Thursday, November 25, 2021

" மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா."(லூக்.21:33)

" மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா."
(லூக்.21:33)

இயேசு தனது இரண்டாவது வருகை பற்றியும்,

 அது வரும்போது உலகில் தோன்றும் அறிகுறிகளை பற்றியும் கூறிய பின்

"மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா"

என்று கூறினார்.

விண்ணிலுள்ள நட்சத்திரங்களையும் நாம் வாழும் இந்த பூமியையும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தவர் அவரே.

படைத்தவரே கூறுகிறார் அவை ஒழிந்து போகும் என்று.

ஆனால் அவரது வார்த்தைகள், அவர் கூறிய உண்மைகள் நித்தியமானவை.

அவரது வார்த்தைகளின்படி நமது ஆன்மா அழியாதது.

நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரது வார்த்தைகளையா, 

நாம் வாழும் அழிந்து போகக்கூடிய   உலகத்தையும், விண்ணில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களையுமா?

 இறைவன் விண்ணையும் மண்ணையும் நமக்காகவே படைத்தாரேயொழிய, நம்மை அவற்றுக்காக படைக்கவில்லை.

நம்மை அவருக்காகவே படைத்தார்.

நமது வாழ்வின் நோக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது இறைவன் ஒருவரைத்தான்.

இறைவனைப் பற்றியும், அவரை அடைவது எப்படி என்பது பற்றியும் இயேசு தனது வார்த்தைகளால் தெளிவாக கூறியுள்ளார்.

அதை அறிந்து கொள்வதற்காகவே நாம் இயேசுவின் வார்த்தைகளை வாசிக்க வேண்டும், 
தியானிக்க வேண்டும்,
 வாழ வேண்டும்.

இவ்வுலக உண்மைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக இயேசுவின் வார்த்தைகளை நாம் வாசித்தால் நமது வாசிப்பு வீண்.

உதாரணத்திற்கு பைபிள்   உலகின் படைப்பைப் பற்றி கூறுகின்றது.

பைபிள் உலகின் தோற்றம் பற்றி கூறும் விஞ்ஞான நூல் அல்ல,

சிலர் விஞ்ஞான நூலை வாசிப்பது போல பைபிளை வாசித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆராய்ச்சி வீண்.

நாம் இறை வார்த்தையை வாசிப்பது இறைவனைப்பற்றி அறிந்து கொள்வதற்காக,

உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அல்ல.

சர்வத்தையும் படைத்தவர் இறைவனே,

மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்,

 நமது பாவத்தினால் இறை உறவை முறித்துக்கொண்டோம்,

நாம் முறித்துக்கொண்ட உறவை மீட்டுத்தர மீட்பரை அனுப்ப இறைவன் வாக்களித்தார்,

மீட்பரின் தாய் பாவ மாசு இன்றி 
உற்பவிப்பாள்

என்ற இறைச் செய்தியை பைபிள்  தருகின்றது.

விஞ்ஞானபூர்வமான உலக தோற்றத்தைப் பற்றி அல்ல.

பைபிளில் வரலாறு இருக்கிறது.
ஆனால் அது இறைச் செய்தியை நமக்கு தருவதற்கான வரலாறு.

சாதாரண உலக வரலாற்றுப் புத்தகங்களை வாசிப்பது போல் அதை வாசிக்க கூடாது.

 அதில் இருக்கும் இறைச் செய்தியைப் புரிந்து, கிரகித்துக் கொள்வதற்காக வாசிக்க வேண்டும்.

இஸ்ரயேல் மக்கள் வரலாற்றை வாசிக்கும்போது இறைவன் தன் மக்களை எப்படி கருணையோடு பராமரித்து வருகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நமது ஆன்மாவின் மீட்பை மையமாக வைத்தே பைபிள் வாசிப்பு இருக்க வேண்டும்.

ரயிலில் ஏறி சென்னைக்கு பிரயாணம் செய்வதாக வைத்துக்கொள்வோம்.

சென்னைக்கு போவதற்காக ரயிலில் பயணிக்கின்றோமா?

அல்லது,

ரயிலில் பயணிப்பதற்காக சென்னைக்கு போகின்றோமா?

நிச்சயமாக நோக்கம் போகவேண்டிய இடமேயொழிய பிரயாணம் அல்ல.

அதே போல்

 விண்ணகம் போவதற்காக உலகில் பயணிக்கின்றோமா?

 அல்லது 

உலகில் பயணிப்பதற்காக விண்ணகம் செல்கிறோமா?

நிச்சயமாக நோக்கம் 
விண்ணகமேயொழிய பிரயாணம் அல்ல.

பைபிளின் நோக்கம் விண்ணகத்தை நோக்கிய ஆன்மீக பயணத்தில் நமக்கு உதவுவதே,

உலக வாழ்வில் உதவுவதற்காக அல்ல.

Bible is meant for our spiritual life,
not material life.

அன்பர் ஒருவர் 

"எனது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்திருக்கிறேன். அதற்கு ஆலோசனை கூற பைபிளை கேட்கப்போகிறேன்." என்றார்.

" பைபிளுக்கு உங்கள் பெண்ணை எப்படி தெரியும்?" என்று கேட்டேன்.

"கண்ணை மூடிக்கொண்டு பைபிளைத் திறப்பேன்.

 எந்த வசனம் என் கண்ணில் படுகிறதோ அதை வைத்து செய்யலாமா செய்ய வேண்டாமா என்பதை தீர்மானிப்பேன்.

 பைபிள் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டி என்று பங்கு சாமியார் சொன்னாரே.

இதோ பாரும்." என்று கூறிக்கொண்டே பைபிளை கையில் எடுத்தார்.

கண்ணை மூடிக்கொண்டே பைபிளைத் திறந்தார்.

கண்ணில் பட்ட வசனத்தை வாசித்தார்.

" போய் நான்றுகொண்டான்."
(மத்.27:5)

"இப்போ என்ன செய்யப் போகிறீர்?" என்று கேட்டேன். 

"திரும்பவும் கேட்கப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டே கண்ணை மூடி திறந்தார்.

கண் போன போக்கு சரியில்லை.

"என்ன கண்ணில் பட்டது " என்று கேட்டேன்.

" நீரும் போய் அவ்வாறே செய்யும்"
(லூக். 10:37)

"இப்போ என்ன செய்யப் போகிறீர்?"

"முக்கா முக்கா மூணு நேரம் பார்க்க வேண்டும்."

கண்ணை மூடி பைபிளைத் திறந்தார்.

முகம் போன போக்கு சரியில்லை.

"என்ன கண்ணில் பட்டது "

"செய்யவேண்டியதை விரைவில் செய்" (அரு13:27)

"இப்போ என்ன செய்யப் போகிறீர்?"

"இந்த பெண் வேண்டாம் என்று விட்டுவிட வேண்டியதுதான்."

நான் சிரித்துவிட்டேன்.
"
"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றுதானே வாசித்தீர்கள். இந்த வாக்கியம் திருமணத்திற்கு எப்படி தடையாகும்?"

"அது முதல் தடவை திறக்கும்போது வந்திருக்க வேண்டும்."

"பிறகு ஏன் இரண்டாவது தடவை திறந்தீர்கள்?"

அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"ஹலோ! உங்களுக்கு பெண் பார்க்க உதவுவதற்காக பைபிள் எழுதப்படவில்லை.

அது ஆன்மீக வழிகாட்டியான இறைவார்த்தை.

இப்படி சோசியம் பார்ப்பதற்காக பைபிளை வாசிக்கக் கூடாது.

திருச்சபையின் வழிகாட்டுதலின்படி வாசித்து, தியானித்து, அதன்படி நடப்பதற்காக பைபிளை பயன்படுத்த வேண்டும்.

பைபிள் ஆன்மீக வழி காட்டி, உலக
வழி காட்டி அல்ல."

அநேகர் இறைவனையே இவ்வுலக வாழ்க்கைக்கே பயன்படுத்த விரும்புகிறார்கள்.

அவர் நம்மை மறு உலக 
வாழ்க்கைகாகவே படைத்தார்.

அவரை இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் பயன்படுத்த விரும்புவது நோக்கத்திற்கு எதிரான செயல்.

இவ்வுலக வாழ்க்கைக்கான உதவிகளை  இறைவனிடம் கேட்கலாம்.
 தடை இல்லை.

ஆனால் அது மறுவுலக வாழ்க்கைக்கு நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

குழந்தை வரம் கேட்கலாம். குழந்தையை இறைவனுக்காக வளர்ப்பது நோக்கமாக இருக்க வேண்டும்.

நல்ல சுகம் கேட்கலாம். அது இறைப்பணியில் நமக்கு உதவுவதற்காக இருக்க வேண்டும்.

இந்த உலகம் நமக்கு தரப்பட்டிருப்பதே இறை பணிக்காக பயன் படுத்துவதற்காகத்தான்.

விண்ணுலக வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு எந்த உதவியையும் வேண்டுமானாலும் கேட்கலாம்.

அழியாத விண்ணுலகை மறந்துவிட்டு 

அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் இறைவனின் உதவியை நாடுவது 

இறைவனையே அவருக்கு எதிராக செயல்படக் கேட்பதற்குக் சமம்.

ஏனெனில் விண்ணுலக நோக்கமின்றி மண்ணுலகில் வாழ்வதற்காக மட்டும் கடவுள் மனிதனை படைக்கவில்லை.

ஒருவன் தென்காசியில் இருந்து சென்னைக்கு ஒரு பேருந்தில் பயணிக்கிறான்.

பேருந்தை இடையில் சாப்பாட்டிற்காக ஏதாவது ஹோட்டல் அருகே அரை மணி நேரம் நிறுத்துவது வழக்கம்.

ஹோட்டலுக்குள் நுழைந்தவன் சாப்பாட்டிலேயே ஒரு மணி நேரம் செலவழித்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம்.

என்ன நடக்கும்?

பேருந்து போய் விடும்.

அவனால் போக வேண்டிய இடத்திற்கு போக முடியாது.

இவ்வுலகில் வாழும் போது இவ்வுலகை மட்டும் நினைத்து அல்ல,

 விண்ணுலகை மட்டும் நினைத்து வாழ்வோம்.

அதற்காக இறைவனின் வார்த்தையை வாசித்து தியானிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment