Sunday, November 7, 2021

" இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு!". ( லூக். 17:1)

" இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு!".
 ( லூக். 17:1)

''ஏல, இங்க வா."

"என்ன சார்?"

"நம்ம வகுப்பில் எத்தனை பேர் இருக்காங்க?"

"40 பேர் சார்"

"கையை நீட்டு."

"சார், எதுக்கு?"

"அடி கொடுக்க. உள்ளங்கையைக் கையைக் காண்பி. வகுப்பிற்கு பாடத்தைக் கவனிக்க வந்தியா? விளையாட வந்தியா?"

கையை நீட்டினான்.

"Monitor, இவனுக்கு உள்ளங்கையில அடி கொடுக்கப் போகிறேன். அடிக்க அடிக்க எண்ணிக்கொண்டே வா."

"சார், எத்தனை அடி அடிக்கப் போறீங்க?"

"40."

"சார், நான் ஒரு நேரம்தானே விளையாடிக் கொண்டிருந்தேன். அதற்கு 40 அடிகளா சார்?"

"ஒரு அடி நீ. விளையாடிக் கொண்டு இருந்ததற்கு. முப்பத்தி ஒன்பது அடி மற்ற மாணவர்களை கெடுத்ததற்கு."

"சார், நான் யாரையும் கெடுக்கல. விளையாட மட்டும்தான்."

"நீ ஒருவன் விளையாட மற்றவர்கள் அனைவரும் பாடத்தைக் கவனிக்காமல் உன்னைத்தானே பார்த்து கொண்டு இருந்தார்கள்."

"அதுக்கு அவங்கள அடிங்க சார்."

 "அவர்களையும் அடிக்கப் போகிறேன். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு அடி.

 நீ விளையாடிபதற்கு ஒரு அடி.

 முப்பத்தி ஒன்பது பேரை பாடத்தை கவனிக்க விடாமல் செய்ததற்கு முப்பத்தி ஒன்பது அடி."

"Sorry, Sir.இந்த ஒரு தடவையும் மன்னித்துக் கொள்ளுங்கள், சார்.
இனிமேல் வகுப்பில் விளையாட மாட்டேன்.''

"மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்."

"ஆகட்டும், சார்."

"போய் இடத்தில் உட்கார்ந்து பாடத்தைக் கவனி.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

 அவற்றில் மிக முக்கியமான ஒன்று 

மிருகங்கள் யாரையும் பார்த்து கற்றுக் கொள்வது இல்லை.

 அவை அவற்றிலுள்ள உள்ளுணர்வின் (Instinct) படியே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் மனிதன் மிருகங்களோடு காட்டில் வாழ்ந்திருக்கிறான்.

 மிருகங்களும் அவனோடுதான் வாழ்ந்திருக்கின்றன.

 ஆனால் மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி நாகரீகம் அடைந்திருக்கிறான்.

 ஆனால் மனிதனோடு வாழ்ந்த எந்த மிருகமும் பறவையும் நாகரிகம் அடைந்திருக்கிறதா?

மிருகங்கள் மனிதனைப் பார்த்து மட்டுமல்ல,

 மற்ற மிருகங்களை பார்த்தும் கற்றுக் கொள்வதில்லை.

 அவையவை அவையவற்றின் உள்ளுணர்வுப்படி இயங்குகின்றன.

மனிதன் புத்தியுள்ள சமூகப் பிராணி.

தனது புத்தியை பயன்படுத்தி மட்டுமல்லாமல், மற்றவர்களைப் பார்த்தும் கற்றுக் கொள்கிறான்.

ஒவ்வொரு மனிதனுடைய சிந்தையும், சொல்லும், செயலும் அவன் வாழும் சமூகத்தையும் பாதிக்கின்றன.

நான் தினமும் வகுப்பிற்கு பிந்தி வந்தால் நீங்கள் அனைவரும் என்னை பின்பற்றி பிந்தியே வருவீர்கள்.

ஆசிரியர் அவரிடம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். 

ஒரு ஆசிரியர் துர்மாதிரிகையாக நடந்தால் அது அவரிடம் பயிலும் அத்தனை மாணவர்களையும் பாதிக்கும். 

தந்தை துர்மாதிரிகையாக நடந்தால் அது அவரது குடும்பத்தையே பாதிக்கும்.

அரசன் துர்மாதிரிகையாக நடந்தால் அது அவனது நாட்டையே பாதிக்கும்.

அதனால்தான் ஆண்டவர் சொல்லுகிறார்:


"இடறல் வராமல் இருக்க முடியாது.

 ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு! 

அவன் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாயிருப்பதைவிட, 

அவன் கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்."

நாம் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சமூகத்தில் நல்லவர்களும் இருப்பார்கள்.

 கெட்டவர்களும் இருப்பார்கள்.

நல்லவர்களின் நல்ல மாதிரிகையை ஏற்றுக் கொண்டு நாம் அவர்களை பின்பற்றி நல்லவர்களாக வாழ வேண்டும்.

கெட்டவர்களின் துர்மாதிரிகையான வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது நல்ல வாழ்க்கையால் கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்ற வேண்டும்.

எப்படி வாழ வேண்டும் என்பதை இயேசு வாழ்ந்து காண்பித்தார்.

அவருடைய சீடர்கள் ஆகிய நாம் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment