(மத்.8:8)
இயேசுவால் ஒரே வார்த்தையால் தனது ஊழியனைக் குணமாக்க முடியும் என்ற ஆழ்ந்த விசுவாசத்தோடும்,
அவர் தன் இல்லத்துக்குள் வர தான் தகுதியற்ற பாவி என்ற தாழ்ச்சியோடும் நூற்றுவர் தலைவன் கூறிய வார்த்தைகள் இவை.
அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டி இயேசு அவனது ஊழியனை தனது வார்த்தையால் குணமாக்கினார்.
நூற்றுவர் தலைவன் கூறிய அதே வார்த்தைகளை நாம் திவ்ய நற்கருணை அருந்தும் முன் கூறுகிறோம்.
அவன் கூறிய அதே உணர்வோடு,
அதாவது ஆழ்ந்த விசுவாசத்தோடும் தாழ்ச்சியோடும் கூறவேண்டும்.
இயேசு பரிசுத்தர். நாம் பாவிகள். இயேசு நமது உள்ளத்தைத் ஆலயமாகக் கருதி அதில் குடியிருக்கிறார் என்றால்
அது நமது தகுதியினால் அல்ல, அவரது அளவு கடந்த இரக்கத்தினால்.
நாம் தகுதி உள்ளவர்கள் அல்ல என்றால்
தகுதி உள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
நமது உள்ளத்தை பாவமாசின்றி பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பரிசுத்தமான உள்ளத்தோடுதான்
திவ்விய நற்கருணை மூலமாக இயேசுவை நமது உள்ளத்திற்குள் வரவேற்க வேண்டும்.
நமது விழுந்த இயல்பு (Fallen nature)
காரணமாக நாம் பாவத்தில் விழ நேரிட்டால்
அதற்காக மனஸ்தாபப்பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்து
நமது உள்ளத்தை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
திவ்ய நற்கருணை வாங்கும்போது மட்டுமல்ல எப்போதுமே நாம் இறைவன் வாழும் ஆலயங்கள்தான்.
எங்கும் வாழும் இறைவன் நமது உள்ளத்திலும் குடியிருக்கிறார்.
இறைவன் எங்கும் இருப்பதால்,
நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி,
பாவத்தோடு இருந்தாலும் சரி, பாவம் இல்லாதிருந்தாலும் சரி,
நல்லவர்களாக இருந்தாலும் சரி,
கெட்டவர்களாக இருந்தாலும் சரி,
அவர் நமக்குள் இருந்து நம்மை பராமரித்து வருவதை தடுக்க முடியாது.
நமது உள்ளம் பாவமில்லாமல் பரிசுத்தமாக இருந்தால் நாம் இறைவனுக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம்.
அதற்குரிய பலனை பெறுகிறோம்.
பாவத்தோடிருந்தால் அதற்குரிய விளைவை அனுபவிக்க நேரிடும்.
ஆகவே நற்கருணை வாங்கும்போது மட்டுமல்ல நாம் எப்போதுமே பாவ மாசின்றி இருக்க வேண்டும்.
எப்போதுமே பாவ மாசின்றி இருப்பது எப்படி?
இறைவன் நமக்குத் தந்திருக்கும் கட்டளைகளை அனுசரித்தால் நமக்குள் பாவம் புகாது.
கட்டளைகளை அனுசரிக்க வேண்டும் என்றால் அவைகளை நமக்குத் தந்த இறைவனை முழுமனதோடு நேசிக்க வேண்டும்.
நம்மை நேசிப்பது போல பிறனையும் நேசிக்க வேண்டும்.
முழுமையாக இறையன்பும், பிறர் அன்பும் உள்ளவன் பாவம் செய்ய மாட்டான்.
இறையன்புடனும், பிறர் அன்புடனும் வாழ வேண்டுமென்றால் அதற்கு இறைவனது அருள் உதவி தேவை.
நமக்குத் தேவையான அருள் உதவியை இறைவனை வேண்டி பெற வேண்டும்.
"கேளுங்கள் கொடுக்கப்படும்'' என்று இயேசு சொன்னதே நமக்கு வேண்டிய இறை அருள் உதவியை பற்றிதான்.
தேவ திரவிய அனுமானங்களை பெறுவதன் மூலமும்,
பிறரன்பு செயல்கள் மூலமும்,
தவ முயற்சிகள் மூலமும்
இறை அருள் உதவியைப் பெறலாம்.
சுருக்கமாக, கிறிஸ்தவ நெறிப்படி வாழ்ந்தால் இறைவன் தரும் அருள் வரங்களின் உதவியால்
நாம் இறைவன் தங்கும் ஆலயங்களாக மாறத் தகுதி பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment