Monday, November 29, 2021

"உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்."(லூக்.21:26)

"உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்."
(லூக்.21:26)


சென்ற ஞாயிற்றுக்கிழமை பூசை முடிந்து வீட்டிற்கு வந்த உடனேயே எனது பேரன் ஒரு பெரிய சந்தேகத்தைச் சுமந்துகொண்டு என்னிடம் வந்தான்.


"என்னடா பேரா! உன் முகத்தைப் பார்த்தால் ஒரு பெரிய சந்தேகக் கல்லைச்  சுமந்துகொண்டு வருவது போல் தெரிகிறது!"

" ஆமா, தாத்தா, ஒரு பெரிய சந்தேகம்."

"சொல்லு."

"இன்று திருவருகைக் காலத்தின் முதல் நாள்தானே."

", ஆமா. திருச்சபையின் வழிபாட்டு ஆண்டைப்  பொறுத்தமட்டில் இன்றுதான் வருடப்பிறப்பு."

"Correct. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகமே வந்தது. வருடப்பிறப்பு அன்று நாம் ஒருவரை ஒருவர் எப்படி வாழ்த்திக் கொள்வோம்?

நீண்ட நாள் மகிழ்ச்சியோடு வாழ்க என்று சொல்வோமா? இறந்து மடிக என்று சொல்வோமா?"

",நீண்ட நாள் மகிழ்ச்சியோடு வாழ்க என்றுதான் சொல்வோம்.

அதில் உனக்கு இப்போது என்ன சந்தேகம்?"

"இன்றைய நற்செய்தி வாசகத்தில் உலக முடிவைப் பற்றி தான் வாசித்தோம். சாமியார் அதைப் பற்றி தான்  பிரசங்கமும் வைத்தார். 

 "உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்."

இது  வாசகத்தின் ஒரு சிறு பகுதி.
இது பிறக்கும்போதே இறப்பைப் பற்றி பேசுவது போல் தெரிகிறது.

 புத்தாண்டில் நம்மை வாழ்த்துவது போல் நற்செய்தியில் வேறு வாசகங்கள் கிடைக்கவில்லையா?"

", உண்மையில் இதுதான்டா மிகப்பெரிய வாழ்த்து."

"ஆரம்பிக்கும்போதே முடிவைப் பற்றி பேசுவது வாழ்த்தா?

யாராவது பிறந்தநாளன்று மரணம் பற்றி பேசுவதா?"

",விவசாயி நடும்போது எதை நினைத்து  நடுகிறான்?"

"அறுவடையை நினைத்துதான்."

",பேருந்தில் ஏறும் போது எதை நினைத்து ஏறுகிறாய்?

"பத்திரமாக ஊரில் இறங்க வேண்டும் என்பதை நினைத்து தான்."

",  எதை நினைத்து பள்ளியில் படிக்க ஆரம்பிக்கிறாய்?"

"வெற்றியோடு படித்து முடிக்க வேண்டும்  என்பதை நினைத்து தான்."

",அதேபோல்தான் இதுவும். 

எப்படி இறங்குவதற்காகவே பேருந்தில் ஏறுகிறோமோ,

 அதேபோல்தான் ஆன்மீக ரீதியாக,

 இறப்பதற்காகவே பிறக்கிறோம்.
.
பணக்காரனாக பிறப்பதை விட பரிசுத்தனாக இறப்பதே முக்கியம்.

உண்மையில் இறப்பு என்பது முடிவு அல்ல.

எப்படி மேல்நிலை பள்ளி படிப்பின் முடிவு, கல்லூரி படிப்புக்கு ஆரம்பமோ,

அதேபோல் இவ்வுலக வாழ்வின் முடிவு நித்திய பேரின்ப வாழ்வின் ஆரம்பம்.

ஒரு வேலையை ஆரம்பிக்கும்போது அதை நல்ல முறையில் செய்து 'முடிப்பாயாக' என்று வாழ்த்துவதே முறை.

வீட்டுக்கு புறப்பட்டு போகின்றவனை ஏன் போனவுடன் ஒரு phone  செய் என்று சொல்கிறோம்?

பத்திரமாக வீட்டுக்கு போய் சேர் என்று சொல்வதைத்தானே
 அப்படி சொல்கிறோம்!

விண்ணக வாழ்வின் ஆரம்பத்தை மனதில் வைத்துதான் வழிபாட்டு ஆண்டின் முதல் நாளிலேயே உலக அழிவைப் பற்றி திருச்சபை பேசுகின்றது.

நாம் இவ்வுலகில் பிறந்தது, விண்ணக வாழ்விற்காகத்தானே!

நட்சத்திரங்களையும் உலகையும் படைத்தவரே அவை அழிந்து போகும், என்று சொல்லியிருக்கிறார்.

அழிவு இல்லாதது இறைவனுடைய வார்த்தையும், அவர் வாழும் விண்ணகமும்தான்.

நாம் விரும்புகிறோமோ 
விரும்பவில்லையோ 

நமது இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வந்தே தீரும்.

 ஒருவரைப் பார்த்து "நீண்டநாள் வாழ்க" என்று நாம் 
வாழ்த்தும்போது நாம் வாழ்த்த மட்டும்தான் செய்கிறோம்.

ஆனால் நீண்ட நாள் வாழ்வு நமது கையில் இல்லை,

நமது இவ்வுலக வாழ்வு இறைவன் கையில்தான் இருக்கிறது.

அது  என்று முடியும் என்பது அவரது திட்டத்தை பொருத்தது.

எப்படி முடியும் என்பது நமது ஒத்துழைப்பைப் பொருத்தது.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி இறைவனது சித்தத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்

 நமது இவ்வுலக வாழ்வின் முடிவு மறுவுலக பேரின்ப வாழ்வின் ஆரம்பமாக இருக்கும்.

ஆகவே ஒருவரை வாழ்த்தும்போது உங்களது இவ்வுலக வாழ்வின் முடிவு உறுதி என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் தங்களது இவ்வுலக வாழ்வின் முடிவு மறுவுலக 
பேரின்ப வாழ்வின் ஆரம்பமாக இருப்பதற்கு ஏற்றவகையில் வாழ்வார்கள்.

ஆகவேதான் தாய் திருச்சபை வழிபாட்டு வருடப் பிறப்பன்று  உலக அழிவை ஞாபகப்படுத்தி வாசகங்களை கொடுத்துள்ளது."

"அதாவது இந்த உலகம் ஒரு நாள் முடியும், 

ஆகவே இதை நம்பி வாழாமல் என்றென்றும் இருக்கப் போகிற

 நித்திய பேரின்ப வாழ்வை நம்பி வாழ நமக்கு அறிவுறுத்துகிறது அப்படித்தானே."

",அப்படியேதான். நீண்ட நாள் வாழ்வது முக்கியமல்ல,

 வாழ்வின் முடிவு நல்ல முடிவாக இருக்கும்படி வாழ்வது தான் முக்கியம்.

100 ஆண்டுகள் இஷ்டம் போல் வாழ்ந்து விட்டு 100வது ஆண்டு 
பாவத்தோடு இறந்து, பரலோகத்தை இழப்பதை விட,

ஒரு சில ஆண்டுகளே இறைவனது சித்தப்படி வாழ்ந்து 

நித்திய பேரின்பத்தை அடைவது
 எவ்வளவோ மேல். 

இந்தியாவிற்கு வரும்படியாக அமெரிக்காவில் ஆகாய விமானத்தில் ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியாவில் வந்து பத்திரமாக இறங்குவது முக்கியமா?

 விமானத்திலேயே ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பது முக்கியமா?"

"ஆகவே முடிவை நினைத்தே வாழ வேண்டும் என்கிறீர்கள்."

", முடிவை மட்டும்தான்  நினைத்து வாழ வேண்டும்.

எப்படி பள்ளி இறுதித் தேர்வை நினைத்து ஆண்டு முழுவதும் படிக்கிறோமோ அதேபோல வாழ்வின் இறுதி நாளை நினைத்தே வாழ வேண்டும்.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் நமது பரலோக அன்னையைப் பார்த்து 

"எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"

 என்று ஜெபிக்கிறோம். 

இவ்வுலக  வாழ்வின் முடிவுதான் மறுவுலக வாழ்வின் ஆரம்பம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment