Monday, November 15, 2021

சிலுவையின் மூலமாகத்தான் மீட்பு

சிலுவையின் மூலமாகத்தான் மீட்பு.


", ஏன்டீ காபி ரெடியா?"

"ஏங்க, இப்போதானே உங்கள் வாயிலிருந்து டீ வந்தது. அதைக் குடித்திருக்க வேண்டியதுதானே."

"நான் கேட்டது காபி."

"காபி ரெடி. ஆனால் அதைக் கொண்டு வர நான் ரெடியாக வேண்டுமென்றால் நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்."

"வகுப்பில் மாணவர்களிடம் நான் கேள்விகள் கேட்கிறேன். வீட்டில் நீ என்னிடம் கேள்விகள் கேட்கிறாய்.

ஆனால் நான் பாடம் நடத்திவிட்டு கேள்விகள் கேட்கிறேன். நீ பாடம் நடத்தாமலேயே கேள்விகள் கேட்கிறாய்.

பரவாயில்லை. கேள். பதில் சொல்லும்போதே பாடம் நடத்தி விடுகிறேன்."

"நாம் என்ன செய்தாலும் நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் அதோடு இணைந்திருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும்போது சிலுவை அடையாளம் (Sign of the Cross) போட்டு ஆரம்பிக்கிறோம்.

இதற்கான காரணத்தை விளக்க முடியுமா?"

"முடியுமே!"

"பதில் அவ்வளவுதானா?"

"நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றாய். இப்போது 

இதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

என்று கேட்டிருக்கிறாய்.

 "முடியுமா" என்ற கேள்விக்கு உரிய பதிலைச் சொல்லிவிட்டேன். வேறு என்ன வேண்டும்?"

"பதிலை விளக்கமாக கூற முடியுமா? Sorry. கூறுங்கள்."

"நாம் கிறிஸ்தவர்கள்.

 கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மரித்து பாவத்திலிருந்து நம்மை மீட்டதால் சிலுவை கிறிஸ்துவர்களின் அடையாளம். 

ஆகவேதான் சிலுவை அடையாளத்தைப் போட்டு நாம் எதையும் ஆரம்பிக்கிறோம்.

இயேசுவின் சிலுவை மரணம்தான் நம்மை பாவத்திலிருந்து மீட்டது.

ஆகவே பாவகரமான எதையும் செய்ய சிலுவை அடையாளத்தை போடமாட்டோம்.

ஆகவே நாம் சிலுவை அடையாளத்தைப் போட ஆரம்பிக்கும்போது நாம் செய்யப் போகின்ற செயல் எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியும்."

"உதாரணத்திற்கு

 லஞ்சம் கொடுக்கப் போகும்போதோ,

 வாங்கப் போகும்போதோ

 சிலுவை அடையாளத்தை போட்டால்,

 அது உடனே சொல்லிவிடும், "வாங்காதே, போகாதே. 
அது பாவம்.  
என்னை போட்டுக்கொண்டு பாவம் செய்வதே பாவம்." என்று.

 சிலுவை அடையாளம் பாவத்தை தடுத்து நிறுத்தும், நம்மைக் காப்பாற்றும். சரியா?"

", Super சரி. பாவத்தை வெல்வதற்காக மரித்தவரை நினைத்துக்கொண்டு எப்படி பாவம் செய்ய முடியும்?

ஒரு காலத்தில் சிலுவை குற்றவாளிகளின் தண்டனைக்கான அடையாளமாக இருந்தது.

சிலுவையில்தான் குற்றவாளிகளை அறைந்து கொன்றார்கள்.

 ஆனால் இயேசு அதையே மீட்பின் அடையாளமாக மாற்றி விட்டார்.

 அதை அப்படி மாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்தார்."

"அடையாளத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டுமே!"

",விண்ணகத்தை மேலே(above) என்றும், மண்ணகத்தை கீழே (down) என்று உருவகம் செய்வது வழக்கம்.

 விண்ணகத்தில் வாழும் இறைவனால் படைக்கப்பட்ட நாம் மண்ணகத்துக்கு வந்தோம்.

இப்போது மேலிருந்து கீழாக ஒரு செங்குத்துக் கோட்டைக் கற்பனை செய்துகொள்.

பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் விண்ணகம் செல்ல வேண்டும்,

 அதாவது மேல் நோக்கி செல்ல வேண்டும்.

ஆனால் விண்ணோக்கி செல்லம் செங்குத்து கோட்டின் குறுக்கே பாவம் என்ற படுக்கை கோடு 
வெட்டிக் கொண்டு செல்லுகிறது.

இப்போது என்ன அடையாளம் கிடைக்கிறது?"

"சிலுவை அடையாளம்."

", விண் நோக்கிய பாதையை பாவம் குறுக்கிட்டு விட்டதால் 
நம்மால் விண்ணகம் செல்ல இயலாது.

அதாவது சிலுவையின் அடையாளம் நமக்கான தண்டனையின் அடையாளமாகியது.

இப்போது இறைமகன் மனுவுரு 
எடுத்து தண்டனையின் அடையாளமான சிலுவையிலேயே தன்னை பலியாக்கி பாவத்தின் சக்தியை அழித்தார்.

இயேசுவின் சிலுவை மரணம் காரணமாக மன்னிக்கப்பட்ட பாவத்தினால் நாம் விண்ணகம் செல்வதைத் தடுக்க முடியாது.

சிலுவையிலே மரித்து இயேசு பாவத்தை வென்றதால் அது வெற்றியின் சின்னமாக மாறி விட்டது.

இனி நாம் விண்ணகம் செல்ல தடை ஏதும் இல்லை.

ஆகவே நாம் சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம் 

சிலுவையில் மரித்த இயேசுதான் நமது மீட்பர் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறோம்.

காலையில் எழுந்தவுடன் சிலுவை அடையாளம் போடும்போது

 இயேசு நமது மீட்பர்,

 இன்றைய நாளை அவருக்காகவே நாம் செலவிட வேண்டும்,'

 அவருக்கு எதிராக பாவம் எதுவும் செய்து விடக்கூடாது, 

இன்றைய நாள் அவரது மகிமைக்காக நமக்கு தரப்பட்டுள்ளது,
 
அவரது மகிமைக்காகவே நாம் உழைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.

அவ்வாறு ஒவ்வொரு செயலுக்கும் முன்னால் சிலுவை அடையாளம் போடும்போது 

அந்த செயல் இறைவனது மகிமைக்கே என்று அதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து செய்கிறோம்."

"சிலுவை அடையாளம் போடும் போது விரல்களை நெற்றியிலும்,

 நெஞ்சிலும்,

 இரு தோள் பட்டைகளிலும் வைக்கின்றோமே, இதற்கும் பொருள் இருக்க வேண்டுமே. அதை விளக்குங்கள்."

", சிலுவை அடையாளம் போடும்போது தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்.

என்று சிந்திக்கின்றோம், சொல்லுகின்றோம்.

அதாவது சிந்தித்துக்கொண்டே சொல்கிறோம்.

தந்தை என்று சொல்லும்போது தந்தை இறைவனை மனதில் நினைக்கிறோம்.

மகன் என்று சொல்லும்போது சிலுவையில் மரித்து நம்மை மீட்ட இறைமகனை நினைக்கிறோம்.

தூய ஆவி என்று சொல்லும் போது நம்மை வழி நடத்தும் தூய ஆவியானவரை நினைக்கிறோம்.

மூன்று ஆட்களை நினைத்தாலும் 

"பெயராலே" என்று ஒருமையில் 
நினைக்கும்போது,

"மூன்று ஆட்களும் ஒரே கடவுள் என்ற விசுவாச சத்தியத்தை நினைக்கிறோம்.

தந்தை என்று சொல்லும் போது நெற்றியில் விரல்களை வைக்கிறோம். நெற்றி மேலே இருக்கிறது. ஆகவே விண்ணகத் தந்தை என்பதை நினைக்கிறோம்.

நெஞ்சு கீழே இருக்கிறது. மகன் என்று கூறிக்கொண்டு நெஞ்சில்  கை 
வைக்கும்போது 

இறைமகன் நம்மை மீட்க விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தார், மனிதனாகப் பிறந்தார், என்ற விசுவாச சத்தியத்தை நினைவு கொள்கிறோம்.

  நமது நெஞ்சில் இயேசு இருக்கிறார் என்று எண்ணும்போது அவர் மேல் நமக்கு உள்ள அன்பு அதிகமாகும்.

தோள்ப் பட்டைகள் மனித சக்தியின் அடையாளம். பணிகளைச் செய்ப சக்தி தேவை.

தோள்ப் பட்டைகளில் விரல்களை வைத்து தூய ஆவி என்று சொல்லும்போது

 தூய ஆவி தரும்.சக்தியாலும், 
வழி நடத்துதலினாலுமே ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் என்பதை நினைவு கொள்கிறோம்.

நமது மீட்புக்காக மனிதனாய் பிறந்து பாடுகள் பட்டு மரித்தவர் இறைமகன் இயேசுதான். 

 ஆனாலும் மூன்று ஆட்களும் ஒரே கடவுளாக இருப்பதால் நமக்கு மீட்பு அளிப்பவர் பரிசுத்த திரி ஏக கடவுளே.

நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நம்மோடு இருந்து பராமரிப்பவர் பரிசுத்த 
தமதிரித்துவம்தான் என்பதை நாம் போடும் சிலுவை அடையாளம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

நமது கையாலேயே 
திரி ஏக தேவனின் பெயரால் நாம் சிலுவை அடையாளம் போடும்போது 

இறைவன் நமக்குத் தரும் சிலுவைகளைச் சுமக்க மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்.

சிலுவை அடையாளம் வரைந்து அதற்கு நாம் கொடுக்கும் முத்தம் சிலுவையின்பால் நமக்குள்ள பாசத்தை காண்பிக்கிறது.

 சிலுவை அடையாளம் போட்டபின் அதற்கு கொடுக்க வேண்டிய முத்தத்தை அதை போட்ட நம் விரல்களுகுக் கொடுக்கிறோம்.

சிலுவையைத் தொட்டதெல்லாம் நமது பாசத்திற்கு உரியவை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்."

"ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் போடும் போதும் இவ்வளவும் ஞாபகத்திற்கு வர வேண்டுமா?"

",வரவேண்டும். வருவதற்காகவே சிலுவை அடையாளம் போடுகிறோம்."

"இவ்வளவையும் நினைத்துக்கொண்டு சிலுவை அடையாளம் போட்டால் அதுவே மிகப்பெரிய ஜெபம் ஆகிவிடுமே!"

", திரியேக தேவனோடு ஒன்றித்து விடுவதுதான் மிகப்பெரிய ஜெபம்.

 அதைத்தான் சிலுவை அடையாளம் போடும்போது செய்கிறோம்.

திரியேக தேவனோடு மனதில் ஒன்றித்துக் கொண்டுதான் சிலுவை அடையாளம் போடுகிறோம்.

 சிலுவையை நினைத்தவுடனே அதில் மரித்த இயேசு ஞாபகத்திற்கு வருவார்.

 அவரையும் சிலுவையையும் சேர்த்து நினைத்தவுடனே இறைவனின் அன்பு ஞாபகத்திற்கு வரும்.

 இறைவனின் அன்பு ஞாபகத்திற்கு வந்த உடனே நமது பாவத்தின் கனாகனம் புரியும்.

பாவத்தின் கனாகனம் புரிந்த
 உடனே மனதில் மனஸ்தாப உணர்வு தோன்றும்.

 மனஸ்தாப உணர்வு தோன்றும் போது பாவமன்னிப்பு கிடைக்கும்.

 பாவமன்னிப்பு கிடைக்கும்போது நாம் நித்திய வாழ்வுக்கு தயாராகி விடுவோம்.

இதற்கு பெயர்தான் மீட்பு.

அதனால் தான் சிலுவையின் மூலமாகத்தான் மீட்பு என்று சொல்லுகிறோம்."

"என் நெற்றியில் சிலுவை அடையாளம் போடுங்கள்."

'',தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment