Tuesday, November 2, 2021

"என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."(லூக். 14:26)

"என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது."
(லூக். 14:26)

உலகியல் வாழ்வு வாழ்வோரைக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் தங்களைத் தவிர வேறு யாருக்காகவும் வாழ மாட்டார்கள் என்பது புரியும்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அவர்கள் மற்றவர்களுக்காக வாழ்வதுபோல் தெரியும். ஆனால் தங்கள் நலனுக்காகவே மற்றவர்களுக்காக வாழ்வது போல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அரசியல்வாதிகளைப் பார்த்தால் நாட்டுக்காக உழைப்பது போல் தெரியும்.

ஆனால் அவர்களது ஒவ்வொரு அசைவிலும் அவர்களுடைய சொந்த பெயரும், நலனும், வருமானமும் முன் நிற்கும்.

தங்களுக்கு நலன் பயக்காத எந்த நல்ல காரியத்தையும் நாட்டுக்காக செய்யமாட்டார்கள்.

இப்போது ஒன்றை செய்தால் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் வெற்றியும் அதிகாரமும் கிடைக்கும் என்று உறுதியாக தெரிந்தால்தான் அதை செய்வார்கள்.

ஒரு ஆசிரியர் மிகவும் நன்றாக உழைப்பவராக இருக்கலாம்.

 ஆனால் அவரது சம்பளத்தை முற்றிலும் நிறுத்தி விடுங்கள்,

 அப்புறம் உழைப்பு எங்கே போகிறது என்று பாருங்கள்.

 என்ன வேலைக்கு சம்பளம் கிடைக்குமோ அங்கே போய்விடும்.

உலக வாழ்வினன் தனது நலனை மையமாக வைத்தே செயல்படுவான்.

ஆனால் உண்மையான ஆன்மீகவாதி இறைவனை மையமாக வைத்தே செயல்படுவான்.

அவனது உழைப்பு எல்லாம் இறைவனுக்காக, இறைவனுக்காக மட்டுமே.

இறைவனுக்காக உழைக்கும் பொறுட்டு தனது உற்றார் உறவினர்களை மட்டுமல்ல,

 தனது உயிரையே தியாகம் செய்வான்.


"என் பொறுட்டு  , தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளை மட்டுமல்ல, தன் உயிரையே தியாகம் செய்ய தயாராக இருப்பவன் மட்டுமே எனது சீடனாயிருக்க முடியும்."

என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் இந்த வார்த்தைகள் நமது ஆன்மீக வாழ்வில் எப்படி செயல் புரிகின்றன என்பதை தியானிப்பது நல்லது.

ஆன்மீக வாழ்வை கூட உலகியல் அடிப்படையில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்.

இயேசுவுக்காக நம்மை பயன்படுத்தி கொள்கிறோமா?

 அல்லது நமக்காக இயேசுவை பயன்படுத்தி கொள்கிறோமா?

கோவிலுக்கு போகிறோம்.

எதற்காக?

இறைவன் நம்மை படைத்தவர் என்று ஏற்றுக்கொண்டு, 

அவரை ஆராதிக்கவும், 

புகழவும்,

அவரது பணிக்கு நம்மை நாமே அர்ப்பணிக்கவும் போகின்றோமா? 

அல்லது,

அவரிடமிருந்து ஏதாவது உதவி கேட்பதற்காக மட்டும் போகின்றோமா?


வேறு வார்த்தைகளில்,

அவரது பணிக்கு நம்மை அர்ப்பணிக்கவும் 
இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட
தேவத்திரவிய அனுமானங்களை பெறுவதற்காகவும் போகின்றோமா?



அல்லது

Loan வாங்க வங்கியை பயன்படுத்துவது போல

 உடல் சுகம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற இவ்வுலக சம்பந்தமான ஏதாவது உதவியைப் பெற இயேசுவை பயன்படுத்த போகின்றோமா?

நற்செய்தி பணிக்காகவே இயேசு 12 சீடர்களை ஏற்படுத்தினார்.

ஆனால் யூதாஸ் நற்செய்தி பணியை விட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான்.

விளைவு நமக்கு தெரியும்.

ஆன்மீகவாதிகளுக்கு ஆன்மீகத்தில் மட்டுமே ஆர்வம் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.

இயேசுவோடு இருப்பவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

உலக சம்பந்தப்பட்ட காரியங்களில் உதவி கேட்டு இயேசுவிடம் செபிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆன்மீக விஷயங்களை முற்றிலும் மறந்து விட்டு உலக காரியங்களில் மட்டும் அதிக ஆர்வம் காட்டினால் அது நம்மை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும்.

பணத்தின் மேல் யூதாசுக்கு இருந்த ஆசை ஆண்டவரையே காட்டிக்கொடுக்க தூண்டிவிட்டுவிட்டது.

இயேசுவோடு இருப்பவர்களுக்கு அவர் மட்டுமே முக்கியம்.

அவரை அவருக்காகவே தேடுவோம். 

அவருக்காகவே வாழ்வோம்.

அப்போதுதான் அவரோடு இணைந்து வாழும் நித்திய பேரின்ப வாழ்வு நமக்கு கிட்டும்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment