விண்ணகப் பயணம்.
******************************************
நாம் எந்தக் காரியம் செய்வதாய் இருந்தாலும் முதலில் அதைச் செவ்வனே செய்வதற்காகத் திட்டமிடுவோம்.
வெளியூருக்குச் செல்லத் திட்டமிடும்போது,
பயணம் இனிதே அமைய என்னென்ன பொருட்கள் வேண்டும்,
எந்த வழியாக,
எப்படிச் செல்ல வேடும்,
யார்யார் துணையோடு செல்ல வேண்டும்
என்பன பற்றி முன்கூட்டியே திட்டமிடவேண்டும்.
இவ்வுலகைச் சார்ந்த பயணங்களுக்கே திட்டமிடல் முக்கியமென்றால்,
நமது விண்ணகப் பயணத்திற்கு அது எவ்வளவு முக்கியம் என்பது சொல்லாமலே விளங்கும்.
நமது விண்ணகப் பயணம் ஒரு ஆன்மீகப் பயணம்.
ஆன்மீகப் பயணத்திற்கு, ஆன்மீக வழிகாட்டிகளின் (Spiritual Directors) உதவி கட்டாயம் தேவை.
வழிகாட்டிகளின் உதவியின்றி செல்லும் பயணம் வழி தவற வாய்ப்பு உண்டு.
நமது பயணம் ஆன்மீகப் பயணமாக இருப்பதால் நாம் நம்மோடு எடுத்துச் செல்லும் பொருட்களும் ஆன்மீக சம்பந்தப்பட்டவை.
நமது உடல் ஒரு சடல்பொருள்தான்.
ஆனாலும் நமது பயணத்தில் நமது ஆன்மாவிற்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு,
விண்ணக வாயில் வந்தவுடன் ஆன்மாவை உள்ளே அனுப்பிவிட்டு
அது பூமியிலேயே தங்கிவிடும்.
உலக முடிவில் பொதுத்தீர்வையின்போது விண்ணக வாழ்விற்கு ஏற்ற உருப்பெற்று ஆன்மாவோடு இணையும்.
பயணத்தின்போது நம்மோடு வரவேண்டிய பொருட்கள்
நாம் செய்யும் புண்ணியங்களும்,
நற்செயல்களும் மட்டும்தான்.
நம்மோடு எப்போதும் இருக்க. வேண்டிய புண்ணியங்கள்,
இறைவனால் நமக்கு இலவசமாய்த் தரப்பட்ட
விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவை.
இப்புண்ணியங்களின் உதவியால்தான் மற்ற புண்ணியங்களை ஈட்ட முடியும்.
நாம் ஈட்டும் இவ்வுலகப் பொருட்கள் எதுவும் விண்ணகத்திற்குள் நுழையாது.
இவ்வுலகப் பொருட்களைக்கொண்டு விண்ணகத்திற்கு வேண்டிய புண்ணியங்களையும், நற்செயல்களையும் சம்பாதிக்கலாம்.
உதாரணமாக, பணத்தைத் தானம் செய்யும்போது கிடைக்கும் புண்ணியம் நம்மோடு விண்ணகம் வரும், பணம் வராது.
ஆகையால் விண்ணகத்திற்கு நம்மோடு வரக்கூடிய
புண்ணியங்களையும்,
நற்செயல்களையும்
சம்பாதிப்பதே நமது
வாழ்க்கையயின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வுலகச் சம்பந்தப் பட்ட பொருட்களையும் ஈட்டலாம்.
ஈட்டப்பட்ட பொருட்களை பிறர்நலக் காரியங்களுக்காகச் செலவிட்டு விண்ணகப் பயணத்திற்கான புண்ணியகளை ஈட்ட வேண்டும்.
விண்ணகப் பயணத்தில் நமக்குத் துணையாக வருபவர்கள் யார்?
நாம் தனியாகப் பயணிப்பதில்லை.
நம்மைப் படைத்த இறைவன் எப்போதும் நம்முடனே இருக்கிறார்.
கடவுள் எங்கும் இருப்பதால் நாம் அவருக்குள்ளே இருக்கிறோம், அவர் நமக்குள்ளே இருக்கிறார்.
பெற்ற தாயே பிள்ளையோடு இருந்தால் பிள்ளை எதற்கும் பயப்படாது.
நம்மைப் படைத்த சர்வ வல்லபரே நம்மோடு இருப்பதால் நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?
விண்ணகத்திலும் இறைவனோடு இருக்கப்போகிறோம்,
இவ்வுலகிலும் இறைவனோடு இருக்கிறோம் -
இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இவ்வுலகில் நம்மோடு வாழும் இறைவனை நமது புறக்கண்ணால் பார்க்க முடியாது,
விசுவாசக் கண்ணால் மட்டுமே உணர முடியும்.
ஆனால் விண்ணுலகில் இறைவனை நேருக்கு நேர் சந்திப்போம்,
விசுவாசம் இருக்காது.
இவ்வுலகில் விண்ணுலக வாழ்வு பற்றிய நம்பிக்கையோடு வாழ்கிறோம்.
விண்ணுலகில் இறைவனோடு இணைந்த நித்திய வாழ்வு ஆரம்பித்த பின்
நம்பிக்கையும் தேவையில்லை.
அன்பு மட்டும் நித்தியத்திற்கும் நம்மோடு இருக்கும்.
இறைனோடு கலந்து வாழும்
எல்லா புனிதர்களும் நமது பயணத்தின்போது நம்மோடுதான் இருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவருக்குப் பிடித்த புனிதர்கள் இருப்பார்கள்.
புனித நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே பயணம் செய்வது மகிழ்ச்சிகரமான அனுபவம்.
அப்புனித நண்பர்கள் தங்களது விண்ணகப் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருவது நமது பயணத்தின் மகிழ்ச்சியை அதிகமாக்கும்.
உதாரணத்திற்கு புனித அன்னைத் தெரசாவுடன் பேசிக்கொண்டே நடந்தால்
நமது பிறர் அன்புச் சேவைகள் அதிகரித்து, விண்ணக மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
புனித அந்தோனியாருடன் பேசிக்கொண்டே நடந்தால்,
அவர் நமது வாழ்விலும் புதுமைகள் செய்துகொண்டே வருவார்.
திருப் பயணத் திட்டத்தில் தீர்மானிக்க வேண்டிய மிக முக்கியமான பொருள் உணவு.
சத்தான உணவின்றி பயணித்தால் களைப்பு அதிகரிப்பதோடு, பயணத்தைத் தொடர முடியாமற்போகலாம்.
ஆகவே நமது ஆன்மீக உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
நமது ஆன்மீக உணவு ஒன்றுதான், இரண்டாக வரும்.
அது என்ன, ஒன்று இரண்டாக வரும்?
நமது ஆன்மீக உணவு ஒன்றுதான்:
வார்த்தையானவர் (இறை இயேசு) மட்டுமே அந்த உணவு.
முதலில்
வார்த்தையாக வருவார்.
அடுத்து
வார்த்தையானவரே(இயேசுவே) வருவார்.
இறைவனைப் பற்றிய ஒவ்வொரு வசனமும் நமது ஆன்மீக உணவுதான்.
நாம் வாசிக்கும் ஒவ்வொரு வேதாகம வசனமும் நமது ஆன்மீக உணவாய் மாறி, அதைத் திடப்படுத்தும்.
" உம் வார்த்தைகளைக் கண்டடைந்தேன்: அவற்றை உண்டேன்."(எரேமியாஸ்.15:16)
"மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் " (மத்.4:4)
ஆகவே நமது விண்ணகப் பயணத்தின்போது வேதாகம வசனங்களை நாம் வாசித்தால் மட்டும் போதாது,
நமது தியானத்தின் மூலம் அவற்றை நமது ஆன்மீக உணவாக ஏற்க வேண்டும்.
அடுத்து வார்த்தையானவரே
அவரது உடலையும், இரத்தத்தையும் நமது ஆன்மீக உணவாய்த் தருகிறார்.
நாம் பிறந்தவுடன் நமது தாய் தனது சதையையும், இரத்தத்தையும் பால் உருவில் நமக்குத் தந்து நம்மை வளர்க்க வில்லையா?
இறைமகன் இயேசு தனது உடலையும், இரத்தத்தையும் திவ்ய நற்கருணை மூலமாக நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்.
இந்த ஆன்மீக உணவை உண்ணாவிட்டால் நமது ஆன்மா தளர்ச்சி அடைவதோடு, பயணத்தில் ஏற்படும் குறுக்கீடுகளை வெல்வதற்கான பலத்தையும் இழந்துவிடும்.
ஆகவே திவ்ய நற்கருணையை எவ்வளவு அடிக்கடி உண்ண முடியுமோ அவ்வளவு அடிக்கடி உண்ண வேண்டும்.
முக்கிய குறிப்பு:
திவ்ய நற்கருணையை தகுந்த தயாரிப்போடு உட்கொள்ள வேண்டும்.
பாவ அழுக்கோடு இயேசுவை உட்கொள்வது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம்.
சாவான பாவம் செய்யும்போது இறைவனோடு நமக்கிருந்த உறவை நாமே முறித்துக் கொள்கிறோம்.
முறிந்த உறவோடு இயேசுவை உட்கொள்ளக்கூடாது.
பாவசங்கீத்தனம் மூலம் உறவை புதிப்பித்துக்கொண்டு சுத்தமான இருதயத்தோடு இயேசுவை உணவாக உட்கொள்ள வேண்டும்.
உணவின் சத்திற்கு ஏற்ப உண்பவர் சத்தடைவர்.
நாம் இயேசுவை உட்கொள்ளும்போது இயேசுவின் அன்பு, இரக்கம் ஆகிய பண்புகளையும் நாம் உட்கொள்கிறோம்.
அந்த பண்புகள் நமது பயணத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
இயேசு நமது உணவு மட்டுமல்ல
நமது வழித்துணையும் அவர்தான்.
ஞானஸ்நானத்தோடு விண்ணகப் பயணத்தை தொடங்கிய நாம்
நமது ஞான வழிகாட்டிகளின் உதவியோடும்,
புனிதர்களின் நட்போடும்,
எல்லாம் வல்ல இறைவனின் அருட்துணையோடும்
விண்ணக வீட்டிற்குள்
நுழைவோமாக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment