Thursday, November 11, 2021

"இதோ இங்கே! அதோ அங்கே! "என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.(லூக்.17:21)

"இதோ இங்கே! அதோ அங்கே! "என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.
(லூக்.17:21)

இயேசு நற்செய்தி பணியை ஆரம்பித்த நாளிலிருந்து அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள் இரண்டு வகையினர்:

1. சாதாரண, படியாத, பாமர மக்கள்.

2. சட்டங்களை கற்றுத்தேர்ந்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும்.

சாதாரண மக்களிடம் இயேசுவின் மேல் விசுவாசம் இருந்தது.

அவர்கள் அவரைத் தேடி வந்தது அவரது நற்செய்தியைக் கேட்கவும், நோய் நொடிகளிலிருந்து குணம் பெறவும், அவரது சீடர்களாக அவரைப் பின்பற்றவும்.

ஆனால் பரிசேயர் முதலான படித்த தலைவர்களுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இல்லை.

அவர்கள் அவரைத் தேடி வந்தது அவரது பேச்சிலும், நடவடிக்கைகளிலும் குறை காண்பதற்கும், தேவையற்ற கேள்விகள் கேட்கவும், அவரை கொல்வதற்கான வழிவகைகளைத் தேடுவதற்காகவுமே.


பரிசேயர் இயேசுவிடம் ஏதாவது கேள்வி கேட்டால் அது தெரியாததைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல,

 அவரைப் பரிசோதிப்பதற்காகவே.

ஒரு முறை அவர்கள் இயேசுவைப் பார்த்து,

''கடவுளின் அரசு எப்பொழுது வரும்?"

என்று கேட்டார்கள்.

அவர்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கை உள்ளவர்களாக இருந்திருந்தால், அவர்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்கக் கூடாது.

அதுமட்டுமல்ல இயேசு ஆரம்பத்திலிருந்தே இறையரசை பற்றிய நற்செய்தியைத்தான் போதித்துக் கொண்டிருந்தார்.

அவர்களும் அவர் பின்னாலேயே போய் அவர் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு இயேசு என்ன பதில் சொல்கிறார் என்பதை பரிசோதிக்கவே இந்த கேள்வியை கேட்டார்கள்.

இயேசுவுக்கு அவர்களுடைய நோக்கம் தெரியும்.

சாதாரண மக்களுக்கு விளக்கும்போது ஆண்டவர் உவமைகள் மூலமாகவும், ஒப்புமைகள் மூலமாகவும் விளக்குவது வழக்கம்.

 ஆனால் திருச்சட்டப் படிப்பிலே வல்ல பரிசேயர்களுக்கு பதிலைச் சுருக்கமாகச் சொல்கிறார்.

நாமும் சாதாரணமானவர்கள்தான். ஆனால் பரிசேயர்களிடம் இல்லாத முக்கியமானதொன்று நம்மிடம் இருக்கிறது,

 விசுவாசம்.

நாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம்.

அவர் கூறிய பதில் இறைவனுடைய வார்த்தை.

நமது விசுவாசத்தின் அடிப்படையில் இறைவார்த்தையைத் தியானிப்போம்.

''கடவுளின் அரசு எப்பொழுது வரும்?"

" அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 

எங்கே? எப்பொழுது? என்ற வினாச் சொற்கள் படைக்கப்பட்ட பொருட்களைப் பற்றி கேட்பதற்கு பயன்படுத்தப்படுபவை.

அதாவது இடத்திற்கும் காலத்திற்கும் கட்டுப்பட்ட பொருட்களை பற்றி அறிய கேட்கப்படுவது.

சென்னை எங்கு இருக்கிறது? என்று கேட்கலாம். அது ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்,

ஒருவர் எப்பொழுது பிறந்தார்? என்று கேட்கலாம் ஏனெனில் ஒருவர் காலத்தில் ஒரு நேரத்தில்தான் பிறக்க முடியும்.

ஆனால் இடத்தையும், காலத்தையும் கடந்த இறைவனைப்பற்றி அறிய இந்த வினா சொற்களை பயன்படுத்த முடியாது. 

கடவுள் காலத்தை கடந்த நித்தியத்தில் வாழ்கிறார்.

அவர் வாழ இடம் தேவையில்லை.

காலத்தை கடந்த இறைமகன் மனிதனாக உரு எடுத்தபோது காலத்திற்குள் நுழைந்தார்.

அதனால் இயேசு எங்கே, எப்போது பிறந்தார் என்று கேட்கலாம்.

இறைமகன் தேவ சுபாவத்தில் காலத்தை கடந்தவர்.

மனித சுபாவத்தில் காலத்திற்கு உட்பட்டு 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தார்.

இறைவன் அரசர். இறைவன் எப்போதும் இருப்பதால் இறையரசும் எப்போதும் இருக்கிறது.

இறையரசர்தான் நம்மைப் படைத்தார். ஆகவே இறையரசுக்குள்தான் நாம் இருக்கிறோம்.

பிரபஞ்சம் முழுவதுமே அவருடைய அரசுக்குள்தான் இருக்கிறது.

ஆனாலும், இயேசு நமக்கு ஜெபிக்க கற்றுத்தந்தபோது 

"உமது ஆட்சி வருக" என்று தந்தை இறைவனிடம் கேட்கச் சொன்னார்.

நாம் அவரது ஆட்சிக்குள் இருக்கும்போது 

இயேசு ஏன் "உமது ஆட்சி வருக" என்று கேட்க சொன்னார்?

கடவுள் நம்மை படைக்கும்போது முழுமையான மன சுதந்திரத்தோடு படைத்தார்.

அவர் நமது அரசராக இருந்தாலும் அவரை நமது அரசராக ஏற்றுக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளாதிருக்கவோ நமக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி அவரை நமது அரசராக ஏற்றுக் கொண்டால் நமக்குள் இறையரசு வந்துவிட்டது, 

அவரை நமது அரசராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் நமக்குள் அவரது அரசு இல்லை.

நம்மிடையே இருக்கிறது, ஆனால்,  நமக்குள் இல்லை.

அவர் நம்மை நித்திய காலமாகவே அன்பு செய்கிறார். ஆகவே நாம் அவரது அன்புக்குள்தான் இருக்கிறோம்.

ஆனால் நாம் அவரை அன்பு செய்தால்தான் அவர் நமது அன்புக்குள்தான் இருக்கிறார்.

அதேபோல்தான் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசுக்குள்தான் இருக்கிறோம்.

ஆனால் நாம் அவரை விரும்பி ஏற்றுக் கொண்டால்தான் அவரது அரசு நமக்குள் இருக்கிறது.

"உமது ஆட்சி வருக" என்று தந்தையிடம் வேண்டும் போது 

''மனுக்குலம் முழுவதும் உம்மை தந்தையாக ஏற்றுக் கொள்ள அருள் புரியும் தந்தையே"
என்று வேண்டுகிறோம்.

இயேசு "கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்று சொன்னது போல,

கடவுளின் அரசு நம்மிடையேதான் உள்ளது. 

கடவுளின் அரசை நாம் ஏற்றுக் கொள்ளும் போது தான் அது நமக்குள் நுழைகிறது.

கடவுள் நமது முதல் பெற்றோரை அவரது அரசில்தான் படைத்தார்.

ஆனால் தங்களது பாவத்தின் மூலம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் 

அவர்களுக்குள் இறையரசு இல்லாமல் போய்விட்டது. 

திரும்பவும் இறையரசு அவர்களுக்குள் வரவேண்டுமென்றால் 

அவர்கள் தங்களது பாவத்திற்கு பரிகாரம் செய்து மன்னிப்பு பெற்றாக வேண்டும்.

மனுக்குலம் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து, அதன்மூலம் பாவமன்னிப்பு அளிப்பதற்காகவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

பரிகாரம் செய்வதற்காகவே பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இறையரசு உங்களிடையே இருக்கிறது அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தான் நம்மிடம் கேட்கிறார்.

"உமது ஆட்சி வருக" என்று தந்தையிடம் வேண்டவும் சொல்கிறார்.

மனுக்குலம் இறையாட்சியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவேதான் நாம் செய்யும் நற்செய்தி பணிகள்.

முதலில் நாம் நற்செய்தியை வாழ்வோம்.

அதாவது பாவமன்னிப்பு பெற்று,

 பாவம் இன்றி வாழ்வதன் மூலம் நற்செய்தியை வாழ்வோம்.

நமது வாழ்வின் மூலம் இறையாட்சியை நாம் ஏற்றுக்கொள்வோம்.

நமது நற்செய்தி பணியின் மூலம் மற்றவர்களும் இறையாட்சியை ஏற்றுக்கொள்ள செய்வோம்.

"உமது ஆட்சி வருக" என்று தந்தையிடம் வேண்டினால் மட்டும் போதாது, நாமும் அதற்காக உழைக்க வேண்டும்.

இறையரசு ஆன்மீக அரசு.

நமது ஆன்மா பாவம் இன்றி பரிசுத்தமாக இருக்கும் போது நமக்குள் இறையரசு இருக்கிறது,

நம்மிடையே இருக்கும் இறையரசு நமக்குள்ளும் இருக்க தந்தையிடம் வேண்டுவோம்.

வேண்டினால் மட்டும் போதாது தந்தையின் சித்தப்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment