Saturday, November 13, 2021

"தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான். " (லூக்.17:33)

"தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான். " 
(லூக்.17:33) 

உலகியல் ரீதியாக ஒரு ஒப்புமை:

கையில் மாம்பழம் ஒன்று இருக்கிறது.

 பழத்தைச் சாப்பிடுகிறோம்.  மாங்கொட்டை மட்டும் கையில் இருக்கிறது.

கையில் இருக்கும் மாங்கொட்டையை என்ன செய்யலாம்?

ஒன்று பத்திரமாக பெட்டிக்குள் பூட்டி வைக்கலாம்.

அல்லது தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைக்கலாம்.

பெட்டிக்குள் பூட்டி வைத்தால்  அது நம்மோடு இருக்கும்.

மண்ணில் புதைத்து வைத்தால் நாம் அதை இழந்து விடுவோம்.

நம்மோடு இருப்பதால் நமக்கு என்ன பயன்? அதை அப்பப்போ பார்த்து ரசிக்கலாம். அவ்வளவுதான்.

ஆனால் அதை நாம் மண்ணுக்குள் இழந்து விட்டால்,
 அது முளைத்து,
 தளிர் விட்டு,
 கன்றாகி,
மரமாகி,
பூத்து,
காய்த்து,
ஆயிரக்கணக்கான ருசியான மாம்பழங்களை தரும்.

இழப்பது ஒரு மாங்கொட்டை.
திரும்ப பெறுவது ஆயிரக்கணக்கான மாம்பழங்கள்.


 சென்னையிலிருந்து இரயிலில் தென்காசி நோக்கி பயணிக்கிறோம்.

ACஉட்பட சகல வசதிகளையும் கொண்ட முதல் வகுப்பு வண்டியில்.

தென்காசி வந்த பிறகும் வசதியான பிரயாணத்தை இழக்க விரும்பவில்லை.

தென்காசியில் இறங்காமல் தொடர்ந்து பயணிக்கிறோம்.

பயணம் ஏதாவது ஒரு நிலையத்தில் முடிந்துவிடும்.

ஆனால் வீட்டிற்கு வந்திருக்க மாட்டோம்.

பிரயாணத்தை இழந்தால் வீடு.
இழக்காவிட்டால்  பிரயாணம் மட்டுமே.

 வீட்டில்தான் வாழ்க்கை, பிரயாணத்தில் அல்ல.

ஆன்மீகத்தில் ஆன்மா உடலை இழந்தால்தான் விண்ணக வீட்டிற்குச் செல்ல முடியும்.

ஆன்மாவும், உடலும் இணைந்து வாழ்வதை உயிருடன் வாழ்தல்
 என்போம்.

இது உடலைச் சார்ந்த உயிர்.

உடலைச் சார்ந்த உயிர் பிரியும்போது ஆன்மா உடலை விட்டு பிரிந்துவிடுகிறது.

இறைவன் அருளும் புனிதமாக்கும் அருள் (Sanctifying grace) ஆன்மாவின் உயிர்.

ஆன்மீக வாழ்வில் உடலைச் சார்ந்த உயிரைவிட ஆன்மாவின் உயிர்தான் முக்கியம்.

உடலைவிட்டு உயிர் பிரியும்போது ஆன்மா புனிதமாக்கும் அருளாகிய உயிரோடு இருந்தால்தான் விண்ணக வீட்டிற்குள் நுழைய முடியும்.

நாம் உலகில் வாழ்வதே  விண்ணக வாழ்விற்காகத்தான்.

விண்ணக வாழ்வை விரும்புபவன் எப்போதும் புனிதமாக்கும் அருளாகிய உயிரோடு இருக்க வேண்டும்.

''தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான்."

உலக வாழ்வை மட்டும்  பாதுகாக்க முயற்சி செய்பவன் விண்ணக வாழ்வை இழந்துவிடுவான்.

உலக வாழ்வை இழக்க  தயாராக இருப்பவன் தான் விண்ணக வாழ்வை அடைவான்.

இறைவனுக்காக மரித்த வேதசாட்சிகள்  உலகில்  தங்கள்  உயிரைத் தியாகம் செய்ததால்

விண்ணகத்தில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகில் உயிரை இழக்க மனமில்லாமல் இறைவனை மறுப்பவர்கள் 

விண்ணக உயிரை இழந்துவிடுவார்கள்.

 உலகில் நீண்ட நாள் வாழ விரும்புகிறவர்கள் தங்கள் உடலைப் பேணுவார்கள்.

 விண்ணகத்தில் நித்திய காலமும் வாழ விரும்புகிறவர்கள் தங்களது ஆன்மாவைப் பேணுவார்கள்.

ஆன்மாவைப் பேணுபவர்கள்  ஆன்மாவை  இறைவன் அருளால் நிறப்புவதற்காக உழைப்பார்கள்.

ஜெப, தவ முயற்சிகளினால் மட்டுமே இறையருளை நிறைய பெற முடியும்.

ஆன்மா இறைவனோடு இணைந்து வாழ்வது ஜெப வாழ்வு.

 ஒறுத்தல்  முயற்சிகளால் உடலை  அடக்கி வாழ்வது தவ வாழ்வு.


 உடல் கேட்டதையெல்லாம் கொடுப்பவனால் அதை அடக்கி ஆளமுடியாது.

 உடல் ஆசைப்படுவதை எல்லாம் கொடுக்க முயல்பவனால்

ஆன்மா ஆசைப்படும் அருள் வாழ்வைப் பெற முடியாது.

ஆன்மா அருள் வாழ்வைப் பெற்று வாழ அதற்கு உதவிகரமாக இருப்பதற்கே அதற்கு உடல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வினாடியும் உடல் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

அப்போதுதான் அதனால் உடலை இறைவன் அருளைப் பெறுவதற்காகப்  பயன்படுத்த முடியும்.

அதிகாலையில் இறைவனை நினைத்த படியே எழுந்து,

காலை ஜெபத்தை சொல்லிவிட்டு

நாளின் பணியை ஆரம்பிக்க ஆன்மா ஆசைப்படும்.

உடலோ இன்னும் கொஞ்சம் தூங்க ஆசைப்படும். 

ஆன்மா அதன் ஆசைக்கு இணங்காமல் அதை தட்டி எழுப்பி விட்டால் அந்த முயற்சிக்காகவே இறைவன் அருள் ஆன்மாவுக்கு கிடைக்கும்.

உடல் தனது வசதியை இழந்தால்தான் ஆன்மா ஆண்டவரது அருளைப் பெறும்.

இழப்பு இன்றி பேறு இல்லை.

ஒரு சந்தி இருத்தல், 
சுத்தபோசனம் அனுசரித்தல்,
ருசிக்காக உண்ணாமல், பசிக்காக மட்டும் உண்ணல்,
 ஐம்புலன்களையும் அடக்குதல், 
ஆடம்பர வசதிகளை விலக்குதல், 

இன்னும் இதுபோன்ற உடலை அடக்கி வைக்கும் முயற்சிகளால்
உடல் சார்ந்த சிற்றின்பத்தை இழந்தால்தான்

 விண்ணகத்தில் ஆன்மாவிற்கு பேரின்பம் கிடைக்கும்.

 திருச்சபை ஒறுத்தல் முயற்சிகளுக்கும், தவ முயற்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

 தவம் செய்யவே தேவையில்லாத ஆண்டவரே மனிதராக பிறந்து தவ முயற்சிகளை செய்வதில் நமக்கு முன்மாதிரிகை காட்டினார். 

அனைத்துலகும் கீழ்ப்படிய வேண்டிய இயேசுவே  அன்னை மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்படிந்து நடந்தார்.

"உண்டாகுக" என்ற ஒரே சொல்லால் இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர்

 தான் சாப்பிட வேண்டிய உணவுக்காக தச்சுவேலை செய்தார்.

தனது நற்செய்திப் பணியை ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உண்ணாநோன்பு இருந்தார்.

அவர் பட்ட பாடுகளும், சிலுவை மரணமும் அவரது தவ வாழ்வின் உச்ச கட்டம்.

அவரே நமக்காக செய்ததை நாம் நமக்காக செய்யக்கூடாதா?

ஒரு காலத்தில் நன்மை வாங்க விரும்புவோர் நடுச்சாமம் துவக்கி நன்மை வாங்கு மட்டும் ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் இருந்தனர்.

 இப்பொழுது தாய்த் திருச்சபை
 நன்மை வாங்கு முன் ஒரு மணி நேரம் உண்ணாமலும், குடிக்காமலும் இருக்க கட்டளை கொடுத்திருக்கிறது. அதிலும் தண்ணீருக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது.  

நம்மவர்களால்  இதையே    
 கடைப்பிடிக்க முடியவில்லை.

பூசைக்கு  வரும்போதே     காபி  குடித்துக்கொண்டுதான்   வருகிறார்கள்.

கேட்டால் சாமியார் பிரசங்கமே ஒரு மணி நேரம் ஓடுமே என்று சொல்கிறார்கள்.

ஆண்டவருக்காக தங்கள் உடலை கொஞ்ச நேரம் ஒறுக்க அவர்களுக்கு மனதில்லை.

முன்பெல்லாம் நற்கருணை நாதர் முன்பு ஆராதனை செய்யும் வகையில் முழந்தாள் படியிட்டு எழுவது வழக்கம்.

ஆனால் இப்போது இளைஞர்களுக்குக் கூட முட்டு வளைய மறுக்கிறது.

ஜிம்முக்கு சென்று காசு கொடுத்து ஆயிரம் பயிற்சிகள் செய்வார்கள்.

ஆனால் கடவுள் முன் முட்டும் வளையாது, இடுப்பும் வளையாது,
தலை மட்டும் ஆடும்!

தங்கள் உடலை Trim ஆக  வைத்துக் கொள்வதற்காக செய்வதை ஆண்டவருக்காக செய்யக்கூடாதா?

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு முறை Hostel  மாணவர்கள் பூசை முடிந்து வெளியேறியபோது அவர்களது சட்டையில் ஆங்காங்கே மை தெளிக்கப்பட்டிருந்தது.

யாரோ ஒரு மாணவன் கோயில் வாசலில் இருந்த  தீர்த்த தொட்டியில்  தீர்த்தத்தோடு ink ஊற்றி வைத்திருக்கிறான்.

மாணவர்கள் Study hallல் அமர்ந்திருந்தபோது சாமியார் அதை பற்றி விசாரிக்க வந்தார்.

ஒரே ஒரு  பையனுடைய சட்டையில் மட்டும் மை இல்லை 

சாமியார்  அவன் மீது சந்தேகப்பட்டு தீர்த்தத்திற்குள் மை ஊற்றியது நீயா என்று கேட்டார்.

மையை ஊற்றியது தான்தான் 
 என்று ஏற்றுக்கொண்டான்.

"சுவாமி, சிலுவை அடையாளம் வரைவதற்காக தீர்த்தத் தொட்டியில் தீர்த்தம் ஊற்றி வைக்கப்பட்டுள்ளது.

 யாருடைய நெற்றியிலும், நெஞ்சிலும், தோள்பட்டைகளிலும் மைப்புள்ளி இருக்கிறதா என்று பாருங்கள். 

ஆக, யாரும் தீர்த்தத்தைத் தொட்டு மேலே தெளித்துக் கொண்டார்களே தவிர சிலுவை போடவில்லை.

மாணவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே இப்படி செய்தேன்."

சாமியார் சிரித்து விட்டார்.

" உனது நோக்கம் சரிதான். ஆனால் வழிமுறை தவறு."

"சுவாமி, மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன். இருந்தாலும் எப்படி சிலுவை அடையாளம் போடுவதென்று மாணவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்"  

ஆக, நமது ஒவ்வொரு செயலிலும் ஒரு தவ முயற்சிக்கு வாய்ப்பு இருக்கிறது.

தவக்காலத்தில் மட்டும் தவம் செய்தால் போதாது.

நமது வாழ்வே தவ வாழ்வாக
 இருக்க வேண்டும்.

 தவத்தினால் நாம் உலகில் சிற்றின்பத்தை இழக்கிறோம்,

 விண்ணகத்தில் பேரின்பத்தை அடைகிறோம்

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment