Friday, November 5, 2021

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."(லூக்.16:13)

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."
(லூக்.16:13)

தூங்குமிட (Berth) வசதி கொண்ட ஒரு புகைவண்டியில் மூன்று பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

புகைவண்டி திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குப் போய்க்கொண்டிருந்தது. 

ஒன்றன்கீழ் ஒன்றாக இருந்த மூன்று தூங்குமிடங்களில்,
மேலிடத்தில் ஒருவரும், நடு இடத்தில் ஒருவரும், கீழிடத்தில் ஒருவருமாக மூவர் படுத்திருந்தனர்.

வண்டி மதுரையைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது.

நடு இடத்தில் படுத்திருந்தவர் மேலிடத்தவரைப் பார்த்து,

"சார் எங்கே போகின்றீர்கள்?"

"சென்னைக்கு."

கீழிடத்தவரைப் பார்த்து.

"சார் எங்கே போகின்றீர்கள்?"

"தென்காசிக்கு."

கேள்வி கேட்டவருக்கு ஒரே ஆச்சரியம்.

சென்னை வடக்கே இருக்கிறது.
தென்காசி தெற்கே இருக்கிறது.

இந்த புகைவண்டி அதிசயமானதுதான்.

ஒரே நேரத்தில் எதிர் எதிர்த் திசைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது!

அந்த அளவிற்கு தமிழ் நாட்டில் போக்கு வரத்து விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

இனி எங்கே போகவேண்டுமானாலும் ஒரே இரயிலில், ஒன்றாகப் பயணிக்கலாம்.

டில்லிக்குப் போகின்றவரும், கன்யாகுமரிக்குப் போகின்றவரும் கூட பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே பயணிக்கலாம்.

இவர் ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்தபோது மற்ற இருவரும் அவரிடம் கேட்டார்கள்.

"சார் எங்கே போகின்றீர்கள்?"

"நான் ஒரு பக்கமும் போகவில்லை. வீட்டில் படுத்திருக்கிறேன்."

அவர்களுக்கு ஆச்சர்யம், phone எதுவும் இல்லாமலேயே வீட்டில்  இருப்பவர் இரயிலில் போகின்றவர்களிடம் பேச முடிகிறதே என்று!

திண்டுக்கல் நிலையத்தில் வண்டி நின்றபோது T.T.E.R வண்டிக்குள் ஏறி, Mental hospital லிலிருந்து தப்பித்துப் போய்க் கொண்டிருந்த மூன்று பைத்தியங்களையும் இறக்கிவிட்டார்!

ஒரே நேரத்தில் இறைவனுக்கும், பணத்திற்கும் ஊழியம் செய்ய ஆசைப்படுகின்றவர்கள்  இவர்களை விட பெரிய பைத்தியங்கள்!
                    
                          ***           

"தம்பி கையில் எதைவைத்து நோண்டிக் கொண்டிருக்கிறாய்?"

"நோண்டிக் கொண்டிருக்கவில்லை. Game போட்டுக் கொண்டிருக்கிறேன்."

"24 மணி நேரமுமா?"

"ஆமா. ஒரு நாளைக்கு அத்தனை மணிகள்தானே இருக்கின்றன."

"கருத்துப் பரிமாற்றத்திற்காக (Communication) அப்பா இதை வாங்கித் தந்தாரா? விளையாடுவதற்காக வாங்கித் தந்தாரா?"

''எதற்காக வாங்கித் தந்தால் என்ன? 
நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்ய இதைப் பயன்படுத்துகிறேன்."

"நீ அதை பயன்படுத்தவில்லை.

அதுதான் உன்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

நீதான் நாள் முழுவதும் அதற்கு ஊழியம் செய்து கொண்டிருக்கிறாய்."

"செய்து விட்டுப் போகிறேன். எனக்குப் பிடித்தமானதைத்தானே செய்கிறேன்.

I am enjoying my life."

"No, you are wasting your life!"

இவன் மட்டுமல்ல.  நம்மில் அநேகர் பயன்படுத்த தந்தவைகளுக்கு  
ஊழியம் செய்து நமது வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

                       ****
கடவுள் நமக்காக உலகை படைத்தார்.

 உலகிற்காக நம்மை படைக்கவில்லை.

 நம்மை தனக்காக படைத்தார்.

நமக்காக படைக்கப்பட்ட உலகைப் பயன்படுத்தி நாம் இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்.

ஆனால் நம்மில் அநேகர் உலகிற்கு, உலகிலுள்ள பொருட்களுக்கு, பணத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம்.

சிலர் ஒரு படி மேலே போய் பணத்திற்கு சேவை செய்ய இறைவனையும் அழைக்கிறார்கள்!

இறைவனுக்கு ஊழியம் செய்வதை மறந்துவிட்டு, எந்த பணத்திற்கு ஊழியம் செய்யக் கூடாது என்று இறைவன் சொல்லியிருக்கிறாரோ அதே பணத்தை  சம்பாதிக்க இறைவனின் உதவியை நாடுகிறார்கள்.

ஆன்மிகத்தை பொறுத்தமட்டில் பணமும் கடவுளும் இரண்டு எதிர் துருவங்கள்.

பணத்தை நோக்கி போகிறவன் இறைவனே நோக்கி போக முடியாது.

பணத்தை தேடுவதையே வாழ்வின் குறிக்கோளாக  கொண்டவனால் இறைவனைத் தேட முடியாது.

 பணத்திற்கு ஊழியம் செய்பவனால்  இறைவனுக்கு ஊழியம் செய்ய முடியாது.

அதுபோலவே இறைவனுக்கு ஊழியம் செய்பவனால் பணத்திற்கு ஊழியம் செய்ய முடியாது.

செல்வம் இறைவனால் படைக்கப்பட்டது.

 அவரது ஊழியத்தில் பயன்படுத்தப் படுவதற்காக அது படைக்கப்பட்டது.

 செல்வத்தைப் பயன்படுத்தி இறைவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்.

இறைவனையும், நமது அயலானையும் அன்பு செய்வதன் மூலம் இறைவனுக்கு சேவை செய்கிறோம். இந்த சேவைக்கு செல்வம் பயன்படுத்தப்பட வேண்டும்.

 செல்வத்தை இறையன்பு செயல்களுக்கும்,

 பிறரன்பு செயல்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கவும்,

 உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுக்கவும்,

 இருப்பிடம் இல்லாதவர்களுக்கு இருப்பிடம் கொடுக்கவும்,

 இன்னும் இவை போன்ற பிற சினேக செயல்களிலும் செல்வத்தை பயன்படுத்த வேண்டும். 

செல்வத்தை அன்பு செயல்களுக்காக பயன்படுத்துவதற்காக அல்லாமல்

 செல்வத்தை செல்வம் என்பதற்காகவே ஈட்டி,

அதை நாமே அனுபவித்து கொண்டிருந்தால்

நாம் அதற்காகவே வாழ்வதாக அர்த்தம்.

இறைவனை அன்பு செய்யாமல்,

 அயலானை அன்பு செய்யாமல்

 பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவன்
பணத்திற்கு அடிமை. 

உயிருள்ள மனிதன் உயிர் இல்லாத பணத்திற்கு அடிமையாக வாழ்வது கேவலத்திலும் கேவலம்.

நாம் அடிமையாக வாழ வேண்டியது இறைவனுக்கு மட்டும் தான்.

இறை ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக மட்டுமே பணத்தை ஈட்டுபவன்தான் உண்மையான இறைபக்தன்.

கடவுளுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே செல்வத்தை பயன்படுத்துவோம்.

இறைவனோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment