தெரு வழியே போய்க் கொண்டிருந்த ஒருவரை பார்த்து இன்னொருவர் முணுமுணுத்தார்.
"என்ன சார் அந்த ஆளை பார்த்தவுடன் வாய்க்குள்ளேயே ஏதோ சொல்லி கொள்கிறீர்களே, என்ன சொல்கிறீர்கள்?"
"அந்த ஆளைப் பார்த்தால் படித்த, Tip top ஆன ஆள் மாதிரி தெரியல?"
"ஆமா, அதுக்கு என்ன இப்போ?"
"ரொம்ப படித்தவர். M.B.B.S.
டாக்டர் வேலைக்குப் படித்திருக்கிறார்."
"M.B.B.S படித்திருந்தால் அவரைப் பார்த்து முணு முணுக்க வேண்டுமா?"
"படித்து என்ன சார் பிரயோஜனம்?
படித்தவர் அவரைப்போல படித்தவருடனேதானே பழகணும்!
இந்த மனிதர் படியாத நோயாளிகள் கூடவே எப்பொழுதும் இருக்கிறார்.
அவங்களும் இவரைத் தேடி வருகிறார்கள்!
யார் கூட பழக வேண்டும் என்பது கூட தெரியாமல் என்ன படித்தாரோ!"
அடுத்தவர் சிரிக்கிறார்.
"என்ன சிரிப்பு?
புரிஞ்சி சிரிக்கிறீரா?
புரியாமல் சிரிக்கிறீரா?"
"உமக்கு இது கூட தெரியவில்லையே என்று நினைத்து சிரிக்கிறேன்!"
"எது கூட தெரியவில்லை?"
"M.B.B.S படிக்கிறதே நோயாளிகளைப் பார்க்கத்தான்.
இது கூட தெரியவில்லையே என்று நினைத்தேன், சிரித்தேன்."
"நோயாளிகள் கூட எதைப்பற்றி பேசுவார்?''
"நோயைப் பற்றிதான்!
நோயை நீக்கி நோயாளியைக் குணமாக்குவது பற்றி!"
** ** ** ** **
"இந்த ஆள் யார் என்று தெரிகிறதா?"
"நசரேத்தூர் இயேசு."
"இவர் அவ்வளவு நல்லவர் இல்லையோ?"
"எதை வைத்து சொல்கிறீர்?"
" நல்லவர்னா நல்லவங்க கூட மட்டும்தானே பழகணும்.
அவர் ஆயக்காரர்களோடும், பாவிகளோடுதான் அதிகம் பழகுகிறார்.
அவர்களும் அவரையே தேடி வந்த வண்ணமாயிருக்கின்றனர்.
தேடிவரும் பாவிகளை வரவேற்பதோடு,
அவர்களது இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு உண்கிறார்.
ஒரு முறை ஒரு பரிசேயருடைய வீட்டில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது
பாவி ஒருத்தி
அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள்.
அவள் பாவி என்று தெரிந்திருந்தும் அவர் அதைத் தடுக்கவில்லை.
அது மட்டுமல்ல, அவளை நோக்கி,
" உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்றார்.
கடவுளுக்கு மட்டும் தானே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு?"
"அப்போ அவரைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே!"
"அது எப்படி முடியும்? கடவுள் நல்லவர்.
இவர் பாவிகளோடு பழகுகிறாரே,
எப்படி நல்லவராக இருக்க முடியும்?''
"நாசரேத்தூர் இயேசு நல்லவர் மட்டுமல்ல, மனித உரு எடுத்த இறைமகன்.
அவர் மனிதனாக பிறந்து வந்ததே பாவிகளைத் தேடித்தான்!
அவர் பாவிகளை தேடி வந்ததே அவர்களோடு பழகி, அவர்களது பாவங்களை மன்னித்து, அவர்களை நல்லவர்களாக மாற்றுவதற்காகத்தான்."
"அது எப்படி உனக்கு தெரியும்?"
"மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை.
நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" என்று
அவரே கூறியிருக்கிறாரே!"
"அவர் சொல்லுவதை நீ எப்படி நம்புகிறாய்?"
"அவர் சொல்வது உண்மை என்று அவரது செயல்களே நிரூபிக்கின்றனவே!
அவர் செல்லும் இடமெல்லாம் நன்மையை மட்டும்தானே செய்கிறார்.
எல்லோருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார். நோயாளிகளைக் குணமாக்குகிறார்.
இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறார்.
இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க மனிதர்களால் முடியுமா?"
"அவரே கொலை செய்யப்படும்போது எப்படி உயிரோடு வருகிறார் என்று பார்ப்போம்."
"என்னது, அவரே கொலை செய்யப்படும்போதா?"
"ஆமா. அவரை கொலை செய்து விடுவது என்று நமது தலைவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
அப்போது தெரியும், அவர் இறைமகனா, சாதாரண மனிதனா என்று."
"அதாவது, அவர் கடவுள்தான் என்று நிரூபிக்க நம் தலைவர்கள் தீர்மானித்து விட்டார்கள்."
"அதெப்படி?''
"அவர் கொலை செய்யப்பட்ட பின் உயிர்த்தெழுந்தால் அவர் கடவுள் என்று நம்பித்தானே ஆகவேண்டும்!
தனது நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட பெரிய அன்பு எதுவும் இல்லை என்று அவரே கூறுகிறார்.
பாவிகளைத் தேடி வந்த அவர் அவர்களுக்காக உயிரையே கொடுத்தால் அவர் சொல்வதை எல்லாம் நம்பித்தானே ஆக வேண்டும்!
"மனுமகனில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு,
மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்.
தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்" (அரு.3:14-16)
என்று அவரே கூறியிருக்கிறாரே!''
"யாரிடம் கூறினார்?"
"நிக்கொதேமுவிடம்."
"நிக்கொதேமுவா? அவர் நமது யூத சமயப் பெரியோர்களுள் ஒருவர் ஆயிற்றே!"
"ஆமா."
"அப்போ அவர் கொலை செய்யப்பட்டால் உயிர்ப்பார் என்கிறீர்கள். அப்படித்தானே?"
"அப்படியேதான்."
** ** ** ** ** ** **
"ஹலோ! ஞாயிற்றுக் கிழமைத் திருப்பலி காலை எட்டு மணிக்குதானே.
நீங்க ஏழு மணிக்கே புறப்பட்டு எங்கே போறீங்க?"
"ஏழரை மணிக்கே சாமியார் பாவசங்கீர்த்தனத் தொட்டியில் இருப்பார்."
" சாமியார் எங்கே இருப்பார் என்று நான் கேட்கவில்லை . நீங்க ஏன் ஏழு மணிக்கே போகிறீர்கள் என்றுதான் கேட்டேன்."
"அதற்கு தான் பதில் சொன்னேன்.
நான் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் சீக்கிரம் போகிறேன்."
"நீங்கள் போவது திருப்பலிக்கா? அல்லது பாவசங்கீர்த்தனம் செய்யவா?"
"இரண்டுக்கும்தான். ஆண்டவர் சிலுவையில் தன்னைத் தானே பலியாக்கியது நமது பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.
திருப்பலியின் நோக்கமே பாவ மன்னிப்புதான்.
பாவங்களோடு திருப்பலி ஒப்புக் கொடுத்தால் எந்த பலனும் இல்லை.
முதலில் பாவமன்னிப்பு, அப்புறம் திருப்பலி."
"ஒவ்வொரு திருப்பலிக்கும் முன்னால் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமா?''
''எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும்.
பாவத்தோடு திருப்பலி காண்பது குளிக்கப் போய் சேற்றை அள்ளி பூசி கொள்வதற்கு சமம்.
கல்வாரிப் பலியின் நோக்கமே பாவ மன்னிப்புதான்.
பாவிகளை தேடித்தான் இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
எதற்காக பாவிகளை தேடினார்?
அவர்களது பாவங்களை மன்னிப் பதற்காக.
பாவமன்னிப்புப் பெறாவிட்டால் இயேசு நம்மைத் தேடி வந்ததற்குப் பொருள் இல்லாமல் போய்விடும்."
"இயேசு உலகமெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்றுதானே சொன்னார். பாவசங்கீர்த்தனம் கேளுங்கள் என்று சொல்லவில்லையே?''
"சொல்வதை முழுமையாகச் சொல்."
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.
16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."
(மாற்கு, 16:15, 16)
ஞானஸ்நானம் பெறும் போதே பாவமன்னிப்பு கிடைத்துவிடுகிறதே!"
"ஞானஸ்நானம் பெற்றபின் பாவமே செய்வதில்லையா?
ஞானஸ்நானம் ஒரு முறை தான் பெற முடியும்.
அதற்குப் பின் நாம் செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்பு பெறவே பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருள் சாதனத்தை இயேசு ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த திரு அருள் சாதனத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் பெறலாம்.
கல்யாண விருந்துக்கு செல்லும்போது முதல்தடவை வைத்த சோற்றை உண்டபின் திரும்பவும் வாங்கி சாப்பிடுவதில்லை?
ஞானஸ்நானம் என்னும் திரு அருள் சாதனத்தை ஒருமுறை பெற்றபின்,
பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருள் சாதனத்தை தேவைப்படும் போதெல்லாம் பெற வேண்டும்.
நமது பாவ நோய்க்கு ஆண்டவர் தந்திருக்கும் மருந்து பாவசங்கீர்த்தனம்.
பாவ நோயை குணப்படுத்தும் மருந்தை பயன்படுத்துவோம்.
பயன் பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment