(மாற்கு.12:44)
அளவை (Quantity) விட
தரமே (Quality) முக்கியம்.
இறைவனுக்குக் கொடுக்கப்படும் காணிக்கையின் தரத்தை தீர்மானிப்பது காணிக்கை போடுபவர்களின் உள்ளம்.
இப்பிரபஞ்சத்தையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர் இறைவன்.
அனைத்தும் அவருக்கே சொந்தம்.
நாம் கொடுத்து நிறைய வேண்டியது அவருக்கு எதுவுமே இல்லை.
உடைமை அடிப்படையில் நாமும் அவருக்கே சொந்தம்.
கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும் நாம் அவருடையவர்களே.
நாம் இஷ்டப்படி முடிவு எடுப்பதற்காக அவர் நமக்கு தந்துள்ள மன சுதந்திரத்தில் அவர் குறுக்கிடுவதில்லை.
நாம் முழுவதுமாக அவருக்கே சொந்தம் என்றாலும்
நமது முழு மன சுதந்திரத்தோடு நம்மை நாம் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.
நமது முழு மன சுதந்திரத்தோடு அவருக்கு எதைக் கொடுக்கிறோமோ அதுதான் நாம் அவருக்கு கொடுக்கும் காணிக்கை.
எந்த அளவுக்கு நாம் மனதார கொடுக்கிறோமோ அந்த
அளவுக்குதான் காணிக்கையின் தரம் இருக்கிறது.
நமது காணிக்கையின் தரம் நமது உள்ளத்தைப் பொறுத்தது,
காணிக்கையின் அளவை அல்ல.
நிறைய செல்வம் வைத்திருப்பவர்கள் காணிக்கை செலுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக,
அல்லது மற்றவர்கள் நாம் செலுத்தும் காணிக்கையின் அளவை பார்த்து நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக
எவ்வளவு காணிக்கை செலுத்தினாலும் அது இறைவனுக்கு ஏற்பு உடையது ஆகாது.
ஆனால் பரம ஏழைகள் தங்களிடம் உள்ள ஒரே ஒரு பைசாவை தங்களது முழுமையான உள்ளத்தோடு இறைவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தால் அதுவே இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது.
"ஏழைக் கைம்பெண் ஒருத்தி வந்து ஓர் அணா பெறுமானமுள்ள இரண்டு செப்புக் காசுகள் போட்டாள்.
43 இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, "காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
44 ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர்.
இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்" என்றார்."
(மாற்கு, 12: 42-44)
அன்னை மரியாள் ஒரு ஏழைப் பெண்மணி.
கோவில் உணவிலேயே வளர்ந்தவள்.
அவளுக்கென்று சொந்தமாக சொத்து எதுவும் இல்லை.
ஆனாலும் அவள் தன்னை முழுவதும் உளமாற இறைவனுக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்து விட்டாள்.
அவள் தனது வாழ்நாளெல்லாம் இறைவனுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.
தனது தாயைப் போலவே நாமும் இருக்க வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார்.
"ஆலயம் கட்ட நன்கொடை பிரித்துக் கொண்டிருக்கிறோம்.
10,000 அல்லது அதைவிட அதிகம் கொடுப்பவர்களுடைய பெயர்கள் கல்லில் பொறிக்கப்பட்டு கோவில் சுவரில் பதிக்கப்படும்.
நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்கள்."
"விளம்பரத்திற்காக நான் நன்கொடை எதுவும் கொடுப்பதில்லை.
கோவில் கட்டுமான பணிகள் நடக்கும்போது எனது நன்கொடையை உழைப்பு வடிவத்தில் கொடுக்கிறேன்."
நமது முழு உள்ளத்தோடு நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.
அதுவே நாம் அவருக்குக் கொடுக்கும் மிகப் பெரிய காணிக்கை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment