Thursday, November 4, 2021

" அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்."(லூக்.16: 9)

" அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்."
(லூக்.16: 9)

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்." என்று நம் ஆண்டவர் சொல்கிறார்.

". நானே உலகின் ஒளி." என்றார் இயேசு.

ஒளியாகிய இறைவனுக்காக வாழ்பவர்கள் ஒளியின் மக்கள்.

இவ்வுலக வாழ்வையே நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள் இவ்வுலகின் மக்கள்.

ஒளியின் மக்கள்   கடவுளின் அருளைக் கொண்டு ஆன்மீக வாழ்வை வாழ்கிறார்கள்.

இவ்வுலகின் மக்கள் உலகப் பொருளின் உதவியைக் கொண்டு இவ்வுலக வாழ்வை வாழ்கிறார்கள்.

ஒளியின் மக்கள் விண்ணுலக வாழ்வையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தாலும் இவ்வுலகில் உயிர் வாழ இவ்வுலக செல்வம் தேவைப்படுகிறது.

இவ்வுலகின் மக்கள் இவ்வுலக செல்வத்தை இவ்வுலக சிற்றின்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற விவேகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 

ஆனால் மறுவுலக வாழ்வையே நோக்கமாக கொண்டு  வாழ்கின்ற ஒளியின் மக்களுக்கு

 இந்த உலகின் செல்வத்தை மறு உலக வாழ்வின் பேரின்பத்தை ஈட்ட  பயன்படுத்த  போதுமான விவேகம் இல்லை.

இவ்வுலக மக்களிடமும், ஒளியின் மக்களிடமும் இவ்வுலக செல்வம் இருக்கிறது.

இவ்வுலக மக்கள் மறுவுலக வாழ்வைப் பற்றி கவலை படாதவர்கள். ஆகவே மறுவுலக வாழ்வுக்காக இவ்வுலக செல்வத்தை அவர்கள் பயன்படுத்துவதில்லை.

ஆனால் இவ்வுலக இன்பத்தை வாழ அதை விவேகத்தோடு பயன்படுத்துகின்றார்கள்.

முறைப்படி ஒளியின் மக்கள் இவ்வுலக செல்வத்தை மறுவுலக வாழ்விற்காக பயன்படுத்த வேண்டும்.

 ஆனால் அவர்களிடம் அதற்கான விவேகம் இல்லை.

 ஆகவே அவர்களும் தங்களிடம் உள்ள உலக செல்வத்தை இவ்வுலக வாழ்க்கைகாகவே  பயன்படுத்துகின்றார்கள்.

மறுவுலக வாழ்விற்கான அருளை ஈட்டுவதற்கு இவ்வுலக செல்வத்தை பயன்படுத்த அவர்களுக்கு தெரிந்திருந்தால்,

 அவர்களை விவேகமானவர்கள் என்று கூறலாம்.

 ஆனால் அவர்களிடம் அந்த விவேகம் இல்லை.

 அவர்களிடம் உள்ள இவ்வுலக செல்வம் மறு உலக வாழ்க்கைக்கு பயன்படாமல் போய்விடுகிறது.

"இவ்வுலக அநீத செல்வத்தைக்கொண்டு விண்ணகத்தில்  நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு  சம்பாதித்துக் கொண்டால் உங்களது மரணத்தின்போது அது உங்களைக் கைவிட்டுவிட்டாலும்

அதன் உதவியால் நீங்கள் சம்பாதித்துக் கொண்ட விண்ணக நண்பர்கள் உங்களை  விண்ணகத்தில் ஏற்றுக் கொள்வார்கள்.''

 என்று இயேசு சொல்கிறார். 

இக்கருத்தை நமக்கு புரிய வைக்கவே அநீத கண்காணிப்பாளன் உவமையைக் கூறினார்.

அவன் தன் தலைவனின் உடைமைகளை விரயம் செய்ததற்காக பதவியை விட்டு நீக்கப்படுகிறான்.

பதவி போய்விட்டால் சம்பளமும், மற்ற வருமானமும் போய்விடும்.

கண்காணிப்பினின்று அவன் தள்ளப்படும்போது,

அவனுக்கு உதவி செய்வதற்காக தவறான முறையில் நண்பர்களை தயாரித்துக் கொள்கிறான்.

தலைவரிடமிருந்து கடன் பெற்றிருந்த சிலரின் கடன் பத்திரங்களில்  கடன் தொகையை குறைத்து எழுத சொல்கிறான்.

அப்படிச் செய்ததன் மூலம் தலைவனுக்கு போக வேண்டிய பணத்தை தனக்கு வரும்படி ஏற்பாடு செய்கிறான்.

அது சரி என்று ஆண்டவர் சொல்லவில்லை.

அவன் உலகைச் சார்ந்த விவேகத்தோடு செயல்படுகிறான் என்று அவர் சொல்கிறார்.

ஒளியின் மக்கள் விண்ணைச் சேர்ந்த  விவேகத்தோடு செயல்படுவதில்லை என்பதை சுட்டிக் காண்பிக்கிறார்.

நம்மிடமும் உலக செல்வம் இருக்கிறது. 


 நம்மிடம் விவேகம் இருந்தால் அதைக்கொண்டு விண்ணகத்தில் நண்பர்களை சம்பாதித்துக் கொள்வோம்.

உலக செல்வத்தைக் கொண்டு  விண்ணக நண்பர்களைச் சம்பாதிப்பது எப்படி?

உலக செல்வத்தை நமது உலக வாழ்வுக்காக மட்டும் செலவழித்தால் அதனால் விண்ணகப் பயன் எதுவும் இல்லை. 

உலக செல்வமாயினும் அது கடவுளின் அருளினால் கிடைத்ததுதான்.

 ஆகவே அதை இறைவன் பணிக்கு பயன்படுத்தினால்தான் நமக்கு விண்ணகத்தில் பலன் உண்டு.

இறையன்பின் அடிப்படையில்  பிறரை நேசிக்க கடமைப்பட்டுள்ள நாம் நமது உலக செல்வத்தை பிறரன்பு பணிகளில் செலவழித்தால் நமக்கு  விண்ணகத்தில் நண்பர்கள் கிடைப்பார்கள்.

நமக்குத் தெரியாத ஆன்மாக்கள் எத்தனையோ பேர்  உத்தரிக்கிற தலத்தில் நமது உதவிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 அப்படிப்பட்டவர்கள் நித்திய இளைப்பாற்றி அடைய நம்மிடமுள்ள செல்வத்தைக் கொண்டு திருப்பலிகள் நிறைவேற்றினால்

அவர்கள் சீக்கிரம் விண்ணகத்தை அடைவதோடு 

அவர்கள் விண்ணகம் அடைய உதவிய நமக்காகவும் இறைவனை மன்றாடுவார்கள். 

அவர்களுடைய செப உதவியினால் நாமும் விண்ணேற்றம் அடைவோம்.

இந்த உலகில் நாம் யாருக்கெல்லாம்  நம்மிடம்  உள்ள செல்வத்தைக் கொண்டு பிறரன்பு பணிகள் செய்கின்றோமோ

அவர்களெல்லாம் நமது ஆன்மீக நண்பர்களாகி விடுகிறார்கள்.

அவர்களும் நமக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வார்கள்.

இவ்வுலக செல்வத்தைக் கொண்டு நாம் சம்பாதித்த ஆன்மீக நண்பர்கள் நாம் விண்ணகம் செல்லும் போது நம்மை வரவேற்பதோடு நம்மோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வார்கள்.

நமது பிறரன்பு பணிகள் மூலம் இவ்வுலக செல்வத்தை விண்ணுலக அருட்செல்வமாக மாற்றிக்கொள்ளலாம்.

பணம் நம்மோடு வராவிட்டாலும் அதைக் கொண்டு நாம் செய்த நல்ல செயல்கள் நம்மை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும்.

அன்பு பணிகள் செய்து,

அருள் வாழ்வு வாழ்ந்து,

ஆண்டவர் பாதத்தை அடைய  

உலக செல்வத்தை விவேகத்தோடு பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment