Wednesday, November 24, 2021

நமக்காக இயேசு ஏற்றுக் கொண்ட பலகீனங்கள்.

நமக்காக இயேசு ஏற்றுக் கொண்ட பலகீனங்கள்.

கிணற்றுக்குள் விழுந்தவனை காப்பாற்ற வேண்டுமென்றால்,

 காப்பாற்ற விரும்புகிறவன் கிணற்றுக்குள் குதித்தாக வேண்டும்.

தண்ணீருக்குள் மூழ்க தெரிந்தவனால்தான் மூழ்கியவனை காப்பாற்ற முடியும்.


இந்த அடிப்படையில்தான் உலகில் வாழும் மனிதனை பாவத்திலிருந்து மீட்க இறைமகன் உலகில் மனிதனாகப் பிறந்தார்.

விண்ணகத்திலிருந்து கொண்டே மனிதனைப் படைத்த சர்வ வல்லவராகிய கடவுளால் 

விண்ணகத்திலிருந்து கொண்டே,

 மனிதனாகப் பிறக்காமல், 

தனது வல்லமையால், மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டிருக்க முடியாதா?

முடியும்.

 அவர் எல்லாம் வல்லவர்.

 அவரால் முடியாதது எதுவுமில்லை.

நாம் கேட்காமலேயே நம்மை படைத்த இறைவனால் நாம் கேட்காமலேயே நமது பாவங்களை எல்லாம் மன்னித்திருக்க முடியும்.

 ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.

ஆனால் அவர் தனது வல்லமையை நம்மிடம் காட்ட விரும்பவில்லை,

 நம் மீது அவர் கொண்டுள்ள அளவில்லாத அன்பை காட்ட விரும்புகிறார்.

 தனது அன்பை வெளிப்படுத்தவே வல்லமையையும் பயன்படுத்துகிறார்.

நமது நண்பன் தனது திருமணத்திற்கு நம்மை அழைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் உள்ள விஞ்ஞான கருவிகளால் நமது வாழ்த்துக்களை அவனுக்கு அனுப்பி விடலாம்.

ஒரு Video call மூலமாகவோ WhatsApp மூலமாகவோ வாழ்த்துக்களை அனுப்பி விடலாம்.

பரிசு பொருளைக்கூட தபால் மூலம் அனுப்பி விடலாம்.

ஆனால் அவனது திருமண விழாவிற்கு நேரில் சென்று, அவனைப் பார்த்து வாழ்த்தும்போது நாம் வெளிப்படுத்துகிற அன்பை 

தபால் மூலம் அனுப்ப முடியுமா?

தபால் மூலம் பொருளை அனுப்பலாம்,

WhatsApp மூலம் செய்தியை அனுப்பலாம்.

உண்மையான புன்சிரிப்பையும் அன்பையும் அனுப்ப முடியுமா?

இறைவன் நம் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தவே நம்மைப்போல மனிதனாகப் பிறந்தார்.

ஒரு ஏழை நண்பன் வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது நமது பணக்கார மிடுக்கை காண்பித்துக் கொண்டு போகக் கூடாது.

நண்பன் நிலைமைக்கு நம்மை தாழ்த்தி சென்றால்தான் நமது முழுமையான அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஆகவேதான் பலகீனமுள்ள நம்மிடம் வந்தபோது,  

பாவத்தை தவிர,

நமது மற்ற பலகீனங்களை எல்லாம் ஏற்றே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

ஏன் பாவத்தை தவிர?

ஏனென்றால் இறைவனால் பாவம் செய்ய இயலாது.

ஏன் இறைவனால் பாவம் செய்ய இயலாது?

இறைவனது விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது தான் பாவம்.

இறைவன் எதை செய்தாலும் தனது விருப்பப்படியே செய்வார்.

ஆகவே அவரால் பாவம் செய்ய இயலாது.

அவரது விருப்பம் நமக்கு கட்டளை.

அவரது கட்டளையை நாம் மீறுவது பாவம்.

அவரது விருப்பத்தை அவரே மீற முடியாது.

 பலகீனங்கள் இருவகை,

1.உலகை, உடலைச் சார்ந்தவை.
2.ஆன்மாவை சார்ந்தவை.

ஏழ்மை, சக்தி இன்மை போன்றவை
உலகைச் சார்ந்த பலகீனங்கள்.

மனோ பலமின்மை ஆன்மாவை சார்ந்த பலகீனம்.

இறைவனின் சர்வ வல்லமை உள்ளவர், சர்வத்திற்கும் அதிபதி.

ஆகவே அவரிடம் பலகீனம் என்பது துளியும் இருக்க முடியாது.

ஆனால் இறைமகன் இந்த பலகீனங்களை தானே ஏற்றுக்கொண்டு மனித உரு எடுத்தார்.

சர்வ உலகத்திற்கும் சொந்தக்காரரான அவர் பிறக்கக் கூட இடம் கிடைக்காத, தலைசாய்க்க கூட இடமில்லாத, உழைத்தால் மட்டுமே உண்ணக்கூடிய ஏழையாக பிறந்தார்.

சர்வ வல்லமை கொண்ட அவர் ஏரோதுவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எகிப்திற்குச் சென்று மூன்று ஆண்டுகள் நாடோடியாக 

(அதுவும் மனிதர்களான சூசையப்பர், மரியம்மாள் உதவியுடன்)

 வாழக்கூடிய அளவிற்கு வல்லமையை விட்டு விட்டு  பிறந்தார்.

சர்வ வியாபியான அவர், இடத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்.

இடத்திற்கு இடம் நடந்தே சென்றார்.

இவையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்ட உடலைச் சார்ந்த பலகீனங்கள்.

தான் முழுமையாக மனிதனாக வாழ்வதற்காக மனோபலம் இன்மை என்ற ஆன்மீக பலகீனத்தையும் ஏற்றுக்கொண்டார்.

மனிதனைப் பொறுத்தமட்டில் இந்த பலகீனம் நம் பாவத்துக்கு காரணமாகிறது.

சோதனையை வெல்ல மனோபலம் இல்லாத மனிதன் பாவத்தில் வீழ்கிறான்.

ஆனால் இயேசு கடவுளாகையால்  பாவத்தில் விட முடியாது. 

ஆனாலும் மனித பலகீனத்தை நமது நன்மைக்காக அவரே ஏற்றுக் கொண்டார்.

தேவ சுபாவத்தில் கலங்க முடியாத, வருத்தப் படவே முடியாத இயேசு,

 மனித சுபாவத்தில் லாசரின் மரணத்தை நினைத்து கண்கலங்கி அழுதார்.

தேவ சுபாவத்தில் பயப்படவே முடியாத கடவுளாகிய இயேசு 

மனித சுபாவத்தில் அவர் படவிருக்கும் பாடுகளை நினைத்து பயந்தார்.

அவரது பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று 

இரவு உணவிற்குப்பின், அதாவது திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்திய பின்,

தனது சீடர்களுடன் கெத்சமனி தோட்டத்திற்கு ஜெபம் செய்ய சென்றபோது 

அன்று இரவு தான் கைது செய்யப்படவிருப்பதையும்,

தொடர்ந்து படப்போகும் பாடுகளையும், மரணத்தையும் நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.

அளவுக்கு மீறிய பயத்தின் காரணமாக அவரது உடலெல்லாம் இரத்த வியர்வை  வியர்த்தது.

அவர் எந்த அளவுக்கு பயந்தார் என்றால்

நமது பாவங்களுக்கு பரிகாரமாகப் பாடுகள் படவும், மரிக்கவும் என்றே 

நித்திய காலமாக திட்டமிட்டு

மனிதனாக பிறந்த இயேசு   


"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:" என்று ஜெபித்தார்.

இங்கு ஒரு இறை இயல் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

தந்தையும் மகனும் ஒரே கடவுள்தான்.

ஆகவே தந்தையின் விருப்பமும் மகனின் விருப்பமும் ஒன்றுதான்.

தந்தையின் விருப்பமும் மகனின் விருப்பமும்,

 அதாவது கடவுளின் விருப்பம்,

 மனிதராக பிறந்த இறைமகன் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும் என்பதுதான்.

இது இயேசுவுக்கு நன்கு தெரியும்.

அப்படியானால் இயேசு ஏன் 

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:"

என்று ஜெபித்தார்?

மனித சுபாவத்தில் அவரே மனமுவந்து ஏற்றுக்கொண்ட பலகீனக்தின் காரணமாக,

பாடுகளால் அவர் அனுபவிக்க இருக்கும் வேதனையை நினைத்து பயந்து அவ்வாறு ஜெபித்தார். 

ஆனாலும் அடுத்த வினாடியே,

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்."

அதாவது, தனது மனித பலகீனத்தினால் அல்ல, தந்தையின் விருப்பப்படி நடக்க வேண்டும் என்றுசெபித்தார்.

இயேசு ஏன் இந்த பலகீனத்தை ஏற்றுக்கொண்டார்?

1.தான், பாவத்தைத் தவிர, மற்ற எல்லா மனித பலகீனங்களுக்கும் உட்பட்ட முழுமையான மனிதன் என்ற இறை உண்மையை நமக்கு புரிய வைப்பதற்காக.

2.இப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்பட்டால்,

அதாவது, நமது பலகீனத்தின் காரணமாக இறைவனது சித்தத்தை நிறைவேற்றுவதில் நமக்கு தடங்கல் ஏற்பட்டால்,

நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடந்து காண்பிப்பதற்காக இவ்வாறு ஜெபித்தார்.

சாதித்து போதிப்பவர் தான் இயேசு.

ஆகவேதான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சாதித்து காண்பிப்பதற்காகவே இந்த மனித பலகீனத்தை ஏற்றுக்கொண்டார்.

எந்த சூழ்நிலையிலும், என்ன கஷ்டம் வந்தாலும் நாம் இறைவனின் சித்தப்படிதான் நடக்க வேண்டும்.

நமது கஷ்டத்தை இறைவனிடம் எடுத்து சொல்லிவிட்டால் அவர் அதை தங்குவதற்கு வேண்டிய சக்தியை தருவார்.

இன்னொரு முக்கியமான ஆன்மீக பலகீனம் நமக்கு அளவுக்கு மீறி கஷ்டங்கள் வந்தால் எங்கே இறைவன் நம்மை கைவிட்டு விட்டாரோ என்று நினைக்க தோன்றுவது.

இதே பலகீனத்தை இயேசுவும் ஏற்றுக்கொண்டார்.

 சிலுவையில் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து கொண்டிருந்த இயேசு 

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" என்று கூறினார்.

ஆயினும்,

"தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"

என்று கூறி உயிர் விட்டார்.

இறைவன் நம்மை கைவிட்டு விட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு துன்பங்கள் வந்தால்

 நாம் உடனே நம்மை இறைவன் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

இதை சாதித்து போதிப்பதற்காகவும், 

தான் உண்மையாகவே முழுமையான மனிதன் என்ற என்ற இறையியல் உண்மையை நமக்கு புரிய வைப்பதற்காகவுமே இந்த பலகீனத்தையும் ஏற்றுக்கொண்டார்.

சோதனை காலங்களில் நமது பலகீனங்களைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை.

அவற்றை நமது ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்து விட்டால் நமக்கு வேண்டிய மனோபலத்தை அவர் தருவார்.

அதற்காகத்தான் நமது பலகீனங்களை அவரே ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவர்தான் நமது பலம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment