Tuesday, November 9, 2021

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்.17:17)

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்.17:17)

இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்கினார்.

அவர்களுள் ஒருவன் மட்டும் உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டு, திரும்பி வந்து,


அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான்.

 அவனோ சமாரியன்.

  இயேசு அவனைப் பார்த்து,

 "பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?

திரும்பி வந்து கடவுளை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத்தவிர வேறு ஒருவரையும் காணோமே! " என்றார்.

நம்மில் அநேகர் நன்றி சொல்ல மறந்த இந்த ஒன்பது தொழுநோயாளிகள் போலவே நடந்து கொள்கிறோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் இறைவன்தான் நம்மை பராமரித்து வருகிறார்.

உண்மையைச் சொல்வதானால் நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

சென்ற விநாடி இருந்தவர்கள் இந்த விநாடி இருப்பதுவும்,

இந்த விநாடி இருப்பவர்கள்அடுத்த வினாடி இருக்கப்போவதும் அவரால் தான்.

எந்த விநாடி வரை நாம் இருப்போம் என்று நமக்கே தெரியாது.

அவருக்கே தெரியும்.

அவரன்றி அணுவும் அசையாது.

ஒவ்வொரு அசைவிலும் அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

நம்மைப் படைத்ததற்காக ஒரு முறையாவது இறைவனுக்கு நன்றி 
கூறியிருக்கிறோமா?

நம்மைப் படைத்தது இவ்வுலகில் கஷ்டப் படுவதற்கு அல்ல, மறு உலகில் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வதற்காக.

இவ்வுலகத்தில் நாம் படும் கஷ்டங்கள் ஒரு பெண்ணின் பேறுகால வேதனை போல்.

பேறுகால வேதனை நிரந்தரமானது அல்ல. ஆனால் அதன்பின் அவள் பெறும் குழந்தைச் செல்வம் நிரந்தரமானது.

அவ்வாறே தான் இவ்வுலக துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல.

அவற்றைக் கடந்து நாம் பெறவிருக்கும் நித்திய பேரின்பம் நிரந்தரமானது.

நிரந்தரமான பேரின்பத்தை நமக்குத் தருவதற்காக நம்மை படைத்த கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா?

உலக துன்பங்களில் வழியே பயணித்துதான் நாம் நித்திய பேரின்பத்தை அடைய வேண்டும்.

 நித்திய பேரின்பத்தை எண்ணி, அதற்கு இட்டுச்செல்லும் துன்பங்களுக்காகவும் நன்றி கூற வேண்டும்.

நமக்கு இவ்வுலகில் என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்,

 ஏனெனில் என்ன நேர்ந்தாலும் அது இறைவனை நோக்கிய பாதையில் உதவிகரமானதாகவே இருக்கும்.

ஊசி போட்டால்தான் நோய் குணமாகும் என்றால் ஊசி வலியை தாங்கிக்கொண்டு

 ஊசி போட்ட மருத்துவருக்கு நாம் நன்றி கூறுவதில்லை?

அதேபோல்தான்,

சிலுவையை சுமந்தால் தான் விண்ணகம் செல்ல முடியும் என்றால்

 சிலுவை வலியை தாங்கிக்கொண்டு 

சிலுவையைத் தந்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.


"ரொம்ப நன்றி, சார்."

"என்ன விஷயம்?" 

"படிக்காத போதெல்லாம் பிரம்பால் அடித்து படிக்க வைத்ததால் நன்கு தேர்வு எழுதியுள்ளேன். நல்ல மார்க் வரும்.

 எங்களை படிப்பதற்காக அடித்த தங்களது பிரம்புக்கு நன்றி.

அடித்து படிக்க வைத்த தங்களுக்கும் நன்றி, சார்."

துன்பங்கள் வரும் போது இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

துன்பங்களோடுதான் நித்திய பேரின்பமும் சேர்ந்து வரும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" 
 என்று இயேசு கூறினார், 

கேட்டோம். கேட்டது கிடைத்தது. நன்றி கூறினோம். 

 கிடைக்கவே இல்லை. 

என்ன செய்ய வேண்டும்? அப்போதும் நன்றி கூற வேண்டும்.

கிடைக்காததற்கு ஏன் நன்றி கூற வேண்டும்?

நாம் ஆசைப்படுவதைக் கேட்கிறோம். ஆனால் நாம் கேட்பது நமக்கு நன்மை பயக்குமா, தீமை பயக்குமா என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும்.

 நாம் கேட்பது நமக்கு நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே அவர் நமக்கு நாம் கேட்டதைத் தருவார்.

 தீமை பயப்பதாக இருந்தால் தரமாட்டார்.

 தீமை பயக்கக்கூடிய ஒன்றை அவர் அவர் நமக்குத் தராததற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

வழக்கமாக பெற்றோருக்கு கடிதம் எழுதுபவர்கள், 

"தங்கள் அன்புள்ள மகன்" 

என்று எழுதி கடிதத்தை முடிப்பார்கள்.

ஒரு பையன், 

"என்றும் நன்றியுடன் உங்கள் மகன்" 

என்று எழுதி முடிப்பான்.

ஏன் என்று கேட்டால் 

அவர்கள் என்னுடைய பெற்றோராக கிடைத்ததற்கே அவர்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கவேண்டும் என்பான்.

அதுபோல,

கடவுள் நமது கடவுளாக இருப்பதற்கே நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மற்ற எல்லா காரணங்களும் அதற்குள் அடக்கம்.

"இறைவா உமக்கு என்றும் நன்றி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment