(லூக்.19:46)
இயேசு ஜெருசலேம் கோயிலுக்குள் சென்ற போது அங்கே வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
ஆண்டவர் விற்பவர்களைத் துரத்தத் தொடங்கி,
அவர்களை நோக்கி, "என் வீடு செபவீடாகும்" என்று எழுதியிருக்கிறது.
நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.
ஜெருசலேம் தேவாலயம் மனிதர்களால் கட்டப்பட்டு இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மனிதர்களால் கட்டப்பட்ட ஆலயத்திலேயே மனிதர்கள் வியாபாரம் செய்யும்போது அதை
"கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்"
.என்று சொன்ன நம் ஆண்டவர்
அவரே கட்டிய ஆலயத்தில் அவர் விரும்பாத வியாபாரம் எல்லாம் நாம் செய்தால் நம்மை என்ன சொல்லுவார்? சிந்தித்துப் பார்ப்போம்.
அவரால் கட்டப்பட்ட ஆலயம் எங்கே இருக்கிறது?
நாம்தான் அவரால் கட்டப்பட்ட ஆலயங்கள்.
" உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?"
(1 கொரி. 6:19)
கடவுளை மகிமைப்படுத்துவதற்காக
ஆலயமாகிய உடல் நமக்கு தரப்பட்டிருக்கிறது.
கடவுளுக்கு விருப்பமான முறையில் நமது உடலை நாம் பயன்படுத்தினால்தான் நம்மால் கடவுளை மகிமைப்படுத்த முடியும்.
நமது உடல் மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட சடப் பொருளாக இருக்கலாம்.
ஆனால் அதை இயக்கிக் கொண்டிருக்கும் நமது ஆன்மா கடவுளைப் போலவே ஒரு ஆவி.
நமது ஆன்மாவும் உடலும் சேர்ந்துதான் நாம்.
நமது உள்ளம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.
நாம் நல்லவர்களோ, கெட்டவர்களோ,
நமது உள்ளத்தில் பரிசுத்த ஆவி குடியிருந்து நம்மை பராமரித்து வருகிறார்.
கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்றால்
நாம் நம்மில் குடியிருக்கும் அவரை நம்மைப் படைத்தவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏற்றுக் கொண்டு, நம்மை எதற்காக படைத்தாரோ அதன்படி வாழ வேண்டும்.
அதாவது நமக்குள் இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அவரது சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
அவரது சித்தப்படி நடந்தால் நாம் நமது உள்ளத்தாலும், உடலாலும் அவரை மகிமைப் படுத்துகின்றோம்.
அவரது சித்தத்திற்கு எதிராக நடந்தால் அவரை அவமதிக்கிறோம்.
நமது உள்ளம் எண்ணங்களின் பிறப்பிடம்.
நமது உள்ளத்தில் பிறக்கும் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம் உள்ளத்தில் வாழும் இறைவன் பரிசுத்தர்,
அன்பு மிக்கவர்,
இரக்கம் மிக்கவர்,
மன்னிக்கும் குணம் உள்ளவர்,
தாராள குணம் உள்ளவர்.
நமது எண்ணங்களும் பரிசுத்தமானவைகள் ஆகவும்,
அன்பானவைகளாகவும்,
இரக்கம் உள்ளவைகளாகவும்,
மன்னிக்கும் குணத்தை பிரதி பலிப்பவைகளாகவும்,
தாராள குணத்தை வெளிப்படுத்துபவைகளாகவும்
இருக்க வேண்டும்.
நமது நல்ல எண்ணங்கள் நல்ல சொற்களாகவும் நல்ல செயல்களாகவும் வெளிப்பட வேண்டும்.
அப்போதுதான் நமது உள்ளத்திலிருந்து நம்மை பராமரித்துக் கொண்டிருக்கும் நமது அன்பின் தேவனை மகிமைப்படுத்த முடியும்.
நம் உள்ளமே இறைவன் வாழும் செபவீடு தான்.
அதைக் கெட்ட எண்ணங்கள் குடியிருக்கும் கள்வர் குகையாக மாற்றிவிடக் கூடாது.
ஜெப வாழ்வு என்றாலே இறைவனோடு ஒன்றித்து வாழ்வது தான்.
இறைவனோடு ஒன்றித்து வாழ உதவி செய்யும் நல்ல, பரிசுத்தமான எண்ணங்கள் மட்டும் தான் நம் உள்ளத்தில் இறைவனோடு குடியிருக்க வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment