Tuesday, November 30, 2021

செல்வத்தின் வருகை.

      செல்வத்தின் வருகை.

திருவருகைக் காலத்தை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து தியானிப்போம்.

திருவருகைக் காலம் என்றால் ஆண்டவரது வருகைக்காக தயாரிக்கும் காலம்.

திருவருகை என்ற வார்த்தையை 
திரு + வருகை என்று பிரித்துக் கொள்வோம்.

திரு என்ற சொல் ஆண்டவரை குறிப்பதாக வைத்துக் கொள்வோம்.

திரு என்ற சொல்லுக்கு தமிழில் , செல்வம் என்ற பொருள் உண்டு.

செல்வம் என்ற பொருளில் எடுத்துக் கொண்டால்

திருவருகை என்ற சொற்றொடர் செல்வத்தின் வருகை என்று பொருள்படும்.

ஆண்டவராகிய இயேசு தான் நமது செல்வம்.

திருவருகைக் காலத்தை செல்வத்தின் வருகைக் காலம் என்ற அடிப்படையில் தியானிப்போம்.

இயேசுவை செல்வம் என்ற பொருளில் தியானிப்பதில் என்ன விசேஷம் இருக்கிறது?

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:
 ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே." (லூக்.6:20)

இந்த இறைவாக்கிலிருந்து இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.கடவுளின் அரசுக்கு உரியவராக இயேசு ஒரு செல்வந்தர். 
அந்த செல்வந்தர் தான் நமது செல்வம்.

2, அந்த செல்வத்துக்கு நாம் உரியவர்கள் ஆக வேண்டுமென்றால் நாம் அவரைப்போல் ஏழைகளாக இருக்க வேண்டும்.

அதை நமக்கு புரிய வைப்பதற்காகத்தான் செல்வந்தர் ஆகிய இயேசு ஏழையாக பிறந்தார்.

இப்போது ஒரு முக்கியமாக உண்மை புரிந்திருக்கும்.

திருவருகைக் காலம் என்றால் ஏழையின் வருகைக் காலம்.

மரியாள் என்ற ஏழைப் பெண்மணியின் மகனாகப் பிறந்த ஏழையின் வருகைக் காலம்.

பிறக்கக் கூட இடம் இன்றி மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏழையின் வருகைக் காலம்.

படுக்க மெத்தை கிடைக்காமல் மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்த ஏழையின் வருகைக் காலம்..

முதல் முதலில் ஏழைகளாகிய ஆட்டு இடையர்கள் பார்க்கச் சென்ற ஏழையின் வருகைக் காலம்.

உணவிற்காக தச்சு வேலை செய்து வாழ்ந்த ஏழையின் வருகைக் காலம்.

பொது வாழ்வின் போது தலை சாய்க்க கூட இடம் கிடைக்காத
ஏழையின் வருகைக் காலம்.

வாழ்வின் இறுதிக்காலத்தில் உடுக்கக் கூட துணி இல்லாமல் மரத்தாலான சிலுவையில் உயிர் விட்ட ஏழையின் வருகைக் காலம்.

இப்போது மற்றொரு உண்மையும் 
புரிந்திருக்கும்.

ஏழ்மை தான் உண்மையான செல்வம்.

இயேசு நமது செல்வம்.
அதாவது,
இயேசு நமது ஏழ்மை.

நாம் ஏழைகளாக இருந்தால்தான் இயேசுவை நமது செல்வம் என்று அழைக்க முடியும்.

நாம் ஏழைகளாக இருந்தால்தான் அவரது அரசுக்குள் நுழைய முடியும்.

கிறிஸ்மஸ் ஏழைகளின் விழா.

ஏழைகளின் விழாவை எப்படி கொண்டாட வேண்டும்?

நமது கொண்டாட்டத்தில் ஏழ்மை இருக்க வேண்டும்.

இலட்சக்கணக்காய் செலவழித்து புத்தாடை வாங்குவது ஏழ்மையின் அடையாளமா?

இலட்சக்கணக்காய் செலவழித்து வீட்டை அலங்கரிப்பது ஏழ்மையின் அடையாளமா?

ஒரு ஏழை பிறந்த குடில் தயாரிக்க ஆயிரக்கணக்காய் செலவழிப்பது 
ஏழ்மையின் அடையாளமா? 

கிறிஸ்மஸ் விருந்துக்கு என்று ஆயிரக்கணக்காய் செலவழிப்பதுதான் ஏழ்மையின் அடையாளமா? 

எதுதான் ஏழ்மையின் அடையாளம்? 

அண்ட வருக்காக ஏழையாய் மாறினாலே போதும். வேறு அடையாளம் தேவை இல்லை.

ஏழையாக மாறுவது எப்படி?

"பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக பற்று விடற்கு."

அனைத்தும் சொந்தமாக இருந்தும் அவற்றின் மீது பற்று இல்லாமல் பிறந்த இயேசுவைப்போல்
 ஏழையாக மாற வேண்டும்.

 அதற்காகத்தான் திருவருகைக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

கையில் காசு இல்லாதவன் எல்லாம் ஏழை அல்ல.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரனும் அல்ல.

கையில் காசே இல்லாதவனும் பணத்தில் மேல் ஆசை உள்ளவனாக இருந்தால் அவன் பணக்காரன்தான்.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவனும் பணத்தில் மேல் ஆசை இல்லாதவனாக இருந்தால் அவன் ஏழைதான்.

அகில உலகமே சொந்தமாக இருந்தும் இயேசு அதன் மேல் பற்று இல்லாமல் ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.

அதனால்தான் எளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்றார்.
Blessed are the poor in spirit.

நாம் உண்மையிலேயே கையில் காசு இல்லாதவர்களாக இருந்தால் நமது ஏழ்மையை ஆண்டவருக்கு ஒப்பு கொடுக்கவேண்டும்.

கையில் கொஞ்சம் வசதி உள்ளவர்களாக இருந்தால் அதன்மீது பற்றில்லாமல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கவேண்டும்.

நம்மிடம் இருப்பதை இல்லாத ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதுதான் கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பது.

அப்படி பகிர்ந்து கொள்பவர்களைப் பார்த்துதான் இயேசு 

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். 

தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.''
என்று சொல்லுவார்.
 
நம்மிடம் இருப்பதன்மேல் பற்றில்லாமல் ஏழைகளோடு பகிர்ந்துகொண்டு 

ஏழை இயேசுவைப்போல் வாழ்வதற்காக தான் திருவருகைக்காலம் தரப்பட்டுள்ளது.

இலட்சக் கணக்காய் செலவழித்து ஆடம்பரமாய் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு நம்மையே தயாரிப்பதற்காக அல்ல.

கிறிஸ்மஸ் dress வாங்க வேண்டியது நமக்கு அல்ல,
 இயேசு பாலனுக்கு, அதாவது இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு.

கிறிஸ்மஸ் விருந்து கொடுக்க வேண்டியது நமக்கு அல்ல,
 இயேசு பாலனுக்கு, அதாவது இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு.

அலங்கரிக்க வேண்டியது வீட்டையோ, கோவிலையோ குடிலையோ அல்ல,
நமது ஆன்மாவை, புண்ணியங்களால்.

கிறிஸ்மஸ் அன்று எளிய உடைகளை அணிந்திருக்கும் இயேசுவை Tip top dress அணிந்து பார்க்கச் சென்றால் நமது பணத் திமிரை அவரிடம் காட்டுவது போல் இருக்கும்.

சூசையப்பரும், அன்னை மரியாளும், இடையர்களும் எவ்வளவு எளிமையோடு கிறிஸ்மசைக் கொண்டாடினார்களோ,

 அவ்வளவு எளிமையோடு நாமும் கொண்டாடுவோம்.

அதற்கு நம்மை நாமே தயாரிப்பதற்காகத்தான் திரு வருகைக் காலம் தரப்பட்டுள்ளது.

ஆகவே 
ஏழை இயேசுவின் நினைவோடும், ஏழைகளின் உறவோடும்,
உண்மையான பக்தியோடும்,
தவ முயற்சிகளோடும்,

எளிய முறையில் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட 
தரப்பட்டிருக்கிற திருவருகைக் காலத்தில் நம்மை நாமே தயாரிப்போம்.

ஏழ்மைதான் உண்மையான செல்வம் என்பதை நினைவில் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment