகள் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்.
30 ஆண்டுகள் மட்டுமல்ல எப்போதுமே அம்மா சொல் தட்டாதவர்.
கடவுளால் தன் திட்டத்திற்கு விரோதமாக தானே செயல்பட முடியாது.
அதனால்தான் கடவுளால் பாவம் செய்ய முடியாது என்கிறோம்.
தண்ணீரை இரசமாக மாற்ற நித்திய காலமாக திட்டமிட்டிருக்கும்போது
அத்திட்டத்திற்கு எதிராக அவர் போகவேமாட்டார்.
இயேசு ஏதாவது ஒரு விசயத்தை அழுத்திச் சொல்ல வேண்டுமானால்,
அதன் அழுத்தத்தை அதிகரிக்க தன்னையே தாழ்த்திக் கொள்வது போன்ற சொற்களைப் பயன்டுத்துவார்.
இறுதிகால வரவு எப்போது என்று யாருக்கும் தெரியாது என்பதை அழுத்த,
"தந்தைக்குத் தெரியுமேயன்றி
மகனுக்கும்கூடத் தெரியாது."
(மாற்கு.13:32) என்றார்.
தந்தையும், மகனும்,பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்.
கடவுளுக்கு மட்டும் தெரிவது
கடவுளாகிய மகனுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும?
ஆனால் ஒரு உண்மைக்கு அழுத்தம் கொடுக்க இயேசு பயன்படுத்தும் Technique இது.
"என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்: ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்."
என்னில் விசுவாசங்கொள்பவன் நான் "செய்யும் செயல்களையும் செய்வான்:"
என்பதை அழுத்த
"அவற்றினும் பெரியனவும் செய்வான்."
என்பது Technique.
விசுவாசம் உள்ளவன் செய்வதே இயேசு செய்வதுதான்.
அவர் செய்வதைவிட பெரியன செய்ய எந்த கொம்பனாலும் முடியாது.
அதேபோல்தான்
மாதாவால் தன் மகன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கவே
தன் நேரம் வருமுன்னே தாய்க்காகச் செய்வதாகக்
காட்டிக் கொள்கிறார்.
அதாவது இதை வாசிப்பவர்களுக்கு
"இயேசு தான் திட்டமிட்ட நேரம் வராவிட்டாலும்கூட தன் தாயின் சொல்லைத் தட்ட முடியாமல் அவள் சொன்னதைச் செய்வார்"
என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?
உண்மையில் தன் திட்டத்துக்கு மாறாகக் கடவுளால் எதுவும் செய்ய முடியாது.
ஆனால் தாயின் பரிந்துரைக்கு அவரிடம் இருக்கும் அளவற்ற செல்வாக்கை அழுத்தமாகக் கூற இந்த Techniqueகை இயேசு பயன்படுத்துகிறார்!
இவ்விசயத்தை அருளப்பர் எழுதுவார் என்றும், நாம் அதை வாசிப்போம் என்றும் இயேசுவுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
நம்மிடம் மாதா பக்தியை வளர்க்கவே இந்த Techniqueஐப் பயன்படுத்தினார்.
நாம் மாதா வழியாக அவரிடம் சென்றால் நமது செபத்திற்கு சக்தி அதிகம் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.
இதற்காகத்தான் சிலுவையில் மரிக்கும் முன்
'இதோ உன் தாய்' என்று கூறி
தன் தாய்க்கு நம்மையும் பிள்ளைகள் ஆக்கினார்."
ஒரு வசனத்திற்குள் கொஞ்ச தூரம் நுழையும்போதே இவ்வளவு விசயம் அகப்பட்டிருக்கு.
இன்னும் ஆழமாய் நுழைந்தால் இன்னும் ஏராளமான விசயம் கிடைக்கும்.
நமது விசுவாசம் ஆழமாக வேண்டுமென்றால் இறை வசனத்திற்குள் ஆழமாக நுழைய கற்றுக் கொள்ள வேண்டும்.
நமக்குப் பைபிளைத் தந்தவர்கள்தான் இதைக் கற்றுத்தர வேண்டும்.
லூர்துசெல்வம்.