Tuesday, November 16, 2021

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"(லூக்.19:26)

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"
(லூக்.19:26)

பொற்காசுகள் உவமையில் அரசர் தனது ஊழியர்களிடம் பொற்காசுகளைக் கொடுத்து அவற்கொண்டு வாணிகம் செய்யச் சொல்கிறார்.

அவற்றைக் கொண்டு இலாபம் சம்பாதித்தவர்களை நகர்களுக்கு அதிகாரிகள் ஆக்குகிறார்.

எதுவும் சம்பாதிக்காதவனிடமிருந்து
 கொடுக்கப்பட்ட பொற்காசைப் பிடுங்கி, பத்துப் பொற்காசுகள் உடையவனுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு 

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"

என்கிறார்.

இருக்கிற பணத்தைக் கொண்டு லாபகரமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு ஆண்டவர் புத்திமதி எதுவும் சொல்லவில்லை.

ஆண்டவர் வணிக பொருளாதாரம் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆண்டவர் போதிப்பது முழுக்க முழுக்க ஆன்மீக பாடம்.

அரசர் கடவுள். பொற்காசுகள் அவர் நமக்குத் தரும் அருள் வரங்கள்.

உலகம் யாரிடம் பணம் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு அதிக மதிப்பு தருகிறது.

பணத்தின் அளவுக்கு ஏற்ப மதிப்பின் அளவும் இருக்கும்.

இறைவனுக்கு முன்னால் பணத்திற்கு மதிப்பு எதுவும் இல்லை.

இறைவனுக்கு முன்னால் மதிப்பு உள்ள செல்வம் அருள் மட்டுமே.

இறைவனுக்கு முன் அருளுக்கு அப்படி ஏன் அவ்வளவு மதிப்பு?


ஏனெனில் அருள் அவருடைய சொத்து.

அளவு கடந்த அருள் உள்ளவர் கடவுள்

அவருடைய அருளினால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அவருடைய அருள் இல்லாமல் நம்மால் அசையக்கூட முடியாது.

தனது அருளினால் நல்லவர்களையும், கெட்டவர்களையும் கடவுள் பராமரித்து வருகிறார்.

நல்லவர்கள் கடவுளுடைய அருளால் இயங்குவதோடு அவர் தரும் அருளை ஏற்றுக்கொண்டு இயங்குகிறார்கள்.

கடவுளின் அருளை ஏற்றுக் கொள்ளும்போது அவர்கள் கடவுளோடு இணைக்கப்படுகிறார்கள்.

The good live in union with God.

கெட்டவர்கள் அவர் தரும் அருளை ஏற்றுக் கொள்வதில்லை. ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இறைவனோடு ஆன்மீக உறவு இல்லை. ஆனாலும் இறைவன் தனது இரக்கப் பெருக்கத்தால் அவர்களை காப்பாற்றி வருகிறார்.

 கடவுள் தரும் அருளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே விண்ணகத்தில் இடம் உண்டு.

ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லை.

விண்ணகம் செல்ல ஆசைப்படுகின்றவர்கள் இறைவன் தரும் அருளை ஏற்றுக் கொள்வதோடு, அதில் வளர வேண்டும்.

இறைவனிடமிருந்து அருளை மீண்டும் மீண்டும் பெற்று அதிகமான அருளை ஈட்ட வேண்டும்.

இயேசு சொன்ன பொற்காசுகளின் உவமை இதைத் தான் குறிக்கிறது.

இறைவன் அவரால் படைக்கப்பட்ட அனைவருக்குமே அவரது அருளை தருகிறார்.

அவர் முதலில் தரும் அருளைப் பயன்படுத்தி மேன்மேலும் அருளில் வளர வேண்டும்.

இறைவனின் அருளை மேலும் மேலும் பெற்று வளர நமக்கு உதவியாய் இருப்பவை 
ஜெபம், 
தவம், 
தேவத்திரவிய அனுமானங்கள்,
பிறர் அன்பு செயல்கள்,
 நற்செயல்கள் ஆகியவை. 

ஜெபத்தின் மூலம் இறைவனது அருளை கேட்டுக் 
கொண்டேயிருக்க வேண்டும். 

நாம் கேட்கும்போதெல்லாம் அருளை தந்து 
கொண்டேயிருப்பார்.

நாம் ஆண்டவருக்காக  ஒறுத்தல் மூலம், உடலை அடக்கி தவம் செய்யும் போதெல்லாம் அதற்கு பரிசாக இறைவன் அருள் வரங்களை தந்து கொண்டேயிருப்பார். 

பிறரன்பு செயல்கள் செய்யும்போதும், நற்செயல்கள் புரியும் போதும், இறைவன் தனது அருளால் நம்மை ஆசீர்வதிப்பார்.

நமது 
ஜெபம், 
தேவத்திரவிய அனுமானங்கள்,
தவம், 
பிறர் அன்பு செயல்கள், 
நற்செயல்கள் மூலம் நாம் பெறும் அருளினால் நாம் அருள் செல்வத்தில் வளர்வோம்.

எவ்வளவுக்கு எவ்வளவு அருட்செல்வத்தில் வளர்ந்திருக்கிறோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு விண்ணகத்தில் நமது பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

நமது வாழ்வின் இறுதிநாளில் இயேசு நம்மை சந்திக்க வரும்போது நமக்கு மோட்ச பேரின்பத்தை அளிப்பார்.

இதைத்தான் இயேசு தன் உவமையில் 

பொற்காசு பெற்றவர்கள் எத்தனை பொற்காசுகள் அதிகமாக ஈட்டுகிறார்களோ அத்தனை நகரங்களுக்கு அதிகாரிகள் ஆக்குவதாக குறிப்பிடுகிறார். 

ஆனால் இறைவன் முதலில் கொடுத்த அருளைப் பயன்படுத்தாமல் 

தங்களது இஷ்டம் போல் வாழ்பவர்களுக்கு விண்ணக சன்மானம் கொடுக்கப்பட மாட்டாது.

பயன்படுத்துவதற்குக் கிடைத்த பணத்தை பயன்படுத்தாதவர்களுக்கு பணம் இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.

அதனால் தான் இல்லாதவர்களிடம் இருந்து உள்ளதும் (ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டதும்) எடுக்கப்படும் என்றார்.

வாழ்வின் இறுதிநாளில் சந்திக்க வரும்போது 

 இறைவன் கொடுத்த அருளைப் பயன்படுத்தாதவர்களிடமிருந்து

(இருந்தும் இல்லாதது போல் வாழ்ந்தவர்களிடமிருந்து)

முதலில் கொடுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் அருள் திரும்பப் பெறப்படும்.

அவர்களுக்கு விண்ணகம் இல்லை.

இறைவன் பாரபட்சமின்றி எல்லோருக்கும் அருள் வரங்களை கொடுக்கிறார்.

கிடைத்த அருளை பயன்படுத்தி அருள் செல்வத்தில் வளர்ப்பவர்களுக்கு விண்ணகத்தில் நித்திய பேரின்பம் கிடைக்கும்.

அதை பயன்படுத்தாதவர்களுக்கு நித்திய பேரிடர்தான் கிடைக்கும்.

இறைவன் தரும் அருளை பயன்படுத்தி அருட்செல்வத்தில் வளர்ந்து நித்திய பேரின்ப பாக்கியத்தைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment