Monday, November 22, 2021

ஈடு இணையில்லா அன்பு.

ஈடு இணையில்லா அன்பு.

கடவுள் ஏன் மனிதனை தன் சாயலில் படைத்தார்?

இந்த கேள்விக்குரிய பதிலை இன்று தியானிப்போம்.

"பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக:"
(ஆதி. 1:26)

மனிதனைத் தவிர  மற்ற எல்லா பிரபஞ்ச பொருள்களையும் 

"உண்டாகுக,
பிரியக் கடவது,
ஒன்றாகச் சேரக்கடவது:,
முளைப்பிக்கக்கடவது,"

போன்ற உத்தரவு வார்த்தைகளால் படைத்த கடவுள்,

மனிதனை மட்டும் "படைப்போமாக" 
 என்ற தன்னுடைய விருப்பத்தைக் கூறி படைத்தார்.

மண்ணிலிருந்து மனித உடலை உருவாக்கிய கடவுள்

 "உயிர் மூச்சை ஊதி,"

 உடலுக்கு உயிர் கொடுத்தார்.

மனித உடலை இயக்கிக் கொண்டிருப்பது,

 இறைவனது உயிர்மூச்சு,

 அதாவது நமது ஆன்மா.

இறைவனது உயிர்மூச்சினால் படைக்கப் பட்டிருப்பதால் அது 
இறைவனைப் போலவே ஆவியாக இருக்கிறது.

அவருடைய மூச்சு என்பதால் அவரோடு எப்பொழுதும் இணைந்து இருக்கும் நோக்கத்தோடுதான் அது படைக்கப்பட்டது.

அது உலகில் மனித உடலை இயக்கிக் கொண்டு வாழும் போதும் சரி,

 மனித உடலை விட்டுப் பிரிந்து விண்ணுலகம் செல்லும் போதும் சரி

அது இறைவனோடு இணைந்து (In union with God) வாழ வேண்டும் என்பதுதான் அது படைக்கப்பட்டதன் நோக்கம்.

ஆன்மா இறைவனோடு இணைந்து வாழ வேண்டும் என்பதனால்தான் அவர் அதோடு தன்னுடைய எல்லாப் பண்புகளையும் பகிர்ந்து கொண்டார்.

மனித ஆன்மாவோடு அவர் பகிர்ந்து கொண்ட மிக முக்கியமான பண்பு 

"சிந்தனை செயல் சுதந்திரம்."

இறைவனுடைய சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

அதேபோல இறைவனும் மனிதனுடைய சுதந்திரத்தில் குறிப்பிடுவதில்லை.

அவரோடு இணைந்து வாழ்வதற்காக படைக்கப்பட்டாலும் 

இணைந்து வாழ்வதா பிரிந்து வாழ்வதா என்பதை தீர்மானிக்க

 மனிதனுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தனது முழு சுதந்திரத்தை பயன்படுத்திதான் மனிதன் இறைவனோடு இணைந்து வாழ வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

நித்திய காலம் இறைவனோடு இணைந்து வாழ்வதே மோட்சம்.

இறைவனிடமிருந்து பிரிந்து வாழ்வது நரகம்.

மனிதன் தன்னோடு நித்திய காலம் இணைந்து வாழ வேண்டும் என்றுதான் இறைவன் விரும்புகிறார்.

நமது முழுமையான சுதந்திரத்தை பயன்படுத்தி இறைவனது விருப்பத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட மற்றொரு மிக முக்கியமான பண்பு அன்பு.

கடவுள் அன்பு மயமானவர்.
God is Love.

அவர் நித்திய காலமாக தன்னைத்தானே அன்பு செய்கிறார்.

கடவுள் தனது அன்பை பகிர்ந்து கொள்ளவும்,

 தன்னை அன்பு செய்யவும் தான் மனிதனை படைத்தார்.

அவர் நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்கிறார்.

நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் படைக்கப்பட்டோம், ஆனால் கடவுள் நம்மை நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

 அதாவது நம்மை படைப்பதற்கு முன்பே நித்திய காலமாக  அவர் நம்மை அன்பு செய்து கொண்டிருக்கிறார்.

கடவுள் மாறாதவர்,
அவரது அன்பும் மாறாது,

 அவரது அன்பை நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்.

நித்திய காலமும் விண்ணக வாழ்வே வேண்டாமென்று நரக நிலையில் வாழ்பவர்களையும் இறைவன் அன்பு செய்கிறார்.


நமது மேல் கொண்ட அன்பின் காரணமாகவே அவர் நம்மை அவர் சாயலில் படைத்தார்.

அன்பு செய்ய மட்டுமல்ல அன்பு செய்யப்படுவதற்கும் இறைவன் விரும்புகிறார்.

அவரை நமது முழு இருதயத்தோடு நாம் அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டளையே கொடுத்திருக்கிறார்.

ஓம் தாய் தனது பிள்ளையை அன்பு செய்வதோடு, தன் பிள்ளை தன்னையும் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புவது போலவே,

 இறைவனும் அவரது பிள்ளைகளாகிய நாம் அவரை அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.

நாம் உலகில் வாழ்வதே நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்வதற்கு மட்டுமே.

இறைவன் நம்மை படைத்திருப்பதும் அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் மட்டுமே. (To love and to be loved)

நம் மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாகவே அவர் நம்மை அவரது சாயலில் படைத்தார்.

தன்னால் நேசிக்கப்படுகிறவர்கள் தன்னைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது நமக்கு புரிகிறது.

ஆனால் தன்னால்  நேசிக்க படுகின்றவர்களைப்போல் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அன்பு ஈடு இணை இல்லாதது.

ஒரு கோடீஸ்வரன் ஒரு ஏழையைப் பார்த்தான்.  அவனை நேசித்தான்.


நேசத்தின் காரணமாக  அந்த ஏழை தன்னை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னிடம் உள்ளதையெல்லாம் அவனோடு பகிர்ந்து கொள்கிறான்.

ஆனால் அதே கோடீஸ்வரன் தான் ஏழையோடு தன்னிடம் உள்ளதையெல்லாம் பகிர்ந்து கொண்டதும் போதாதென்று

 அவன் மேலுள்ள அன்பின் மிகுதியால்

 தானும் அவனைப் போலவே ஏழையாகி 

அவனுடனே வாழ்ந்து, அவனது கஷ்டங்கள் எல்லாம் அனுபவித்து

அதன் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி,

அதன்பின் தன்னோடு வாழ தனது அரண்மனைக்கே அழைத்து வந்தான் என்றால்   

 அந்த அன்புக்கு ஈடு இணை உண்டோ!

அதைத்தான் நம்மை படைத்த நமது விண்ணக இறைவனும் செய்தார்.

தனது சாயலை நம்மோடு பகிர்ந்து கொண்டதோடு திருப்தி அடையாமல்

 அன்பின் மிகுதியால் 

நமது சாயலை அவரும் பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, மனிதனாகப் பிறக்கவே ஆசைப்பட்டார்.

அவரது சாயலை நமது ஆன்மா பெற்றிருக்கிறது.

நமக்கு அழிவே இல்லாத  நமது ஆன்மாவோடு மரணம் அடையக் கூடிய உடல் ஒன்றும் இருக்கிறது.

இறைவனுக்கு உடல் இல்லை. அவர் ஆவியானவர்.

நமது உடலோ சடப்பொருள். காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது.

எங்கும் நிறைந்த ஆவியாகிய இறைவன் 

நம்மை போல உடலெடுத்து காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு நம்மோடு வாழ்ந்து 

தனது ஈடு இணையற்ற அன்பை நமக்கு வெளிப்படுத்த விரும்பினார்.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர்.

அவரது ஞானம் காலத்தைக் கடந்தது.

அவரது திட்டங்கள் எல்லாம் நித்தியமானவை.

நித்திய காலத்திலிருந்தே மனிதனை படைக்க திட்டமிட்ட அவருக்கு, மனிதன் பாவம் செய்வான் என்பது நித்திய காலமாகவே தெரியும்.

கடவுளை பொறுத்தமட்டில் பாவம் தீமையானது.

தீமையிலிருந்துகூட நன்மையை வரவழைக்கும் சர்வவல்லவர் நமது இறைவன்.

ஆகவே மனிதன் செய்த பாவத்தைப் பயன்படுத்தி 

அவனது பாவத்திற்குத் தானே பரிகாரம் செய்யும் நோக்கத்தோடு மனிதனாக பிறந்து  மனிதனோடு மனிதனாகவும் வாழ இறைவன் நித்திய காலமாக தீர்மானித்தார். 

காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளின் மகன்

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட மனித சுபாவத்தையும் எடுத்துக் கொண்டார்.

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட ஒரு ஏழைப்  பெண்மணியின் வயிற்றில்,

 ஆணின் உதவி இன்றி,

 தனது வல்லமையால் மனித உரு எடுத்தார்.

இறை மகன் மனு மகனாகப் பிறந்தார்.

நமது ஆண்டவராகிய இயேசு மனிதனாக பிறந்த இறைமகன்.

மனித உரு எடுத்து முன் அவரிடம் தேவ சுபாவம் மட்டுமே இருந்தது.

மனித உரு எடுத்த விநாடி முதல் அவர் முழுமையான கடவுளாகவும், முழுமையான மனிதராகவும் இருக்கிறார்.

Jesus is fully God and fully man.

பிறப்பும் இறப்பும் இல்லாத இறைமகன், பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப்  பிறந்தார்.

சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன்,

பாவம் தவிர, மனிதனுடைய எல்லா பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டார்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்தார்.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு உழைத்த உழைப்பினால் கிடைத்த உணவையே உண்டார்.

சர்வத்திற்கும் அரசராக இயேசு அவரால் படைக்கப்பட்ட மரியாளுக்கும், 
சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார். 

பொது வாழ்வின் போது பிறருடைய தர்மத்தினால் மட்டும் வாழக்கூடிய ஏழைகளை பிரதிபலிப்பதற்காக இயேசு தனது சீடர்கள் கொடுத்த உணவையே உண்டார்.

சர்வ உலகத்திற்கும் சொந்தக்காரரான இயேசு தனது பொது வாழ்வின் போது தலை சாய்க்க கூட இடமில்லாமல் வாழ்ந்தார்.

தேவசுபாவத்தில்  கஷ்டமே பட முடியாத இயேசு 

மனித சுபாவத்தில் கஷ்டங்களை அனுபவித்தார், நமக்கு தனது அன்பை வெளிப் படுத்துவதற்காகவும், நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும்.

மனிதர்கள் மற்றவர்களுக்கு தங்கள் அன்பைக் காட்டுவதற்காக அவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள், ஆனால் யாராவது தங்களையே உணவாக அளிக்கின்றார்களா? 

ஆனால் நம்மேல் ஈடுஇணையற்ற அன்புள்ள இயேசு நமக்கு தன்னையே உணவாக அளிக்கிறார்.

ஐந்து அப்பங்களை 5000 அப்பங்களாக மாற்றிய இயேசு இப்போது அப்பத்தை தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி நமக்கு ஆன்மீக உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

தன்னையே உணவாகத் தருவதன் மூலம் நம்மோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

தன்னையே உணவாகத் தரும் அன்புக்கு ஈடு இணையான அன்பு உண்டோ!

இயேசுவின் ஈடு இணையற்ற அன்பினில் இணைந்து இவ்வுலகில் மட்டுமல்ல விண்ணுலகிலும் என்றென்றும் வாழ்வோம்.  

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment